இரவின் நிசப்தம் இருவரையும் சூழ்ந்திருந்தது.
“அக்கா ஸ்கூட்டி ஓட்ட கத்துக்கறியா?” தயாபரன் திடீரென்று கேட்க, ஆச்சரியத்துடன் திரும்பி தம்பியை பார்த்தாள் துர்கா.
“எதுக்குடா தயா?”
“டீச்சர் நீ, கத்துக்கறத பத்தி உனக்கு நான் பாடம் எடுக்கணுமா என்னக்கா?”
“இல்லடா, வண்டி கத்துக்கிட்டு நான் எங்க போக போறேன்?”
“டெய்லி ஸ்கூல் போறியேக்கா, அப்புறம் ரோஜாவை கூட்டிட்டு வெளில போகலாம்”
“ஸ்கூலுக்குதான் நீயும், அப்பாவும் கூட்டிட்டு போறீங்களேடா. இப்போ வண்டி கத்துட்டு நான் என்ன சாதிக்க போறேன்?”
“என்னக்கா இப்படி கேட்டுட்ட? நம்ம ஊருக்கு சைக்கிள் வந்ததுக்கு அப்புறம்தான் பெண்கள் நிறைய முன்னேறுனாங்களாம், அன்னைக்கு பெண்கள் சாதிக்க சைக்கிள் ஹெல்ப் செஞ்சிருக்குக்கா. அவ்வளவு ஏன், நம்ம பவளா அக்காவையே எடுத்துக்கோ, பாத்திரம் தேய்க்க டீவிஎஸ் ஃபிஃப்ட்டியில பறந்து வர்றாங்க. வேலை முடிஞ்சதும் பறந்துடுறாங்க. நீ என்னன்னா இப்படி தயங்குறக்கா?” என்று கேட்டான். அவளுக்கு இன்னமும் ஆச்சரியம் அகலவில்லை. அதிர்ச்சியாக கூட இருந்தது.
அவள் என்றைக்கு கர்ப்பம் என்று தெரிந்ததோ அன்றே அவளின் காலை கட்டி போட்டு விட்டார்கள் வீட்டினர். அது பெரிதாக திட்டமிட்ட செயலெல்லாம் இல்லை. என்னவோ ஒரு நம்பிக்கையின்மை, பயம், பரிதவிப்பு. அவளை தனியா எங்கும் அனுப்புவதற்கு தயங்கினார்கள். அவள் கையில் குழந்தையும் இருக்க, பெற்றோர் துணையின்றி எங்கும் சென்றது கிடையாது. குறிஞ்சி வந்தால்தான் கடை கண்ணிகளுக்கு செல்வாள், சுதந்திரமாக. இப்போது அந்த விலங்கை விளக்குகிறார்களா என்ன? அதிலும் அம்மா அறிந்தால் அவ்வளவுதான். ஆடி தீர்த்து விடுவார்.
“அம்மாப்பா கிட்ட கேட்டுட்டு..” என்று அவள் தொடங்க, “ப்ச், டிரைவிங் கத்துக்க எதுக்குக்கா அம்மாப்பா பெர்மிஷன்? நீ எப்போ ரெடி, அதைச் சொல்லு போதும்.” என்றான்.
“எனக்கு எங்கடா இதுக்கெல்லாம் டைம் இருக்கு? நீ தேவையில்லாத வேலை பார்க்கற. ஸ்கூல்ல சண்டே ஒரு நாள்தான் லீவு. இதுல நான் ரெஸ்ட் எடுப்பேனா, வண்டியோட்ட ரெடியாவேனா?”
“வண்டியோட்டாம இருக்க நொண்டி காரணம் தேடாதக்கா. நீ ஈவ்னிங் ஸ்கூல் விட்டு வந்ததும் கத்துக்கலாம்” என்று சுலபமாக தீர்வு சொன்னான். மறுநாள் மாலையே பழைய டியோ வண்டியுடன் வீடு வந்தான்.
“என்ன இந்த வண்டியில வந்திருக்க? உன் பைக் எங்க தம்பி?” துர்கா கேட்க, “மாமா” என்று ஓடி வந்து அவனிடம் தாவினாள் ரோஜா. மாலையானால் மாமன் வண்டியில் தெருவை ஒரு வட்டமடிக்கும் வழக்கம் அவளுக்கு. இன்றும் அதற்கு ஆசையாக அவள் செல்ல, “இன்னைக்கு உங்கத்தையும், அம்மாவும் வண்டியோட்ட போறாங்க தங்கம்” என்றான் குழந்தையிடம்.
“அப்தியா?” என்று கோலி குண்டு கண்களை உருட்டி அவள் கேட்க, “அப்படித்தான்” என்றான் மாமன்.
“விளையாடாத தயா. வண்டி யாருது? அவங்கட்ட போய் குடு” என்றாள்.
“குறிஞ்சி” என்று அவன் குரல் கொடுக்க, இரண்டாம் நிமிடம் வெளியில் வந்தாள் குறிஞ்சி. அன்றைக்கு அவளுக்கு காலை பணிநேரம் என்பதால் இப்போது வீட்டில் இருந்தாள்.
“டீ போடவா தயா?” வந்ததும் அவள் கேட்க, “ம்ஹூம், நான் இப்போதான் கடையில குடிச்சுட்டு வந்தேன். உங்க ரெண்டு பேருக்கும் வேணும்னா நான் போடுறேன். அதுவரைக்கும் நீங்க வண்டி ஓட்டுங்க” என்று சொல்லி வண்டியை அவள் புறமாக நகர்த்தினான்.
அவள் கண்கள் கேள்வியாக நோக்க, “நம்ம கடை டீ மாஸ்டர் ஆசைத்தம்பியோட அக்கா வண்டி. ஒரு வாரத்துக்கு கேட்டு வாங்கிட்டு வந்திருக்கேன்” என்றான்.
“பொண்டாட்டிக்கு புதுசா வாங்கித் தர மாட்டீங்களே தயாபரன். பேரு பெத்த பேரு, பேர்ல இருக்க தயாளம் குணத்துல காணோமே?” என முணுமுணுத்தாள்.
“புது பொண்டாட்டிக்கு பரிசு வாங்கி கொடுக்கற அளவுக்கு பொண்டாட்டி எனக்கு எதுவும் கொடுக்கல.” என்று மீசையை நீவும் சாக்கில் லேசாக உதடசைத்து பதிலடி கொடுத்தான். அவளுக்கு புசுபுசுவென கோபம் வர, ரோஜாவும் துர்காவும் இருந்ததால் முறைப்புடன் நிறுத்திக் கொண்டாள்.
“இந்தா வண்டியை பிடி” என்று அவள் கையில் திணித்தான்.
அவள் கல்லூரி முதலாம் ஆண்டு முடித்ததும் ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து, இரு சக்கர, நான்கு சக்கர வாகனம் இரண்டையும் ஓட்ட பயிற்சி பெற்று, தேர்ந்து, உரிமமும் பெற்றிருந்தாள்.
நொடியில் வண்டியை ஆக்கிரமித்து இயக்கி லேசாக நகர்த்தினாள்.
“கு…றிஞ்சி.. நா…னே” என்று ரோஜா கத்தவும், “ரோசு ஒடியா” என்று அவளை அள்ளி முன்னால் நிறுத்தினாள். ரோஜாவின் வாயெல்லாம் பல். ஒரே சிரிப்புதான்.
“ம்மா, நீயும் வாம்மா” என்று அம்மாவையும் அழைத்தது வாண்டு.
“நீ போயிட்டு வா குட்டி”
“வாம்மா” என்று அவள் கத்தும் போதே வண்டியை நகர்த்தி விட்டாள் குறிஞ்சி.
“ஐ…ஐ, அ..ம்மா பை. மாமா பை.. டாட்டா” தெரு முனைக்கு போகும் வரைக்கும் தொண்டை தண்ணீர் வற்ற கத்தினாள்.
அவர்கள் திரும்பி வருகையிலும், ஒரே இளிப்புதான். குறிஞ்சியின் கால்களுக்கு நடுவில் புறா குஞ்சு போல பாதுகாப்பாய் நின்றிருந்தாள். தானே வண்டியை ஓட்டுவது போல இரண்டு பக்கமும் அழுத்தமாக பிடித்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தாள். பட்டு ரோஜாவின் பட்டு கன்னங்கள் சிரிப்பில் உப்பி, கண்கள் அழகாய் மலர்ந்து, பால் பற்கள் பளிச்சிட்ட புன்னகையில் தேவதையாய் தோன்றினாள்.
மகளின் மகிழ்ச்சியில் மனம் மகிழ அவளுக்கு கையாட்டினாள் துர்கா.
“எனக்கு இம்புட்டு நாளு இதேன் தோனாம போச்சு?” தன்னைத்தானே கேட்டுக் கொண்டான் தயா. இப்படித்தான் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் பாதாளத்தில் அடைத்து விடுகிறோம் என குற்ற உணர்ச்சி கொண்டான்.
குறிஞ்சி மெதுவாகவே வண்டியை செலுத்தினாள். ஒரு முறை அவர்கள் தெருவை வட்டமடித்து, கணவனுக்கு கண்களால் செய்தி பரிமாறி பின்னரே பொது சாலைக்குச் சென்றாள். துர்கா தெருவுக்கு வந்து அவர்களை பார்க்க, தயா சாலைக்கே சென்று விட்டான்.
“பஸ்ஸு பஸ்ஸு குறிஞ்சி. காரு போதே. போ போ” என்று அவளை வேகம் கூட்டச் சொன்னாள்.
“ஃபாஸ்ட்டா போக கூடாது ரோசு”
“பாஸ்ட் இல்ல, பக்கத்துல போ சொன்னே” என்று அவள் சொன்ன விதத்தில் குலுங்கி சிரித்தாள் குறிஞ்சி. பட்டு ரோஜாவின் முகம் சிரிப்பில் மலர்ந்தே இருந்தது. வீடு வந்ததும், “நீயும் வாம்மா” என்று அவள் ஆர்வமாக இறங்கி அம்மாவிடம் ஓட, அதுவரை நின்று கொண்டே வந்த கால்கள் நிலையிழக்க, அவளை மாமன் கையில் அள்ளிக் கொண்டான். அவன் கையில் இருந்து அம்மாவிடம் தாவினாள்.
“வாம்மா போலாம்” அவளின் ஆர்வம் அம்மாவின் அச்சத்தை அகற்றியது.
“நம்ம குறிஞ்சி தானேக்கா, பயப்படாத, உன்ன கீழ போட மாட்டா. அப்படியே போட்டான்னா நர்ஸம்மா எலும்பை எண்ணிடுவோம்” என்றான், குறிஞ்சிக்கு சவால் விட்டு.
“உங்கள வேணா கீழ தள்ளி விடுவேனே தவிர, ரோசு அம்மாவ கீழ போட மாட்டேன். பிக்காஸ் அவ எனக்கு க்ளோஸ்”
“உனக்கெல்லாம் வாய் இல்லன்னா..”
“உங்ககிட்ட வாழ முடியாது” என்று உதடு சுழித்தாள். அதை சுண்டி விட கை ஓங்கியவன், அக்காவின் முகம் பார்த்து கையை இறக்கினான்.
“ரெண்டு பேரும் டெய்லி இப்படித்தான் சின்ன பிள்ளைங்க மாதிரி அடிச்சுக்கறீங்களா?” என்று துர்கா கேட்க, “ம்க்கும்” என்று அதற்கும் வளைந்தன குறிஞ்சியின் உதடுகள்.
மறுகணம் விளையாட்டுத்தனத்தை எல்லாம் விட்டுவிட்டு பொறுப்பாக வண்டியை அவளுக்கு விளக்கினாள். எதை எப்படி கையாள வேண்டும் என கற்றுக் கொடுத்தாள். அருகில் நின்றிருந்த தயாபரன் சில நுணுக்கங்களை சொன்னான். ஏட்டு சுரைக்காயை வைத்து என்ன செய்ய? அனுபவ பாடம் கற்க தயாரானாள் துர்கா.
“இடுப்ப வளைக்காத துர்கா, நேரா உக்காரு. நார்மலா இரு. நேரா பாரு. சைடுல திரும்பி பாக்காத. பக்கத்துல, பின்னால வர்ற வண்டிய கண்ணாடி பார்த்து ஃபாலோ பண்ணிக்கோ”
“ம்ம்..ம்ம்” என்றவளின் கைகள் ஆட வண்டியும் கிடுகிடுவென ஆடியது. குறிஞ்சி பின்னால் இருந்து பிடித்திருக்க, “நான்தான் பிடிச்சிருக்கேன்ல, பயப்படாம ஓட்டு” என்றாள். முதல் நாளே எங்கிருந்து துணிச்சல் வரப் போகுகிறது?
“கை வழுக்குது குறிஞ்சி”
“வேர்த்திருக்கும். அதுவொன்னும் இல்ல. அப்புறமா துடைச்சுக்கலாம்” என்றாள், அலட்டிக் கொள்ளாமல்.
துர்காவின் பயமெல்லாம், “அம்மா, அம்மா” என்ற மகளின் ஆர்ப்பரிப்பை கேட்டதும் ஆள் அடையாளம் இல்லாமல் காணாமல் போனது. மகளின் மகிழ்வு நிலைக்க சுண்டைக்காய் இந்த வண்டியை ஓட்ட அவள் கற்றுத் தேர மாட்டாளா என்ன? என்ற எண்ணம் தந்த தைரியத்துடன், நிமிர்ந்து அமர்ந்தாள். அப்படி ஒரே நாளில் கற்றுத் தேர்ந்திட முடியாது அல்லவா? ஆக, தினம் மாலை வேளையில் இதே வேலையாக சுற்றினார்கள்.