நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 16 (2)

புது மணத் தம்பதிகள், குலதெய்வ வழிபாடு, விருந்து உபச்சாரங்கள் எல்லாம் முடித்து இரண்டாம் வாரத்திலேயே இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருந்தார்கள்.

அன்றாட வழக்கமாக அதிகாலையிலேயே எழுந்து கடைக்குக் கிளம்பி விட்டான் தயாபரன்.

எப்போதும், எந்தவித சத்தமும் இல்லாமல் பூனைப் போலத்தான் குளித்துக் கிளம்புவான். ஆனாலும், குறிஞ்சி அவன் கிளம்பும் நேரம் எழுந்து விடுவாள். அவளுக்குச் சின்னச் சத்தம் கூட ஆகாது.

இன்றும் குளியலறை கதவு திறக்கும் சத்தத்தில் கண் விழித்து விட்டாள்.

“தூங்கு” என்றதோடு, உடை மாற்றத் தொடங்கினான் தயா.

“எனக்கொரு சந்தேகம்” தூக்க குரலில் கேட்டாள்.

“என்ன?”

“எங்கம்மா ஏன் கடைக்குப் போறதில்ல இப்போல்லாம்?”

“என்னைக் கேட்டா?”

“நீங்கதானே கடை ஓனர்?”

“நானா? ம்ம், இப்போ எனக்கே ஓனர் வந்தாச்சு” என்றான், கண்ணாடியில் அவளைப் பார்த்து.

“ப்ச், தயா. அம்மா ஏன் போகல சொல்லுங்க.”

“அத உங்கம்மாகிட்ட கேளு. என்கிட்ட கேட்டா எனக்கென்ன தெரியும்?” என்று பதில் கேள்வி கேட்டான்.

“அப்போ உங்ககிட்ட என் கேள்விக்குப் பதில் இல்ல? அதான் பதில் கேள்வி வருது. இல்லையா?”

“இல்ல” என்றான் ஒற்றை வார்த்தையில்.

“ப்ச், என்ன இல்ல? நீங்க வேலைக்கு வராதன்னு அம்மாகிட்ட சொல்லிட்டீங்களா?”

“அப்படியா சொன்னேன்?” என்று படக்கென்று திரும்பி அவன் கேட்க, “ச்சீ துண்டை ஒழுங்கா கட்டுங்க” என்று கண்ணை மூடினாள்.

“ஹா, உன்னை யாரு என்னைப் பார்க்க சொன்னது”

“சிரிக்காதீங்க” என்று சீறினாள்.

“சரி, நான் சிரிக்கல குறிஞ்சியாத்தா. நீ ஒரு பத்து மணிக்கா ரெடியாகி இரு. இன்னைக்கு ஹாஸ்பிடல் இன்டர்வியூ போயிட்டு வந்துடலாம்” என்றான்.

“ஆமா, அதைப் பத்தியும் கேட்கணும்னு நினைச்சேன். நீங்க ஏன்..”

“கேள்வியின் நாயகியே குறிஞ்சியாத்தா, உன் கேள்விக்கு எல்லாம் பொறுமையா அப்புறமா பதில் சொல்றேன். இப்போ கடைக்கு நேரமாகுது நான் வர்றேன். நீ தூங்கு” என்று அவளின் தலையைத் தலையணையில் தள்ளி விட்டு வெளியேறினான்.

ஒன்பதரை மணிக்கு அவன் வீடு வர அவளும் தயாராகி நின்றிருந்தாள்.

அதிசயமாக அன்று அலமேலு கடைக்குச் சென்றார். அவருடன் நாச்சம்மையும் செல்ல அவளுக்குத்தான் ஒன்றும் விளங்கவில்லை. அம்மாவை கேட்டாலும் புன்னகைதான் பதிலாக வந்தது.

“நான் அம்மா கிட்ட கேட்டேன் தயா. அவங்க ஒன்னுமே சொல்லல” என்று அவனிடம் புகார் படித்தாள்.

“என் கடைக்கு உங்கம்மா வேலைக்கு வர்றது பிடிக்கலன்னு என் கிட்டயே சொல்ற பார்த்தியா, உனக்குத் தைரியம்தான்” என்றான்.

“உங்ககிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்றதாம்?”

“ஓ, அதென்ன என்கிட்ட மட்டும் சொல்றது? உங்கம்மா கிட்டயே சொல்ல வேண்டியதுதானே? லாஸ்ட்டா எப்போ உங்கம்மாகிட்ட இதைப் பத்தி பேசின சொல்லு?”

“அதுவா..” என்று யோசித்து, “ஒரு வருஷத்துக்கும் மேலருக்கும்.” என்றாள்.

“இடையில இது பத்தி உங்கம்மா ஏன் பேசாம இருந்தாங்கன்னு யோசி. நம்ம நிச்சயத்தப்ப நீ ஊருக்கு வந்தப்போ கூட நீ கவனிக்கலையா?”

“அச்சோ இப்படிச் சஸ்பென்ஸ் வச்சு பேசாம என்னன்னு சொல்லுங்க” என்று கத்தினாள்.

“முடியாது போ. ஆளை பாரு. உங்கம்மாவை வேலை வாங்கி நான் கொல்றேன்னு சொன்னவதானே நீ? அதுக்காகதானே என்னைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு நினைச்சு ஊருக்கு வராம இருந்த? நீ தங்கியிருந்த இடத்தையெல்லாம் மாத்த பிளான் போட்ட ஆள்தானே நீ?”

“சொல்லி காட்டுறீங்க பார்த்தீங்களா?”

“அப்புறம் உன்ன கொஞ்சுவாங்களா? நீ வராம போய் இருந்தா, நம்ம கல்யாணம் நடக்காம போய் இருந்தா, எங்கம்மாப்பாக்கு எவ்வளவு அசிங்கமா போய் இருக்கும்?” என்று கோபத்தை அடக்கிய குரலில் கேட்டான்.

“அப்படி ஆகல இல்ல?”

“அதுல உனக்கு வருத்தமோ?” என்று ஆத்திரத்துடன் அவளை நெருங்கினான்.

“போங்க” ஒற்றை விரலை அவன் மார்பில் பதித்துப் பின்னால் தள்ளினாள். அவனோ அசையாமல் நின்றான்.

“நான் ஏற்கனவே எக்ஸ்பிளைன் பண்ணிட்டேன். சாரியும் சொல்லிட்டேன். அப்புறமும் இப்படிப் பேசினா எப்படித் தயா?”

“பின்ன என்னடி, என்னை வில்லன் போலவே சித்தரிச்சு பேசினா?” என்று புருவம் உயர்த்தி மிரட்டினான். கண்ணை உருட்டி முகத்தைத் திருப்பினாள்.

“இந்தக் கண்ணை உருட்டற வேலை, மூஞ்ச திருப்புற வேலையெல்லாம் வச்சுக்காத, சொல்லிட்டேன்” அழுந்த அவள் கன்னம் பற்றி எச்சரித்தான்.

“உனக்குத் தேவைன்னா உங்கம்மாகிட்ட நேரடியா கேளு. நடுவுல என்னைப் போட்டு உருட்டாத. நீ வேலைக்குப் போகறதுக்கு உனக்கு ஆயிரம் காரணம் இருக்கப்போ, அவங்க வேலைக்குப் போக அத்தைக்கு நூறு காரணங்களாவது இருக்கும்ல? உனக்கு உன் வேலை வெல்லக் கட்டின்னா? அவங்களுக்கு அவங்க வேலை உப்ப போல அவசியமானதா இருந்திருக்கலாம். அவங்க பக்கமிருந்தும் யோசி. உன் வேலையை மட்டும் உசத்தியா நினைக்காத, நாங்க எல்லாம் மட்டமா என்ன? ஒரு நாளைக்குக் குறைஞ்சது நூறு பேர் பசியைப் போக்குறோம். புகைய மட்டும் பாக்காத, பசியைப் பாரு” அவனது ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தமாக அவள் செவியில் மோத, அவள் விழிகள் ஒருவித புதுவித புரிதலில் விரிந்தன.

“அம்மா ஹெல்த் பத்தி மட்டும்தான் நான் யோசிச்சேன்”

“உங்கம்மாக்கு உடம்பு முடியலன்னு உங்கிட்ட சொன்னாங்களா? அப்படியே சொல்லியிருந்தாலும் நீ உடனே ஓடி வந்துட்டியா என்ன? இல்லயில்ல? அப்புறம் இப்போ மட்டும் என்ன அக்கறை சக்கரையா வழியுது?” என்று வெறுப்புடன் கேட்டு, வேகமாக அவள் முகத்தில் இருந்து கையை அகற்றினான்.

“இதெல்லாம் இன்னைக்குப் பேசி ஆகுறது இல்ல. நேரமாகுது எழுந்திரி, போய் உனக்கு வேலையைக் கன்பார்ம் பண்ணிட்டு வருவோம்” என்றான்.

“கோபமா இருக்கீங்களா தயா?”

“ரொம்ப முக்கியம் கிளம்புடி” என்று கத்தினான். அவளோ மூஞ்சியைச் சுருக்கினாள்.

“என்ன மொகரச் சைடு வாங்குது?”

“உங்க மேல..”

“என் மேல..”

“சிகரெட் நாத்தம்” என்று மூக்கை சுருக்கினாள்.

“அடிங்க..” என்று நாக்கை மடித்து அவளை நெருங்கினான்.

“என்ன சேட்டையா? நான் சிகரெட் தொட்டே நாலு நாளாச்சு?”

“அப்படியா அப்போ அதுக்கு முன்னாடி பிடிச்சுருக்கீங்க? எனக்குத் தெரியாம”

“குறிஞ்சியாத்தா, உனக்கு வேலைக்குப் போக விருப்பம்னா வேகமா கிளம்பு. இல்லையா, நான் பாட்டுக்கு கடைக்குப் போய் என் வேலையைப் பார்ப்பேன்”

“ஆமா, எதுக்காக எனக்கு வேலைக்குச் சொல்லி வச்சீங்க?”

“எதுக்காகன்னா? என்ன கேள்வி இது?” என்று புருவங்களை நெறித்தவன், “ஓ நர்ஸம்மா, என்ன நினைச்சீங்க? உங்கள கூட்டிட்டு போய் என் ஹோட்டல்ல‌ அடுப்பு ஊத விடுவேன்னா?” என்று பல்லைக் கடித்தான். அவள் திகைத்து பார்க்கவும், “அப்படித்தான் நினைச்சுருக்க இல்ல? இருடி, உன்னை வந்து பேசிக்கறேன்” என்றான் கோபத்துடன்.

அவனிடம் தயக்கத்துடன் வாசனை திரவியத்தை அவள் எடுத்து நீட்ட, “அடிங்க” என்று அடிக்கக் கை ஓங்கியவனுக்குச் சிரிப்பு வந்து விட்டது.

காலையில் இருந்து கடையில் நின்றிருந்தவன் மேல் வியர்வை, புகை, சிகரெட் எனக் கலவையான வாசம் வர, அவளுக்குப் பிடிக்கவில்லை.

“ரொம்பப் பண்ற நீ” என்று கோபமாக முணுமுணுத்தாலும், குளித்து உடை மாற்றியே அவளுடன் வந்தான். வண்டியை முதலில் கடைக்கு விட்டான். வீட்டுப் பெரியவர்களிடம் விவரம் சொல்லி, அவர்களின் ஆசீர்வாதம் பெற்ற பிறகே மனைவியை மருத்துவமனை அழைத்துச் சென்றான்.

அங்குச் சென்றதும், “கோபமா, அப்செட்டா இருக்கீங்களா தயா?” திரும்பவும் கேட்டாள். மௌனமாக முகத்தில் எந்தவித உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல் அமர்ந்திருந்தான். ஆனால், உள்ளுக்குள் உள்ளம் உலைகளமாகக் கொதித்துக் கொண்டிருந்தது. காரணம் ஶ்ரீகாந்த்.

“வீட்டில் பேசி விட்டு வருகிறேன்” என்று கூறி சென்றவன், அதன் பிறகு அவர்கள் பக்கமே வரவில்லை. இத்தனைக்கும் இருவரும் ஒரே ஊர். இவர்கள் உணவகத்துக்கு அவன்தான் காய்கறி சப்ளை செய்கிறான்.

முன்பெல்லாம் அவனே நேரடியாக வந்து காய்கறியை இறக்கி செல்வான். அது மட்டுமில்லாது நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடைக்கு வந்து சிறிது நேரம் தயாவுடன் அரட்டை அடிப்பான். ஒரு டீ அடித்து, வடை சாப்பிட்டு செல்வான்.

அன்று உணவகத்தில் அவனுக்குப் பிடித்த மீனோ, கடல் உணவோ வந்திருந்தால் வீட்டுக்கு வாங்கிச் செல்வான்.

ஆனால் இப்போதெல்லாம் ஶ்ரீகாந்த் அவர்கள் கடைப் பக்கமே வருவதில்லை. அப்படியே முழுதாக ஒதுங்கி விட்டான் என்று சொல்ல முடியாது. அவன் கார் ஒரு நாளைக்கு இரு முறையாவது அவர்கள் கடையைக் கடக்கிறதுதான். அவ்வப்போது பொது இடங்கள், மார்க்கெட் என எதிர்பட நேர்ந்தாலும் இருவரும் பேச நேரவில்லை. எதுவும் திட்டமிட்டு நடப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் என்னவோ சரியில்லை என்ற உள்ளுணர்வு அடித்துச் சொல்ல, அவனை அழைத்துப் பேசி விடலாம் என்றே நினைத்தான் தயா. முதல் முறையாகத் தயாபரனுக்குத் தயக்கம் வந்தது. அவனே வரட்டும் என்ற முடிவுடன் அமைதியாகக் காத்திருந்தான்.

இதோ இன்று கடையில் இருந்து கிளம்பும் போது கூடச் சாலையில் ஶ்ரீகாந்த்தின் கார் சீறி பாய, அதைப் பார்த்து பழனியப்பன், “என்னப்பா தயா, இந்த ஶ்ரீகாந்த் தம்பி, அவங்க வீட்டு பெரியவங்களோட வர்றேன்னு சொல்லிட்டு போனதோட ஒரு செய்தியும் வரலையே? உங்கிட்ட எதுவும் சொன்னாப்லயா?” என்று அவனிடம் கேட்டிருந்தார்.

“வருவாங்கப்பா” என்றான். வேறென்ன சொல்ல? அந்தக் கோபம், வருத்தம், குழப்பம் என்றிருந்தவன் மனநிலையை அவன் நாடி பிடிக்காமலே நர்ஸம்மா துல்லியமாகக் கேட்க, அவனுக்கு ஆச்சரியம் என்றாலும் வெளிக்காட்டி கொள்ளாமல் எரிச்சலுடன் அவளைப் பார்த்தான்.

“ஒழுங்கா போய்ப் பொறுப்பா பதில் சொல்லி வேலையைக் கன்பார்ம் பண்ணிட்டு வா” என்றான் அழுத்தமாக.

“அப்போ கோபமாதான் இருக்கீங்க” என்று அறிவித்தாள்.

“வேலை வாங்கிட்டு வந்து உங்களைக் கவனிக்கறேன்” என்று உள்ளே சென்றாள். வேலையும் வாங்கி விட்டாள். மருத்துவமனை நிர்வாகம் அவசரமாகச் செவிலி தேவை என்று சொன்னதால் மறுவாரமே வேலையிலும் சேர்ந்து விட்டாள். முதலில் அவளுக்கு நிரம்பத் தயக்கம்தான்.

“அத்த” என்று நாச்சம்மை முன் சென்று நிற்க, “வேலைக்குப் போகத் துணி எதுவும் எடுக்கணுமா குறிஞ்சி? அங்க உனக்கு ஹாஸ்பிடல் உடுப்பு குடுத்திருவாங்கல்ல?” என்று கேட்டு, அவள் ஆமோதிக்கவும், “சரி, சரி. நாம எதுக்கும் நாலைஞ்சு செட் சுடிதார், சேலை எடுப்போம்.” என்றார்.

“நான் இப்பவே வேலைக்குப் போறதுல உங்களுக்கு வருத்தம் இல்லையா அத்த?” மெதுவாகக் கேட்டு விட்டாள்.

“நா ஏன் வருத்தப்படப் போறேன்?” குழப்பமாகக் கேட்டவர், அவள் முகம் பார்த்து, “நீ கல்யாணமானதும் வேலைக்குப் போறதை கேட்கறியா? அதெல்லாம் புது எடத்துல கல்யாணம் பண்ணிட்டுப் போனா பொண்ணுக்கு பழக நாள் ஆகும்னு சொல்லுவாங்க. நம்ம வீடு உனக்கென்ன புதுசா? இல்ல, நாங்கதான் உனக்குப் புது மனுஷங்களா? புதுசா பேசி பழக?” என்று சிரிப்புடன் கேட்டார்.

“உன்னைத் தயாவே போகச் சொல்லிட்டான், அதுக்குப்புறம் என்னத்துக்கு யோசிக்கற? நல்லபடியா வேலைக்குப் போயிட்டு வா” என்று அனுப்பி வைத்தார்.

“கவனம் பாப்பா” கண்ணீருடன் மகளுக்குத் திருநீறு பூசி அனுப்பினார் அலமேலு. பொறுப்பாகப் பொண்டாட்டிக்கு ஓட்டுநர் வேலை பார்த்தான் தயாபரன்.

அவள் வேலைக்குச் செல்ல தொடங்கி இரண்டு வாரங்கள் வெற்றிகரமாகக் கடந்திருந்தன.

இடையில் ஶ்ரீகாந்த், தயா ஒரு முறை கடையில் சந்தித்திருந்தார்கள்.

“தயா, தப்பா எடுத்துக்காத டா மச்சா. நா எங்க வீட்ல பேசிட்டேன். பட் எனக்குக் கொஞ்சம் டைம் கொடுடா. சீக்கிரம் நல்ல செய்தியோட வர்றேன்” இம்முறை நேரம் கேட்பது அவனது முறையானது போலும்.

அவன் கேட்ட சமயத்தைத் தயாபரன் தாராள மனத்துடன் தந்து தள்ளி நின்றான்.

அன்றைக்குக் குறிஞ்சிக்கு காலை ஷிஃப்ட். முன் மாலையில் மனைவியை அழைக்க மருத்துவமனை சென்றான் தயா. அங்கே வாயிலில் ஶ்ரீகாந்த் கார் நின்றிருந்தது.

குறிஞ்சிக்கு பணி நேரம் முடியும் சமயத்தில், “குறிஞ்சி சிஸ்டர், இந்த ஒரு பேஷண்ட் மட்டும் வைட்டல்ஸ் செக் பண்ணிடுங்க பிளீஸ்” என்றாள் சக செவிலி.

அவளும், “அனுப்புங்க சிஸ்டர்” என்றாள் மறுக்க முடியாமல். அறைக் கதவை திறந்து உள்ளே வந்தார் உண்ணாமலை. ஶ்ரீகாந்த்தின் அம்மா.

அவரைக் கண்டதும், “பெரியம்மா நீங்களா? நல்லா இருக்கீங்களா? உடம்புக்கு என்ன?” என்று புன்னகை முகமாக நலம் விசாரித்தாள் குறிஞ்சி.

“பெரியம்மாவா? என்ன முறையில நான் உனக்குப் பெரியம்மா ஆகுது சொல்லு?” என்று கடுப்புடன் கேட்டார் அவர். அப்படிக் கேட்பார் என எதிர்பார்த்திராத குறிஞ்சி அதிர்ந்து சமாளித்து, “ஒரு மரியாதைக்காகப் பெரியம்மா..” என்று சொல்லி முடிக்கவில்லை.

“உங்க திட்டமெல்லாம் எனக்குத் தெரியாதுன்னு நினைச்சீங்களோ?” என்று சீறினார்.

“என் பையனை பார்த்தா இளிச்சவாயன் மாதிரி இருக்கா உங்களுக்கு? நீயும், உன் புருஷனும் சேர்ந்து உன் நாத்தானார அவன் தலையில கட்ட பாக்கறீங்களா? நீங்க காலத்துக்கும் பொறுப்பு இல்லாம கைய வீசிட்டு இருக்க என் புள்ளைதான் கிடைச்சானா?” என்று கோபமாகக் கேட்டார். குறிஞ்சி அவரின் ரத்த அழுத்தத்தைச் சோதித்துக் கொண்டிருந்தாள். அது அதீதமாக உயர்ந்திருந்தது. அந்நேரம் அவளது ரத்த அழுத்தத்தைச் சோதித்தால் நிச்சயமாக அதுவும் உயர் ரத்த அழுத்தமாக உயர்ந்திருக்கும் என்பது உறுதி.

error: Content is protected !!
Scroll to Top