துர்காவின் கன்னங்களில் தன் பிஞ்சுக் கரங்களைப் பதித்து, “அ….ம்மா” என்று கத்தியழைத்தாள் ரோஜா.
“போவோமா?” அத்தனை ஆசையாக, ஆர்வமாக, ஆவலே உருவாகக் கோலிக்குண்டு கண்களை உருட்டி கேட்டாள். துர்காவிடம் பதில் இல்லையே. மாறாக, ‘ஶ்ரீகாந்த் இப்படிக் கேட்கச் சொல்லியிருப்பானோ?’ என்ற கேள்விதான் உருவானது. அவன் அப்படியானவன் அல்ல என்று உள்மனம் சொன்னாலும் உறுத்தல் குறையவில்லை.
“காலையில மாமா வண்டில ரைட் போலாம் செல்லம். சரியா?” என்று அவள் கேட்கவும், மகளின் மறுப்பு பலமான மண்டையாட்டலுடன் வந்தது.
அம்மாவின் கன்னத்திலிருந்து கையை அகற்றி விட்டு, “கார்லதான் போணும். ஶ்ரீக்கா கார்ல” என்று அடித்துச் சொன்னாள்.
“என்ன பாப்பா திடீர்னு அடம் பிடிக்கற? அடம் பிடிச்சா அம்மாக்கு பிடிக்காது சொல்லிட்டேன்”
“கார்ல போலாம்மா, ஜாலியா இருக்கும்” என்று அம்மாவுக்கும் ஆசை காட்டியது பட்டு ரோஜா.
“ஜாலியா இருக்கும்னு உனக்கெப்படி தெரியும்? ஶ்ரீகாந்த்.. ஶ்ரீக்கா சொன்னாரா?”
முதல் கேள்வியை மட்டும் உள்வாங்கி, “நா தயா மாமா கூடக் கார்ல போய் இருக்கேன்ல. அதோ நாளைக்குப் போனேனே. நல்லாருந்துச்சும்மா” என்று யோசித்து யோசித்துப் பாவனையாக விழிகளை உருட்டி சொன்னாள் குழந்தை. மற்ற நேரமாக இருந்திருந்தால் அந்த, “நாளைக்கு” என்பதிலேயே சிரித்திருப்பாள்.
இப்பொழுதிருக்கும் மனநிலையில் அது சாத்தியமில்லை.
“ஶ்ரீகாந்த் ரைட் போலாம்னு கூப்பிட்டாரா உன்னை?” மகளின் முகத்தைக் கையில் ஏந்தி கூர்மையாகக் கேட்டாள். அந்தப் பார்வை, தான் ஏதோ தவறு செய்து விட்டதாகக் குழந்தைக்கு உணர்த்த, தப்பிக்க வழி தேடியது மழலை.
“கார்ல போலாம்னு சொன்னாரா?” அதட்டி கேட்டாள்.
“ம்மா.. ஆமா” என்று உளறியது பட்டு ரோஜா.
அந்நேரம் அவர்களின் அறையை எட்டிப் பார்த்த குறிஞ்சி, “குட்டி ரோசு, சாப்பிடலாம் வா” என்று அழைத்தாள். அப்பாடா தப்பித்தோம் என்று அம்மாவிடம் இருந்து விடுபட முயன்றது குழந்தை. துர்கா அவளை இறுக்கி பிடிக்க, அவர்களின் முகம் பார்த்துக் கொண்டே உள்ளே வந்தாள் குறிஞ்சி.
கட்டிலில் அமர்ந்து ரோஜாவை இழுத்து தன் பக்கத்தில் இருத்திக் கொண்டு, “என்ன பிரச்னை?” என்று கேட்டாள்.
“ஒன்னுமில்ல” என்று துர்கா முணுமுணுக்க, ரோஜா மெதுவாகத் திரும்பி, “குறி..ஞ்சி, ஶ்ரீக்கா கார்ல ரைட் போலாமா? நீ வர்றியா?” என்று கூட்டணிக்கு ஆள் சேர்க்க முயன்றது வாண்டு.
“போலாமே” என்றாள் புன்னகையுடன்.
“வா, போவோம்” என்று கைப் பிடித்து வேகமாக இழுத்தாள் குழந்தை.
“இப்ப எப்படிப் போறது ரோசு. ஶ்ரீக்கா வீட்டுக்கு போயிட்டாங்க இல்ல? நாளைக்குப் போலாம். சரியா?”
“ஏன் வீட்டுக்கு போனாங்க? ரைட் இப்ப போணும். ஶ்ரீக்கா கூட்டிட்டு போறேன்னு சொன்னா” என்றாள் பிடிவாதமாக முகத்தைச் சுருக்கி.
“ஶ்ரீக்கா, உன்கிட்ட சொன்னாங்களா? சூப்பரு ரோசு குட்டி” என்று செல்லம் கொஞ்சியவள், “ஆனா, இப்போ போக முடியாது. அவங்க வீட்டுக்கு போயிட்டாங்க இல்ல, வர மாட்டாங்க” என்றாள்.
“ஏன் வர மாட்டாங்க?” ஏமாற்றத்துடன் கேட்டாள் குழந்தை.
“ஏன்னா, இப்ப அவங்க கார் தூங்க போய் இருக்கும். நீயும் சாப்பிட்டு வந்து தூங்கு. வா” என்று கையில் அள்ளப் போனாள்.
“ஶ்ரீக்கா கூட்டிட்டு போறேன்னு சொன்னா” என்று அதிலேயே நின்றது வாண்டு.
“ப்ச்” என்று துர்கா சத்தமாகச் சலிக்க, “ஓ, இப்போ இதான் பிரச்னையா உங்கம்மாக்கு” என்று குறிஞ்சி கேட்க, “நான் சொன்னேனா உன்கிட்ட?” என்று முறைத்தாள் மற்றவள்.
“நீ சொல்லலைன்னாலும் எங்களுக்குத் தெரியும். இப்போ என்ன உன் பிரச்னை?”
“எதுக்குத் தேவையில்லாம குழந்தைக்கு.. ஆசை காட்டுறார்? நான் இது சரி வராதுன்னு அவர்கிட்ட சொன்னதுக்கு அப்புறமும் குழந்தை கிட்ட இப்படிப் பேசுறது சரியா?”
“ஏய் துர்கா, உன் கற்பனை குதிரையை நிறுத்து. அண்ணா நார்மலா கேட்டிருப்பாங்க”
“நேரா என்கிட்ட வந்து ஶ்ரீக்கா கார்ல போவோமான்னு கேட்கறா. அப்போ பாப்பா கிட்ட என்ன சொல்லி அனுப்பியிருப்பார் உங்க அண்ணா?” என்று அந்த அண்ணாவில் அழுத்தம் கொடுத்துக் கோபமாகக் கேட்டாள்.
“கார்ல ரவுண்டு போலாமான்னு கேட்டிருப்பார், அவ்ளோதான். இதையெல்லாம் குதர்க்கமா யோசிச்சு குழப்பிக்காத.”
“நான் குதர்க்கமா யோசிக்கறேனா? என் குழந்தையை வச்சு என்னைக் கார்னர் பண்றவர் உனக்கு நல்லவரா?” துர்கா குரல் உயர்த்தவும், ரோஜா மிரண்டு குறிஞ்சியை ஒண்டினாள்.
“அண்ணா சாதாரணமா கேட்டு..”
“சாதாரணமா.. ஓஹோ, அவருக்குச் சாப்போர்ட் பண்ணாத குறிஞ்சி.” என்றாள்.
“நீ எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுற?”
“உனக்குப் புரியாது” என்று விட்டாள் துர்கா. ஒரு முறை விழுந்து விட்ட பின்புதான் விழிப்புணர்வு முழு வீச்சில் வேலை செய்கிறது. யாரையும் நம்ப முடியாமல், நம்மையும், நம் முடிவுகளையும் கூடச் சந்தேகிக்கத் தோன்றும் என்பதை எப்படிக் குறிஞ்சிக்கு விளக்குவாள்?
“அண்ணா உன்னைக் கல்யாணம் பண்ணிக்கக் கேட்டிருக்கார் துர்கா. லைஃப் லாங் டிராவல் பத்தி பேசியிருக்கார். நீ என்னன்னா, கார்ல போலாம்னு கேட்டதுக்கு இம்புட்டு கோபப்படுற. அது கண்டிப்பா குழந்தைக்காக மட்டும்தான் கேட்டிருப்பார். உன் பார்வையில் அது தப்புதான். நீயே இன்னும் சம்மதம் சொல்லாதப்போ, ரோஜா கிட்ட க்ளோஸ் ஆகுறாரே, அவளும் அவர்கிட்ட ஒட்டிக்கிறாளேன்னு நீ பயப்படுறது எனக்குப் புரியுது.” என்றாள். அதற்கு மௌனமே பதிலாக வந்தது.
“சில சரியான விஷயங்கள் சரியா, தானா நடந்திடும் துர்கா. அதைச் சந்தேகப்படாத” என்றவள், திரும்பி, “ரோசு, ஶ்ரீக்கா உன்கிட்ட கார்ல ரைட் போலாம் வர்றியான்னு கேட்டாங்களா?” என்று ரோஜாவிடம் கேட்டாள்.
“விடு குறிஞ்சி, குழந்தையைப் போய்க் கேள்வி கேட்டுட்டு..” துர்கா ஆட்சேபிக்க, “இல்ல” என்று வேகமாக ஆடியது பட்டு ரோஜாவின் தலை.
“நீதானே சொன்ன? என்னை வேற போலாமான்னு கூப்பிட்டியே?”
“இல்ல கு..றிஞ்சி. தயா மாமா அந்தப் பேட் அங்கிள அடிச்சாங்கல்ல? அப்போ ஶ்ரீக்கா காருக்கு போனோமா, சில்லுன்னு ஏசி போட்டா ஶ்ரீக்கா. பாட்டு போட்டா. கீ எடுத்தானா..”
“எடுத்தாங்களா..” துர்கா வேகமாகத் திருத்த, “ஆமாம்மா. கீ எடுத்தானா.. அப்போ நா ஸ்டார்ட் பண்றேன் சொன்னே. நா ஓட்டுறேன்னு சொன்னே” கையை அசைத்து ஆட்டி செய்கை செய்து காண்பித்து விளக்கினாள்.
“கார் ஓட்டினியா நீ?” குறிஞ்சி கண்ணை விரித்துக் கேட்கவும், “இல்…ல” என்று சோக ராகம் போட்டது வாண்டு.
“ஏன்?”
“அம்மா சொன்னாதான் ரைட் போலாம்னு ஶ்ரீக்கா சொன்னா. அம்மாகிட்ட ஃபர்ஸ்ட் கேக்கணும் சொன்னா”
“ஓ, அப்படியா?”
“ஆமா, அம்மா, எங்களோட வந்தாதான் கார் ரைட் கூட்டிட்டு போவேன்னு சொன்னா” என்று அப்பாவியாக ஆசையுடன் சொன்னாள் குழந்தை.
“பாத்தியா..” துர்கா படபடக்க, “எல்லாத்தையும் பூதக் கண்ணாடி கீழ வச்சு பார்த்து பெருசு பண்ணாத துர்கா. முதல்ல அவரே ஆசைக் காட்டி குழந்தையை இழுக்கறார்னு குத்தம் சொன்ன. இப்போ..” என்று சிறு குரலில் கண்டிக்க, முகத்தைத் திருப்பினாள் துர்கா.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் சரியான முடிவெடுப்பேன்னு எங்ககிட்ட சொன்ன. அதுக்குள்ள ஏன் பல்டி அடிக்குற? ம்ம், உன் மனசு எடுக்கிற சரியான முடிவை ஏத்துக்க முடியாமையா?” பொட்டில் அடித்தது போலச் சரியான புள்ளியில் குறித் தவறாமல் அடித்து அவள் கேட்க, துர்காவின் முறைப்பே அவளுக்கான பதிலை சொன்னது.
“ஶ்ரீ அண்ணா, ரொம்பக் கேஷுவலா இயல்பா ரோசு கிட்ட பேசுறார். அவள அழகா ஹேண்டில் பண்றார். அதுக்காகவே நீ அவரைக் கன்சிடர் பண்ணலாம்” என்றாள்.
“இல்லன்னா..”
“இல்லன்னா என்ன பெருசா பண்ணிட போறோம். ரோசு, குறிஞ்சி கிட்ட வளரும்” குறிஞ்சி சொல்லி முடிக்கும் முன் அவளை ஓங்கி அடித்திருந்தாள்.
“ஆ..”
“வலிக்குதா..” என்று கேட்டு அத்தையின் கையை வருடி கொடுத்தது வாண்டு.
“அந்த ராட்சசி உன்னைய தூக்கிப்பேன்னு சொல்றா, நீ அவளுக்குத் தடவி குடு” என்று மகளிடம் முகம் காண்பித்தாள் துர்கா.
“ஆமா, தூக்கிப்பேன்.” என்று ரோஜாவை தூக்கிக் கொண்டு எழுந்தாள் குறிஞ்சி.
“ரோஜாக்கு பேர் வச்சதே நான்தான். சோ ரோஜா என்னுது” என்று குழந்தையை இறுக்கி அணைத்து அவள் முத்தமிடவும் கிளுக்கி சிரித்தாள் ரோஜா.
குறிஞ்சியும் சிரிக்க, இருவரையும் பார்த்திருந்த துர்காவின் இதழ்கள் தானாக அழகாகப் புன்னகைத்தன.
“நாங்க எல்லோரும் உன்னோட இருக்கோம் துர்கா. நீ என்ன முடிவெடுத்தாலும் உன்னோட நிப்போம். நீ சரியான முடிவை எடு, போதும்” என்றாள். துர்காவின் தலை தானாக ஆடியது.
அன்றைய இரவு மட்டுமல்ல, அதன் பிறகு வந்த நாள்களும் துர்காவின் மனத்தில் ஶ்ரீகாந்த்தும், அவன் மணக்க கேட்டதுமே நிரந்தரமாக ஆக்கிரமித்திருந்தது.
மகளிடம், “உனக்கு ஶ்ரீகாந்த் பிடிக்குமா செல்லம்?” என்று இரண்டு முறை கேட்டும் விட்டாள்.
“ஶ்ரீக்கா, பிடிக்கும்” பால் பற்கள் பளிச்சென்ற புன்னகையில் தெரிய சொன்னாள். ஏன் பிடிக்கும் என்று கேட்கத் தோன்றவில்லை. மகளுக்கு அவனைப் பிடித்திட வேண்டுமே என்ற பதட்டம் மட்டுமே மனத்தினில் இருக்க, அவளுக்கே அந்த உணர்வு ஆச்சர்யமாக இருந்தது.
“நாம ரெண்டு பேரும் வேற வீட்டுக்கு போவோமா?” என்று கேட்டாள் ஒரு முறை. அதற்குப் பத்துக் கேள்விகள் கேட்டு, தயா மாமா, ஆயா, ஐயா எல்லாம் அங்கே இருக்க மாட்டார்கள் என்றதும், “வேணாம்மா. இங்கேயே இருப்போம்” என்றாள் ரோஜா. ஏனோ துர்காவின் அகமும், முகமும் வாடிப் போனது. தன்னுள் நிகழும் இந்தப் போராட்டங்களை, மாற்றங்களைக் குறிஞ்சியிடம் பகிர அவளுக்குத் தயக்கமாக இருந்தது. ஆனால், அவளே தோண்டி துருவி கேட்டு கண்டுபிடித்து விட்டாள்.
“வாரே வா துர்கா. குறிஞ்சி ஹேப்பி” என்று கத்தினாள்.
“நான் தயா கிட்ட சொல்றேன், அத்த, மாமா கிட்ட அவர் பேசுவார்” என்று அவள் பரபரக்க, “வெயிட் பண்ணு குறிஞ்சி” என்று அவளின் பரபரப்பில் பச்சை தண்ணீர் தெளித்தாள்.
“எனக்கு முதல்ல ஶ்ரீகாந்த் கிட்ட பேசணும்” என்றாள்.
“ஓ?”
“அவர்கிட்ட உண்மையைச் சொல்லணும்” என்றாள் உறுதியாக.
“அண்ணாக்கு தெரியும்னு சொன்னியே. உன் தம்பி கூட அப்படித்தான் சொன்னார்”
“மேலோட்டமா தெரியும்னு சொன்னார். முழுசா என்ன நடந்ததுன்னு நான் சொல்லணும் இல்ல?” என்று கேட்டாள். இனி ஒரு போதும் உண்மையற்ற உறவை விரும்ப மாட்டாள் அவள்.
“தயாகிட்ட அண்ணா நம்பர் வாங்கித் தரவா? இல்ல உன்கிட்டேயே இருக்கா?” என்று கேட்டவளை முறைத்தாள்.
“அப்போ நேரா நம்ம வீட்டுக்கு வர சொல்லிடுவோமா? இல்ல நம்ம கடைக்கு வரச் சொல்லி பேசுறியா?”
“வீட்ல பேசிட்டு வர்றேன்னு போனார்தானே? அவரா வருவார். அப்போ பேசிக்கலாம்” என்றாள்.
“ஓ, அப்போ அண்ணா உன்னைத் தேடி வருவார்னு சொல்ற?” குறிஞ்சி கண் சிமிட்ட, நெடுங்காலம் கழித்துத் துர்காவின் முகத்தில் வெட்கப் புன்னகை படர்ந்ததைக் காணவே கொள்ளை அழகாக இருந்தது.
அந்தக் கொள்ளை அழகை காண கொள்ளை நாளாகியும் ஶ்ரீகாந்த்தான் வரவில்லை.