நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 15 (2)

துர்காவை எப்போதோ இழுத்து அணைத்து பிடித்திருந்தாள் குறிஞ்சி. நாச்சம்மை மகளின் முகம் வருடி கண் கலங்கினார்.

“பயப்படாதம்மா, அவன் என்னை ஒன்னும் செய்யல. மேல கை வச்சான், அடிச்சுட்டேன்” என்றாள் துர்கா. கண்கள் கலங்க புன்னகைத்து அவளோடு நின்றார்.

ஶ்ரீகாந்த் வந்த வேகத்தில், “துர்கா, உங்களுக்கு ஒன்னும் இல்லையே” என்று கண்ணில் கரிசனத்துடன் கேட்டான்.

இல்லையெனத் தலையசைத்தாள்.

“ம்மா” என்று ஶ்ரீகாந்த்தின் கையில் இருந்து துர்காவிடம் தாவப் போனாள் ரோஜா.

அப்போது மாமன் அடிப்பது அவள் பார்வையில் படவும், மிரட்சியாக அவனைப் பார்த்து, ஶ்ரீகாந்த்தின் தோளில் இருந்தபடியே அம்மாவின் கையைப் பிடித்திழுத்தாள்.

“ஒன்னும் இல்ல தங்கம்.” துர்கா மகளைத் தேற்ற, “நீங்க உள்ள வாங்க” என்று அவளையும், ரோஜாவையும் உள்ளே அழைத்துச் சென்றான் ஶ்ரீகாந்த். குறிஞ்சி நாச்சம்மையை ஆறுதலாகப் பிடித்துக் கொண்டாள். அவர் பார்வை மகள் பேத்தியின் பின்னே சென்றாலும், அவர் செல்லவில்லை.

கதவருகில் சென்று, “தயா” என்று துர்கா திரும்ப, “உங்க தம்பி சமாளிப்பான். நீங்க வாங்க” என்று அவளின் கைப் பிடித்து அணைவாக அழைத்துச் சென்றான்.

“குறிஞ்சி அங்க இருக்காங்க, தயாக்கு துணையா” என்று கண் காட்டினான். அவள் கண்கள் அவன் கரத்தின் மேலிருந்தன. அவன் கைப் பட்டால் அவளுக்கு அருவெறுப்பாக இல்லை. அசிங்கம், ஒவ்வாமை, ம்ஹூம் எதுவும் இல்லை. மாறாகப் பாதுகாப்பாக உணர்ந்தாள். அதனால் அவனிடமிருந்து விலகவில்லை, அவன் கையை விலக்கவுமில்லை.

பெரியவர்கள் எல்லாம் பின் பக்கம் கூடி விட்டார்கள். கற்பகம் மகனை காப்பாற்ற முயல, “தயா போதும் விடுப்பா” என்று மகனை தடுக்க முற்பட்டார் பழனியப்பன். குறிஞ்சி கைக் கட்டி வேடிக்கை பார்த்து நின்றாள். அவளை விட்டிருந்தால் அவளே நான்கு அடி போட்டிருப்பாள். அப்போதுதான் அவள் மனம் ஆறியிருக்கும்.

துர்கா நின்ற நிலையே அவள் கண்ணில் நிறைந்து அவளைக் கலங்கச் செய்தது. கணவனை அவள் தடுக்கவேயில்லையே.

லக்ஷ்மணன், “டேய்” என்று திமிறிக் கொண்டு தயாவை பதிலுக்கு அடித்திருந்தான். அவ்வளவுதான். அவன் கையைப் பிடித்து முறுக்கி பின்னால் வளைத்திருந்தான் தயா.

“அம்மா..” என்று அவன் வலியில் அலறித் துடிக்க, அவனைப் பெற்றவர்கள், “டேய் விடுடா, விடுடா அவனை” என்று தயாவின் கையைப் பிடித்திழுத்து மகனை விடுவிக்க முயற்சித்தார்கள். எங்கே? அவன் பிடி உடும்பு பிடியாக இருந்தது.

“ஐயோ அம்மா. டேய் விடுடா. உங்கக்கா பக்கமே நான் திரும்பல இனி. மன்னிச்சுடுடா தயா” என்று அவன் இறைஞ்சவும்தான் தயா தயவு காண்பித்து அவன் கையை விட்டான்.

லக்ஷ்மணன் கரம் அப்படியே தொங்கி போனது. வலக்கரத்தில் ஒரு விரல் வீங்கி கன்றி போய் இருந்தது. அப்படியே கையை மடக்கி மடிந்து அமர்ந்து விட்டான் அவன்.

அப்போதுதான் கணவனைப் பின்னே பிடித்திழுத்தாள் குறிஞ்சி.

அவனை உள்ளே அழைத்துச் சென்றாள். அங்கே உள்அறையில் துர்கா அமர்ந்திருக்க அவளுக்குத் தண்ணீர் குடிக்கக் கொடுத்து ஆசுவாசப்படுத்திய ஶ்ரீகாந்த், ரோஜா இந்தச் சூழலை பார்க்க வேண்டாமென, “நான் ரோஜாவோட கார்ல இருக்கேன். நீங்க ரொம்ப யோசிக்காம கண்ணை மூடி ரிலாக்ஸாகுங்க” என்று துர்காவிடம் சொல்லி விட்டு, அவளுக்குக் காற்றாடியை ஓட விட்டு, குழந்தையுடன் வெளியேறியிருந்தான்.

“அக்கா” என்று தயா அவளிடம் சொல்ல, அவனுக்கும் தண்ணீர் எடுத்து வந்து நீட்டினாள் குறிஞ்சி. அவன் புறங்கையில் ரத்தம் கசிய, அதைப் புடைவையால் துடைத்து, அப்படியே அழுந்த சுற்றி இறுக்கிப் பிடித்தாள். அவன் எதையும் உணரும் நிலையில் இல்லை. மௌனமாக அக்காவுடன் அமர்ந்திருந்தான். லக்ஷ்மணனை அவள் எதிர்த்து எதிர்கொண்டு அறைந்தது அவனுக்கு அத்தனை அமைதியை தந்தது. அக்காவால் அவளைத் தற்காத்துக் கொள்ள முடியும். அதற்கு மேல் அவனுக்கு என்ன வேண்டும்?

“அந்த…” என்றவள், “அவங்க குடும்பத்த இப்பவே பேக் பண்ணி அனுப்புடா தம்பி” என்றாள் அவன் கை பிடித்து. சரியெனத் தலையசைத்து எழுந்தான்.

“ஐயோ என் புள்ளை கையை அடிச்சு உடைச்சுட்டானே. இந்த வீட்டு பொண்ணுக்கு பெரிய மனசு பண்ணி வாழ்க்கை குடுக்க வந்தவனை இப்படிப் பண்ணிட்டானே..” என்று கற்பகம் அரற்ற, “வாயை மூடுக்கா. என் பொண்ணைப் பத்தி மேல ஒரு வார்த்தை பேசின..” என்று எச்சரித்த பழனியப்பன், “இனிமே இவன் என் கண்ணுலயே படக் கூடாது சொல்லிட்டேன்” என்று லக்ஷ்மணனை கைக் காட்டினார்.

நாச்சம்மை நறுக்கென்று நாலு வார்த்தை கேட்டு விட்டார்.

“நீங்க புள்ளை வளர்த்துருக்கப் பெருமைக்கெல்லாம், என் பொண்ணு பேரை எடுத்து பேச கூட உங்களுக்குத் தகுதி கிடையாது அத்தாச்சி” என்று விட்டார்.

“பிள்ளையைத் தட்டி நல்லவிதமா வளர்க்க துப்பில்லாம, அடுத்தவன் பிள்ளைய குறை சொல்ல வந்துட்டீங்க?” என்றவர், “நீங்களும் பேத்தி வச்சிருக்கீங்க, பாவத்தைச் சேர்க்காதீங்க” என்று விட்டார்.

“அய்யய்யோ, என்னா பேச்சு பேசுறா இவ. நா போலீசுக்கு போறேன்” என்று பாய்ந்தார்.

“இப்படியாப்பட்ட புள்ளைக்குதான் நான் நின்னு பேசி கல்யாணத்த முடிச்சு கொடுக்கணுமா? எதுக்கு என் பேத்தி வாழ்க்கையைக் கெடுத்து..” என்று துர்காவை குறிப்பிட்டு சொன்னவர், “என் பேரையும் கெடுத்துக்கணுமா?” என்று கேட்டார் அவர்களின் சித்தப்பா.

“இதுக்கு மேல நீங்க இங்க இருந்தா சரி வராது. பெட்டிய கட்டுங்க” என்று அவர்களை விரட்டினார்.

லக்ஷ்மணன் அப்பா மட்டும் மனம் வருந்தி அவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

“கிளம்புங்க.. பெட்டிய கட்டுங்க” என்று பெரியவர் விரட்ட, “வாம்மா போலாம். பெரிய இவ அவ” என்று துள்ளினான் லக்ஷ்மணன்.

“போடா” என்று அவனை அடிக்கவே கை ஓங்கி விட்டார் பெரியவர்.

அவர்கள் வீட்டுக்குள் வர தயாவும் வெளியே வந்தான்.

அவனைப் பார்த்ததும், “நான் போலீஸுக்குப் போகப் போறேன்” என்று கையை வீசி கத்தினார் கற்பகம்.

“என் புள்ளை மேல கைய வச்சுட்டல்ல.. அவன் விரலை உடைச்சுட்ட இல்லடா, உன்ன சும்மா விட மாட்டேன் நானு..”

“எங்கக்கா மேல வச்ச கைய வெட்டியிருக்கணும் நானு. தப்புப் பண்ணிட்டேன் போலயே. மச்சானுக்கு இது பத்தல போலயே” என்று அவன் வேட்டியை மடித்துக் கட்ட, ஶ்ரீகாந்த் கூட உள்ளே வந்து விட்டான். ரோஜாவை குறிஞ்சியிடம் கொடுத்து விட்டான்.

“ஓ வெட்டுவானாம்ல? என்னடா தம்பி உன் பையனை பேச விட்டுட்டு வேடிக்கைப் பார்த்திட்டு நிக்கறியா?” என்று அவர் கத்த, பழனியப்பன், “என் பொண்ணு மேல கை வச்சதுக்கு இவன..” என்று லக்ஷ்மணனை நெருங்கியவர், “ச்சீ, போடா” என்று முகம் காட்டி விட்டார்.

“நான் போலிசுக்கு போவேன்” என்று அவர் மீண்டும் கத்த, “நம்ம அமராவதிபுதூர் ஸ்டேஷனுக்குத்தானே? போங்க. நம்ம இன்ஸ்பெக்டர் அசோகனுக்குப் போன் பண்ணி நீங்க வரீங்கன்னு தகவல் சொல்லிடுறேன் நான்” என்றான் தயா, அவர்களை முறைத்து.

“நான் அப்பாவ வரச் சொல்றேன்” என்று ஶ்ரீகாந்த் கைப்பேசியை எடுக்க, “ஓஹோ, இவன் வந்ததும் இந்த ஆட்டம் காட்டுறீங்களா எல்லாரும்?” என்று அவர் கத்த, “அத்த” என்று ஒரே அழைப்பில் அவரை வாய் மூட செய்திருந்தான் தயா. அந்தக் களேபரத்தில் அக்கம் பக்கமெல்லாம் கூடி விட்டார்கள். அந்தச் சத்தத்தில் அலமேலு மகளின் புகுந்த வீட்டுக்கு விரைந்து வந்தவர், வாசலில் வேடிக்கை பார்த்து நின்றவர்களிடம் பேசி அனுப்பி வைத்தார்.

கற்பகத்திடம், “உனக்குப் பொறந்த வீடே இனி இல்லை போ” என்று முடிவாகச் சொல்லி விட்டார் அவர்களின் சித்தப்பா. அவரே அவர்களைப் பிடித்து வாசலுக்குக் கொண்டு போய் விட்டிருந்தார்.

தயாபரன் ஆட்டோ சொல்லியிருக்க அதுவும் சரியான சமயத்தில் வந்து விட்டது.

ஆட்டோ ஓட்டுநரிடம், “அவங்கள ஹாஸ்பிடல் கூட்டிட்டு போ முதல்ல, அங்க வேலை முடிஞ்சதும், அங்கிருந்து நேரா பஸ் ஸ்டாண்டு போய், பஸ் ஏத்தி விட்டுட்டு வந்து காசு வாங்கிக்கோ பாசு” என்றான் தயா.

“சரிண்ணே” என்று நகர்ந்தான் அவன். கந்தசாமி தலை குனிந்து விட்டார். கற்பகம், லக்ஷ்மணன் இன்னமும் முறைத்து நகர, அவர்களை யாரும் அங்கே பொருட்படுத்துவதாக இல்லை. லக்ஷ்மணனின் உடைந்த விரலுக்குத் துணியால் கட்டு போட்டு வைத்திருந்தார் கற்பகம்.

அவர்கள் சென்றதும் புயல் அடித்து ஓய்ந்தது போலிருக்க, அனைவரும் வீட்டுக்குள் வந்தார்கள். தயாபரனின் கைப் பிடித்துப் பரிசோதித்து, அம்மாவிடம் சொல்லி வீட்டில் இருந்த முதலுதவி பெட்டி எடுத்து வந்து அவன் காயங்களுக்கு மருந்திட்டாள் குறிஞ்சி.

கட்டிலில் சாய்ந்து அவளையே பார்த்தது பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

“அவனை அடிச்சதும் என்னமோ ஒரு மாதிரி மனசு நிம்மதியா இருக்கு குறிஞ்சியாத்தா.”

“இருக்கலாம். தப்பில்ல” என்றாள், அவன் கண் பார்த்து.

“நர்ஸம்மா திட்டுவீங்கன்னு நினைச்சேன்”

“நான் இப்போ நாத்தனார் மோடில் இருக்கேன்.” என்றாள் விழியுயர்த்தி, அவன் விரல்களுக்கு மருந்திட்டபடியே. புன்னகையின் தடயமே இல்லாமல் புன்னகைத்தான்.

“அப்போ நான் கிளம்பறேன்” என்று ஶ்ரீகாந்த் சொல்ல, இருவரும் கூடத்துக்கு வந்தார்கள்.

“தம்பி” என்று பழனியப்பன் தடுமாற, “பிளீஸ் மாமா, நீங்க எதுவும் சொல்ல வேணாம். நான் சீக்கிரமா முறையா வந்து பேசுறேன்” என்றான் அவன். துர்காவும் வெளியே வந்தாள். அவன் பார்வை ஒரு கணம் அவளை வருடி, விடைபெற்றது. அவளுக்குள் ஏதோவொரு மாற்றம். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளத்தான் இன்னமும் மனமில்லை.

அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டான் ஶ்ரீகாந்த்.

“பை ஶ்ரீக்கா”

“பை பட்டு ரோஜா” பளிச்சென்ற புன்னகையுடன் பட்டு ரோஜாவுக்குக் கையசைத்தான்.

“தயா, நீ வீட்ல இருப்பா. நான் கடை வரைக்கும் போயிட்டு வர்றேன்” என்று பழனியப்பன் கடைக்குக் கிளம்பினார்.

“சரிப்பா” என்றவன், அம்மாவிடம் சென்றான்.

“அவன் குணம் தெரிஞ்சும் அவனை வீட்ல விட்டது எந்தப்புதான் தயா. நீ அன்னைக்கே சொன்ன, நான்தான் கேட்கல” என்று நாச்சம்மை புலம்ப, “விடும்மா” என்றான்.

“இல்லப்பா தம்பி, இவனை நம்பி உங்கக்காவ, என் பொண்ணைக் குடுக்க இருந்தேனே. என்னாலதானே அவங்க கல்யாண பேச்சு பேசிட்டு இங்க வந்தது? என் புத்தியை..” என்று நெற்றியில் அடிக்கப் போன கையைத் தடுத்துப் பிடித்தான்.

“ம்மா, இப்போ போய் அக்காவை பாரும்மா. அடுத்து என்ன செய்யலாம்னு பாரும்மா. அதை விட்டுட்டுப் போனதப் பத்தி புலம்பிட்டு இருக்க, எழுந்திரும்மா. எல்லாம் நல்லதுன்னு நினைம்மா” என்று அவரை அழைத்துப் போய் ஓய்வறையில் விட்டான். அவர் முகம் கழுவி வர, குறிஞ்சி அனைவருக்கும் இனிப்பு தூக்கலாகப் போட்டு தேநீர் தயாரித்துக் கொடுத்தாள். அந்த நேரம் அதைத் தேவையாக இருக்க, அமைதியாக அருந்தினார்கள்.

அலமேலு, துர்காவிடம் இருந்தார்.

“இந்தத் துணிய மாத்து.” என்று அவளை உடை மாற்ற செய்து, அவளுக்குத் தலை வாரி, பூ வைத்து விட்டார். ரோஜாவுக்கும் இரட்டை ஜடை போட்டு இரண்டுக்கும் பூ பாலம் போட்டு விட்டார்.

குறிஞ்சி தேநீருடன் துர்காவின் அருகில் வர, “சரியான ஆளை தேர்ந்தெடுக்கறது ரொம்ப முக்கியம் இல்லையா குறிஞ்சி? தயா பிடிவாதமா உன்னைத்தான் கட்டுவேன்னு சொன்னது போல” என்று அவள் கேட்க, அதிர்ச்சியில் நெஞ்சில் கை வைத்து விட்டாள் குறிஞ்சி.

“உன் தம்பி தயாவா சொன்னது?”

“தப்பான ஆள் கூட இருக்கதுக்குத் தனியாவே இருந்துடலாம்னு, எனக்கு அட்வைஸ் பண்ணான். நான் சரியான முடிவ எடுக்கறேன். எனக்குக் கொஞ்சம் டைம் குடுங்க” என்று அவள் சொல்ல, நாச்சம்மைக்கு அதுவே போதுமானதாக இருந்தது. அதனால் அலமேலு, குறிஞ்சி முகத்தில் புன்னகை மலர்ந்தது.

இரவு மெல்ல கவிழ, “நாளைக்குக் கோவிலுக்குப் போகணும் இல்ல? அந்த வேலையைப் பாருங்க. சும்மா இதையே பேசிட்டு இருந்தா காரியம் ஆகாது. என் பேத்திக்கு நல்ல வாழ்க்கை அமையணும்னு எழுதியிருக்கு. அதை எவனாலும் கெடுக்க முடியாது. ஆமா” என்று பெரியவர் சொல்ல, மூத்த பெண்கள் எழுந்து மறுநாளுக்குத் தேவையானதை பார்க்க, தயா, குறிஞ்சி அவர்களுக்கு உதவினார்கள்.

சற்று முன்னர் நடந்த கலவரம் தந்த கலக்கமும், கவலையும் நீங்க அது அவர்களுக்கு உதவியது.

“ஶ்ரீக்கா கார்ல ரைட் போலாமாம்மா? ஶ்ரீக்கா என்னைய கூட்டிட்டு போறேன்னு சொன்னா. நீயும் வர்றியாம்மா?” என்று தலை சாய்த்து அம்மாவிடம் கேட்ட ரோஜா, “நான் போகவா?” என்று சமர்த்தாக அனுமதி கேட்டாள். துர்கா பதில் சொல்லாமல் மகளையே யோசனையுடன் பார்த்திருந்தாள்.

“நீ ஓகே சொல்லாம நா போ மாட்டேன்ம்மா.” என்று பொம்மை போலத் தலையை ஆட்டி ஆட்டி சொன்னவள், “போவோமாம்மா?” என்று மழலையில் மீண்டும் கேட்டது பட்டு ரோஜா. பதில்தான் வரவில்லை.

error: Content is protected !!
Scroll to Top