நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 15 (1)

ரோஜாவின் சிரிப்புச் சத்தம் மெல்லிய இசையாய் அவ்வீட்டையே நிறைத்துக் கொண்டிருந்தது. அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள் ஶ்ரீகாந்த் மற்றும் தயா. அப்பொழுது ஶ்ரீகாந்த்தின் கைப்பேசிக்கு அழைப்பு வரவும் அவசரமாகக் கைப்பேசியை எடுத்தவன் கையில் இருந்து அது நழுவி விட்டது.

“ஏ பார்த்து ஶ்ரீ” என்று தயா அதைத் தாவி பிடிக்கப் போகும் முன் தரையில் விழுந்து விட்டது. ஒரே நேரத்தில் இருவரும் அதைக் குனிந்து எடுக்க முற்படுகையில் இருவரின் மண்டையும் ஒன்றோடொன்று முட்டிக் கொண்டது.

“ஆஆஆ”

“டேய்” என இருவரும் மாறி மாறி குரல் கொடுக்க, அதை விளையாட்டு போலப் பார்த்திருந்த ரோஜா எக்கி இருவரின் தலையையும் தடவி விட்டாள். இருவரும் ஒருவரையொருவர் முறைக்க, அவளுக்குச் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.

“சாரி மாமா, சாரி ஶ்ரீக்கா. இனிமே சிரிக்க மாட்டே…ன்” என்று உதட்டில் ஒற்றை விரல் வைத்து காண்பித்து, அதை மீறி கிளுக்கி சிரித்துக் கொண்டிருந்தாள்.

தயா, அவளை அள்ளி உச்சி முகர, ஶ்ரீகாந்த் பார்வையிலேயே பாசத்தைப் பகிர்ந்தான்.

பேத்தியின் சிரிப்பொலி நாச்சம்மையின் குழம்பியிருந்த மனத்திற்கு ஒரு தெளிவை தந்திருந்தது.

ஒரு பை நிறையப் பலகாரங்கள் எடுத்துக் கொண்டு, “அத்த இது போதுமா, பாருங்க?” என்று கேட்டபடி அவரிடம் வந்தாள் குறிஞ்சி. அவள் கண்கள் கூடத்து காட்சியைக் காண, உதட்டில் புன்னகை பூத்திருந்தது.

நாச்சம்மையும் அதைக் கவனித்து, “நல்ல பையன்தான் இல்ல குறிஞ்சி? அந்தக் குடும்பத்துக்கு ஊருக்குள்ள ரொம்ப நல்ல பேரு. நம்மள விட ரொம்பப் பெரிய இடம் வேற. துர்காவ விரும்பி கட்டிக்கக் கேட்கறாப்ல, அத விட ரோஜா குட்டிக்கிட்ட அவர் பேசுறத பார்த்தியா? அம்புட்டு அழகா கொஞ்சி பாசமா பேசுறார். துர்காவ மட்டும் விரும்பிட்டு பிள்ளைய விட்டுருவார்னு கூடப் பயப்பட வேணாம் நாம” என்று அவர் உள்ளத்து உணர்வுகளைப் பகிர, “ஶ்ரீகாந்த் அண்ணா, தயா ஃப்ரெண்ட் அத்த. அவங்க குணம் தெரிய அது ஒன்னு போதுமே” என்றாள்.

“சந்தடி சாக்குல உன் புருஷனுக்குக் கொடி பிடிக்கற நீ” என்று சிரிப்புடன் சொல்லி அவள் கையில் இருந்த பையை வாங்கினார். எங்கே அவளுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லையோ என்ற பயமும் கலக்கமும் இப்போது சற்றே விலகியது.

“ஶ்ரீகாந்த் அண்ணா உங்களுக்கு ஓகேவா அத்த?” தயக்கத்துடன் அவள் கேட்க, “நாங்க கண்ணுல விளக்கெண்ணெய விட்டுத் தேடினாலும் இப்படியொரு நல்ல பையன் துர்காக்கு கிடைப்பானா, சொல்லு? அதுவும் அவ நிக்கற நிலைமைக்கு இப்படி நல்ல வரன் அமையறதுலாம்..” என்று பெருமூச்சு விட்டுக் கொண்டார்.

“இனி எம் பொண்ணுக்கு எல்லாமே நல்லதா நடக்கணும் குறிஞ்சி. கடவுளே” என்று கண் மூடி பிரார்த்தித்து, “இந்தா இந்த டீயை எடுத்துட்டு போய் எல்லோருக்கும் குடு” என்று கொடுத்து விட்டார். தேநீர் மற்றும் முறுக்கு, தேன்குழல், சீவல் என ஒரு தட்டு நிறையப் பலகாரம் வைத்துக் கொடுத்தார். இரண்டையும் எடுத்துக் கொண்டு வெளியேறினாள் அவள்.

கூடத்தில் இருந்த அனைவருக்கும் தேநீர் கொடுத்தவள், “ரோசு உனக்குப் பால்” என்றாள் கண்ணால் மிரட்டி. அதைக் கேட்டதும் முகம் சுளித்து, உதட்டை பிதுக்கினாள் சிறியவள். ஒரு முறுக்கை எடுத்து அதில் விரல் நுழைத்து, முன் பற்களால் முயல் போலக் கொறித்துச் சத்தம் வர கடித்துச் சாப்பிட்டாள்.

குறிஞ்சி, “பால் குடிக்கணும் ரோசு” என்று மீண்டும் மிரட்ட, பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு தயாவை பார்த்தாள். அவன் தயவு காட்டாமல், “வா, மாமா ஆத்தித் தரேன்” என்று அவளை அழைக்க, “வேணாம்” என்றாள் கண்ணைச் சுருக்கி.

“அந்தப் பால் ஆறி அவலா போய்தான் இருக்கு” குறிஞ்சி முணுமுணுக்க, ரோஜா இன்னும் சுருங்கியது.

“பட்டு ரோஜா எனக்கு முறுக்கு தாங்க பட்டே” என்று ஶ்ரீகாந்த் கேட்கவும், மாமனிடம் இருந்து நகர்ந்து நகர்ந்து ஶ்ரீகாந்த்தை நெருங்கி அமர்ந்தாள் குழந்தை. அவள் விரலில் சுற்றியிருந்த முறுக்கை அவன் முகத்துக்கு நேராக நீட்டினாள்.

ஆவென்று வாயை திறந்து அவள் கையைக் கடிக்கப் போவது போலப் பாசாங்கு செய்து, “என் கைய்யி” என்று அவள் கத்தவும், லேசாக நுனியில் முறுக்கை மட்டும் கடித்தான்.

அதற்கும் கிளுக்கி சிரித்தாள் ரோஜா. மேலும் அவன் மேல் சலுகையாகச் சாய்ந்து கொண்டாள். பழனியப்பன் புன்னகையுடன் அவர்களைப் பார்த்திருந்தார். ஆயிரம் வாக்குறுதிகள் தராத நம்பிக்கையை ஶ்ரீகாந்த்தின் நடவடிக்கை அவருக்குத் தந்தது.

தன் கையில் இருந்த தேநீரை நன்றாக ஊதி, “குடிக்கிறியா?” என்று ரோஜாவுக்குக் கொடுத்தான். தேநீர் கடை வைத்திருப்பதாலோ என்னவோ பழனியப்பன், நாச்சம்மைக்கு நேரம் காலம் இல்லாமல் தேநீர் குடிக்கும் பழக்கம் இருக்கிறது.

அப்படி அவர்கள் குடிக்கும் போதெல்லாம் ஆசையாகக் கை நீட்டுவாள் குழந்தை. ம்ஹூம், தர மாட்டார்கள். தயாதான் எப்போதாவது தயவு காட்டுவான். அதுவும் ஒரு மிடறுதான்.

இப்போது ஶ்ரீகாந்த்தின் குவளையில் அவள் ஆவலாகப் பருகப் பாய, அவனும் அதையேதான் செய்தான். அவளுக்கு ஒரு வாய் தேநீர் கொடுத்து விட்டு, “இப்போ பாலை குடிச்சுடுங்க பட்டு ரோஜா” என்று நிபந்தனை இட்டான்.

“இத நீ முன்னால சொல்லவே இல்லையேப்பா” என்று தயா கிண்டலாகச் சொல்ல, ரோஜாவின் பார்வையும் அப்படித்தான் இருந்தது.

“பால்ல பனங்கற்கண்டு போட்டிருக்காங்க போலயே, நல்லா சுவீட்டா இருக்கு.” என்று சுவை பார்ப்பது போல நடித்த ஶ்ரீகாந்த், “நீயும் குடிச்சு பாரு” என்று குழந்தைக்கு ஆசை காட்டினான். என்ன நினைத்தாளோ முரண்டாமல் குடித்து விட்டாள் குழந்தை.

குறிஞ்சி அப்போதுதான் லக்ஷ்மணன் அங்கு இல்லாததையே கவனித்தாள்.

“டீ ஆறுது” என்று முணுமுணுத்து, “பெரியம்மா, லக்ஷ்மணன் அண்ணா எங்க? அவருக்கு டீ குடுக்கணும்” என்றாள்.

கற்பகம் எங்கே மகனை கவனித்தார். அவர்தான் என்றைக்குமே அவனைக் கவனித்தது கிடையாதே. அப்படிச் செய்திருந்தால் இப்படிப் பொறுக்கியாக எப்படி வளர்ந்து நிற்பான்?

“மாடிக்கு போய் இருப்பான்ம்மா. சூடு பண்ணி கொண்டு போய்க் குடு, அவன் ஆறியிருந்தா குடிக்க மாட்டான்” என்றார். இப்போதும் அவர் பார்வை ஶ்ரீகாந்த், ரோஜாவின் மேலேயே நிலைத்திருந்தது.

“ஐயோ போச்சே. இந்தப் பயல மாட்ட விட்டு கன்னுக்குட்டிய கவனிக்கச் சொன்னேன். அத செஞ்சானா இவன், ஒன்னத்துக்கும் உதவாத பய.” என்று புலம்பி கணவரின் காதைக் கடித்தார்.

குறிஞ்சி மிச்சமிருந்த தேநீர் கோப்பைகளுடன் சமையல் அறைக்குச் சென்றவள், வழியில் துர்காவின் அறையை எட்டிப் பார்க்க, ஆளில்லை.

அவள் புருவங்கள் யோசனையில் நெறிய, “அத்த, தள்ளுங்க. இத சூடு பண்ணிக்கறேன்” என்றவள், “அப்படியே துர்காக்கும் காஃபி போட்டுக்கறேன்” என்று அதற்காகக் காஃபி பொடி, சீனி என அனைத்தையும் எடுத்தாள்.

நாச்சம்மை மும்முரமாக வெங்காயத் தூள் பஜ்ஜி செய்யும் முனைப்பில் இருந்தார்.

“அவ குளிச்சுட்டு வந்ததும் சூடா காஃபி போட்டுக்கட்டும், மொத நீ குடி குறிஞ்சி” என்றார் வேலையில் கவனமாக.

“நீங்களும் டீ குடிங்கத்தே, நான் பஜ்ஜி போடுறேன்” என்று அவள் முன்னே வர, “வேணாம், வேணாம். நீ எண்ணையில நிக்க வேணாம்.” என்று மறுத்து விட்டார்.

“நான் இந்த டீய அந்த அண்ணாக்கு குடுத்துட்டு வர்றேன் அத்த” என்று லக்ஷமணனை தேடி மாடிக்குச் சென்றாள். அங்கே அவனில்லை. மனம் தானாகக் கணக்கிட்டு விடை கண்டதும், தடதடத்து கீழே இறங்கியவளின் மனமும் கலவரத்துடன் துடித்தது. அவளின் வேகம் கண்டு என்னவென்று தயா புருவம் உயர்த்த, “வாங்க” என்று அவனுக்குக் கண் காட்டி விட்டு, பின்பக்கம் நோக்கி ஓடினாள்.

தயாவும் அவளைப் பின் தொடர்ந்தான்.

குறிஞ்சி பின்கட்டு கதவைத் திறந்த வேகத்தில் அவர்களின் பார்வையில் விழுந்தது அந்தக் காட்சி.

துர்கா ஓய்வறை சுவரில் ஒடுங்கி ஒட்டி நின்றிருக்க, அவளின் முன் படர்ந்து நின்றிருந்தான் அந்த வல்லூறு. லக்ஷ்மணன் கை துர்காவின் இடையில் பதிந்து மெதுவாக மேலேற, “என்னடி என்னமோ ரொம்ப உத்தமி போலத் துள்ளுற? என்னைப் பார்த்தா சொம்பப் பய மாதிரி இருக்கோ? உனக்கெல்லாம் புதுசா, எளசா கேட்குதா?” என்று சீறினான். அவனை வெறுப்புடன் உதறி, “கையை எடுடா” என்று கத்தி ஓங்கி அறைத்திருந்தாள் துர்கா.

“ஏய்” என்று அவள் மேல் பாய்ந்து கழுத்தில் அவன் கை வைக்கவும், ஓடிப் போய் அவன் முதுகில் சூடான தேநீரை ஊற்றினாள் குறிஞ்சி.

“அம்மா” என்று அவன் துடித்துத் திரும்ப, “பொறுக்கி நாயே” என்று அவன் சட்டை காலரை பிடித்திழுத்து பொளிச்சென்று அறைந்திருந்தான் தயா. அவனுக்குக் கண் மண் தெரியாத கோபம் வந்தது. ஆத்திரம் தொண்டையைக் கவ்வி பிடித்துக் கொள்ள, நெஞ்சுக்குள் உணர்வலைகள் பொங்கி, அவனை உணர்ச்சி வசப்பட வைத்தது.

அக்காக்கு முன்னர் நடந்தது அவனைப் பொறுத்தவரை அநீதிதான். அவளுக்குப் பிடித்தே, தெரிந்தே செய்த தவறு அது. அவள் மீதுதான் தப்பிருக்கிறது என்பது அவனது நியாயப் புத்திக்குப் புரிந்தாலும், அவளுக்கு நடந்தது அநியாயம்தான். அந்நேரம் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. அவனையும் அடித்தான்தான். சட்டத்தின் பிடி வரை கொண்டு நிறுத்தினான்தான். ஆனாலும் அது போதாது என்ற பல நாள் கோபம் இப்போது வெடித்து வெளிப்பட்டது.

லக்ஷ்மணனை அடித்துத் துவைத்து விட்டான்.

“டேய் விடுடா, என்னடா பண்ணிட்டேன் நான் இப்போ? உங்கக்காதான் என்னைக் கூப்பிட்டா” என்று அவன் கத்த கத்த ஆத்திரம் கண்ணை மறைக்க மூஞ்சி முகரை பெயர்த்து விடுவது போல அடித்தான். லக்ஷ்மணனுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் வலி பொறுக்க முடியவில்லை. அவன் வலியில் அலறியதில் அடித்துப் பிடித்து அனைவருமே அங்கு வந்து விட்டார்கள்.

error: Content is protected !!
Scroll to Top