நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 14 (2)

அன்று காலையில் தயாபரனிடம் பேசியது அவன் நினைவில் வந்தது.

அழைப்பை ஏற்றதும், “சொல்லு மச்சா” என்று உற்சாகமாகச் சொன்னான் தயா.

“நீ இப்பல்லாம் மச்சான்னு கூப்பிட்டாலே எனக்கு..” என்று அவன் இழுக்க, “அட ச்சீ வெட்கப்படுறியா என்ன? நல்லவேளை அந்தக் கொடுமைய பார்க்க நான் நேர்ல இல்ல” என்று கேலி செய்து சிரித்தான் தயா.

“டேய்..”

“மரியாத தேயுதே மச்சா”

“மிஸ்டர் தயாபரன்”

“பெட்டர். வாட் கேன் ஐ டூ ஃபோர் யூ?” என்று ஒரு வேகத்தில் கேட்டு விட்டு, “அய்யய்யோ, நான் கேட்டத மறந்திடு ஶ்ரீ.” என்று கத்தினான்.

“எப்படியும் என் அக்காவை பத்திதான் பேச போறான். இதுல நான் வேற..” என்று அவன் முணுமுணுக்க, ஶ்ரீகாந்த் சிரித்துக் கொண்டே, “என்னடா புது மாப்ள, புலம்புற? தயாவோட தேவதை கிட்ட தர்ம அடி வாங்கினியா என்ன?” என்று கிண்டலாகக் கேட்டான்.

“எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும். தயாவின் தேவதைகள்ல எங்கக்கா துர்காவும் சேர்த்தியா?”

“அந்தச் சந்தேகமே இப்பத்தான் வந்திருக்கா உனக்கு? நீ தேறுறது கஷ்டம் தயா”

“அடப்பாவி. உன் கூடவே இருந்தேனேடா. இந்தக் குறிஞ்சிக்கு கூட உன்ன தெரிஞ்சுருக்கு. உண்மை தெரிஞ்சுருக்கு. ஆனா நான் எப்படிக் கவனிக்காம விட்டேன்?” என்று குழப்பத்துடன் கேட்டான் தயா.

“அது என் மேல நீ வச்ச நம்பிக்கை தயா. சாரி. நான் அத..”

“என் நம்பிக்கையை நீ என்னைக்கும் உடைக்க மாட்ட ஶ்ரீ. ஐ டிரஸ்ட் யூ.” என்றான் உணர்வு மிகுதியில் உடைந்த குரலில்.

“இந்த வார்த்தை போதும் தயா. நான் இன்னைக்கே வீட்ல பேசிட்டு, வர்ற வாரத்துல எங்க வீட்டாளுங்களோட உங்க வீட்டுக்கு வர்றேன்” என்று படபடத்தான். நல்ல காரியம் பேசும் போது மறுத்து பேச மனமில்லாமல் மௌனமாய் இருந்தான் தயாபரன்.

“என்னடா தயா ஒன்னும் சொல்ல மாட்டேங்கற?”

“அக்கா..” என்று மட்டுமே சொன்னான் தயா.

“அவங்ககிட்ட நான் பேசிக்கறேன். அவங்க சம்மதம் இல்லாம எதுவுமே நடக்காது. உனக்கு அந்தக் கவலையே வேணாம்” என்று உத்திரவாதம் தந்தான் ஶ்ரீகாந்த்.

“துர்கா வீட்லயா இருக்காங்க?”

“இல்ல, ஸ்கூல் போய்ருக்கா” என்றான் தயா.

“ஈவ்னிங் அவங்களை நான் பிக் அப் பண்ணி வீட்ல ட்ராப் பண்ணவா தயா? இல்லனா அவங்களோட தனியா பேச எனக்கு வாய்ப்பே கிடைக்காது” என்று அவன் தயங்க, யோசனையுடன் சரியென்றான் தயா. அக்காவிடம் அதைச் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தான். ஆனால் அப்படிச் சொன்னால் வேண்டுமென்றே ஶ்ரீகாந்தை பார்க்காமல் தவிர்த்து விடுவாளோ என்ற தயக்கத்தில் அவளிடம் தகவல் சொல்லாமல் தவிர்த்து விட்டான்.

அனைவருக்கும் மாலை அவளுக்கு மட்டும் காலையாக விடியலை தந்திருந்தது. அந்த விடியலை காண அவள் விழிகள் திறந்திருக்க வேண்டுமே! இறுக்கத்துடன் இருக்கையில் சாய்ந்து கண் மூடி அமர்ந்திருந்த துர்காவை கண்ட ஶ்ரீகாந்த் அவள் பக்க கண்ணாடியை இறக்கி விட்டான். காற்று வேகமாக உள்நுழைந்து அவள் மோனத்தைக் கலைக்க முயன்று தோற்றது. ஶ்ரீகாந்த்தின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவள் மனத்தில் வலம் வர, பெருமுயற்சி செய்து அதைப் புறந்தள்ளினாள்.

அன்று காலையில் வீட்டில் நடந்த நிகழ்வை நினைவு கூர்ந்து தன் சிந்தனையைத் திசை திருப்பினாள்.

முந்தின இரவே அப்பாவிடம் தன் முடிவை சொல்லி விட்டாள். அத்துடன் அத்தையிடம் மறுப்பும் தெரிவித்தாள். கற்பகம் அப்படி எளிதில் பின்வாங்கி விடுவாரா என்ன? அப்போதைக்கு, “நம்ம வீட்டு மருமகளா நீ வந்தா நான் சந்தோஷப்படுவேன் துர்கா. அவ்ளோதான் அத்தை சொல்வேன்” என்று முடித்துக் கொண்டார். ஆனால், காலையில் எழுந்ததும் ஆளே மாறிப் போனார்.

நாச்சம்மையை வார்த்தைகளால் வளைக்க, வித்தை காட்டினார்.

“அவன் சொல்றான், இவன் சொல்றான்னு நீயும் துர்காவ பத்தி யோசிக்காம பேசாத நாச்சியா. எல்லாம் இன்னைக்கு உங்க வசதிய கண்டு வாயப் பொளந்து துர்காவ கட்டிக்கச் சரின்னு சொல்லுவானுங்க. ஆனா நாளைக்கு ஊரும் உறவும் முன்னுக்க நம்ம பொண்ணை மரியாதையா நடத்துவாங்களான்னு நினைச்சு பாரு. ஆம்பள எப்படி வேணாலும் இருக்கலாம். ஆனா பொம்பள தவறினா காலத்துக்கும் குத்தி குத்தி காட்டுவானுங்க. இதுவே துர்கா நம்ம வீட்டுக்கு வந்தா நான் தங்கமா பார்த்துப்பேன். என் பிள்ளை..”

“லக்ஷ்மணன் பத்தி கேள்விப்படுறதுலாம் நல்ல மாதிரியா இல்லையே அத்தாச்சி” என்று விட்டார் நாச்சம்மை. மற்ற நேரமாக இருந்தால், “உன் மக ஒழுக்கமா?” என்று முகத்திற்கு நேராகக் கேட்டிருப்பார் கற்பகம். இப்போது பம்மியபடி, “நமக்கு ஆகாதவனுங்க ஆயிரம் சொல்லுவாங்க. அதெல்லாம் நீ நம்புறதா?” என்று கேட்டார்.

“துர்காவ பத்தி..” என்று அவர் ஆரம்பிக்க, “துர்காவே வேணாம்னு சொன்னதுக்கு அப்புறம் இந்தப் பேச்சு நாம பேசுறது சரியா வராது அத்தாச்சி. உங்க தம்பிக்கு தெரிஞ்சா என்னைத்தான் பேசுவார்.” என்று அவர் மேலே பேச வாய்ப்புக் கொடுக்காமல் எழுந்து சென்று விட்டார் நாச்சம்மை.

கற்பகம் கோபத்துடன் மகனையும் கணவரையும் முறைத்தார். எங்கே கைக்கு எட்டியது கையில் சிக்காமல் போய் விடுமோ என்ற கவலை அவருக்கு.

அந்நேரம் கூடத்துக்கு வந்த பழனியப்பன், “டிபன் சாப்பிட்டு கிளம்புக்கா. ஒரு பத்து மணிக்கா நான் பஸ் ஏத்தி விடுறேன்” என்று சொல்லவும், “என்ன பழனி, ஒரேடியா அக்காவை விரட்டி விடலாம்னு பாக்கறியா? இப்போ என்ன நடந்துருச்சுன்னு என்னை வீட்டை விட்டு துரத்தி விடப் பாக்குற?” என்று வராத கண்ணீரை துடைத்துக் கொண்டு கேட்டார்.

“அக்கா..”

“அக்காங்கற பாசம் இருந்தா உன் மகளை என்னை நம்பி குடுப்பதானே? நம்ம பொண்ணு நம்ம வீட்லயே ‍இருப்பா. எவனும் சொத்துக்கு ஆசைப்பட்டு வந்து நின்னு உன்னை ஏமாத்திட போறேன்” என்று அவர் பேசிக் கொண்டே போக, பழனியப்பன் பேசும் முன் துர்கா வெளியே வந்து விட்டாள்.

“நீ சொல்லு துர்கா” என்று அவளைக் கட்டத்தில் நிற்க வைத்தார்.

“நான்தான் நேத்தே சொல்லிட்டேனே அத்த. நீங்க எதுனாலும் அப்பா, அம்மாகிட்ட பேசிக்கோங்க” அவர் போட்ட கட்டத்தில் கால் வைக்காமல் தாவி தப்பித்து விட்டாள் அவள்.

அந்நேரம் வீட்டுக்குள் நுழைந்தான் தயாபரன். வீட்டின் சூழலை ஒரே பார்வையில் கணித்து, “என்னங்க அத்த? என்ன பஞ்சாயத்து ஓடுது? அப்பா நீங்க ஊருக்கு கிளம்பறீங்கன்னு சொன்னார். பஸ்ல போறீங்களா? இல்ல வண்டி சொல்லவா?” என்று கேட்டான்.

“நீ விட்டா இப்பவே வெளில போன்னு எங்கள விரட்டி விட்டுருவ போலயேப்பா ” என்று அங்கலாய்த்தார் கற்பகம்.

“நான் உங்கக்கா வாழ்க்கை நல்லா இருக்கணும்னு பேசினா உங்க யாருக்கும் புரியல..” என்று அவர் புலம்ப, தயாபரன் கண்கள் சுழன்று லக்ஷ்மணின் மேல் படிந்து கூர்மையாகின. அந்தப் பார்வையைக் கவனித்துப் பதறி விட்டார் கற்பகம்.

“தயா தம்பி” அவர் பவ்யமாக அழைக்க, “எங்க அக்கா பத்தின பேச்சு இனிமே எடுக்காதீங்க. அதுவும் ரோஜா முன்னாடி பேசுறது சரி கிடையாது. பெரியவங்க உங்களுக்குத் தெரியாதா? இனிமே குழந்தை முன்னாடி பேசாதீங்க” என்று சொல்லி அவரை மேலே பேச விடாமல் செய்திருந்தான்.

தம்பியை பார்த்ததும் புன்னகைத்தாள் துர்கா.

“காஃபி தரவா தயா?”

“ஆல்ரெடி குடிச்சுட்டேன்க்கா” என்றான்.

“ஓ, கடையில குடிச்சுட்டியா?”

“ம்ம்” என்றவன், மறுநொடி மறுப்பாகத் தலையசைத்து உள்ளே சென்றான்.

“ஆமான்னு சொல்றியா? இல்லைன்னு சொல்றியா?” அவள் கேள்வி அவனைத் துரத்தியது. அவளுக்கு எங்கே தெரியப் போகிறது, தயாபரன் கடையில் இருந்து நேராக மனைவி வீட்டுக்குச் சென்று அவள் கையால் சூடாகக் காஃபி குடித்து வந்தது.

தயாபரன் அம்மாவைத் தேடிச் சென்றான். அவர்களின் உணவகத்துக்கு அன்றைய மீன் வரத்து பற்றித் தெரிவித்தான்.

“என்ன மீன் சொன்ன தம்பி?”

“முரல், விளை மீன், சாளை, எறா, நண்டு வந்திருக்கும்மா.”

“அப்போ எறா தொக்கு, எறா வறுவல் செய்யச் சொல்லிடுப்பா. நண்டு மிளகு பிரட்டல் செஞ்சுக்கலாம். முரலும், சாளையும் கொஞ்சத்த கொழம்புல போட்டுட்டு மிச்சத்த வறுவலுக்கு மசாலா தடவி வைக்கச் சொல்லு. வெள மீன அப்படியே முழுத் துண்டமா போட்டு வறுத்துக்கலாம்”

“சரிம்மா, நான் சொல்லிடுறேன்”

“எதுக்கும் ஒரு வார்த்தை, அலமேலு அத்தைகிட்ட கேட்டுக்கோ” என்றார் நாச்சம்மை.

“இப்பத்தான் அத்தைகிட்ட கேட்டுட்டு வரேன். அவங்களும் நீங்க சொன்னதுதான் சொன்னாங்க.” என்றான் அலட்டிக் கொள்ளாமல்.

மகனை முறைத்து, “அவங்ககிட்ட கேட்டுட்டு அப்புறம் ஏன்டா என்னை வேற கேட்குற?” என்று அவர் கேட்க, “நீங்க ரெண்டு பேர் சொல்றதையும் கேட்டுட்டு ஒரு முடிவுக்கு வரலாம்னுதான்” என்றான் தீவிரமாக.

“சரி இப்போ என்ன முடிவுக்கு வந்த?”

“என் பொண்டாட்டிக்கு என்ன பிடிக்கும்னு கேட்டு செய்யலாம்னு” என்று சொல்லிக் கொண்டே சமையல் அறை விட்டு வெளியேறியிருந்தான்.

“திமிரை பார்த்தீங்களாங்க உங்க பிள்ளைக்கு” அப்போது உள்ளே வந்த கணவரிடம் புகார் படித்தார். தயா தலையை மட்டும் உள்ளே நீட்டி, “ம்மா, நல்லா பெரிய கோவா நெத்திலி வந்திருக்கும்மா. அதுவும் ஃப்ரைதானே?” என்று கேட்டான்.

“குறிஞ்சி கிட்ட கேளு போ. என்னை ஏன் கேக்குற?” கோபமாகச் சொல்லத்தான் நினைத்தார். ஆனால் சிரிப்பு வந்து விட்டது. அம்மாவின் சிரிப்பு அவன் முகத்தில் புன்னகையாகப் பிரதிபலிக்க, தன் அறைக்குள் நுழைந்தான்.

“தயா, மறுவீடு வந்துட்டு நீங்க மட்டும் தனியா உங்கம்மா வீட்டுக்குப் போகக் கூடாது. நாம சேர்ந்துதான் போகணும். அம்மா சொன்னாங்க, வெயிட் பண்ணுங்க. நான் ரெடியானதும் போலாம்” சற்று முன்னர்க் குறிஞ்சியின் குரல் எச்சரித்தது அவன் காதில் எதிரொலித்தது.

அவனுக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு மீண்டும் அவள் வீடு சென்றான்.

அன்று காலை, கடையில் இருந்து நேராக அவள் வீடுதான் சென்றிருந்தான். குறிஞ்சி குளித்துப் பவள நிற மைசூர் பட்டில் பளிச்சென்று நின்றிருந்தாள்.

“குறிஞ்சி காஃபி” என்று குரல் கொடுத்தான். அலமேலு கூடத்துக்கு வந்து, “வாங்க மாப்ள” என்று வரவேற்று, “குறிஞ்சி” என்று மகளை அழைத்துக் கண் காட்டி விட்டு உள்ளே சென்று மறைந்தார்.

“என்ன தயா?”

“மரியாத” என்றான் பல்லைக் கடித்து.

“மனசுல இருக்கு. எதுக்குக் கூப்பிட்டீங்க?”

“மனசுல இருந்தா சீக்கிரம் எனக்குத் தெரிஞ்சுடும்” என்றான் குறுநகையுடன். அவள் முகம் செம்மையுற, “காஃபி கேட்டேன்.” என்றான்.

“கடையில குடிக்கல?”

“கடையில குடிச்சா குறிஞ்சி கையால குடிக்கக் கூடாதா?” என்று புருவம் உயர்த்தினான்.

“இருங்க, எடுத்துட்டு வர்றேன்” என்று உள்ளே சென்றாள். பாலை அடுப்பில் ஏற்றி, டிக்காஷன் போதுமான அளவு இருக்கிறதா என்று பார்த்து, டம்ளர் எடுத்து சக்கரையைப் போட்டாள்.

“சிணுங்காத குறிஞ்சி” காதோரம் அவன் குரல் கேட்க, அதிர்ந்து திரும்பி அவன் மேல் மோதி நின்றாள்.

அவன் கரம் அழுத்தமாக அவள் தோளில் படிந்து மெல்ல கீழிறங்கி, கண்ணாடி வளையலை ஒவ்வொன்றாகப் பிடித்து, விடுத்து விளையாடியது. கண்ணாடி வளையல்கள் ஒன்றோடொன்று மோதி சிணுங்கி ஒலியெழுப்பியது.

“இந்த வளையலை‌ நைட் கழட்டனதா எனக்கு ஞாபகம்.” என்று அவன் கிசுகிசுக்க, “அது வேற வளையல்” என்றாள் அவள்.

“ம்ம்ம்ம், விதவிதமா வித்தியாசமா வளையலா? நல்லாருக்கே” என்று அவள் வளைக்கரத்தோடு சீண்டி அவளைச் சோதித்து, அவனும் சேர்ந்தே சோதனைக்குட்பட்டுப் பொறுமையாகப் பிரிந்தான். அவள் உடனடியாக நகர்ந்து ஆழ்ந்த மூச்செடுத்து அவனுக்கான காப்பியை கலந்து நீட்டினாள்.

விரல் உரச வாங்கி உதட்டுக்குக் கொண்டு போனான். நடுவில் நாசி நின்று காபியின் மணத்தை நுகர்ந்து, உதட்டுக்கு வேகமாகக் கோப்பையைக் கொண்டு போகச் சொல்லி கட்டளையிட்டது. ஒரு மிடறு ரசித்து அருந்தியவன், “உனக்கு?” என்று கேட்டான்.

“நான் காஃபி குடிக்கறத விட்டுட்டேன்”

“அதெப்போ?”

“இப்போதான். நீங்க குடிச்சுட்டு குடுத்தா, அந்தக் காஃபியே எனக்கு வேணாம்” என்று அவள் சொன்ன விதத்தில் அவன் கண்கள் கேலிப் புன்னகையின் மின்னின.

“எச்சில் பட்டா குடிக்க மாட்டீங்களோ? அப்போ நேத்து நைட்டுக் கிஸ் பண்ணப்போ..” அவசரமாக அவன் வாயில் அடித்து மூடினாள்.

“காஃபி குடிக்க மட்டும்தான் வாயத் தொறக்கணும்”

“கண்டிசன் போடுற வாய உடைச்சுடுவேன்.” நாக்கை மடித்து மிரட்டி, காப்பியை அருந்தினான். உதடு சுழித்தாள். சுழித்த உதடை சுண்டி விட்டு, “நம்ம வீடு வரைக்கும் போயிட்டு வர்றேன்” என்று வெளியேறினான்.

இப்போது அவன் வீடு வர, குறிஞ்சி தாயாராக நின்றிருந்தாள். கூடம் முழுக்க மகளுக்குக் கொடுத்து விடப் பொருள்களைப் பரப்பி வைத்திருந்தார் அலமேலு. நல்ல நேரத்தில் நாச்சம்மை, பழனியப்பன், ரோஜாவுடன் வந்து முறையாக அவர்களை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள்.

தயா, குறிஞ்சி முகத்தில் தெரிந்த மகிழ்வு, துர்காவுக்கும் மகிழ்ச்சியை அளித்தது.

சிறிது நேரம் எல்லாமே சரியாகச் சென்றது. துர்கா பள்ளிச் செல்கிறேன் என்று சொன்னதும் மீண்டும் கச்சேரியை ஆரம்பித்து விட்டார் கற்பகம்.

“நாளைக்குக் குலதெய்வம் கோவிலுக்குப் போறீங்க இல்ல? அதுக்கு நான் வரக் கூடாதா? எனக்கு உரிமை இல்லையா?” என்று அவர் உருக்கமாகக் கேட்க, அங்கிருந்த அவர்களின் சித்தப்பா, “விடுப்பா. இந்த வீட்டு பொண்ணு உங்கக்கா. அவ மன வருத்தத்தோட வீட்டுக்குப் போகக் கூடாது. இப்போ என்னா குல தெய்வ கோவிலுக்குதானே கூட வர்றேங்கறா? வந்துட்டு போகட்டுமே. அவங்களும் குல சாமிய கும்பிட்டு போகட்டும். அவ மகன் வாழ்க்கைக்கும் வேண்டிக்குவால்ல? வரட்டும்ப்பா” என்று பெரியவர் சொல்ல, பழனியப்பனால் மறுக்க முடியவில்லை. சரியென்று விட்டார்.

இப்போது துர்கா வீடு செல்லவும், காரில் இருந்து இறங்கிய ஶ்ரீகாந்த்தை கண்களால் எரித்துக் கொண்டிருந்தார் கற்பகம்.

கார் சத்தம் கேட்டு வெளியே வந்த பழனியப்பன், “வாங்க தம்பி” என்று அழைக்க, அவரை முந்திக் கொண்டு, “உள்ள வாங்க தம்பி, டீ குடிச்சுட்டு போங்க” என்று அவனை வற்புறுத்தி அழைத்தார் நாச்சம்மை.

“இருக்கட்டும். இன்னொரு நாள்..” வீட்டில் ஆள்கள் இருப்பதைக் கண்டு அவன் மறுக்க எத்தனிக்க, “வாங்க, ஶ்ரீ” என்று தயா, அவன் கைப் பிடித்து இழுக்காத குறையாக உள்ளே அழைத்துச் சென்றான்.

“வாங்கண்ணா” என்றாள் குறிஞ்சி. பிடித்திருந்த அவள் கையை விட்டுட்டு, “ஶ்ரீக்கா” என்று ஆர்ப்பரித்து அவனிடம் ஓடினாள் ரோஜா. அவளைக் குனிந்து கையில் அள்ளிக் கொண்டான் அவன்.

“பட்டு ரோஜா ஸ்கூலுக்குப் போகலையா?”

“போல, லீவு”

“ஸ்கூல் லீவா பட்டு ரோஜா. எனக்குத் தெரியாதே? அப்புறம் அம்மா மட்டும் ஏன் ஸ்கூல் போனாங்க?” அவன் புரியாதது போலப் பாவனைச் செய்து கேட்க, “ஹிஹிஹி. ‍நான் லீவ் போட்டுட்டேன்” என்றது வாண்டு பால் பற்களைக் காண்பித்து. ஶ்ரீகாந்த் சிரிப்புடன் அவள் நெற்றியில் முட்டினான்.

“சித்தப்பா, தம்பி யாருன்னு தெரியுது இல்ல? ஶ்ரீகாந்த்.” என்று பெரியவருக்கு அவனை அறிமுகப்படுத்தினார் பழனியப்பன்.

“தெரியாம என்ன, சிதம்பரம் மகன்தானே?” என்றவர், “எப்படிப்பா இருக்க? வீட்ல எல்லோரும் சொகமா?” என்று விசாரித்தார்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில், “நான் டீ போடுறேன்” என்று உள்ளே சென்றார் நாச்சம்மை.

“இங்க வா, குறிஞ்சி. ஒரு பையில கல்யாண பலகாரம் போட்டு எடுத்துட்டு வா. அவங்க வீட்டுக்கு குடுத்து விடுவோம்” என்று அவர் சொல்ல, குறிஞ்சியும் எழுந்துச் சென்றாள்.

கற்பகம், கந்தசாமிக்கு நடப்பது எதுவும் பிடிக்கவில்லை.

ஶ்ரீகாந்த், தயாபரன்‌ நண்பர்கள் என்ற விவரம் புரிந்து, விஷயம் கை நழுவி போன ஆத்திரத்தில் அமர்ந்திருந்தனர்.

“மச்சான், மச்சான்” என்று அவர்கள் பேசிக் கொள்வதைக் காண சகிக்கவில்லை. அதிலும் ஶ்ரீகாந்த்திடம், ரோஜாவின்‌‍ ஓட்டுதல், கொஞ்சல் எரிகிற தீயில் எண்ணெயை வார்த்தது போலிருந்தது.

அவர்களுக்கு மட்டுமல்ல அங்கிருந்த இன்னொரு ஜீவனுக்கும் அப்படித்தான் இருந்தது. மெல்ல நழுவி, ஓய்வறை சென்ற துர்காவை பின் தொடர்ந்தான் அவன்.

லக்ஷ்மணன் நழுவியது யார் கண்ணிலும் படவேயில்லை.

error: Content is protected !!
Scroll to Top