நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 14 (1)

தன்னைத் தேடி ஶ்ரீகாந்த் இப்படிப் பள்ளிக்கே வந்து நிற்பான் என்று துர்கா எதிர்பார்த்திருக்கவில்லை.

“இங்க என்ன பண்றீங்க?” கோபமும் அதிர்ச்சியுமாக வினவினாள்.

“உங்களுக்காக வெயிட் பண்றேன்னு சொன்னேனே துர்கா”

“ப்ச், நீங்க எதுக்கு எனக்காக வெயிட் பண்றீங்க?”

“எதுக்கு வெயிட் பண்றேனா? இன்னைக்கு உங்களைப் பத்திரமா வீட்ல கொண்டு போய் விட, நாளைக்கு நீங்க சம்மதம் சொல்லி, உங்களை நல்லபடியா கல்யாணம் பண்ணிக்க, இப்படி நிறையக் காரணத்துக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேங்க.” என்றான் தீவிரமாக. அவன் கண்களில் புன்னகையின் வெளிச்சமிருந்தது. உதடுகள் குறும்பு புன்னகையுடன் மீசைக்கடியில் மறைந்தன.

அவளோ எல்லாவற்றையும் விட்டுவிட்டு, “பத்திரமா கூட்டிட்டு போய் வீட்ல விட வந்தீங்களா? ஏன்? நான் திரும்பவும் ஓடிப் போயிடுவேன்னு நினைச்சீங்களா?” என்று கோபமாகக் கேட்டாள்.

“என்ன பேசுறீங்க துர்கா” சுற்றுப்புறத்தை கண்களால் சுழற்றி, கண்டிப்புடன் கேட்டான்.

“அப்படியே நான் எங்கயாவது போனாலும் நீங்க தேடுற நிலைமை வராது. அதுனால..” என்று அவள் முடிக்கும் முன், “நீங்க எங்கப் போனாலும், என்னைத் தேடுவீங்க துர்கா. நான் உங்களைத் தேடுறேனோ இல்லையோ, நீங்க தேடுவீங்க. அது எனக்கு நிச்சயமா தெரியும்” என்றான்.

“என்ன உளறுறீங்க?”

“நானும் நீங்களும் எங்கேயும் போகப் போறது இல்ல. நாம சந்தோஷமா இங்கதான், இதே ஊர்லதான் இருக்கப் போறோம். அதுனால சும்மா வெட்டி பேச்சு பேசாம வண்டியில ஏறுங்க” என்று கார் கதவை திறந்து விட்டான். எப்போதும் ஊர், உலகத்திற்குப் பயப்படுபவள், இப்போது அவனை மட்டுமே பார்த்து நின்றாள்.

“நான் பஸ்ல போய்ப்பேன்.”

“அதாவது என் கார்ல வர முடியாது? இல்லையாங்க? உங்க வீட்டுக்கு போற வழியிலதாங்க போறேன். அப்படியே உங்களை இறக்கி விடுறதுல எனக்கு அலைச்சல் எல்லாம் இல்லைங்க. உங்களை இப்படியே விட்டுட்டுப் போனாத்தான் அவஸ்தைபடுவேன். சோ, பிளீஸ்”

“நீங்க என்ன ஶ்ரீகாந்த் டிரை பண்றீங்க? நான் எத்தனை முறை நோ சொன்னாலும் ஏன் உங்களுக்குப் புரிய மாட்டேங்குது?”

“ஒருமுறை எஸ் சொல்லிடுவீங்கன்னு காத்திருக்கேன்ங்க”

“என்ன நீங்க..”

“அதுக்காக நீங்க எத்தனை நோ சொன்னாலும் கேட்க நான் ரெடி. முடிவுல எஸ்ங்கற முடிவுதானே முக்கியம்.” என்று கூர்மையாக அவளைப் பார்த்துக் கேட்டான்.

“ப்ச், உங்க வீட்ல இதுக்கெல்லாம் ஒத்துப்பாங்களா? அதை முதல்ல யோசிச்சிட்டு..”

“எனக்கு நீங்க ஒத்துக்கிட்டா போதும்ங்க” என்றான் மனதார.

“நான் கல்யாணமே பண்ணிக்காம புள்ளை பெத்தவ, உங்க வீட்ல என்னை எப்படி ஏத்துப்பாங்க? நீங்க என்ன தைரியத்துல என்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறீங்க?” சிறு குரலில் சீறினாள்.

“ப்ச், துர்கா. டீச்சருக்கு இடம் பார்த்து பேசத் தெரியாதா?” என்று கடுகடுத்தவன், அவள் கைப் பிடித்துக் காரில் ஏற்றினான். அவள் முரண்டவும், “தயா கிட்ட சொல்லிட்டு தாங்க வந்தேன். உங்களை எங்கேயும் கடத்திட்டு போகல. வீட்டுக்குதான் கூட்டிட்டு போறேன். பிளீஸ், ரிலாக்ஸ்” என்றான் அழுத்தமாக.

அவனைக் கடுமையாக முறைத்து, இருக்கையின் நுனியில் அமர்ந்திருந்தாள். ஶ்ரீகாந்த் ஓட்டுநர் இருக்கையை ஆக்கிரமித்துக் காரை நகர்த்தினான். பள்ளியில் இருந்து வீடு பத்து நிமிட பயணத் தூரம்தான்.

பயணத்தில் ஐந்து நிமிடம் கடந்ததும் சாலையோர மர நிழலில் காரை நிறுத்தினான் ஶ்ரீகாந்த். அதுவரை மௌனமாக வெளியே வேடிக்கைப் பார்த்தபடி அமர்ந்திருந்த துர்கா, “இங்க எதுக்கு நிப்பாட்டினீங்க?” என்று எரிச்சலுடன் கேட்டாள்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்ன சொன்னீங்க? ஏதோ தைரியம்னு? என்கிட்ட அது இல்லைங்கறீங்களா?” அவள் விட்ட இடத்தில் இருந்து பேச்சைத் தொடர்ந்தான்.

“நீங்க இருக்குங்கறீங்களா? அப்படி இருந்திருந்தா என்னை எதுக்கு அங்க வச்சு பேச விடாம கார்ல தள்ளி கத்துனீங்க?”

“நீங்க கேட்கிற தைரியமும் எனக்கிருக்கு. அதை விட உங்க மேல நிறைய நேசமும் இருக்கு. நானும் நிறைய முறை சொல்லிட்டேன். இதுக்கும் மேல அதை எப்படி உங்களுக்கு நிரூபிக்கன்னுதாங்க எனக்குத் தெரியல” என்று அங்கலாய்த்தவன், “அப்புறம் நீங்க நினைக்கிற காரணத்துக்காக நான் கத்தல. பொது இடத்துல உங்களை நீங்களே கீழிறக்கி பேசுறது பிடிக்காம கத்தினேன். அதுக்குதான் இடம் பார்த்துப் பேச சொன்னேன். அடுத்தவன் அதைக் கேட்டு மோசமா பேசுவான்னு பயப்படுற ஆள் நான் இல்லைங்க. அடுத்தவனை விடுங்க, முதல்ல நம்மள நாமளே தாழ்த்தி பேசலாமா? நீங்க ஏன் எப்பவுமே அதைப் பண்ணிட்டே இருக்கீங்க? நம்மளோட பெஸ்ட் வெர்ஷன் நாமதாங்க. நம்மகிட்ட சில குறைகள் இருக்கும்தான், நான் இல்லைங்கள. அதைச் சரி பண்ணிக்கலாம். அதை விட்டுட்டு நம்மள நாமளே விட்டுக் கொடுத்தா எப்படிங்க?” என்று கையசைத்துக் கேட்டான்.

“நான் பண்ண தப்பை நான் எப்படிங்க சரி பண்ண முடியும்? இவ்ளோ சொல்றீங்களே, இதுக்கும் பதில் வச்சுருப்பீங்க இல்ல? சொல்லுங்க, கேட்போம்” என்று நேர்பார்வையுடன் கேட்டாள்.

“நீங்க எதைத் தப்புன்னு சொல்றீங்க துர்கா? ஒருத்தனை நேசிச்சதையா? நேசிச்சவனை நம்புனதையா? இல்ல ரோஜாவையா?” என்று நேராய் அவனை நோக்கிய கண்களைக் கூர்ந்து கேட்டான்.

ரோஜாவின் பெயரை கேட்டதும் கண்களில் அதிர்ச்சி பரவ, வலியுடன் அவனை நோக்கி, “ஆல்ரெடி கல்யாணம் நிச்சயமானவனை நேசிச்சது, நம்பினது நிச்சயமா என் தப்புதானே?” என்று ஆணித்தரமாகக் கேட்டாள்.

“நான் தவறுனத நீங்க தவறுன்னு சொல்ல முடியாது. அது தப்புங்க.” என்றவளை அயர்ச்சியுடன் பார்த்தான்.

“ரோஜாவ நான் தப்புன்னு என்னைக்கும் சொல்ல மாட்டேன். அவ என்னோட வரம். ஆனா அவளுக்கு நான் பண்ணது தப்புதானே? நாளைக்கே அவளை உங்கப்பா பேர் என்னன்னு உலகம் கேட்கும்? உங்கப்பா எங்கன்னு அவகிட்ட கேட்கும், அப்போ ரோஜா என்ன பதில் சொல்லுவா? அவளுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்? என் பிள்ளையை எப்படியொரு இக்கட்டான இடத்துல கொண்டு வந்து நிறுத்தியிருக்கேன் பாருங்க” என்று நெற்றியில் அறைந்து கொண்டாள்.

“உலகம் கேக்குற அந்தக் கேள்விகளுக்கு நீங்க குற்றவாளி கிடையாதுங்க. இந்தச் சமுதாயம்தான் அதுக்குப் பொறுப்பு” என்றான்.

“நல்லா சமாளிக்கறீங்க” கசப்புடன் சொன்னாள்.

“தப்புப் பண்ணிட்டேன், தப்பு பண்ணிட்டேன்னு திரும்பத் திரும்பச் சொல்லி சொல்லியே உங்களை நீங்களே தப்பானவளா ஏன் சித்தரிக்கறீங்க? ஆமா, நான் பண்ணது தப்புன்னு சொல்ற தைரியம் இருக்க உங்களுக்கு அதுல இருந்து மீண்டு லைஃப்ல முன்னோக்கி போக எது உங்களைத் தடுக்குது? என்ன பயம் உங்களுக்கு?” என்று கேட்டான்.

வாழ்க்கையில் முன்னோக்கி போவதா? எதை நோக்கி? சமீபமாக அவளைக் குழப்பும் கேள்வி அது.

“உங்களுக்கு நீங்களே கொடுத்துட்ட தண்டனை போதும் துர்கா” சற்றே கரகரப்பு ஏறிய குரலில் சொல்லி அவளின் கைப் பிடித்தான். துர்கா விலக முயற்சித்தாலும் முடியவில்லை.

“ஒரு முறை தவறுனதுக்கு ஓராயிரம் முறை தண்டனை அனுபவிச்சுட்டீங்க. உலகத்தை விடுங்க, உங்களை நீங்க முதல்ல மன்னிங்க. மறக்கறது, மூவ் ஆன் ஆகுறது எல்லாம் தானா நடக்கும்” என்றான்.

அவன் பேச்சைக் கேட்டதற்கு அடையாளமாக அவளின் இமைகள் மட்டுமே மூடித் திறந்தன. அவள் சிலையென அமர்ந்திருக்க, “நம்ம ரெண்டு பேர் வீட்லயும் பேசி, நம்ம கல்யாணத்தை நாளைக்கே முடிவு பண்ண என்னால முடியும்ங்க. ஆனா, எனக்கு உங்க முடிவு முக்கியம். பிளீஸ் நீங்க சம்மதம்னு‌ சொன்னா நான் சந்தோஷமா உங்க லைஃப்க்குள்ள வருவேன்” என்று கம்பீரமாகக் கெஞ்சினான்.

“ஒன்னும் அவசரம் இல்லைங்க. பொறுமையா யோசிச்சு நாளைக்குக் காலையில பதில் சொல்லுங்க.” என்றான் நிறைய நேரம் கொடுத்தது போலப் பெருந்தன்மையுடன்.

“நாளைக்கா?” என்று முணுமுணுத்து முறைத்தாள். அவன் முகம் பார்க்க பார்க்க அவள் கண்கள் கலங்கின.

“உங்களுக்கு என் பாஸ்ட் என்னன்னு தெரியாது ஶ்ரீகாந்த். ரோஜா எப்படி..”

“எல்லாமே தெரியும்ங்க. அப்படிப் பார்க்காதீங்க. ஓரளவு, மேலோட்டமா தெரியும்.”

“முழுசா தெரிஞ்சா என்னை வெறுத்துடுவீங்க ஶ்ரீகாந்த்”

“இத்தனை வருஷமா வெறுக்காதவன் இனிமேதான் வெறுக்கப் போறேனாங்க? நேசம் அப்படியெல்லாம் நொடியில மறைஞ்சு போய்டாதுங்க”

“போகுமே. போய் இருக்கே” என்று அவளின் கடந்த கால நினைவில் அவள் சொல்ல, “நான் என் நேசத்தைச் சொன்னேன்ங்க” என்றான் அழுத்தமாக.

“அது எனக்கு, எப்படிங்க சொல்றது? நம்ம எல்லோருக்கும் ஒரு கடந்தகாலம் இருக்குத்தானே செய்யும்? நானும் பல தவறுகளும், தப்புகளும் செஞ்சிருக்கேன்ங்க. சின்னதா ஒரு காதல் தோல்வி கூட இருக்கு.”

“நம்ம கடந்த காலம்தானே நம்மளோட நிகழ் காலத்தையும், எதிர்காலத்தையும் முடிவு பண்ணுது?” அவனை மடக்கி விட்ட திருப்தியுடன் கேட்டாள்.

“ஹா” மெலிதாய் சிரித்தான்.

“நிகழ் காலத்தை நிர்ணயிக்கறது நிச்சயமா நாமதாங்க.” என்றவன், “உங்க கடந்த காலம் உங்களை இந்த நிமிஷத்துல கொண்டு வந்து நிறுத்தியிருக்கு? அது மோசம்ங்கறீங்களா?” என்று தன்னைச் சுட்டி கேட்டான்.

“ரோஜா, குறிஞ்சி, நான்னு உங்கள நேசிக்கிறவங்க இருக்கையில உங்களுக்கு என்னங்க குறை?”

“…..”

“எதிர்காலத்துக்கு என்ன தேவையோ அதை மட்டும் கடந்த காலத்துல இருந்து எடுத்துட்டு நகர்ந்துட்டே இருக்கணும்ங்க துர்கா.” என்று அவள் கையை அழுத்திச் சொன்னவன், “என் நிகழ்காலம், எதிர்காலம் எல்லாமே நீங்கதான். பிளீஸ், என் வாழ்க்கைக்குள் வந்துடுங்களேன்” என்று கேட்டான். காரில் வாரி இறைத்தது போல அப்படியொரு அமைதி. அவளின் மௌனத்தை அப்போதைக்குச் சம்மதம் என மொழி பெயர்த்துக் கொண்டான்.

அவள் சிந்திக்கச் சமயம் கொடுத்து, காரை நகர்த்தினான்.

error: Content is protected !!
Scroll to Top