நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 2 (1)

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசல் அவனது வேகத்துக்கு ஈடு கொடுக்கவில்லை. அவனை முந்திக் கொண்டு செல்லும் வாகனங்களை எல்லாம் முணுமுணுப்புடன் கடக்க விட்டான் தயாபரன்.

குறிஞ்சிக்கும் அதே மனநிலைதான். துர்கா எங்கிருந்தாலும் பத்திரமாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் தூங்கும் பாவனையைக் கைவிட்டு, கண் திறந்து கைப்பேசியைக் கையில் எடுத்து துர்காவின் எண்ணுக்கு அழைத்தாள். இயந்திர குரல் அந்த எண் அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்றது.

துர்கா தற்போது வீட்டை விட்டுச் சென்றிருப்பதற்கான காரணம் தங்களின் திருமணம்தான் என்பது புரியாத அளவுக்கு அவளும் சிறுபிள்ளை இல்லையே. மனதில் விருப்பமின்மை வியாபிக்க, எல்லாவற்றுக்கும் காரணகர்த்தாவான தயாபரனை திரும்பிப் பார்த்தாள்.

“என்ன பண்றீங்க?” என்று அவள் எரிச்சலுடன் கேட்க, “பார்த்தா தெரியல? காரை சென்னைக்கு விடறேன். இந்த டிராபிக்ல சிக்கி யூடர்ன் போடவே அரை மணி நேரமாகும் போல” என்றான் கடுப்புடன்.

“எதுக்குத் திரும்பச் சென்னை போறீங்க?”

“எதுக்குன்னு உனக்குத் தெரியாது?”

“ரோஜாவோட அப்பாவை பார்க்கவா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டவள், “துர்கா அங்க போக யோசிச்சுருக்க மாட்டா. அவரோட அவ பேசுறதே இல்லையே. அவ அந்த ஆளை மறந்து பல வருஷம் ஆகிடுச்சு” என்றாள்.

“ரோஜா அப்பாவா? கருமம், யாரு அந்தப் பொம்பள பொறுக்கி நாயா? அவனுக்கெல்லாம் என்ன மயித்துக்கு மரியாதை குடுத்து பேசுற நீ?”

“நீங்க ஒத்துக்கலன்னாலும்..” என்று அவள் சொல்ல, சாலையில் இருந்து பட்டென்று பார்வையைத் திருப்பி அவள் முகம் பார்த்து, “மேல பேசுன வாய உடைச்சுடுவேன்” என்று பற்களைக் கடித்தான்.

“அவனை அவருன்ற? என் அக்கா உனக்குத் துர்காவா? அக்காக்கு மரியாதை குடுத்து பேச மாட்டியா? அவ எனக்கே மூத்தவ. ஒழுங்கா அவளுக்கு மரியாதை குடுத்து பேசு” என்றான் கோபம் குறையாமல்.

“இத நான் மூனு வயசுல முதல் தடவ துர்கான்னு கூப்பிடும் போதே சொல்லியிருக்கலாம்ல?” வெடுக்கென்று கேட்டு விட்டாள். அதுவரை இருந்த இறுக்கம் தளர லேசாக முறுவலித்தான்.

“ஏழு கழுத வயசானதும் உன்னைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு ஏழு வயசுல எனக்குத் தெரிஞ்சிருந்தா கண்டிப்பா துர்கா மதினின்னு கூப்பிட சொல்லி அப்பவே சொல்லியிருப்பேன்” என்றான்.

“ம்ம் நீங்க சொன்னதும் நாங்க அப்படியே கேட்டிருப்போம் பாருங்க” என்று உதடு சுழித்தாள். தயாபரன் காரை சென்னைக்குத் திருப்பாமல் ஓரங்கட்டினான்.

அவன் கரங்கள் ஸ்டியரிங்கில் பதற்றத்தை மறைக்கத் தாளமிட, “துர்கா, அவரோட.. சாரி முறைக்காதீங்க தயா. துர்கா மதினி அந்தாளை பார்க்க சென்னை வர நினைச்சுருக்க மாட்டாங்க. அவரோட அவ தொடர்புலயே இல்ல” என்றாள் திட்டவட்டமாக.

“உங்களுக்குத் தெரியாதா?” 

“அக்காவோட நீ எப்போ கடைசியா பேசின குறிஞ்சி?” காரின் கதவில் சாய்ந்து அவன் கேட்க, “கா.. காலையில.. இன்னைக்கு” என்றாள்.

“ஓ? எங்கக்காவ உனக்கு ரொம்பப் பிடிக்குமில்ல, அதை மறந்துட்டேன் பாரு. ம்ம், நாளைக்குக் கட்டிட்டுக் குடும்பம் நடத்த போற என்னைத்தான் இன்னும் பிடிக்காது போல மேடத்துக்கு?” என்றான்.

“சரி அந்தக் கதையை அப்புறம் பார்ப்போம். சும்மாவே செல்லம் கொஞ்சிப்பீங்களே ரெண்டு பேரும் காலையில என்ன பேசினீங்க, சொல்லு?” கூர்மையாக அவள் முகம் பார்த்துக் கேட்டான்.

“நேத்து பேசும் போது காலையில ஊருக்கு வந்துருவேன்னு சொல்லியிருந்தேன். அதான் காணோம்னு கேட்டு போன் பண்ணா.. இன்னைக்கு நைட்டு வர்றதா சொல்லியிருந்தேன்” என்றாள்.

“நிஜமா இன்னைக்கு நைட் ஊருக்கு வர்றதா இருந்தியா? அப்போ நான்தான் அவசரப்பட்டு உன்னைக் கூட்டிட்டுப் போகக் கிளம்பி வந்துட்டேனா?”

“இங்க பாருங்க, நானும் துர்காவும் வேற எதுவும் பேசிக்கல. எங்கயும் வெளில போறதா என்கிட்ட துர்கா.. மதினி சொல்லல. தேவையில்லாம என்னைச் சந்தேகப்படாதீங்க. துர்காவையும்தான். ” என்று படபடத்தாள். சில நொடிகள் அவளை அவதானித்துப் பின்னர்த் தலையசைத்தான்.

“நாளைக்கு விடிஞ்சா நம்ம கல்யாணத்துக்கு இன்னும் மூனே நாள்தான் இருக்கு. ஆனா கல்யாண பொண்ணு குறிஞ்சி மேடம் வீட்டுக்கு வரல. உன்னைக் கையோட கூட்டிட்டு போக நான் வர வேண்டியதா இருக்கு. இதுல, நான் உன்னைச் சந்தேகப்படக் கூடாதா?”

“இப்போ உங்களுக்குத் துர்காவை கண்டுபிடிக்கணுமா? இல்ல என்னைச் சந்தேகப்பட்டுத் திட்டிட்டே இருக்கணுமா? எது முக்கியம்னு நீங்களே டிசைட் பண்ணுங்க” என்று கத்தி விட்டாள்.

“இன்னொரு முறை என்கிட்ட இப்படிக் குரல் உயர்த்தினன்னு வச்சுக்கோ, கொரவலைய நெரிச்சுடுவேன்” அடிக்குரலில் சீறி விட்டு, கீழிறங்கி கார் கதவில் சாய்ந்து நின்றான். மீண்டும் மீண்டும் துர்காவின் எண்ணுக்கு அழைத்துப் பார்த்தான், பலனில்லை.

அவன் பெற்றோருக்கு அழைக்க, “இப்படிச் சொல்லாம கொள்ளாம எங்கப்பா போய் இருப்பா இந்தப் பொண்ணு, அதுவும் குழந்தையோட” என்று கவலையுடன் புலம்பினார்கள் அவர்கள்.

“எங்கள நிம்மதியா இருக்கவே விடக் கூடாதுனு முடிவே பண்ணிட்டா போல உங்கக்கா. நாலு நாள்ல தம்பிக்கு கல்யாணமாச்சே, இப்போ போய் நாம வீட்டை விட்டு போனா என்னாகும்னு கொஞ்சமாவது யோசிச்சாளா பாரு. அவ என்னைக்கு நம்மளை பத்தியெல்லாம் யோசிச்சு கவலைப்பட்டிருக்கா. இவ திமிரெடுத்து வீட்டை விட்டு போறவ எப்படியும் போய்த் தொலையாம ரோஜா குட்டியையும் இல்ல கூடவே தூக்கிட்டு போய் இருக்கா..” என்று அழுகையும் கோபமுமாக ஆதங்கத்துடன் நாச்சம்மை பொரிய, “ம்மா, என்ன பேச்சு இது? அக்கா முன்னாடி இப்படியெல்லாம் பேசாதீங்க சொல்லிட்டேன்” என்றான் குரலை உயர்த்தாமல், ஆனால் கண்டிப்பாக.

“ஆமா, நீ அவளை இப்படி விட்டுக் குடுக்காம பேசுற துணிச்சல்தான் அவளை இப்படிப் பண்ண சொல்லுது”

“அம்மா”

“நான் ஒன்னும் சொல்லலப்பா தயா. உங்கக்கா எங்க இருக்கான்னு ஏதாவது தகவல் கிடைச்சுதா? திரும்ப அந்த ஆள் கிட்ட போய்டலையே அவ. அவன் பொண்டாட்டி..”

“அம்மா, தயவுசெஞ்சு இப்படிப் பேசாதீங்க. அக்கா நாலு வருஷமா நம்ம வீட்டை விட்டு எங்கயும் போகல. அத மனசுல வச்சுட்டு பேசுங்க” என்றான்.

“எனக்குக் கொஞ்சம் டைம் குடுங்கம்மா, அக்காவை பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு வர வேண்டியது என் பொறுப்பு” என்று அவருக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகச் சொன்னான். ஆனால் அடுத்தென்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. கண்ணைக் கட்டி சாலையில் விட்ட நிலையில் சாலையில் விரையும் வாகனங்களை வெறித்துக் கொண்டிருந்தான்.

துர்கா பெரிதாக வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்வது கிடையாது. பள்ளி, கல்லூரி தோழிகள் என அனைவரின் பழக்கமும், நட்பும், பேச்சு வார்த்தையும் ரோஜா அவளின் கருவில் உருவானதும் ஒட்டு மொத்தமாக அழிந்திருந்தது. பலர் அவளை ஒதுக்க, அவள் முழுவதுமாக அனைவரிடம் இருந்தும் ஒதுங்கிக் கொண்டாள்.

அவளும், மகளும் வெளியில் செல்வது என்றால் கூட அப்பா, தம்பி, குறிஞ்சி எனக் குறுகிய வட்டத்தில்தான் செல்வாள். வீடும், வேலையும், குடும்பமும் மட்டுமே அவளின் தற்போதைய உலகம். வேலை இடத்திலும் நெருக்கமான நட்பென யாரும் கிடையாது. வீட்டினர் அல்லாது நெருக்கமான உறவென்றால் குறிஞ்சியும், அவளின் அம்மா அலமேலுவும் மட்டும்தான். ஆனால் இப்போது அவர்களும் அல்லவா அவளைக் காணாமல் பரிதவித்து நிற்கிறார்கள்.

முதல் வேலையாக நேராக ஊருக்குச் சென்று அங்கே பேருந்து நிறுத்தத்தில், ஆட்டோ நிலையத்தில் விசாரிக்க வேண்டும் என மனதில் குறித்துக் கொண்டான் தயா.

துர்கா சட்டைத் தைக்கச் சென்றிருந்த கடைக்குச் சென்று பழனியப்பன் ஏற்கெனவே விசாரித்திருந்தார். ஆனாலும் அவர்களின் தொடர்பு எண்ணை பெற்று எந்தவித சந்தேகமும் வராத வண்ணம் அவனும் விசாரித்தான். அங்கிருந்து ஒரு தகவலும் பயனுள்ளதாகக் கிடைக்கவில்லை.

அவன் வலக்கரம் தலையைக் கலைத்துக் கோதியது.

அக்காவின் வேலையிடத்தில் விசாரிக்கத் தயக்கமாக இருந்தது. அவனின் கல்யாணத்தை முன்னிட்டு ஒரு வாரம் விடுமுறை எடுத்திருந்தாள். மகளையும் பள்ளிக்கு அனுப்பவில்லை.

அக்காவின் பணியிடத்தில் அவனுக்குத் தெரிந்த தோழி இருக்க, அவளை அழைத்தான். அவனது நேரம் அவளும் அழைப்பை ஏற்கவில்லை. எந்தப் பக்கம் சென்றாலும் முட்டுச் சந்தாக இருக்க, மண்டையைக் காரில் முட்டிக் கொண்டான்.

அந்தச் சத்தத்தில் குறிஞ்சி நிமிர்ந்து அவனை அதிர்ச்சியுடன் நோக்க, அதற்கு மேலும் நேரத்தை வீணடிக்க விரும்பாமல், அவளின் பார்வையைப் பொருட்படுத்தாமல் காரில் ஏறினான். காரை இயக்கியவன் அதை நகர்த்தும் முன் கை நீட்டி காரின் டேஷ்போர்டிலிருந்த சிகரெட் பெட்டியை எடுத்தான்.

“என்ன பண்றீங்க?” கிட்டத்தட்ட கத்தினாள் குறிஞ்சி. அவன் சத்தமாகச் சலித்துக் கண்ணை மூடித் திறந்தான்.

“பார்த்தா தெரியல, ஸ்மோக் பண்ண போறேன்”

“இவ்வளவு நேரம் வெளிலதானே நின்னீங்க? அப்போவே ஸ்மோக் பண்ணியிருக்கலாம் இல்ல?”

“அப்போ நான் ஸ்மோக் பண்றது உனக்குப் பிரச்சினை இல்ல? அதைப்பத்தி உனக்குக் கவலை இல்ல? அப்படித்தானே?”

“ப்ச், நான் என்ன பேசினாலும் அப்படியே ட்விஸ்ட் பண்ணாதீங்க. எனக்கு அந்த ஸ்மெல் பிடிக்காது.”

“எனக்கு டென்ஷனா இருக்கு, அது போகணும்னா சிகரெட் வேணும்”

“எனக்குக் கூடத்தான் இப்போ டென்ஷனாருக்கு. அதுவும் நானும் துர்காவும் சேர்ந்து பிளான் பண்ணி ஏதாவது செஞ்சுருப்போம்னு நீங்க சந்தேகப்படும் போது, இன்னும் டென்ஷனாகுது. அப்போ நான் என்ன பண்ணட்டும்?” என்று அவனை நேர்பார்வை பார்த்துக் கேட்டாள்.

“என்ன பண்ணட்டும்ன்னா கேட்கறா?” மெதுவாக அவளை நெருங்கி அவன் கேட்க, சட்டென்று இருக்கையோடு ஒன்றினாள் அவள்.

“எனக்கு இருக்க மூடுல இவ வேற” என்று கடுப்புடன் சொல்லி காரை எடுத்தான். சிகரெட் ஒன்றை எடுத்து உதட்டில் பொருத்தினான்.

“தயா..”

“பத்த வைக்கல, எனக்கு இருக்கக் கடுப்புக்கு நானே பத்திப்பேன் போல. பேசாம வா” என்றான் கோபமாக. அதே கோபத்துடன் காரை நகர்த்தினான். அவன் கண்கள் சாலையில் கவனமாக இருக்க, அவள் கேட்காமலேயே தன் பெற்றோரிடம் பேசியது, துர்கா சென்றிருந்த கடைக்கு அழைத்து விசாரித்தது என அனைத்தையும் அவளிடம் சொன்னான்.

error: Content is protected !!
Scroll to Top