அப்போதுதான் சாமி கும்பிட்டு, அடுப்பை பற்ற வைத்திருந்தார்கள்.
அவனைக் கண்டதும் அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக அடுப்பில் பாலை ஏற்றி, “வாங்கண்ணே” என்று வரவேற்றான் நல்லதம்பி. அவனுக்குத் தலையசைப்பை பதிலாகத் தந்து அவனும் சாமி கும்பிட்டு திருநீறு, குங்குமம் வைத்துக் கொண்டான்.
“காஃபி தரவாண்ணே?” நல்லதம்பி கேட்க, “இல்ல வேணாம்” என்று மறுத்து விட்டு, கடைக்குள் நுழைந்து பார்வையால் பரிசோதனை செய்தபடி கைப்பேசியில் மனைவியை அழைத்தான்.
உறக்கம் கலைந்த குரலில், “தயா” என்றழைத்தாள். அவள் படுக்கையில் பக்கத்தில் அவனைத் தேடுவதை அவனால் உணர முடிந்தது.
“நான் கடைக்கு வந்திருக்கேன்”
“ஓ?”
“அத உன்கிட்ட சொல்லத்தான் கால் பண்ணேன்”
“ம்ம்ம்ம்”
“சரி. நீ, தூங்கு”
“தூங்கிட்டு இருந்தவள எழுப்பி விட்டுட்டு, தூங்குன்னு சொல்றீங்க?”
“இப்படி வெவரம் இல்லாம இருக்கியே. கல்யாண வாழ்க்கையில இதெல்லாம் அடிக்கடி நடக்கும் குறிஞ்சி. இல்லயில்ல டெய்லி நடக்குற.. நமக்கு நடக்கப் போற விஷயம். அதுனால இதுக்கெல்லாம் பெருசா அலட்டிக்கக் கூடாது. கேட்டுச்சா?” என்று ரகசியம் போலக் கேட்டான். அதிகாலையில் அவனது அந்தக் கரகரத்த குரல், அவளின் தூக்கத்தை மொத்தமாகக் கலைத்தது.
அவளின் மௌனம் அவன் முகத்தில் மந்தகாசப் புன்னகையை வரவழைத்தது.
அதிகாலையில் எப்போதும் அவனுக்கு மணமும், திடமுமான காஃபி வேண்டும். கூடவே ஒரு சிகரெட். இன்று இரண்டையும் தொடாமல், தொட்டு பார்க்கும் எண்ணமும் இல்லாமல் இருந்தான்.
மறுமுனையில் மௌனமே நீடிக்கவும், “குறிஞ்சி” என்றழைத்தான்.
மறுநொடி அதிவேகமாக, “தூங்கிட்டேன்” என்று கிசுகிசுத்தாள். அதைக் கேட்டுச் சத்தமாகச் சிரித்தவன், சுற்றுப்புறம் உணர்ந்து சிரிப்பை அடக்கி, “இன்னைக்கு ஓகே. இனிமேல் இந்தப் பதிலை எனக்குச் சொல்லாத. சரியா?” என்று ஹஸ்கி குரலில் கேட்டு, அவளின் மௌன அதிர்ச்சியை ரசித்து, “தூங்கு, தூங்கு. நான் வந்து எழுப்பறே..ன்” என்று சொல்லி அழைப்பை துண்டிக்கப் போகையில், “இந்தக் கடுவன் பூனை என்ன இப்படிப் பேசுது” என்று குறிஞ்சி தூக்க கலக்கத்துடன் புலம்பியது அவன் காதில் துல்லியமாக விழுந்தது. மீசைக்கடியில் உதடுகள் விரிய, தலைக்கோதிக் கொண்டு சமையல் அறைக்குச் சென்றான்.
நடராஜன் அவனைக் கண்டதும், “தம்பி, வாங்க” என்று வரவேற்க, அடுத்த இரண்டு மணி நேரங்கள் காலை உணவுக்கான ஆயத்தப் பணிகளில் கரைந்திருந்தன.
சில விடியல்கள் நம் வாழ்வில் நிரந்தர விடியலை தரப் போவதற்கான நிச்சயத்தை அளிக்கும். துர்காவின் அன்றைய விடியல் மகளின் ஈர முத்தத்துடன் விடிந்தது. சமீபமாக இல்லாத ஒருவித புத்துணர்வுடன் கண் விழித்தெழுந்தாள்.
அதற்குப் பின் வீட்டில் நடந்த நாடகம் எதுவும் அவளின் நிம்மதியை குலைக்கவில்லை. பெற்றோரிடம் சொல்லிக் கொண்டு, ரோஜாவை குறிஞ்சியின் பொறுப்பில் விட்டுவிட்டு அவளுக்கு விடுமுறை முடிந்திருந்ததால் பள்ளிக்குச் சென்று விட்டாள்.
கணக்கு ஆசிரியையின் நேரம் கணக்குகளைத் தீர்ப்பதிலேயே கரைந்திருந்தது. மாலை பள்ளி முடிந்து விரைவாக வீடு வர வெளியே வந்தாள். பள்ளி வளாகத்தை ஓட்டியே அவளுக்காகக் கார் ஒன்று காத்திருந்தது.
“குட் ஈவ்னிங் துர்கா மிஸ். என்ன இப்படிப் பொறுப்பே இல்லாம லேட்டா வர்றீங்க? உங்களுக்காகத்தான் நான் வெயிட்டிங். அதுவும் எவ்வளவு நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன், தெரியுமா?” என்று கேலியும், கிண்டலும், தீவிரமுமாகக் கேட்ட ஶ்ரீகாந்த் அவளுக்காகக் காரில் சாய்ந்து நின்று காத்திருந்தான்.