அவள் தன் கைப்பேசியைத் தேடி எடுத்து துர்காவை அழைத்தாள்.
“என்ன குறிஞ்சி இந்நேரம் கூப்பிட்டுருக்க? தூங்கலயா? தயா எங்க?” பதறி விசாரித்தாள் துர்கா.
“இன்னைக்குக் காலையில மாதிரி விடியும் முன்னாடி வெளில போகாத நீ. புரிஞ்சுதா?” அவள் கேள்விக்குப் பதில் சொல்லாமல் வேறு கேள்வி கேட்டாள். அழுத்தமாக, ஆணையாக.
“என்னது? அதைச் சொல்லவா இந்நேரத்துக்குக் கூப்பிட்ட?”
“ஆமா, தனியா வெளில போகாத. ஓகே?”
“சரிங்க, பாட்டிம்மா”
“சமத்து துர்கா நீ. போ, போய்த் தூங்கு.” என்று சொல்லி, துர்கா பதில் பேசும் முன் அழைப்பை துண்டித்து விட்டாள்.
அவளையே கவனித்துக் கொண்டிருந்தவன் அலட்டிக் கொள்ளாமல் அவளை ஒட்டி உரசியபடியே படுத்து நீட்டி நிமிர்ந்து விட்டான்.
மறுநாள் அவனது வழக்கமாக அதிகாலையிலேயே எழுந்து வீட்டுக்குச் சென்றான். பழனியப்பனும் எழுந்து கடைக்குச் செல்ல கிளம்பிக் கொண்டிருந்தவர் மகனைக் கண்டதும், “வா தம்பி” என்றவர், “கடைக்கா? நான்தான் பார்த்துக்கறேன்னு சொன்னேன் இல்லப்பா? நீ ஏன் இவ்வளவு சீக்கிரம் எழுந்து வந்த?” என்று கேட்டார்.
“இருக்கட்டும்ப்பா. நீங்க இன்னும் கொஞ்ச நேரம் படுங்க. நான் போய்க் கடையைப் பாக்கறேன்” என்றான்.
“என்னப்பா நீ..”
“அப்பா, தினம் இந்நேரத்துக்கு எழுந்து பழகிட்டேன்ப்பா. குறிஞ்சி கோவிச்சுக்க மாட்டா. அதான் உங்க கவலைன்னா..” என்ற மகனை தர்ம சங்கடமான புன்னகையுடன் பார்த்திருந்தார்.
அதற்கு மேல் என்ன சொல்லி மகனைத் தடுக்க? சரியெனத் தலையசைக்க மட்டுமே அவரால் முடிந்தது.
“உங்கம்மாக்குத் தெரிஞ்சா திட்டப் போறா” என்று அவர் சொல்லவும், “தெரியாம எப்படிப்பா இருக்கப் போகுது. உங்களைச் சமாளிச்சது போல அம்மாவையும் சமாளிக்க எனக்கொரு வழி இல்லாமயா போய்டும்” என்றான். புன்னகையுடன் மகன் தோளில் தட்டினார். அங்கே கூடத்தில் அவரது அக்கா, சித்தப்பா குடும்பத்தினர் உறங்கிக் கொண்டிருந்தனர்.
ஆதலால், மெதுவாகத்தான் பேசினார்கள். தயா அப்பாவிற்குக் கண் காண்பித்து வெளியே அழைத்தான்.
வாசலுக்கு வந்ததும், “என்ன விஷயம் தம்பி?” அனுபவத்தில் அவர் கேட்க, “காலையில அத்தை குடும்பத்தை ஊருக்குக் கிளம்பச் சொல்லிடுங்கப்பா” நேரடியாக விஷயத்துக்கு வந்திருந்தான்.
“ஶ்ரீகாந்த் உங்ககிட்ட மண்டபத்துல வச்சு பேசினான்னு சொன்னீங்க இல்லப்பா? இதுக்கு மேல அத்த, லக்ஷ்மணன் மச்சா இங்க இருக்கறது எனக்குச் சரியா படல. யார் மூலமாவது ஶ்ரீகாந்த் வீட்டுக்கு இந்தக் கல்யாண பேச்சு நடந்தது தெரிய வந்தா, அவங்கம்மா ரொம்பப் பிரச்சினை பண்ணுவாங்கப்பா.”
“அது நானும் யோசிச்சேன் தம்பி”
“அத்தக்கிட்ட நானே சொல்லிடுவேன்ப்பா. ஆனா, அவங்க தேவையில்லாத சீன் போடுவாங்க. நீங்க சொன்னா சரியாருக்கும்” என்றான். அதற்கு ஆமோதிப்பாகத் தலையசைத்து, “நானே உன்கிட்ட இன்னைக்குக் காலையிலே பேசணும்னுதான் இருந்தேன் தம்பி. நேத்து நைட்டு துர்காவும் இதையேதான் சொன்னா..” என்று அவர் சொல்ல, “அக்காவா? என்ன சொன்னா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டான்.
“ஆமா தயா. அத்தை, லக்ஷ்மணன் மச்சா, இந்தக் கல்யாண பேச்சுலாம் வேணாம்ப்பான்னு சொன்னா. அவங்களை மொதல்ல ஊருக்கு அனுப்பி வைங்கன்னு சொன்னா. ஏன், உன்கிட்ட சொல்லலையா?” என்று அவர் கேட்கவும், மறுப்பாகத் தலையசைத்தான்.
“நீ சொல்லிதான் முடிவெடுத்தது போலப் பேசினாளே”
“அது நான் முன்னாடி சொல்லியிருந்தேன்ப்பா”
“ம்ம், நல்லது பண்ண தம்பி. துர்கா மனசு மாறுனதுல எனக்கு ரொம்பச் சந்தோஷம். என் பொண்ணு வாழ்க்கையை நினைச்சு நினைச்சு கவலைப்பட்டுட்டு இருந்தேன். இனிமே…”
“அப்பா..” தயா கண்டிப்புடன் அழைக்க, “இல்லப்பா, நான் புலம்பல” என்றார் பழனியப்பன்.
“என் கல்யாணம் உங்க முடிவுப்பா, உங்க பேச்சை நான் மீற மாட்டேன்னு சொல்லிட்டா என் மக.” என்று மகிழ்வுடன் சொன்னார்.
“அவ நல்லா இருந்தா போதும்ப்பா எங்களுக்கு. பெத்த மனசு வேறென்ன ஆசைப்படப் போகுது. உங்கம்மா அழுதுட்டா” என்றார் தளும்பி விட்ட கண்களுடன்.
“உங்கத்தகிட்டயும் அவளே முடியாதுன்னு சொல்லிட்டா.” என்றார்.
“ஓ, அத்த அதுக்கு அப்புறமும் எப்படிச் சும்மா இருந்தாங்க?”
“உங்கம்மாவும், நானும் கூடவே இருந்தோம்ல தயா” என்று சிரிப்புடன் அவர் சொல்ல, “ம்ம், நீங்க இருக்கும் போது அவங்களுக்கு வாய்க்கு வந்த மாதிரி பேச தைரியம் வராதுதான்” என்று உண்மையை உரக்க சொன்னான்.
“அந்நேரம் உன்னைத் தொந்தரவு பண்ண வேணம்னுதான்ப்பா தயா சொல்லல”
“என்னப்பா பெரிய தொந்தரவு? நாலு வீடு தள்ளிதானே இருந்தேன். ஒரு குரல் குடுத்தா வந்திருக்கப் போறேன். அதுக்கெல்லாம் கோபிச்சுக்கற ஆளா அலமேலு அத்தை? நீங்க என்னைக் கூப்பிட்டு இருக்கலாம். நான், உங்களை மாதிரி பொறுமையா பேசாம அப்பவே அத்தையைக் கிளப்பி விட்டிருப்பேன்” என்றான்.
“சொல்ல சொல்லாதப்பா. அதெல்லாம் நீ செஞ்சுருக்க மாட்ட. உங்கத்தைய காலையில கிளம்பச் சொன்னான். ஒரு பத்து மணிக்கு மேல நானே அவங்கள பஸ் ஏத்தி விட்டுடுறேன்” என்றார் பழனியப்பன். சரியென்றவன் மனத்தில் அலை அலையாக அமைதி அலைமோதி அடங்கியது.
அக்காவை நினைக்க நினைக்க நெஞ்சம் நிம்மதியில் நிறைந்தது. அவளுக்கான முடிவை, அதிலும் சரியான முடிவை அவள் எடுக்கத் தொடங்கி விட்டாள் என்பது எத்தனை பெரிய விஷயம். என்னவோ பெரிய சாதனையை நிகழ்த்தி விட்டது போல அவன் மனம் குட்டி குழந்தையாய் குட்டி கரணம் அடித்தது.
“நேரமாகுது. நான் கடைக்குப் போறேன், அம்மா கேட்டா சொல்லிடுங்கப்பா” என்று சொல்லி வண்டியை ஆக்கிரமித்தான்.
அதிகாலை நேர குளிர் காற்று அவன் மேனியை தழுவ, அந்தச் சில்லிப்பை, சிலிர்ப்புடன் ஆழ்ந்து அனுபவித்தான். அனிச்சையாக மனம் மனைவியைத் தேடியது. அடர்ந்த மீசைக்கடியில் குறுநகை இழையோட வண்டியை செலுத்தி கடை முன் சென்று நிறுத்தினான்.