நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 13 (1)

தயாபரன் கண்களில் தயவு தாட்சண்யமே இல்லை.

“என் அக்கா, என் பொண்டாட்டி ரெண்டு பேர்ல யாரை தப்பா பார்த்தாலும், யார் கிட்ட வாலாட்டினாலும் அவன் செத்தான். இதுல ரெண்டு பேர்கிட்டயும் வாலாட்டி இருக்கான்னா அவனை என்ன செய்யலாம்? என் கையால கொன்னு போட்டா கூட என் ஆத்திரம் தீராது” வேக வேகமாகக் கழற்றிய சட்டையை எடுத்து அணிந்து கோபமாகக் கையை மடித்து விட்டான்.

“தயா”

“வாயை மூடு குறிஞ்சி, என்கிட்ட காலையிலயே சொல்றதுக்கு என்ன? அவனை அப்பவே அடி வெளுத்துருப்பேன்ல? மச்சான் மயிராண்டினு மரியாதை வேற வேண்டிக் கிடக்கு அந்தப் பொறுக்கிக்கு..” அறை வாசலை நோக்கி நடந்தான்.

“எங்க போறீங்க?”

“ம்ம், அவனைப் போய்க் கொஞ்சி குசலம் விசாரிச்சிட்டு வரப் போறேன். நீயும் வர்றியா?”

“இந்நேரம் போகணுமா தயா? வேணாமே பிளீஸ்”

“ஏய் பைத்தியமே, இதுக்கெல்லாம் சகுனம் பார்த்துட்டு போவாங்களா? அந்தப் பொறுக்கி நம்ம வீட்ல இருக்கான்னு தெரிஞ்சே, நான் எப்படி இங்க நிம்மதியா தூங்க முடியும்?”

“ஷ்ஷ்ஷ், கத்தாதீங்க. அம்மா ஹால்ல படுத்திருக்காங்க. அவங்களுக்குக் கேட்கப் போகுது”

“இப்போ அது ரொம்ப முக்கியம் பாரு”

“இல்லையா பின்ன? நாம சண்டை போட்டுக்கறோம்னு நினைச்சிக்கப் போறாங்க” என்று தவிப்புடன் சொன்னாள்.

“நீ இப்போ என்னை வீட்டுக்கு போக விடலைன்னா, நீ சொன்ன சண்டையைப் போடத்தான் போறோம், பார்த்துட்டே இரு” என்றான், கோபத்தில் கனன்ற கண்களுடன். எட்டி அவன் கைப் பிடிக்கப் போனாள், பட்டென்று தட்டி விட்டான்.

“நீ சொன்ன விஷப் பூச்சி, நம்ம வீட்டுக்குள்ளயே இருக்கான். அந்த விஷப் பூச்சிய விரட்டி விடாம பொறுமையா வச்சு வேடிக்கை பார்க்கலாம்னு சொல்ற. அப்படித்தானே? நாளைக்கு ஏதாவது ஆச்சுன்னா..” தயாவின் குரல் மிரட்ட, “அப்படி எதுவும் ஆகாது தயா. துர்கா பத்திரமா இருப்பா” என்றாள்.

“வாய்ப்பு கிடைக்காத வரைக்கும்தான் வில்லனாகாம இருப்பானுங்க. அவனுக்கு அந்த வாய்ப்பை நாமளே ஏற்படுத்திக் குடுக்கக் கூடாது”

“ரொம்பப் பயமுறுத்தாதீங்க”

“பயமுறுத்துறேனா? அடிங்க, படிச்சவதானே நீ? அதுவும் நர்ஸிங்? உன் வேலையில எத்தனை பாதிக்கப்பட்டவங்கள பார்க்கற? அதுல பெரும்பாலும் தப்பு பண்றவன் யார்னு சொல்லு?”

“நமக்கு ரொம்ப நல்லா தெரிஞ்சவங்க” என்று சிறு குரலில் முணுமுணுத்தாள்.

“ம்ம், அப்புறம்?” என்று புருவம் உயர்த்தினான்.

அவனைத் தடுக்கவும் முடியாமல், போ என்று துணிந்து சொல்லவும் முடியாமல் கையைப் பிசைந்து நின்றாள். அவள் முகம் பார்த்தே மனம் படித்தவன், நகர்ந்து படுக்கையில் அமர்ந்தான். சில நிமிட அமைதி அறையை நிறைத்தது.

“பொண்டாட்டி, பிராமிஸ்னு என்னைக் கார்னர் பண்ணுவன்னு நினைச்சேன். பரவாயில்ல, குறிஞ்சியாத்தா கொஞ்சம் புத்திசாலிதான் போலயே” என்று அவளைச் சீண்டினான்.

“எனக்கு அதெல்லாம் தோனவேயில்ல”

“எது தோனல?”

“பொண்டாட்டி, பிராமிஸ்னு உங்களைக் கார்னர் பண்ணத் தோனலன்னு சொன்னேன்”

“ம்ம், ரொம்ப நல்லது” என்றான் நக்கலாக. “நீ தயாபரன் பொண்டாட்டின்னு மனசுல பதிய வை முதல்ல. அப்போதான் தோனும்” என்றான் அவள் கண் பார்த்து.

அதற்குப் பதில் சொல்லாமல், “என்ன இவ்வளவு நேரம் கொந்தளிச்சுட்டு இப்போ, இப்படி அமைதியா உக்கார்ந்துட்டீங்க?” என்று யோசனையாக அவனைப் பார்த்து கேட்டாள்.

“அதுவா? அந்தக் கொந்தளிப்புக் கோபத்தில் வர்ற இமீடியட் ரியாக்ஷன். அச்சோ அக்காக்கு எதுவும் ஆகிடுமோ, அவன் எதுவும் பண்ணிடுவானோ, அதுக்கு முன்னாடி நாம அவனை ஏதாவது செஞ்சுடணுமேன்னு பதட்டத்தில் வர்றது. ஃப்ளைட் ரெஸ்பான்ஸ், ஆபத்துன்னு உணர்ந்ததும் மூளை அலர்ட் மோடுக்கு போய் அடிக்கச் சொல்றது. பாம்பை பார்த்ததும் ஓடுறது போல, விஷப் பூச்சிய பார்த்ததும் அடிக்கப் போறது போல” என்று விளக்கினான்.

“சரி, இப்போ அதெப்படி மாறுச்சாம்? ஃப்ளைட் ரெஸ்பான்ஸ் மோடில் இருந்து நார்மல் மோடுக்கு வந்துட்டீங்களா?”

“ம்ம், நீதான் வர வச்சிட்டியே. பிராமிஸ் பண்ணேன்னு சொல்லி நீ என்னைக் கார்னர் பண்ணல. ஆனா, நீ பொண்டாட்டி பார்வை பாக்கும் போது எப்படிப் போக?” என்று நமுட்டு சிரிப்புடன் கேட்டான்.

அவள் அதற்கும் முறைக்க, “அக்காக்கு அவள பாதுகாத்துக்கத் தெரியும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. இப்போ போய் நான் பிரச்னை பண்ணா அது அவளை ரொம்பப் பாதிக்கும். தப்பான நேரத்துல வெளிப்படுத்தற நியாயமான கோபம் கூடத் தப்பா போக வாய்ப்பிருக்கு.” என்றான். அவளின் பயமும் அதுவாகத்தானே இருந்தது. அப்பாடா என ஆசுவாச பெருமூச்சு விட்டாள்.

அவன் எழுந்து சட்டையைக் கழற்றி பையைத் துழாவினான்.

“என்ன தேடுறீங்க?”

“சிகரெட்”

“எதுக்கு?”

“ம்ம், டென்ஷன் தலைவலி” என்று அவளைப் பார்த்தபடியே சொன்னான்.

“தலைவலின்னு என்னைதானே சொல்றீங்க?” என்று அவனை நெருங்கி கேட்டாள்.

“தெரிஞ்சா சரி, நகரு” என்று இடக்கரத்தால் அவளை நகர்த்தினான். அடமாக அப்படியே நின்றாள்.

“ஸ்மோக் பண்றது எனக்குப் பிடிக்காது தயா”

“உனக்குப் பிடிக்காத நான் கூடத்தான்..” என்றவன் கழுத்தில் கைக் கோர்த்து இழுத்தாள். அந்த வேகத்தில் தடுமாறி, “ஏய்..” என்று கத்தியவன், காலை அகற்றி நின்று சமாளித்தான். அத்தனை நெருக்கத்தில் அவள் முகம் கண்டு மேலும் தடுமாறினான்.

“என்ன பண்ற குறிஞ்சி? கழுத்துல இருந்து கைய எடு”

“நீங்க ஸ்மோக் பண்ண கூடாது. அவ்ளோதான் சொல்லிட்டேன். இனிமே நீங்க ஸ்மோக் பண்றத நான் பார்த்தேன்..” என்று அவள் எச்சரிக்க, அவள் உயரத்திற்கு வாகாகக் குனிந்து, “என்ன பண்ணுவியாம் குட்டச்சி?” ஒற்றைப் புருவம் உயர்த்தித் திமிராக வினவினான்.

“நீங்க ஸ்மோக் பண்றதால உங்களை விட எனக்குத்தான் அதிகப் பாதிப்பு தெரியுமா? ஸ்மோக் பண்றவங்கள விட அவங்க பக்கத்தில இருக்கவங்களுக்குதான் அதிகப் பாதிப்பு” என்று அவள் கூற, “சரிங்க நர்ஸம்மா” என்றான் போலி பவ்யத்துடன்.

“நான் சீரியஸா சொல்றேன் தயா. நீங்க இழுத்து விடுற புகைய அதிகமா சுவாசிக்கிறது நாங்கதான். அப்போ எங்களுக்கு எவ்ளோ பாதிப்பு இருக்கும்? அதுனால கேன்சர் கூட..” என்று அவள் கோபமாகப் படபடக்க, “ஷ்ஷ், நான் ஏற்கனவே சொன்னதுதான். நான் செயின் ஸ்மோக்கர் கிடையாது குறிஞ்சி” என்றான் கண்கள் கடினமுற.

“சும்மா பொய் சத்தியம் என்னால பண்ண முடியாது. அதுனால அந்தச் சப்ஜெக்ட்டை இப்போ விடு” என்றான். அவள் முகம் திருப்பவும், “என் கழுத்துல கை போட்டு நின்னுட்டு எனக்கு மூஞ்சி காட்டினா எப்படி? என்னைப் பாரு குறிஞ்சியாத்தா” என்று அவள் முகத்தைத் தன் புறமாகத் திருப்பினான்.

கோபத்தை அடக்கியதில் மூச்சு வாங்க நின்றிருந்தாள். அவளை ரசனையுடன் பார்த்து, “நீ பொண்டாட்டி அவதாரம் எடுக்காம இருக்கது நல்லது” என்று அவள் காதில் கிசுகிசுத்தான்.

“தயா பொண்டாட்டின்னு என் மனசுல நான் பதிய வைக்கணும்னு‌‍ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்கதானே சொன்னீங்க?”

“ஓ நீ அப்படி வர்ற? ரைட்டு. நீ பொண்டாட்டி அவதாரம் எடுத்தா நான் புருஷ…ன் அவதாரம் எடுப்பேன். தயாவின் தர்மபத்தினி தயவு காட்ட தயாரா?” என்று ஹஸ்கி குரலில் கண்ணடித்துக் கேட்டான். ஆவென்று அவனை வாய் திறந்து பார்த்தவள், கோபமாக, “நான் சிகரெட் பிடிக்காதீங்கன்னு சொன்னா கேட்காம.. அதை விட்டுட்டு வேற பேசறீங்க. பேச்சை மாத்தாதீங்க. அது போதை..” எனவும், “பொண்டாட்டிய விட என்ன பெரிய போதை இருக்கப் போகுது?” என்று நிதானமாக அவன் கேட்கவும், அவன் கழுத்தில் இருந்து குறிஞ்சியின் கை நழுவ பார்த்தது. சட்டெனச் சுதாரித்து அவள் கையோடு சேர்த்தணைத்து அவள் பின்னங்கழுத்தில் கைக் கோர்த்தான்.

“இந்தப் போதை ஆபத்தில்லதானே நர்ஸம்மா?” அவளைக் கண்ணால் குறிப்பிட்டுத் தீவிரமாகக் கேட்டவனுக்குப் பதில் சொல்லும் நிலையிலா அவள் இருந்தாள்.

அத்தனை நெருக்கத்தில் அவன் மேல் நிலைத்திருந்த கண்களைச் சிரமப்பட்டுச் சிமிட்டினாள். அந்தக் கண்களுக்குள் தொலைந்தவன், கண் மூடி திறந்து, அவள் கன்னத்தோடு கன்னம் இழைத்தான். அவள் கரம் அவன் கழுத்தை இறுக்க, நெருக்கம் கூடியது. கன்னத் தடம் பற்றி இதழில் இளைப்பாறி ஆழ முத்தமிட்டான்.

மறுகணம் அவளை விலகி, “தூங்கு” என்று அவள் கன்னம் தட்டினான். அவனைப் பார்த்தபடியே படுக்கையில் அமர்ந்தாள். அவளின் பார்வையை உணர்ந்தும் இயல்பாக உடைமாற்றி உறங்கத் தயாரானான் அவன்.

error: Content is protected !!
Scroll to Top