துர்கா அங்கேயே முகம் கழுவி சற்றே நிதானித்து உள்ளே செல்ல, “தயா மாமா, நான் சொன்னா நீங்க கேட்பீங்கதானே?” என்று ரோஜாவுக்குச் சொல்லி கொடுத்துக் கொண்டிருந்தாள் குறிஞ்சி. ரோஜாவும் மழலையில் அழகாக ராகம் போட்டு அதே போல அவளிடம் சொல்ல, “அப்படியே மாமா கிட்ட கேளு” என்று அவளை ஊக்கினாள். அதைக் கவனித்துக் கொண்டிருந்தவன், “என் செல்லம் சொல்லி மாமா கேட்காம இருப்பேனா? நீ என்ன சொன்னாலும் மாமா கேட்பேன் ராசாத்தி” என்று மருமகளை அள்ளி கொஞ்சியவன் கண்கள் மனைவியின் மேலிருந்தன. குறிஞ்சி குறும்பாகப் புன்னகைத்து முகத்தை வெட்டினாள்.
அப்படியே திரும்பி துர்காவை பார்த்து அவள் புருவம் உயர்த்த, “வில்லி மாதிரி பீஹேவ் பண்ணாத” என்று எரிந்து விழுந்தாள் அவள்.
“என்னது வில்லியா? நீ வேணும்னா உன் தம்பியை கேளு தாயே, வேற மாதிரி சொல்வார். தயாபரன் ஹீரோயின் நான்” என்று கண் சிமிட்டி சொல்லி, வேண்டுமென்றே கணவனிடம் சென்று அமர்ந்தாள்.
துர்காவுக்குக் கலவரமாகிப் போனது. நொடியில் முடிவெடுக்க முடியாத நிலை. எந்நிலையிலும் அவளின் விருப்பு வெறுப்பை மட்டுமே பார்க்க முடியாது. ரோஜா, தயா, அவளின் பெற்றோர் என அனைத்தையும் அவள் யோசிக்க வேண்டும். அதையெல்லாம் விட ஶ்ரீகாந்த் பற்றி யோசிக்க வேண்டும். ஶ்ரீகாந்த்தை நினைத்தாலே மனம் கலவையான உணர்வுடன் கலவரம் செய்தது. அதைத் தவிர்க்க, “அத்த” என்று அலமேலுவின் பின்னே சென்றாள் துர்கா.
அன்றைய தினம் முழுக்க மனைவியைக் கவனித்துக் கொண்டிருந்த தயா, இரவில் தனிமை கிடைத்ததும், “என்கிட்ட என்ன மறைக்கற?” என்ற கேள்வியுடன் அவளை நிறுத்தினான்.
“என்ன மறைக்கறேன்?”
“ஒரு கேள்விக்குப் பதில் இல்லன்னாதான் எதிர்கேள்வி வரும்.” என்றான்.
“அப்படியா? நீங்க ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிப்பீங்க தயா?” கட்டிலின் விளிம்பில் சாய்ந்து நின்று அவள் கேட்க, “எத்தனையா? ம்ம்? இரு, பார்த்துச் சொல்றேன்” என்று அவனது சட்டை பையைத் துழாவினான்.
“சட்டை பாக்கெட்ல ஸ்டாக் இருக்கும் போலயே”
“ஆமா. இப்போ இல்ல. இன்னொரு நாள் இருக்கும் போது எண்ணி சொல்றேன். இல்லனா ஒரு முழுப் பாக்கெட் வாங்கி, எத்தனை காலி ஆகுதுன்னு கணக்கு பண்ணி சொல்றேன். இப்போ விஷயத்துக்கு வா” என்றான்.
“என்ன விஷயம்?” அப்பாவியாக முகத்தை வைத்து அவள் கேட்க, “ம்ம், காலையில வந்த விஷப் பூச்சி விஷயம்” என்றான் கோபம் கலந்த நக்கல் குரலில்.
“குறிஞ்சி” என்று அவள் கைப் பிடிக்கவும், அவளுக்குக் கண்கள் கலங்கின.
“ப்ச், லூசு” என்று பிடித்திருந்த கையில் அழுத்தம் கூட்டினான். அதற்கு மேல் முன்னேற அவனுக்கு எண்ணம் போகவில்லை. காலையில் அப்படி என்ன நடந்திருக்கும் என்ற சிந்தனையுடன் தீவிரமாக அவளைப் பார்த்தான்.
“அழறியா குறிஞ்சி?” இல்லையென மறுப்பாகத் தலையசைத்தாள்.
“இனிமே நீ தனியா அழ கூடாது”
அவன் அடிக் குரலில் சொல்லவும், விழி உயர்த்தி ஏன் என்று கேட்டாள்.
“ஏன்னா, நமக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. இனிமே நீ தனிக் கிடையாது. நானும் தனியாள் கிடையாது. சிரிப்போ, கோபமோ, துக்கமோ, அழுகையோ ஷேர் பண்ணிக்கப் பக்கத்தில நான் இருக்கேன் இல்ல? எல்லாத்தையும் பகிர்ந்துக்கலாம். கெட்டதுன்னா பீலிங் குறையும். நல்லதுன்னா பீலிங் கூடும். அது நமக்கும் நல்லதுதானே? ம்ம்?” என்று கேட்டான். இப்படியெல்லாம் இவனுக்குப் பேச வருமா என்ற அதிசய ஆச்சர்யத்துடன் அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள்.
“எதுக்கு இப்படி முழிக்கற? சரி, விடு. நான் ஃபோர்ஸ் பண்ணல. உனக்கா எப்போ சொல்லணும்னு தோனுதோ அப்போ சொல்லு. ஓகே?” என்று கேட்டான்.
அவள் அப்படியே மௌனமாக அவனைப் பார்த்து நிற்க, “உன்னை எதுக்கும் ஃபோர்ஸ் பண்ண மாட்டேன்.” என்று குறும்பு புன்னகையில் உதடு வளைய சொன்னவன், மீசையை நீவி விட்டு, “படு, தூங்கலாம்” என்றான்.
அவனிடம் எதையும் மறைக்க அவளுக்கு மனமில்லை. அவன் சொன்னது போல இனி அவர்கள் கணவன், மனைவி. அவர்களுக்குள் ஆரோக்கியமான அவரவர் இடைவெளி இருக்கலாம். ஆனால் ஒளிவு மறைவு? கூடாது என்றே தோன்றியது. அதிலும் அவனது அக்கா சம்மந்தப்பட்ட விஷயம் எனும் போது மறைப்பது தவறு என்றே மனம் சொன்னது.
மேலும் அவனிடம் மறைத்தால் அவளின் மனம் முரண்டிக் கொண்டேயிருக்கும். அதுவொரு அவஸ்தை. அதற்கு உண்மையைச் சொல்லி விடுவதே மேல் என்ற முடிவுக்கு வந்திருந்தாள்.
“தயா” என்றழைத்தாள். சட்டையைக் கழற்றிக் கொண்டிருந்தவன், “சொல்லு” என்று திரும்பினான்.
அவனை நோக்கி கை நீட்டினாள்.
“என்ன குறிஞ்சியாத்தா? இன்னைக்கே களத்துல குதிச்சுடலாங்கறியா?” ஒற்றைக் கண்ணடித்து வினவினான். அவன் கண்களில் குறும்பு கூத்தாட, அவள் கண்களில் போலியான கோபம் பொங்கியது.
“பிராமிஸ் பண்ணுங்க”
“பிராமிஸ், பொண்டாட்டி ரெண்டும் ஒன்னோட ஒன்னு ஒத்து போகாதே” என்றான் மீசைக்கடியில் சிரிப்பை மறைத்து.
“அது உங்களுக்கு எப்படித் தெரியுமாம்?” அவள் முறைக்க, “தீ சுடும்னு தெரிஞ்சது போலத்தான் குறிஞ்சியாத்தா. இதெல்லாம் ஒரு கேள்வியா? நீ விஷயத்துக்கு வா” என்றான். அவள் வீம்பாகக் கை நீட்டி நின்றாள். ஆழ மூச்செடுத்து, “பொண்டாட்டி என்னா பெருசா பண்ணிட போறா” என்று அவள் கையை அழுத்தி சத்தியம் செய்தான்.
“என் பேச்சை மீறி நீங்க எதுவும் செய்யக் கூடாது. ஓகே?” என்று முன்னெச்சரிக்கையுடன் எச்சரித்தாள்.
“ஓகே. சொல்லு” என்றான். சொன்னாள். அவன் கண்கள் கோபத்தில் கனன்று அவளை எரித்தன.