நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 12 (1)

பொழுது புலர்ந்திருந்தாலும் வெளிச்சம் பரவியிருக்கவில்லை.

குறிஞ்சி தன் போக்கில் சிந்திந்தபடி வெளியே வர, அந்நேரம் அங்கே ஆள்கள் இருப்பார்கள் என்றே அவள் நினைத்திருக்கவில்லை.

இரையை வேட்டையாட காத்திருக்கும் விலங்கு போலச் சத்தம் எழுப்பாமல் நின்றிருந்த லக்ஷ்மணனின் கரம் துர்காவை நோக்கி நீண்டதைக் கண்டதும், குறிஞ்சி கையில் இருந்த துணி வாளியை நழுவ விட்டிருந்தாள்.

அதிர்ச்சியில் விழிகள் தெறித்து விடுவது போல விரிய, தொண்டைக் குழி அடைத்துக் கொண்டது. கத்த வேண்டும் என்று மூளை அவசர கதியில் அறிவுறுத்தவும், “தயா மாமா” என்று கத்தியிருந்தாள்.

துர்காவின் இடையில் பாம்பை போல ஊர்ந்து படர்ந்த லக்ஷ்மணனின் கரம், அந்தச் சத்தத்தில் பட்டெனப் பின் வாங்கியது.

குறிஞ்சி கத்தியதில் துர்கா அதிர்ந்து திரும்ப அவன் மீதே மோதும் நிலையானது. என்னவோ நிரம்பவும் நல்லவனாகத் துர்காவுக்கு உதவுவது போல அவன் தாங்கிப் பிடிக்க, அவனது பார்வையும், பிடித்திருந்த விதமும் குறிஞ்சியின் பார்வையில் பிடித்தமின்மையைப் பரப்பியது.

துர்கா அனிச்சையாக, “விடுங்க என்னை” என்று அவன் கையை அருவெறுப்புடன் அடித்து விலக்க, அதே நேரத்தில், “அவ மேலருந்து கைய எடுங்க” என்று கத்தினாள் குறிஞ்சி. இப்போது அவன் பார்வை அவள் மேனியில் படர்ந்தது. அவனது பார்வையும், அது போன இடமும் அவளுக்கு அப்படியே பற்றிக் கொண்டு வந்தது. அடித்து விடலாம் போல ஒரு வெறி வந்தது. பல்லைக் கடித்துத் தன்னை அடக்கி, “இங்க என்ன பண்றீங்க?” என்று கேட்டாள்.

துர்கா தன் இடையைத் தட்டி தட்டி விட்டு அவனை முறைத்தாள்.

“சும்மா துர்காகிட்ட பேசலாம்னு வந்தேன். அதுக்கேன் கத்துற?” பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் குறிஞ்சியிடம் கேட்டவன், துர்காவை நெருங்கி, “நீ சொல்லு துர்கா, நாளைக்குக் கட்டிக்கப் போற நம்ம தனியா பேசுறது தப்பா?” என்று இளித்துக் கொண்டே கேட்க, “தயா மாமா” என்று மீண்டும் கத்தியிருந்தாள் குறிஞ்சி.

“இந்தா எதுக்குத் தேவையில்லாம கத்துற?” என்று அவன் கோபமாகக் கேட்கையிலேயே உள்ளே கதவு திறக்கும் சத்தம் கேட்டது. உடனேயே, “உன்கிட்ட அப்புறம் பேசிக்கிறேன்” என்று உள்ளே ஓடினான்.

தயாபரன் உறக்கம் சுமந்த கண்களுடன் எழுந்து வெளியே வர, அவன் மீது உரசிச் சென்ற லக்ஷ்மணனை குழப்பமாகப் பார்த்துப் பின் பக்கம் வந்தான்.

“என்னாச்சு குறிஞ்சி, ஏன் கத்தின?” என்று அவன் கேட்க, துர்கா சட்டெனக் குறிஞ்சியை நெருங்கி அவள் கைப் பிடித்தாள்.

“பிளீஸ் எதுவும் சொல்லிடாத” அவள் காதுக்குள் முணுமுணுப்பாகக் கெஞ்சினாள்.

எல்லாமே சில நொடிகளில் நடந்து முடிந்து விட்டிருந்தது.

குறிஞ்சிக்கு இன்னமும் அதிர்ச்சி விலகவில்லை. இந்நேரம் தான் இங்கு வரா விட்டால் என்ன நடந்திருக்கும்? துர்காக்கு என்ன நேர்ந்திருக்கும்? என்ற கேள்வி அவளின் மூளையைக் குடைய, சிந்தனை தாறுமாறாக ஓடி கற்பனை காட்சிகளைக் கண்டபடி விரிய செய்ய அவளுக்குக் கண்கள் கலங்கி விட்டன. முன்பு துர்காவுக்கு நேர்ந்தது அவளின் விருப்பத்தினால் என்றாலும் கூட இப்போதும் அவனை ஒன்றும் செய்ய முடியாத கோபம், ஆத்திரம், ஆதங்கம் எல்லாம் அவளுக்கு அதிகம் உண்டு. ஆனால் இன்று அவள் கண் முன்னே ஒருவன், உறவினன், நாளை அவளை மணக்க கேட்ட நல்லவன் நடந்து கொண்ட முறையில் அவளுக்கு அப்படியொரு அதிர்ச்சி.

அதிலும் அவன், அவள் மேனியை மேய்ந்த விதத்தில் அசூயையாக உணர்ந்தாள். அப்படியே ஓங்கி அறைந்திருந்தால் நிம்மதியாக உணர்ந்திருப்பாள்.

“குறிஞ்சி” அவள் தோளில் கைப் போட்டு தயா அழைக்க, கலங்கிய கண்களுடன் அவனை ஏறிட்டாள்.

அவன் கண்கள் கரிசனத்துடன் அவளைக் கூர்ந்தன.

“என்னக்கா?” திரும்பி துர்காவிடம் கேட்க, “ஒன்னுமில்லடா” என்று சமாளிக்கப் பார்த்தவளுக்குப் பொய் பேச வரவில்லை.

இருவரையும் மாறி மாறிப் பார்த்து, “என்னாச்சு? எதையாவது பார்த்து பயந்துட்டியா? ஏன் அப்படிக் கத்தின?” என்று மனைவியிடம் கேட்டான்.

துர்காவை முறைத்த குறிஞ்சி, ஆமென்று தலையசைத்தாள்.

“என்னமோ அசிங்கமா.. தெர்ல.. மரத்துல இருந்து மேல விழுந்த மாதிரி இருந்தது. அதான் கத்திட்டேன்” என்று அவள் உளற, “என்ன விழுந்தது? பூச்சியா? கடிச்சுடுச்சா? விஷப்பூச்சியா இருந்தா கஷ்டம். எங்கன்னு காமி, பார்ப்போம்” என்று அவள் தோளை உலுக்கினான்.

“விஷப் பூச்சிதான்” என்று வெறுப்புடன் அவள் சொல்ல, கையைப் பிசைந்து, “பிளீஸ்” என்று கண்ணால் கெஞ்சினாள் துர்கா.

“லக்ஷ்மணனை அடிச்சிடுவான் தயா. சண்டையாகிடும். வேணாம்” என்று கண்களால் அவள் இறைஞ்ச, அவளின் விழி மொழி புரிந்தாலும் வீம்பாக நின்றாள் குறிஞ்சி.

“விஷப்பூச்சின்னு அசால்ட்டா சொல்ற? அடிச்சுருக்க வேண்டியதுதானே? கையில பட்டுடுச்சா?” என்று பதறி அவளின் கைப் பிடித்து ஆராய்ந்தான்.

“அடிக்கதான் நினைச்சேன், அதுக்குள்ள ஓடிருச்சு. நெக்ஸ்ட் டைம் பார்த்தா கன்பார்மா அடிச்சு கொன்னுடுறேன்” என்று கோபமாகச் சொன்னவளின் மேல் படிந்தது அவன் பார்வை.

“அதுக்குள்ள ஓடிருச்சா? பூச்சி எப்படி டி ஓடும்? ஏன் இப்படிக் காலங்காத்தால உளறிட்டு இருக்க? என்ன நடந்தது, ஏன் கத்தினன்னு ஒழுங்கா ஏதாவது சொல்றியா நீ? என்னமோ ஏதோன்னு மனுஷனுக்கு மண்ட காயுது. நீ என்னன்னா புரியாம கூலா பதில் சொல்லிட்டு இருக்க.” என்று கடுப்படித்தவன், அவள் கையை, கழுத்தை ஆராய்ந்தான்.

“நீ சொல்லுக்கா. என்னக்கா ஆச்சு?” துர்கா வாயை திறக்கவேயில்லை.

“விஷப்பூச்சி, போய்டுச்சு. நான் தள்ளி விட்டுட்டேன். விடுங்க தயா” என்று சிறு குரலில் சொன்னவள், “நீங்க போங்க, நான் துணி காயப் போட்டுட்டு வர்றேன்” என்றாள். அவனோ அங்கிருந்து நகரவேயில்லை.

அவள் துணி காயப் போட்டு முடிக்கும் வரை அங்கேயே நின்றான்.

குறிஞ்சி பக்கவாட்டில் துர்காவை முறைக்க, அவளும் மீதமிருந்த துணிகளைக் காயப் போட்டாள்.

“நேத்து ரோஜா போட்டிருந்த பட்டுப் பாவாடை சட்டைய ரொம்ப அழுக்கு பண்ணிட்டா. உடனே துவைச்சா கறை போயிடும்னு இப்பவே அலசி போட்டேன்” என்று அந்நேரம் அங்கு வந்ததற்கான விளக்கம் சொன்னாள் அவள். குற்றவாளி எப்போதும் தப்பித்துக் கொள்கிறான். பாதிக்கப்பட்டவன்தான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

“நீ போய்க் குளி தயா. குறிஞ்சிக்கிட்ட உனக்குக் காஃபி குடுத்து விடுறேன்” என்று அவள் சொல்ல, சரியெனத் தலையசைத்தான். இதற்கு மேல் குறிஞ்சி எதுவும் சொல்ல மாட்டாள் என்ற நம்பிக்கையுடன் அவள் நகர, “வா” என்று மனைவியின் கைப் பிடித்தான் தயா.

அவனோடு சேர்ந்து நடந்தாள், “ஆமா, நான் வெளில வரும் போது லக்ஷ்மணன் மச்சா உள்ள ஓடினார்தானே?” என்று அவன் கேட்கவும், அவளின் நடை நிற்க, அவனை நிமிர்ந்து நோக்கினாள்.

அவள் கண்களின் அதிர்ச்சியை, கோபத்தைத் துல்லியமாகக் குறித்துக் கொண்டான் அவன்.

“அவர் இங்க என்ன பண்ணிட்டு இருந்தார் குறிஞ்சி?” அவன் சந்தேகமாகக் கண்களைச் சுருக்கி கேட்க, அவள் கண்கள் அவசரமாக வீட்டுக்குள் பாய்ந்து மீண்டன.

“உன்னதான் கேட்கறேன். பதில் சொல்லாம ஏன் இப்படித் திருட்டு முழி முழிச்சுட்டு இருக்க?”

“அது, அவரு.. அந்த அண்ணா பாத்ரூம் போக வந்திருப்பார் போல”

“அப்போ பூச்சிய பார்த்ததும் பயந்து கத்தாம அவர்கிட்ட சொல்லியிருந்தா அடிச்சுருக்கப் போறார்”

“அது தயா” என்று அவள் தடுமாற, அவன் கண்கள் கூர்மையாகின.

“என்ன நடந்தது குறிஞ்சி?” என்று அதட்டினான்.

“காலையிலேயே எத்தன கேள்வி கேட்கறீங்க? துணி காயப் போடும் போது கை மேல ஏதோ பூச்சி விழுந்துடுச்சு. பயந்து கத்திட்டேன். உங்கள கூப்பிட்டதுதான் தப்பா போச்சு. இப்படிக் கேள்வியா கேட்டு கொல்றீங்க” என்று கோபமாகக் கேட்டுக் கோபித்துக் கொள்வது போல முகத்தைத் திருப்பிக் கொண்டு உள்ளே சென்றாள்.

தயா குழப்பத்துடன் அவளைப் பின் தொடர்ந்தாள். அன்று முழுக்க அவள் முகம் அடிக்கடி யோசனையில் மூழ்க, அதைக் குறித்துக் கொண்டான் அவன்.

அவர்கள் இருவரும் அன்று குறிஞ்சி வீட்டுக்குச் சென்றிருந்தார்கள்.

அங்கே துர்கா, லக்ஷ்மணனுடன் தனியாக இருப்பாள் என்பதே குறிஞ்சிக்கு அதீத நெருடலை தந்தது. மனம் வேறெதிலும் பதியாமல் சண்டித்தனம் செய்தது. இது குறித்துத் துர்காவிடம் பேசாமல் அவள் மனம் அமைதியடையாது. அதற்கான சந்தர்ப்பம் அன்று மாலையே அவளுக்கு வாய்த்தது.

“உங்க ரெண்டு பேரையும் பார்க்கணும்னு ரோஜா ஒரே அடம், அதான் கூட்டிட்டு வந்தேன்” என்று ரோஜாவை அழைத்து வந்தாள். குறிஞ்சி வீட்டுக்கு ரோஜாவே தனியாக வந்திடுவாள்தான். பிள்ளையின் பாதுகாப்புக்காக அப்படிச் செல்ல கூடாது என்று எச்சரித்திருக்கிறார்கள்.

தயாபரனுக்குத் தொழில்தான் தெய்வம். ஒரு நாளை கூடக் கடைக்குச் செல்லாமல் அவனால் கடத்தவே முடியாது. இன்னும் ஒரு வாரத்துக்குக் கடை பக்கமே அவன் வரக் கூடாது என்று பழனியப்பன் மிரட்டியிருக்க, என்ன செய்வதென்று தெரியாமல் மனைவியை வம்பிழுத்து, தொலைக்காட்சி பார்த்து என்று நேரத்தை கடத்தியிருந்தான். இப்போது ரோஜா வரவும் அவளைத் தூக்கி விளையாடத் தொடங்கினான். தனக்குக் கிடைத்த வாய்ப்பை விட விரும்பாமல் துர்காவின் கையை அழுந்த பற்றிப் பின்னால் இழுத்துப் போனாள் குறிஞ்சி.

“கைய விடு குறிஞ்சி” என்று உதறினாள் துர்கா.

“அக்காவும் தம்பியும் என்கிட்ட மட்டும் எகிறுங்க” என்று எகிறினாள்.

“என்னை வேற என்ன பண்ண சொல்ற குறிஞ்சி? அந்தப் பொறுக்கி பின்னாடி வந்து நிப்பான்னு எனக்கு எப்படித் தெரியும்? அதுவும் அந்நேரத்துல? அப்படிப் பார்க்காத குறிஞ்சி. நான் கத்தி கலாட்டா பண்ணி பெரிய பிரச்சனையாக்கி இருக்க முடியும். ஆனா அவன் என்ன சொல்வான்னு யோசிச்சு பாரு? துர்கா கூடப் பேச வந்தேன். அவ கூப்பிட்டான்னு அப்படியே பிளேட்டை மாத்திடுவான். நாங்க நாளைக்குக் கல்யாணம் பண்ணிக்கப் போறோம். நாங்க பேச உரிமையில்லையான்னு கேட்பான்.”

“கேட்டா கேட்கறான், நீ உண்மையைச் சொன்னா நம்ம வீட்ல யாரு உன்னை நம்பாம இருக்கப் போறாங்க? பிரச்னையானா என்ன துர்கா? இந்த மாதிரி பொறுக்கிங்களுக்குப் பணிஷ்மெண்ட் கிடைக்கிறதுதானே முக்கியம்?”

“இல்ல. இப்போ எனக்கு நீயும், தயாவும் நிம்மதியா இருக்கறதுதான் ரொம்ப முக்கியம் குறிஞ்சி. பிளீஸ் புரிஞ்சிக்கோ.”

“இல்ல எனக்குப் புரியல”

“என்ன புரியல? ஏற்கனவே என்னால உனக்கும் அவனுக்கும் ஏகப்பட்ட டென்ஷன். என்னாலதான் நீயும் இந்தக் கல்யாணத்துக்குத் தயங்கின, என்னாலதான் வேணாம்னு சொல்ற அளவுக்குப் போன..”

“ப்ச், அதெல்லாம் அப்போ. அதைக் கடந்து வந்து நாங்க இன்னைக்குக் கல்யாணம் பண்ணியாச்சு. ரொம்பவே சந்தோஷமா. நீயும் சந்தோஷமா இருக்கணும்னு நாங்க நினைக்கும் போது…”

“நானும் அதையே நினைக்க மாட்டேனா குறிஞ்சி? கல்யாணமான மறுநாளே என் தம்பி சட்டையை மடிச்சுட்டு சண்டைக்குப் போகணும்னு சொல்றியா? அதுவும் வீட்ல அத்தனை பேர் இருக்கும் போது.. இங்க நம்ம தெருவில இருக்க ஆளுங்க எல்லாம் வந்து வேடிக்கை பார்ப்பாங்க. சும்மாவே என்னைப் பேசுவாங்க. இன்னும் அசிங்கமா போகும். அம்மாப்பாவால தாங்கிக்க முடியாது. அதைப் பார்த்து அத்தை இன்னும் ஆடும்”

“நீ சொல்ற ரீசன் உனக்கே சரின்னு படுதா துர்கா? நான் பின்னால வந்து கத்தப் போய் அந்த ஆள் விலகி போனான். இல்லன்னா என்ன பண்ணியிருப்பான்னு என்னால நினைச்சு கூடப் பார்க்க முடியல.”

“குறிஞ்சி தப்பா எதுவும் நடந்திருக்காது. என்னால தடுத்திருக்க முடியும்..”

“அதான் பார்த்தேனே” என்று இடையிட்டுக் கோபமாகக் கத்தினாள்.

“குறிஞ்சி.. பிளீஸ் கத்தாத..” என்று கைப் பிடித்தாள். கோபமாக அவள் கையை உதறி, “தப்பு பண்றவன இப்படித்தான் காப்பாத்தி காப்பாத்தி தப்பிக்க விடுற நீ” என்று மனத்தில் இருந்ததைக் கொட்டி விட்டாள். சற்றே பலமான கொட்டுதான்.‌ வலியில் துர்காவின் முகம் சுருங்கி விட்டது. கண்கள் கலங்கின.

“அந்தாள் உன்னைப் பார்க்கறதுக்கே எனக்கு அப்படிக் கோபம் வருது. இதுல அவன் என்னை எப்படிப் பாக்கறான்னு பார்த்ததானே? உன் தம்பி தயா பொண்டாட்டி நான். அவனுக்குத் தங்கச்சி முறை. என்னை முழுங்கற மாதிரி முறைச்சு, என் நடையைக் கூடக் கவனிக்கறான். எனக்கு உடம்பெல்லாம் கூசி போய்டுச்சு”

“சாரி குறிஞ்சி”

“நீயேன் சாரி சொல்ற? அவனைச் சொல்ல வைக்கணும். சாரின்னு அவனுக்கு அவனையே ஃபீல் பண்ண வைக்கணும். இன்னொரு டைம் நம்மகிட்ட இல்ல, வேற யார்கிட்டயும் கை நீட்ட அவனுக்குக் கை போகக் கூடாது” என்றாள் வெறியுடன். உலகத்து அயோக்கிய ஆண்கள் அனைவரின் மேலிருந்த கோபத்தையும் அவன் ஒருவன் மேல் இறக்கி வைத்தாள்.

“என்னையே இப்படிப் பாக்கறவன், நாளைக்கு ரோஜாவை எப்படிப் பார்ப்பான்னு யோசிச்சியா துர்கா?”

“என்ன பேசுற நீ?” சுள்ளென்று அவள் வாயிலேயே அடித்து விட்டாள்.

“நினைச்சாலே நெஞ்சடைக்குது இல்ல? எனக்கும் அப்படித்தான் இருக்கு. ஏற்கனவே அவனைப் பொம்பளை பொறுக்கின்னு தயா அவ்வளவு உறுதியா சொல்றாங்க. அவங்க வேணாம்னு சொல்ல சொல்ல நீ கேட்காம அவனைக் கட்டிக்கச் சம்மதம் சொல்றன்னா உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க நீ? ரோஜாவை பத்தி கொஞ்சமாவது யோசிச்சியா நீ? இந்தப் பொறுக்கி பொறுப்பான அப்பாவா அவளுக்கு இருப்பானா?”

“…”

“அம்மாவ மோசமா நடத்துறவன பார்த்து வளருறவ மனசு எப்படிப் பாதிக்கப்படும்னு நான் சொல்லிதான் உனக்குத் தெரியணுமா?” கோபமும், அழுகையும் கலந்த குரலில் கேட்டாள்.

துர்கா சுவரில் சாய்ந்து கைகள் நடுங்க முகத்தை மூடினாள்.

“ஶ்ரீகாந்த் அண்ணாவ வேணாம்னு சொல்ல, இந்த ஆளுக்கு நீ ஓகே சொல்ற மாதிரி நடிக்கறியா? உன் பிளான் அதுதான்னா, உங்க அத்தை என்ன பிளான் பண்ணியிருப்பாங்கன்னு யோசி. இவ்ளோ தூரம் வந்துட்டு உன்னைச் சும்மா விட்டுருவாங்களா அவங்க..”

“நான் பார்த்துக்கறேன் குறிஞ்சி”

“அப்ப கூடச் சரியான முடிவு எடுக்க மாட்ட இல்ல? முதல்ல உன்னையும் ரோஜாவையும் முதல் இடத்துல வை துர்கா. அதை விட்டுட்டு நம்ம தெரு ஆளுங்க என்ன சொல்லுவாங்க, ஊர்க்காரங்க என்ன சொல்லுவாங்க, உறவுக்காரங்க என்ன சொல்லுவாங்கன்னு பயந்து கவலைப்பட்டா, நாம வாழவே முடியாது” என்றாள் திட்டவட்டமாக.

“இது உன் வாழ்க்கை. உன்னைத் தவிர வேற யாராலும் அதை வாழ முடியாது” என்று முடிவாக முடித்தாள்.

“என்னை விட எவ்ளோ சின்னப் பொண்ணு நீ. உன் வயசுல உனக்கு இருக்கப் பக்குவம் கூட எனக்கு இல்லையே. இப்பவும்..” என்று வருத்தத்துடன் சொன்னாள் துர்கா.

“ப்ச், ரொம்ப முக்கியம்” என்று சலித்து, “உங்க அத்தைகிட்ட நீயே நேரடியா பேசு துர்கா. நீ நேரா நோ சொன்னாதான் அவங்க விடுவாங்க. மாமா, தயா என்ன சொன்னாலும் துர்கா சொல்லட்டும்னு உன்னைக் கைக் காட்டிட்டு இங்கேயேதான் இருப்பாங்க. அவங்க சொல்ற மாதிரி நீ ஒன்னும்.. உனக்கு நல்ல வாழ்க்கை அமையும் துர்கா. உனக்காக, உன்னை நேசிக்கிற ஶ்ரீகாந்த் அண்ணா போல ஒருத்தர் காத்துட்டுருக்கும் போது.. ரோஜாக்கு நல்ல எதிர்காலம் உன் கண்ணுக்கு எதிரேயே இருக்கும் போது, ஏன் போய்ச் சாக்கடையில்தான் விழுவேன்னு அடம் பிடிக்கிற?” என்று அழுத்தமாகக் கேட்டாள். துர்கா மௌனமாக வானை வெறித்து நிற்க, “நான் லூசு மாதிரி பேசிட்டு இருக்கேன். நீ என்னன்னா எனக்கென்னன்னு நிக்கற?” என்று கத்திய குறிஞ்சி, “நீ அந்தப் பொம்பளை பொறுக்கிய.. அதை என் வாயால சொல்ல கூடப் பிடிக்கல. ச்சை, முன்னாடி முடிவு பண்ண மாதிரி ரோஜாவை நாங்க, நானும் தயாவும் வளர்த்துக்கறோம். நீ உன் முடிவுப்படி..” என்னவோ பண்ணிக்கோ என்று அசட்டையாகத் தோள் குலுக்கினாள்.

“அம்மா மாதிரி நீயும் என்னை மிரட்டறியா குறிஞ்சி? கொழுப்பு, திமிரு” என்று கோபமாகப் படபடத்து, “தயா, ரோஜாவை என்கிட்ட இருந்து பிரிக்க மாட்டேன்னு எனக்குப் பிராமிஸ் பண்ணியிருக்கான். அதை என் தம்பி மீற மாட்டான்” என்று அதீத நம்பிக்கையுடன் அடித்துச் சொன்னாள்.

“உன் தம்பி தயாவா? ஹா, குறிஞ்சி ஹஸ்பண்ட் பத்தி நான் பேசறேன். பிராமிஸ்லாம் பொண்டாட்டி பேச்சுக்கு முன்னாடி பெருசா என்ன?” புருவம் உயர்த்தி அலட்டிக் கொள்ளாமல் அவள் கேட்க, கோபத்தில் மூச்சு வாங்க, அவள் தோளில் சுளீரென்று அடித்திருந்தாள் துர்கா. அவளுக்கு அழுகையே வந்து விட்டது.

“நீ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாலும் நான் கரைய மாட்டேன். என்னை என்ன உன் தம்பி மாதிரி, அக்காவ பார்த்ததும் அம்பி வேஷம் போடுற ஆள்னு நினைச்சியா? என் பாசம் எல்லாம் உன் தம்பி போலப் பொங்காது” என்று சொல்லி மீண்டும் அடி வாங்கினாள்.

அந்நேரம், “குறிஞ்சி” என்று தயாபரன் அழைக்க, “நான் சொன்னது சொன்னதுதான் துர்கா” என்று உறுதியாகச் சொல்லி உள்ளே சென்றாள்.

error: Content is protected !!
Scroll to Top