புதுமணத் தம்பதிகள் இருவரும் தங்களுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து ஓடித் திரிந்த வீடுதான் அது. ஆனால் இன்றைக்கு வித்தியாசமாக உணர்ந்தார்கள்.
அறையின் அலங்காரத்தைக் கண்களைச் சுழற்றி கவனித்துக் கொண்டிருந்தாள் குறிஞ்சி. படுக்கையை ஓட்டிய சுவரில் சாய்ந்து மார்பில் கைக் கட்டி அவளையே பார்த்து நின்றிருந்தான் தயா.
இப்போது எலுமிச்சை மஞ்சளில் சிவப்பு கரையிட்ட மைசூர் பட்டில் மயக்கும் மோகினியாக அமர்ந்திருந்தாள் குறிஞ்சி. அவளையே நிதானமாகக் கண்களால் வலம் வந்தான்.
காதில் குடை ஜிமிக்கி, கழுத்தை ஓட்டிய ஆரம் அணிந்திருந்தாள். அதையெல்லாம் விட அவளுக்கு அழகூட்டியது அவள் நெஞ்சில் தழைய தழைய தொங்கிய இன்னும் மஞ்சளின் ஈரம் காயாத மஞ்சள் கயிற்றில் கோர்த்திருந்த திருமாங்கல்யம்.
சேலையைக் கையில் சுற்றுவதும், விடுவதுமாக இருந்தாள். அவளின் பதட்டம் பார்க்க அவனுக்குச் சுவாரசியம் கூடியது.
“பால கொண்டு வந்து கையில கொடுக்கணும். இப்படியா டேபிள்ல வைப்ப?” அறை முழுவதும் அவன் குரல் பட்டு எதிரொலிக்க, “ஆங்” என்று அவனை நிமிர்ந்து நோக்கினாள். அவள் கரம் சேலையை உதற, கண்ணாடி வளையல்கள் குலுங்கி சிணுங்கியது.
“சிணுங்காத குறிஞ்சியாத்தா”
“நான் எப்போ..” என்று ஆரம்பத்தவளின் பேச்சு அவன் அருகில் வரவும் நின்று போக, அவளும் எழுந்து நின்றாள்.
“என்ன எழுந்துட்ட?”
“மரியாத மனசுல இருக்குதான். ஆனாலும்..” என்று அவள் இழுக்க, “நக்கலா நர்ஸம்மா?” என்று நக்கலாகக் கேட்டான்.
அவள் மறுப்பாகத் தலையசைக்க, “இந்தச் சவுண்ட் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது. சோ கழட்டிடலாம்” அவள் கண் பார்த்துச் சொல்லி கைப் பிடித்தான். அவள் மேனி சிலிர்க்க, மூச்சை வேகமாக உள்ளிழுத்தாள்.
“எல்லாமே இன்னைக்கே நடக்கணும்னு இல்ல. நடத்திக்கவும் மாட்டேன், பதறாத”
“ம்ம்ம்ம்”
“என்ன ம்ம்ம்ம்?” அவளைப் போலவே ராகம் இழுத்து, ஒவ்வொரு வளையலாகக் கழற்றினான். அவளின் நேரம் அது இறுக்கமாக இருந்து, இருவரையும் சோதித்தது.
“இப்பதான் சவுண்ட் அதிகமா இருக்கு” என்று அவள் கிசுகிசுக்க, “இல்ல?” என்று அவளைப் போலவே கிசுகிசுத்தான்.
“கைய விடுங்க, நானே..”
“ஏன் நான் செய்யக் கூடாதா? இன்னைக்கு வேற எதுவும் செய்யற ஐடியா இல்ல. அட்லீஸ்ட் இதையாவது செய்யறேன்.” என்றான். உதடுகள் துடிக்க முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“வேற என்னன்னு கேட்க மாட்டியா குறிஞ்சி?” அவளைப் படுக்கையில் அமர்த்தி, அவள் முன் மண்டியிட்டு முகம் பார்த்துக் கேட்டான்.
“நான் கேட்கலன்னாலும் சொல்லாம இருக்கப் போறீங்களா என்ன?”
“சொல்லத்தான் போறேன்” நமுட்டு சிரிப்புடன் சொன்னவன்,
“நமக்குக் கல்யாணமானதால உடனே அடுத்தக் கட்டத்துக்குப் போகணும்னு இல்லதானே? காதல் இல்லன்னா கூட உனக்கு என்னைப் பிடிக்கணும். நமக்குள்ள கொஞ்சம் புரிதல் வரணும். அப்புறம் வர்ற காமம்தான் ருசிக்கும், அர்த்தமுள்ளதா இருக்கும்னு நினைக்கறேன். பசிக்குதுன்னு அவசர அவசரமா அள்ளி விழுங்கறத விட, நின்னு நிதானமா ஆற அமர ரசிச்சு ருசிச்சுச் சாப்பிடுறது அலாதி சுவைதானே?” என்று கரகரத்த குரலில் கேட்டான். வளையல்களை எல்லாம் கழற்றி விட்டான். இப்போது அவன் சுண்டு விரல் கூட அவள் மீது படவில்லை. ஆனாலும் அவள் முகம் சிவந்தது. அவன் பேச்சில் நிகழ்ந்த மாயம். அவளைத் தீண்டாமல் விழியால் சீண்டி தீண்டி மாயம் செய்தான்.
“குறிஞ்சி”
“சினிமா ஹீரோ இல்லைன்னு சொல்லிட்டு, சினிமா டயலாக் பேசுறீங்க?” உதடு சுழித்துச் சொல்லி விட்டாள்.
“ஹாஹாஹா, இப்படியெல்லாம் எந்தப் படத்தில் வருது?”
“ஞாபகம் இல்ல. படத்துல இல்ல, சீரியல்லதானே இப்படி இழுத்தடிப்பாங்க?”
“ஏய், நான் இழுத்தடிக்கறேன்னு சொல்றியா நீ?”
“ஐயோ இல்லையே.”
“ப்ச் மெதுவா பேசு” என்று கண்ணை உருட்டி மிரட்டினான். பதிலுக்கு அவளும் கண்ணை உருட்ட, “கண்ண நோண்டிருவேன்” என்றான். அதில் முன்பு போலக் கோபமோ, மிரட்டலோ இல்லை.
“மௌனராகம்”
“என்ன மௌனராகம்?”
“எந்தப் படத்துல வரும்னு கேட்டீங்களே?”
“ஓ, அடி என் அறிவாளி. மஞ்சம் வந்த தென்றலுக்கா? அப்படிப் புலம்பி சோகமா பாட்டு பாடுற அளவுக்கு நம்ம நிலைமை போகாதுன்னு நம்புவோம்.” என்று எழுந்து கொண்டான். அவள் நிமிர்ந்து நோக்க, “மஞ்சம் இங்க இருந்தாலும் உன் நெஞ்சத்தில் நான் வராம, உன் மஞ்சத்தில் இடம் கேட்க எனக்கு மனசில்லன்னு வச்சுக்கோயேன்” என்றான் அவள் விழிகளுக்குள் ஊடுருவி. அவள் விழிகள் வியப்பில் விரிந்து அவனை விழுங்கின.
“மனசு, மஞ்சம், என் மனையாள் எல்லாம் ஒன்னா சேரணும்.
மனசுல நுழையாம மனையாளோட மஞ்சத்தில் புரள மனமில்லை” அவளையும் அலங்கரித்திருந்த படுக்கையையும் பார்த்துக் கொண்டே சொன்னான்.
“டயலாக் நல்லாருக்கு” தீவிரமாகச் சிரிக்காமல் சொன்னாள்.
அவளின் முழங்கை பற்றி வேகமாக எழுப்பி நிறுத்தியிருந்தான். அந்த வேகத்தில் அவன் மீது மோதி நின்றாள். அவள் கழுத்தில் கரம் உரச, ஆரத்தை கழற்றி ஓரமாக வைத்தான்.
“தயா”
“தயாக்கு உன் தயவு இன்னைக்கு வேணாம் குறிஞ்சியாத்தா.” அவள் தொண்டைக்குழி அவஸ்தையாய் ஏறியிறங்க, அவன் பார்வை அதில் பதிந்தது.
“உனக்கு என்னைப் பிடிக்கும் போது பொறுமையா மொத்தமும் பகிர்ந்துக்கலாம். இப்போ எனக்காக இந்த..” என்று தான் சொல்ல வந்ததை முடிக்கும் முன் அவள் கண்களைக் கூர்ந்தான்.
“இந்த?”
“முத்தம்” என்று அவள் கேள்வியை உதடு உரச முத்தத்தால் முடித்து வைத்தான்.
அவன் இடக்கரம் அவளின் பின்னங்கழுத்தில் படர்ந்து அவள் முகத்தை வாகாக உயர்த்த, வலக்கரம் இடையோடு சேர்த்து இறுக்கி அணைத்தது. தலை முதல் கால் வரை அவளை உணர்ந்து உருகி நின்றான். குறிஞ்சியின் கண்களில் கோபத்திற்குப் பதில் மையல் வெளிப்பட, மென்மையாய் முத்தமிட்டு இதழ்களை இணைத்தான். இருவரின் விழிகளும் விரிந்து மயங்கி கிறங்கி மூடின.
நீண்ட நெடிய முத்தத்திற்குப் பின், அவளை விலக்கி, படுக்கையில் அமர்த்தி, “தூங்கு” என்றான்.
சட்டெனப் புரண்டு படுத்துக் கண் மூடிக் கொண்டாள் குறிஞ்சி.
“என்னால தரையில பாய் போட்டுலாம் படுக்க முடியாது. நடுவுல தலையணையும் வைக்கிற ஐடியா இல்ல. அதுனால தள்ளி படு” என்றான் சீண்டும் குரலில். கண்களைப் பட்டென்று திறந்து அவனை முறைத்தாள். அவளின் விழிகளோடு உறவாடி, நிதானமாகப் படுக்கையில் அமர்ந்து அவளைப் பார்த்தபடியே சாய்ந்து, அவள் புறமாகச் சரிந்து, அவனை முறைத்த விழிகளில் முத்தமிட்டு விலகிப் படுத்தான்.
சற்று நேரத்தில் சீரான மூச்சுடன் ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்திருந்தான். குறிஞ்சி உறக்கத்தில் புரண்டு அவன் மேல் கைப் போட்டுத் தூக்கத்தைத் தொடர்ந்தாள்.
“என்னை விட்டு தள்ளி இருக்கறது கொஞ்சம் கஷ்டம்தான் போலயே?” அதிகாலையில் அவன் குரல் சீண்ட, அவன் மார்பில் அடித்து விலகிப் படுத்தாள்.
“ஆமா, எதுக்கு அலாரம் வச்ச?” அவன் நெறித்த புருவங்களுடன், தூக்கம் சுமந்த கண்களுடன் சந்தேகம் கேட்க, “ம்ம், உங்களை அடிச்சு எழுப்பி விட” என்று உதடு சுழித்துச் சொல்லி விட்டு, படுக்கையில் இருந்து எழுந்து ஓடி குளியல் அறைக்குள் புகுந்துக் கொண்டாள். அவள் குளித்து வெளிவருகையில் தயா மீண்டும் உறங்கிருந்தான்.
குளித்த கையோடு முன்தினம் உடுத்தியிருந்த சேலையைத் துவைத்திருந்தாள். அதைக் காயப் போட வெளியே போனாள்.
நாச்சம்மை எழுந்திருந்தார். வாசல் தெளித்துக் கொண்டிருந்தார். சேலையை உலர்த்தி விட்டுப் போய்க் கோலம் போட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே பின்பக்க விளக்கைப் போடாமல் வெளியே சென்றவள், அவள் கண்ட காட்சியில் அதிர்ந்து நின்றாள்.
அங்கே துர்கா துணி காயப் போட்டுக் கொண்டிருக்க, பின்னால் வல்லூறு போல நின்றிருந்தான் லக்ஷ்மணன். அவன் கரம் துர்காவை நோக்கி நீள, அதிர்ச்சியில், “தயா மாமா” என்று கத்தியிருந்தாள் குறிஞ்சி.