நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 11 (1)

ரோஜா அவ்வளவு நேரமும் ஶ்ரீகாந்த்திடம்தான் இருந்தாள்.

அவனது அம்மா உண்ணாமலையிடமும் ஒட்டிக் கொண்டாள் குழந்தை.

துர்கா மேடையில் இருந்து அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள், கோபமாக. ஆனால் பார்வையில் பிடித்தமின்மை தெரியவில்லை.

உண்ணாமலையின் கையிலிருந்து இறங்கி ரோஜா கீழே நிற்கவும் துர்காவும் கீழிறங்கி அவர்களிடம் வந்தாள். மகளின் கைப் பிடித்து அப்படியே ஓரமாக ஒதுங்கி நின்றாள்.

அவளிடம், “மேடைக்குப் போங்க” என்று மூன்று முறைக்கும் மேலாகக் கண் காட்டினான் ஶ்ரீகாந்த். அவளோ அசைவதாக இல்லை. அவனுக்குத்தான் கோபம் வந்து தொலைத்தது. விறுவிறுவென்று அவளை நெருங்கினான்.

“எதுக்கு இப்படித் தனியா வந்து நின்னுட்டு இருக்கீங்க?”

“…”

“துர்கா” அவன் அழுத்தம் கூட்டி அழைக்க, விருட்டென்று விலகப் போனவளின் முழங்கையைப் பற்றி நிறுத்தினான்.

“என்ன பண்றீங்க ஶ்ரீகாந்த்?”

“நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க துர்கா?”

“உங்க ப்ரெண்ட் கல்யாணத்த பாக்க வந்தா, அதைப் பாக்குற வேலையை மட்டும் பாருங்க” என்றாள் கடுமையாக.

“அந்த வேலையைத் தாங்க பாக்கறேன். என் ஃப்ரெண்ட் கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னு நான் நினைக்க மாட்டேனா? உங்களைப் போலவே?”

“…”

“அடுத்தவனுக்காக நாம வாழ முடியாது. நமக்காக மட்டும்தான் நாம வாழணும். ஏன்னா நாமளே நினைச்சாலும் நம்ம வாழ்க்கையை வேறொருத்தர் வாழ முடியாது. அதுனால..”

“அதுனால? இப்போ என்ன சொல்ல வர்றீங்க நீங்க?”

“இது உங்க தம்பி கல்யாணம் துர்கா. உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச குறிஞ்சி கல்யாணம். இன்னைக்கு விட்டா இன்னொருக்கா வரவே வராத தருணம் இது. எவனோ என்னமோ பேசுவான்னு நீங்க ஒதுங்கி வந்தா காலத்துக்கும் உங்க தம்பி கல்யாணத்துல ஒதுங்கி நின்ன வருத்தம்தான் உங்களுக்கு மிஞ்சும். நான் சொல்லாமலே இதெல்லாம் உங்களுக்குத் தெரியும். பிளீஸ் மேடைக்குப் போங்க” என்றான். துர்கா அப்போதும் அப்படியே அசையாமல் நிற்க, “இப்படியே சாந்தமா பேசிட்டே இருப்பேன்னு நினைக்காதீங்க” என்று அவன் சொல்லவும், படக்கென்று திரும்பி அவனை முறைத்தாள்.

“இப்போ என்ன உங்களுக்குப் பிரச்னை? உங்க கழுத்துல தாலி இல்லாததுதானே?” என்று அவன் கேட்க, கோபத்தில் அதிர்ந்து விரிந்தன அவள் விழிகள்.

“தயா சிரிச்ச முகத்தோட அவன் கையில தாலி எடுக்கணும்னா, அதுக்கு உங்க கழுத்துல தாலி தொங்கணும்னு நீங்க நினைச்சா, அதுக்காக ரொம்பச் சந்தோஷமா என் கையில தாலி எடுக்க இந்தச் செகண்ட்டே நான் ரெடிங்க” என்றான் அவள் கண்களைக் கூர்ந்து.

“உளறாதீங்க”

“நான் ரொம்பச் சீரியஸா சொல்றேன் துர்கா. மூனு வருஷமா உங்கள நேசிச்சு உங்களுக்காகக் காத்துட்டு இருக்க எனக்கு முடிவெடுக்க மூனு நிமிஷம் கூடத் தேவையில்லை. இந்த மண்டபத்துல ஒரு மஞ்சக்கயிரு ரெடி பண்றது பெரிய விஷயம் இல்ல. என் அம்மாப்பாவும் இங்கதான் இருக்காங்க. ரொம்பச் சந்தோஷமா எனக்குப் பிடிச்சவளை, எனக்குச் சொந்தமாக்கிப்பேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்று அத்தனை நிதானமாகக் கேட்டான். அவன் குரல் கடத்திய உணர்வும் அவன் கண்கள் சொன்ன செய்தியும், அவன் எதையும் செய்யத் துணிவான் என ஊர்ஜிதம் செய்தது.

“மேடைக்குப் போய் உங்க தம்பி பக்கத்துல இருங்க துர்கா. நீங்க அப்படிப் போகலன்னா பக்கத்திலேயே நமக்கொரு மணவறை போட்டு உங்களை உக்கார வச்சுடுவேன். எப்படி வசதி?” என்று கேட்டபடியே ரோஜாவை தூக்கினான். குழந்தை எந்தவித கவலையுமின்றிக் கண்களைச் சுழற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

துர்கா வெடுக்கென்று ரோஜாவை அவனிடம் இருந்து பறித்துக் கொண்டு வேகமாக மேடையேறினாள்.

“இங்கேயே குறிஞ்சி பக்கத்துலயே நில்லு துர்கா” என்று சொல்லி விட்டு, நாச்சம்மை கீழிறங்கி சென்றார்.

ரோஜா, தயா, குறிஞ்சி என மாறி மாறி சென்று போரடித்து அப்படியே ஓரமாகத் தூணில் பூக்களுடன் அலங்காரத்திற்காகக் கட்டியிருந்த பலூன் அவளின் கவனத்தை ஈர்க்கவும் அதைத் தொட்டு தொட்டு விளையாடத் தொடங்கினாள்.

துர்கா மகளைக் கவனித்தாள். ஶ்ரீகாந்த் அவர்கள் இருவரையும் கவனித்தான். எல்லாம் சில நிமிடங்கள்தான்.

துர்காவிற்கு ஏதோ வேலை சொன்னார் கற்பகம். ஶ்ரீகாந்த்திற்குத் தெரிந்த குடும்பம் வர அவர்களிடம் பேசி விட்டு அவன் திரும்ப, மேடையில் அம்மா, மகள் இருவரையும் காணவில்லை.

அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அவன். ஏதேனும் வேலையாகச் சென்றிருப்பாள், குழந்தைக்கு ஏதாவது கொடுக்கச் சென்றிருப்பாள் என்று மேடையைப் பார்த்திருந்தான் அவளது வருகையை எதிர்பார்த்து.

அவளைக் காணோம் என்று அவளது குடும்பமும் பரபரப்பாகத் தேடவும்தான் பதறினான். மற்றவர் போலில்லாமல் முதலில் அறைப் பக்கம் ஓடினான். அப்போது அவனது ஓரப் பார்வையில் மண்டப வாசல் விழ, பச்சை சேலை அவனது பார்வையில் விழுந்தது.

துர்கா பச்சை பட்டுதானே அணிந்திருந்தாள் என்று வேகமாக அங்கு ஓடினான். தான் பேசியதில்தான் கோபித்துக் கொண்டாளோ என்று படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது அவன் மனம்.

ஏற்கெனவே அவளை மதுரை பேருந்து நிலையத்தில் அநாதரவாகப் பார்த்த நினைவு வந்து நெஞ்சத்தை அறுத்தது.

அவனது ஓட்டத்தைப் பார்த்து மேடையில் நின்றிருந்த பழனியப்பனும் இறங்கி வந்தார்.

தயா, குறிஞ்சியின் உதடுகள் மந்திரத்தை உச்சரித்தாலும் கண்கள் துர்காவையே தேடிக் கொண்டிருந்தன.

ஶ்ரீகாந்த் மண்டப வாயிலை நெருங்கியிருந்தான். அங்கே இப்போதைய கல்யாண வீட்டு வழக்கம் போலப் பாப்கார்ன், பஞ்சு மிட்டாய், ஐஸ்கிரீம் எனக் கடை விரித்திருந்தார்கள்.

வாசலை ஒட்டியே பச்சை சேலை தென்பட, “துர்கா” என்று சத்தமாக அழைத்தான் ஶ்ரீகாந்த். அது துர்காதான். அவளேதான். எந்தப் பக்கமிருந்து பார்த்தாலும் அவளை அவனால் அடையாளம் காண முடியும்.

அவனது அழைப்பில் அவசரமாகத் திரும்பிய துர்காவின் கண்கள் கலங்கியிருந்தன.

“ஶ்ரீக்கா” என்றாள், உதடசைத்து.

“துர்கா, ரோஜா எங்க? ஏன் கண்ணு கலங்கியிருக்கு?” என்று கேட்டபடியே ஒரே எட்டில் அவளை நெருங்கினான்.

அங்கே, “அம்மாகிட்ட போகணும்” என்று உதடு பிதுக்கி அழுது கொண்டிருந்தாள் ரோஜா. லக்ஷ்மணன் குழந்தையை ஒற்றைக் கையில் இறுக்கமாக அணைத்துப் பிடித்திருந்தான். ரோஜாவின் கையில் ஐஸ்கிரீம் இருக்க, “ஐஸ்கிரீம் சாப்பிட்டு முடி. அம்மாகிட்ட போலாம்” என்று அவளிடம் மிரட்டலாகச் சொல்லிக் கொண்டிருந்தான் அவன்.

“அவள எங்கிட்ட குடுங்க” என்று மகளை வாங்க துர்கா கை நீட்ட, லக்ஷ்மணனின் பிடி இறுகியது.

அதைக் கண்டதும் இமைக்கும் கணத்தில் ரோஜாவை அவனிடம் இருந்து அனாயசமாக அலுங்காமல் தூக்கி துர்காவிடம் கொடுத்திருந்தான் ஶ்ரீகாந்த். துர்கா மகளை அணைத்து அமர, மறுநொடி லக்ஷ்மணனை பளாரென்று ஓங்கி அறைந்திருந்தான் அவன்.

“டேய், நீ யாருடா என்னைய அடிக்க?” என்று அவன் எகிறிக் கொண்டு ஶ்ரீகாந்தை அடிக்க வர, “லக்ஷ்மணன்” என்று அவனை ஒரே அதட்டலில் அடக்கினார் பழனியப்பன்.

“குழந்தையை மிரட்டினா கொஞ்சுவாங்களா” என்று அவனிடம் காட்டமாகக் கேட்டு,

“ரோஜாக்கு ஒன்னுமில்லையே” துர்காவின் கைப் பிடித்து எழுப்பி ஶ்ரீகாந்த் கேட்க, “ம்ஹூம்” என்றாள் கண்ணீருடன். அனிச்சையாக அவன் கரம் நீண்டு அவள் கண்ணீரை துடைத்தது.

இப்போது அழுகை நின்று, “ஶ்ரீக்கா” என்று கத்திய ரோஜா, “ஐஸ்கிரீம்” என்று கைக் காட்டினாள்.

உடனடியாக அதை வாங்கித் தந்திருந்தான் அவன். குழந்தை அம்மாவின் தோளில் சாய்ந்து அதை உண்ண, “உங்களைத் தேடுறாங்க. உள்ள போலாம்” என்றான் ஶ்ரீகாந்த்.

“என்ன மாமா அவன் என்னைய அடிக்கிறத பார்த்திட்டு அவனை ஒன்னும் சொல்லாம என்னை அதட்டறீங்க? நானும் உங்க பேத்திக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் குடுக்கதானே வெளில தூக்கிட்டு வந்தேன்.” என்று லக்ஷ்மணன் கோபமாகக் கேட்க, “குழந்தையைத் திருடன் மாதிரி தூக்கிட்டு வரக் கூடாது. என்கிட்ட சொல்லிட்டு தூக்கிட்டு வந்திருக்கணும் நீங்க” என்று துர்கா அவன் முன்னே வந்து சொல்ல, ஶ்ரீகாந்த் அவளைப் பின்னே இழுத்தான்.

“நாளைக்கு நான்தான் குழந்தைக்கு அப்பா. அப்பவும் உன்கிட்ட சொல்லிட்டுதான் வெளில தூக்கிட்டு போகணுமா?”

“இன்னைக்கு நீங்க செஞ்சது தப்பு. அவ்ளோதான். உள்ள நடங்க முகூர்த்தத்துக்கு நேரமாச்சு.” என்ற பழனியப்பன், மகளிடம் இருந்து பேத்தியை வாங்கிக் கொண்டார்.

“குழந்தை ஆசையா ஐஸ்கிரீம் கேட்டான்னு தூக்கிட்டு வந்தா..” என்ற அவனின் விளக்கத்தைக் கேட்க அவர்கள் அங்கே நிற்கவில்லை.

பலூன் பார்த்துக் கொண்டிருந்த ரோஜாவையே பார்த்துக் கொண்டிருந்தான் லக்ஷ்மணன்.

“கன்னுக்குட்டிய ஓட்டிட்டுப் போனோம்னா தாய் பசுத் தானா பின்னாடியே வரப் போகுது. நீ அவளை விட்டுட்டு அந்தக் குட்டிய கவனிடா” என்று அம்மா சொன்னது அவன் நினைவில் வர, ரோஜாவை நெருங்கி ஒரு பலூனை எடுத்துக் கொடுத்தான். அப்படியே அவளிடமே நின்று அடுத்து ஐஸ்கிரீம் ஆசைக் காட்டினான். முதலில் தலையசைத்தவள் பின்னர், “வேணாம். நா வல்ல” என்று விட்டாள். பின்னே தெரியாதவர்களிடம் போகக் கூடாதென்று அம்மா, மாமா, குறிஞ்சி அத்தை என அனைவரும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்களே.

error: Content is protected !!
Scroll to Top