நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 10 (2)

அப்பாவின் பக்கத்தில் சென்று நின்று அந்தக் கூட்டத்தில் இருந்த அனைவரையும் பார்வையால் வலம் வந்தான்.

லக்ஷ்மணன் ஓரமாக நின்று துர்காவையே முழுங்குவது போலப் பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது தயா குறிஞ்சி வரவும், அவன் பார்வை அவர்களின் மேல் படிய, தயாவின் கூர்பார்வையில் சட்டெனக் கண்களைத் தழைத்துக் கொண்டான்.

ரோஜா இப்போதும் ஶ்ரீகாந்த்திடம்தான் இருந்தாள். குறிஞ்சி கண் காட்டி அழைக்க, அப்போதும் அவன் தோளில் இருந்து இறங்கவில்லை அவள்.

அவனிடம் ஏதோ கேள்வி கேட்டு, அவன் சொன்ன பதிலில் பால் பற்கள் தெரிய புன்னகைத்து கொண்டிருந்தாள்.

“வாப்பா தயா. துர்காக்கும் லக்ஷ்மணனுக்கும் இன்னைக்கு நம்ம சொந்த பந்தம் எல்லாரும் இருக்கையிலேயே நிச்சயத்த வச்சடலாம்னு அத்தை சொல்றேன். உங்கப்பா என்னத்தையோ யோசிச்சுட்டு தயங்கிட்டு நிக்கறான். நீ வந்து சொல்லுப்பா, அத்த இந்தா ஒரே மணி நேரத்துல நிச்சயத்துக்கு ரெடி பண்ணிடுறேன்” என்றார் கற்பகம். தம்பி தயங்கவும் தம்பியின் மகனைப் பிடித்தார்.

தயாபரன், அப்பா சொல் பேச்சு தப்பாத பிள்ளை, ஆக அமைதியாக நின்றான்.

இரண்டு நாள்களுக்கு முன்னே வீடு வந்து விட்டார் கற்பகம். வந்த நாளில் இருந்து அவரது அராஜகம் தாங்க முடியவில்லை. இன்று மண்டபத்திலும் அவரின் குரலே ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.

“வீட்டுக்கு மூத்தவ நானு. நான்தான் எல்லாம் எடுத்து செய்யணும்” என்று அனைத்திற்கும் முன்னே வந்து நின்றார். மேலும், “பொண்ணு பக்கமும் செய்ய யாரும் இல்லல்ல.” என்று அவ்வப்போது அலமேலுவை மறைமுகமாக மட்டம் தட்ட மறக்கவில்லை அவர்.

“நானென்ன அக்கா மட்டுமா? நாளைக்கு நான் என் தம்பிக்குச் சம்மந்தியாகப் போறேன்ல” என்று பெருமை பேசிக் கொண்டு, “நீயெல்லாம் எனக்கு ஈடா?” என அலமேலுவை பார்வையாலேயே பரிகாசம் செய்தார்.

“பொண்ணுக்கு எவ்ளோ நகை போடுறீங்க? சீர் சாமான் எல்லாம் மண்டபத்துக்கு வந்தாச்சா? சாமான் பரப்பும் போது பார்த்தா தெரிய போகுது பவுசு” என்று கேள்வியும் அவரே கேட்டு, பதிலும் அவரே சொல்லிக் கொண்டு சுற்றினார்.

அலமேலு அடிப்படையில் சாது. அதனால் அமைதியாக நேர்மையான பதிலை சொல்லி, மேலே பேச்சை வளர்க்காமல் பார்த்துக் கொண்டார்.

அவர் அம்மாவை நடத்தும் விதம் கண்டு குறிஞ்சி கொந்தளிக்க, “விடு பாப்பா, பேசிட்டு போறாங்க. அவங்க சொல்றதால நாம குறைஞ்சு போயிட போறோமா? இப்படிப் பேச்சு அவங்களதான் குறைச்சு காட்டும். நீயும் அவங்க அளவுக்கு இறங்காத, வா” என்று கட்டுப்படுத்தி இழுத்துக் கொண்டார்.

எல்லாமே இல்லையென்றாலும் நடப்பது தயாவின் கண்ணிலும் படத்தான் செய்தது. அதில் அவனுக்கு மிகுந்த எரிச்சல். இப்பொழுதும் அந்த எரிச்சல் குறையாமல் அத்தை குடும்பத்தைப் பார்த்தான்.

“என்னப்பா தயா பேசாம நிக்கற? உங்கக்கா வாழ்க்கையை யோசிச்சி நீயாவது..” என்றவரை, “அத்த” என்றழைத்து நிறுத்தினான்.

“அப்பா” என்று பழனியப்பனிடம் அவன் திரும்ப, “நான் ஒருத்தி இங்க கத்திட்டு இருக்கது உங்க யார் கண்ணுக்கும் தெரியலையா?” என்று ஆத்திரத்துடன் கேட்டார் கற்பகம்.

“என்ன சித்தப்பா, நீங்களும் பேசாம பார்த்திட்டு நிக்கறீங்க? துர்காக்கு நல்லபடியா கல்யாணம் நடக்கணும்னுதானே தயா கல்யாணத்தை இப்படி அவசர அவசரமா முன்னால வச்சது? இப்போ அவன் கல்யாணத்துக்கு முன்னாடி துர்கா நிச்சயம் முடிஞ்சா அவனும் நாளைக்கு நிம்மதியா தாலி கட்டுவான் இல்ல?” என்று கற்பகம் கேட்க, அங்கிருந்த பெரியவர்களுக்கு அவர் பேச்சு நியாயமாகப்பட்டது.

லக்ஷ்மணின் குணக்கேட்டுக்கு முன், துர்காவின் கடந்த காலம் ஒழுக்கத் தராசில் வைக்கப்பட, அவர்கள் பார்வையில் இரண்டும் சமமாக நின்று விட்டது. இங்கே பெண்ணின் ஒழுக்கம் மட்டுமே பார்க்கப்படும். ஆண் எப்படியிருந்தாலும் பெண் அவனைச் சரி செய்ய வேண்டும். அதற்குத்தானே அவனுக்குக் கல்யாணம் எனும் கால் கட்டு போடுகிறார்கள். அதிலும் இங்கே பெண் பக்கம் தவறிருக்கும் போது, அவர்களின் நியாயமே அநியாயமாகத்தானே இருக்கும்.

“எப்ப பழனி, உங்கக்கா சொல்ற மாதிரி இப்பவே மக நிச்சயத்த முடிச்சுட்டு நீயும் நிம்மதியா நாளைக்கு மகன் கல்யாணத்தைக் கவனிப்பா. ஊரும் உறவும் இருக்கும் போது என்னத்துக்கு நல்ல காரியத்தைத் தள்ளி போட்டுட்டு” என்று பெரியவராகச் சித்தப்பா எடுத்துச் சொல்ல, “ரெண்டு நாளா எங்களோட வீட்லயே இருந்துட்டு ஒன்னும் சொல்லாம, இப்ப திடீர்னு வந்து இப்படிக் கேட்டா நாங்க என்ன செய்யறது?” என்று ஆதங்கத்துடன் கேட்டார் நாச்சம்மை.

“இப்படி ஆளாளுக்குப் பேசிட்டே போனா காரியம் ஆகாதும்மா.” பெரியவர் கண்டிப்புடன் சொல்ல, “எனக்கு இந்த எண்ணமே இங்க வந்துதான் வந்துச்சு நாச்சியா” என்று சமாளித்தார் கற்பகம்.

அப்பாவை அர்த்தமாகப் பார்த்து விட்டு, “அத்த” என்று தயா அழைக்க, “நானும் என் பையனும் பெரிய மனசு பண்ணி இவங்க பொண்ணுக்கு வாழ்க்கை குடுக்கறோம்னு நிக்கறோம். இவங்களுக்கு எங்க அருமை தெரியுதா பாருங்க, தட்டு மாத்தவே இப்படி யோசிக்கிறாங்க” என்று பக்கத்தில் நின்றவரிடம் கற்பகம் சொன்னது தயாபரன் காதில் துல்லியமாக விழுந்தது.

பட்டென்று அவன் பார்வை அக்காவின் மேல் படிந்தது. துர்கா தளும்பி தேங்கிய கண்களுடன் நின்றிருந்தாள். அங்கு நடந்த அத்தனையும் அவள் பொருட்டுதான். ஆனால் எதற்கும் மறுப்புச் சொல்லாமல் மௌனமாக நின்றிருந்தாள் அவள். அதுதான் கற்பகத்திற்கு அவ்வளவு தைரியத்தையும் துணிச்சலையும் கொடுத்தது.

அக்காவின் அந்த அமைதி தயாவுக்கு ஆத்திரத்தை அளித்தது. எத்தனை முறை எடுத்துச் சொன்னான். ஆனாலும் இப்படி எனக்கென்ன வந்தது என்று யாரின் வாழ்க்கையைப் பற்றியோ பேசுகிறார்கள் என்பது போல அவள் நின்றாள் எப்படி?

ஶ்ரீகாந்த்தின் பார்வையும் துர்காவை விட்டு விலகவில்லை. அவனது பெற்றோர் அவனுடன்தான் இருந்தார்கள். அவர்களை மீறி எதுவும் செய்ய அவனால் முடியாது.

“மச்சான்” என்ற இறைஞ்சுதலுடன் தயாவை பார்த்து நின்றான் அவன்.

“நான் பார்த்துக்கறேன்” என்று பார்வையால் பதில் சொன்னான் தயா.

அப்பொழுது, “ஆமா, அதுவும் நாலு வயசு பொம்பளை பிள்ளையோட இருக்கவள மருமகளா ஏத்துக்கற, உனக்குப் பெரிய மனசுதான்” என்று கற்பகத்தின் பக்கத்தில் நின்றவர் சொல்லவும், தயா நொடியில் இறுகினான்.

ஆத்திரம் தொண்டையைக் கவ்வி பிடித்துக் கொள்ள நெஞ்சுக்குள் உணர்வலைகள் பொங்கி பொங்கி அடங்கின. யாரின் கவனத்தையும் ஈர்க்காமல் மெதுவாக அவனை நெருங்கி நின்றாள் குறிஞ்சி. அவன் கையை மடக்கி இறுக்கமாக வைத்திருக்க, சேலையால் மூடி அவன் கைப் பிடித்தாள். அவன் கையை மெலிதாக பற்றி இறுக மூடியிருந்த விரல்களைப் பிரித்து விட்டு, உள்ளங்கையில் தன் விரல் கொண்டு மென்மையாய் அழுத்தம் கொடுத்தாள்.

மறுகணம் மெல்லத் தளர்ந்தான் அவன். குறிஞ்சியின் கரமும் விலகியது.

“அப்பா” என்றான் குரலை உயர்த்தி. மறுநொடி சட்டெனச் சபையில் இருந்த சலசலப்பு அடங்கியது.

பழனியப்பன், “அக்கா, தயா கல்யாணம் முடியட்டும். நாம நாளைக்குப் பேசிக்கலாம்” என்றார் கற்பகத்திடம்.

“தயா கல்யாணமே துர்காக்காகதானே” என்று அவர் கேட்க, “சும்மா திரும்பத் திரும்ப இதையே சொல்லாதீங்க அத்த. ஒரு தடவ சொன்னா உங்களுக்குப் புரியாதா? அப்பாதான் நாளைக்குப் பேசிக்கலாம்னு‌‍ சொல்றார் இல்ல?” என்று தயா கேட்கவும், அந்த இடமே அமைதியானது.

“ஐயா, நீங்க சாப்பிட்டீங்களா? போய்ப் படுங்க. அத்தைக்கிட்ட நான் பேசிக்கறேன்” என்று பொறுப்பாகப் பெரியவரிடம் பேசி அனுப்பினான்.

அங்கிருந்த கூட்டம் கலையவும் கற்பகத்தின் முகம் கோபமானது.

“ஏன்டி உனக்காக நான் பேசினா, நீ எனக்கென்னானு‌ நிக்கற?” என்று கோபமாகத் துர்காவின் மேல் பாய்ந்தார்.

“அக்கா” பழனியப்பன் கடுமையாக அழைக்க, “இன்னொரு முறை அக்காகிட்ட இப்படிப் பேசினீங்கன்னா நான் பார்த்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டேன்த்த” என்று நேரடியாக எச்சரித்து விட்டான் தயா.

அப்பாவின் எச்சரிக்கையை மீறி அவரிடமே, “அத்தைக்கிட்ட முடியாதுன்னு நீங்க இப்பவே சொல்லிடுறது நல்லதுப்பா” என்றும் தீர்க்கமாகச் சொல்லி விட்டான்.

அவன் சொன்னதைக் கேட்டு நாச்சம்மை நிம்மதி பெருமூச்சு விட்டார்.

“என்ன முடியாதுன்னு சொல்ல சொல்றான்?” கற்பகம் கத்த, அவர் குடும்பத்தையே அங்கிருந்து நகர்த்திச் சென்றிருந்தார் பழனியப்பன்.

“அதெப்படி முடியாதுன்னு சொல்லுவா? பேச்சு மாறாத தம்பி” என்று ஆரம்பித்து, “நீ என்னைய மதிக்கல. இதுக்கு மேல நான் எதுக்கு இங்க இருக்கணும்? நான் இப்பவே வீட்டுக்கு போறேன்” என்று குதித்தார்.

“இல்ல, நீயி வேற எதையோ மனசுல வச்சுட்டு வேணாம்னு சொல்ற. நீ சொன்னா மாதிரி முதல்ல தயா கல்யாணம் முடியட்டும். அப்புறம் நாம நிச்சயத்த வச்சுப்போம்” என்று அவர் முடிக்க, பழனியப்பனுக்கு அப்படியே நெற்றியில் ஓங்கி அறைந்து கொள்ள வேண்டும் போலிருந்தது.

சிறிது நேரம் புலம்பிக் கொண்டே சுற்றிய கற்பகம், சொந்தங்கள் சமாதானம் செய்யவும் சரியாகி விட்டார். எதுவுமே நடக்காதது போலச் சாப்பிட்டு, படுக்கவும் சென்று விட்டார்.

தயா, குறிஞ்சியும் மகிழ்வான மனநிலை மாறி தீவிர சிந்தனையில் சிக்கியிருந்தார்கள்.

ஶ்ரீகாந்த் பெற்றோருடன் கிளம்பும் முன் ரோஜாவை கொடுக்க, குறிஞ்சியிடம் வந்தான்.

“பட்டு ரோஜா சாப்பிட்டாச்சு. அதனால நீங்க அவங்க அம்மாவை கவனிங்க குறிஞ்சி” என்றான்.

“நா சாப்ட்டேன். ஶ்ரீக்கா ஊட்டி விட்டா” என்று ரோஜா இரட்டை ஜடை ஆட தலையாட்டி சொல்ல, ஶ்ரீகாந்த்தின் கண்கள் துர்காவை கூர்ந்தன.

“ஒரே ஒரு டைம் நீங்க என்னைத் திரும்பி பார்த்திருந்தா, நான் தைரியமா இன்னைக்கு நம்ம நிச்சயத்த நடத்தி காட்டியிருப்பேங்க. ஆனா, என்னைத் தவிர எல்லாரையும் பார்க்கறீங்க நீங்க. என்னைத் திரும்பி கூடப் பார்க்காத பொண்ணைக் கட்டிக்க விரும்பறேன் நான் சொன்னா எப்படிங்க எங்கம்மாப்பா சம்மதிப்பாங்க? என்னை வேணாம்னு சொல்ல, வீணா உங்க வாழ்க்கையைப் பணயம் வைக்காதீங்க.” என்று துர்காவின் கண் பார்த்து சொன்னவன், கணத்தில் அங்கிருந்து சென்றிருந்தான்.

பெற்றோருடன் மண்டப வாயிலை நோக்கி நடந்தான்.

“அந்தப் பொண்ணுங்ககிட்ட என்னடா பேசின? எதுவும் பிரச்சினையா?” என்று அவன் அம்மா கேட்கவும், “பிரச்சினைதான்ம்மா. நீ நினைச்சா சரி பண்ணலாம்” என்றான் அர்த்தத்துடன்.

“நானா?” அவர் அதிர்ச்சியுடன் கேட்க, “நீதான்ம்மா. நேரம் வரும் போது சொல்றேன்” என்றான் புன்னகைத்து. மகன் கேலி செய்கிறான் என நினைத்து அவரும் சிரிப்புடன் அவனோடு நடந்தார். ஆனால் அப்பா ஒரு நொடிக்கும் அதிகமாக மகனை சந்தேகமாக நோக்கி விட்டே காரில் ஏறினார்.

கத்திரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும் எனக் காய்கறி மண்டி வைத்திருப்பவருக்குத் தெரியாதா என்ன?

மண்டபத்தின் உள்ளே, “உங்க அத்தையையும், அக்காவையும் நான் பார்த்துக்கறேன். நீ கவலைப்படாம போய்ப் படுப்பா தயா” என்று மகனின் தோளில் தட்டினார் பழனியப்பன்.

அவருக்குத் தலையாட்டினாலும் அக்காவிடம் பேசாமல் அவன் மனம் அமைதியடையாது.

“மொட்டை மாடிக்கு அக்காவ கூட்டிட்டு வா குறிஞ்சி” என்று குறிஞ்சியின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பினான்.

அங்கே அலமேலு, நாச்சியம்மை இருவரும் வளைத்துப் பிடித்துத் துர்காவுக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார்கள். ரோஜா உறங்கியிருந்தாள். ஒரு நொடி என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசைந்தவள், “அத்த தயா என்னை மாடிக்கு வர சொன்னார்” என்று சத்தமாகச் சொல்லி விட்டாள்.

“என்னது?” என்று அதிர்ச்சியாகி அதற்கும் ஒரு பாடம் எடுத்து துர்காவை அவளுக்குத் துணையாக அனுப்பி வைத்தார்கள்.

“என்னால உங்க கல்யாணத்துல எவ்ளோ பிரச்சினை குறிஞ்சி? உங்களுக்கு நிம்மதியே இல்லாம பண்ணிட்டேன் நான். நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணியிருந்தா..” என்று துர்கா சொல்லி முடிக்கும் முன் கடுப்புடன், “ஷ்ஷ்ஷ்‍” என்று வாயில் விரல் வைத்து, “பைத்தியம் மாதிரி பேசாத துர்கா” என்று எச்சரித்தாள் குறிஞ்சி.

“ரொம்ப ஃபீல் பண்ணாத. என்னைக்கு இருந்தாலும் அந்த வேதாளம் இந்த முருங்கை மரத்தில்தான் ஏறும்” என்று தன்னைத்தானே சுட்டி அவள் சொல்ல, “என் தம்பியை வேதாளம்னா சொல்ற?” சுளீரென்று அவள் தோளில் அடித்தாள் துர்கா. ஆவென்று கத்தி அவள் திரும்ப, அவள் குறிப்பிட்ட வேதாளமான தயாபரன் பட்டு வேட்டி சட்டையில் தன் முழு உயரத்துக்கும் நிமிர்ந்து, அருவாள் பிடிக்காத அய்யனாராக அங்கே நின்றிருந்தான்.

அவன் பார்வையில் மிரண்டு, “ஐயோ அது வந்து, நான் உங்களை வேதாளம்னு சொல்லல. என்னைதான் முருங்கை மரம்னு சொன்னேன்” என்று சாமாளிக்க முயன்றவள், சட்டென ஒரு தோள் குலுக்களுடன் அதைக் கை விட்டு, “உண்மையைச் சொன்னேன்” என்றாள். உண்மையில் அதைக் கேட்டு அவன் இதமாகத்தான் உணர்ந்தான்.

அவள் சொன்னதில் இருந்த நிஜம் நெஞ்சை தொட்டது. அவன் நேசத்தை அவளும் உணர்ந்திருப்பது அறிந்து நெஞ்சம் நிறைய அர்த்தமாய்ப் புன்னகைத்தான். அவளுக்கு அவன் மேல் நேசம் இல்லாவிட்டால் என்ன? அவன் நேசத்தை உணர்ந்திருக்கிறாளே. தற்போதைக்கு அதுவே போதுமானதுதானே? திருமணத்திற்குப் பிறகு பெரும்பான்மையாகத் தம்பதிகளைப் போல அவள் நெஞ்சத்தை நேசத்தால் நிறைத்திடுவான் என்ற எண்ணம் அவன் அகத்தில் தெளிவை தர, அது அவன் முகத்திலும் பிரதிபலித்தது.

“ஓ, என்ன முறைக்காம நிக்கறான்? அப்போ எம் மேல கோபம் இல்லையா?” என்று குறிஞ்சி முணுமுணுக்க, அவளை விடுத்து அக்காவிடம் சென்றான் தயா.

“பாசமலர் கிட்ட பேச கூப்பிட்டு இருக்கார் போல. ஹ்ம்ம், உன்கிட்ட பேச இல்ல குறிஞ்சி” என்று அவள் சொல்ல, அக்காவுக்குத் தெரியாமல் அவளை உரசி சென்றான்.

அவன் துர்காவின் முன் நின்று அவளை நிமிர்ந்து நோக்க, “சாரி தயா” என்று மனதார உணர்ந்து சொன்னாள் அவள். அவன் பேசும் முன், “உனக்குப் பிடிக்காத எதையும், என்னைக்கும் நான் சத்தியமா செய்ய மாட்டேன்டா. போதுமா?” என்று அழுத்தமாகக் கேட்டாள். அதற்கு மறுப்பாகத் தலையசைத்து, “உனக்குப் பிடிக்காதத யாருக்காகவும் செய்யாதக்கா” என்றான் தீவிரமாக.

“சரி, செய்யல. பிராமிஸ். ஓகே? இப்போ நீ ரூமுக்குப் போய்ப் பேசாம படுத்து நல்லா தூங்கு. இல்லனா காலையில உன் முகம் தெளிவா இருக்காது. சும்மாவே இவ நம்மள வேதாள கூட்டம்னு சொல்றா. இதுல நீ கண்ணுல கருவளையத்தோட வந்தா..” என்று அவள் சொல்லும் போதே இடையிட்டு, “ஷ்ஷ் போதும் போதும். சென்சார் போடு” என்று குறிஞ்சி கிண்டலாகச் சொல்ல, “அடிப்பாவி, நீ கிண்டல் பண்ண போறேன்னுதான் நான் சொல்ல வந்தேன்” என்று பல்லை கடித்துத் தம்பியின் முகம் பார்க்காமல் சொன்னவள், “நீயும் வா தயா” என்று தம்பியை இழுத்துக் கொண்டு கீழிறங்கினாள்.

“இது உன் வாழ்க்கைக்குமான முடிவு துர்கா, பிளீஸ் தப்பான முடிவு எடுக்காத. உன்னய கெஞ்சிக் கேட்டுக்கறேன்” என்று குறிஞ்சி கெஞ்சும் குரலில் சொல்ல, துர்கா மென்மையாக, “ம்ம்ம்ம்” கொட்டினாள்.

மணமகன் அறைக்குச் செல்ல திரும்பிய தயாவின் கண்கள் சட்டெனத் திரும்பி குறிஞ்சியை நோக்கின. இம்முறை அந்தக் கண்கள் வெளிப்படுத்திய உணர்வு புரியாமல் அவள் குழம்ப, இருவருக்கும் லேசான தலையசைப்பை தந்து, அவர்கள் அறைக்குள்ளே செல்லும் வரைக்கும் அங்கேயே நின்று அதன் பின்னே அவனும் உறங்கச் சென்றான்.

மறுநாள் விடியல் அத்தனை அழகாக இருந்தது. அங்கிருந்த அனைவரும் பரபரப்புடன் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.

அந்த அதிகாலை வேலையிலும் மண்டபம் மக்களால் நிறைந்து காணப்பட்டது.

தயாபரன், குறிஞ்சி இருவரும் தயாராகி மணமேடைக்கு வந்து விட்டார்கள். குறிஞ்சியின் கூடவே இருந்தாள் துர்கா.

பெரியவர்கள் ஓரிடத்தில் நிற்க நேரமில்லாமல் வந்தவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

கற்பகம், கந்தசாமி கூட முந்தைய இரவின் நிகழ்வுகளை மறந்து மேடையின் ஓரத்தில் நின்றிருந்தார்கள்.

ரோஜா சிவப்பு நிற பட்டுப் பாவாடை சட்டையில் கைக் கால் முளைத்த குட்டி தேவதையாக வலம் வந்து கொண்டிருந்தாள். மேடையில் அத்தை மாமாவை விட்டு நகரவில்லை அவள்.

அப்பொழுது ஶ்ரீகாந்த் வரவும் அவனிடம் சென்றாள். அவர்களை நிமிர்ந்து நோக்கிய குறிஞ்சி புன்னகையுடன் மந்திரங்கள் சொல்லத் தொடங்கினாள்.

முகூர்த்த நேரம் நெருங்க, “துர்கா எங்க காணோம்? இவ்வளவு நேரம் இங்கேதானே இருந்தா?” என்று கண்களை மண்டபம் முழுவதும் சூழல விட்டு, அவளைக் காணாமல் அதிர்ச்சியுடன் கேட்டார் நாச்சம்மை. பட்டென்று அனைவர் பார்வையிலும் பரபரப்பு பற்றிக் கொண்டது.

“நான் பாக்கறேன்” என்று கீழிறங்கினார் அலமேலு. அங்கிருந்த கூட்டத்தில் அவள் இல்லை. உணவு உண்ணும் கூடத்திலும் அவள் இல்லை.

ஶ்ரீகாந்த், “என்னாச்சு?” என்று பார்வையில் கேட்டு அவனும் அமைதியாக அந்தத் தேடலில் இணைந்தான்.

தயா, குறிஞ்சி தவிப்புடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“ரோஜா எங்க?” குறிஞ்சி கேட்க, தயாபரன் விலுக்கென்று எழுவும், “உக்காருப்பா, பாதியில எந்திரிக்கக் கூடாது” என்று எச்சரித்து அவனை அமர வைத்தார் நாச்சம்மை.

ஶ்ரீகாந்த் அவசரமாக அறைகளின் பக்கம் ஓடினான்.

error: Content is protected !!
Scroll to Top