நாள்கள் நொடிகளாய் நகர்ந்திருந்தன. அந்தத் திருமண மண்டபம் உறவுகளால் நிறைந்திருந்தது.
இரவில் இருளின் தடயமே இல்லாமல் செய்திருந்தது மண்டபத்தை அலங்கரித்திருந்த மின்விளக்குகள். திரும்பிய பக்கமெல்லாம் பொன்னாய் மின்னியது. பட்டும், பொன் நகையும் புன்னகையுமாகப் பெண்கள் வலம் வந்ததைக் காணவே கொள்ளை அழகாக இருந்தது.
அன்று மாமன் விருந்து. மறுநாள் அதிகாலை முகூர்த்தத்தில் திருமணம். ஆகையால், இப்போதே அனைத்து முன்னேற்பாடுகளுடன் மண்டபத்துக்கு வந்து விட்டிருந்தனர் மணமக்கள் குடும்பத்தினர். மிகவும் நெருங்கிய உணர்வினர்கள், நண்பர்கள் மட்டுமே விருந்துக்கு வந்திருந்தார்கள்.
தயாபரனின் தாய் மாமன் முன்னின்று விருந்தை கவனிக்க, குறிஞ்சிக்கு தாய் மாமனாக நின்றார் பழனியப்பன். அவளுக்காக அனைத்தையும் அவரே செய்தார்.
மணமக்கள் இருவருக்கும் உறவினர்கள் நலுங்கு வைத்து, மெட்டி போடும் சடங்கும் முடிந்திருந்தது.
தயாபரனுக்கு முறைப்படி துர்கா மெட்டி அணிவிக்க, குறிஞ்சிக்கு மாமன் மனைவி அணிவிக்க வேண்டும் என்ற முறைக்கு, சடங்குக்காகக் கூட வேறு யாரையும் அனுமதிக்காமல், “நம்ம குறிஞ்சிக்கு நானே போட்டு விடறேன். எப்படிப் பார்த்தாலும் நான் அவளுக்கு மாமன் பொண்டாட்டிதானே” என்று நாச்சம்மையே முன் வந்து தன் நாளைய மருமகளுக்கு இன்றே மெட்டி அணிவித்து விட்டார்.
அவ்வளவு நேரம் இருந்த பரபரப்பு விலகிட ஆழ்ந்த மூச்செடுத்து நின்றாள் குறிஞ்சி.
“ரோஜா, குறிஞ்சி அத்த கூடவே இருக்கணும். அத்தையை விட்டு எங்கேயும் போகக் கூடாது. ஓகே?” என்று ரோஜாவிடம் சொல்லியிருந்தான் தயா.
“ஆமா, குறிஞ்சிக்கு தனியா இருக்கப் பயம் பாருங்க” என்று குறிஞ்சி கோபமாக முணுமுணுக்க, “பார்த்தியா அத்தைக்குத் தனியா இருக்கப் பயமா இருக்காம். அதுனால அத்தை கூடவே அவங்களுக்குத் துணையா இருக்கணும். ஓகே ரோஜா குட்டி?” என்று ரோஜாவை கையில் அள்ளி கொஞ்சி அவன் கேட்க, “ஓகே மாமா” என்றாள் சமர்த்தாக. மாமனிடம் சொன்னது போல அவ்வளவு நேரமும் அத்தையை விட்டு நகரவில்லை அவள்.
இப்போது அவள் கையைச் சுரண்டி, “குறிஞ்சி, எனக்கு ஐஸ்கிரீம் வேணும்” என்று உதடு பிதுக்கினாள்.
“பசிக்குதா ரோஜா?” குறிஞ்சி கேட்க, “ம்ம்ம்” என்று முகம் சுருக்கினாள். உடனே குறிஞ்சி திரும்பி துர்காவை முறைக்கவும், “ஆமா என்னைய முறை. இவ்ளோ நேரமும் நானும் உன் கூடதானே இருந்தேன். உன்னய பார்ப்பேனா இல்ல இவள பார்ப்பேனா?” என்று பதிலுக்கு முறைத்துக் கேட்டாள்.
அந்நேரம் அங்கு வந்த நாச்சம்மை, “சாப்பிட போலாமா?” என்று கேட்டார்.
“நீங்க ரோஜாக்கு சாப்பிட குடுங்கத்த. நான் ரூம் வரைக்கும் போயிட்டு வர்றேன்” என்றாள் குறிஞ்சி.
“ம்ம், ஒரு பத்து நிமிஷம் ரெஸ்ட் எடு. அப்புறம் நான் வந்து சாப்பிட கூப்பிட்டு போறேன். இல்லனா ஆள் அனுப்பறேன்” என்று சொல்லி நாச்சம்மை செல்லவும், சரியெனத் தலையசைத்தாள்.
அவர்கள் மணமக்கள் அறைக்குச் செல்கையில், ஶ்ரீகாந்த் குடும்பத்துடன் உள்ளே வருவது தெரிந்தது.
“ஶ்ரீகாந்த் அண்ணா..” குறிஞ்சி சொல்ல, “ரெஸ்ட் ரூம் போகணும்னுதானே சொன்ன? நேரா பார்த்து நட” என்று அவளை அதட்டினாள் துர்கா.
ஶ்ரீகாந்த் குடும்பத்துடன் அவர்களுக்குப் பல வருடங்களாகத் தொழில்முறை பழக்கம், அவர்களைக் கண்டதும் விரைந்து சென்று வரவேற்றார் நாச்சம்மை.
ஶ்ரீகாந்த் புன்னகைத்து ரோஜாவை தூக்கிக் கொண்டான்.
“ஶ்ரீக்கா” என்று அவன் தோளில் தொங்கினாள் குழந்தை.
“வாங்க, சாப்பிட போலாம்” என்று நாச்சம்மை அழைக்க, ஶ்ரீகாந்த் பெற்றோர் மலர்ந்து புன்னகைத்தார்கள்.
அதைக் கண்ட குறிஞ்சி, “ம்ம்” எனத் துர்காவைப் பார்த்துப் புருவங்களை உயர்த்தி விட்டு அறையை நோக்கி நடந்தாள். அவளுக்கு எதிரே மணமகன் அறைக்குச் செல்ல தயாபரன் வந்தான்.
இருவரையும் மாறி மாறிப் பார்த்த துர்கா, குறிஞ்சி தடுக்கும் முன், “நா போய் ரோஜாவை பாக்கறேன்” என்று அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.
தயாவின் நடை நிற்க, குறிஞ்சியைப் பார்த்தது பார்த்தபடி நின்றிருந்தான்.
எடுத்ததும், “என்ன பார்வ?” என்று எகிறினாள்.
“என் ப்ராப்பர்ட்டி நான் பார்க்கறேன், உனக்கென்ன?” அவன் அசட்டையாகச் சொல்ல பல்லைக் கடித்தாள். அவன் கண்கள் நிதானமாக அவளை ரசித்தன.
கத்திரி பூ நிற பட்டுப் பாந்தமாக அவள் மேனியை தழுவியிருந்தது. நீண்ட பின்னலை நிறைந்திருந்தன மல்லிகைச் சரங்கள், காதோர கற்றைக் குழல் பின்னலில் அடங்காமல் அவள் கழுத்தோரம் காற்றோடு இசைந்து, காதணியோடு சேர்ந்தாடியது. நெற்றி, மூக்கின் நுனி, உதட்டின் மேல் பகுதி என முகம் முழுக்க முத்து முத்தாக வியர்வை துளிகள் மின்னின. நெற்றி முழுக்க நலுங்கின் போது வைத்து விடப்பட்ட திருநீறு, குங்குமம் வண்ண தீற்றாலாய் காட்சி தந்தது. வியர்வையில் நனைந்து குங்குமம் வழிய போக, அதைத் துடைக்கக் கையை உயர்த்தினாள்.
பொன்னிற கண்ணாடி வளையோசையில் கண் மூடித் திறந்தவன், பட்டென அவள் கைப் பிடித்துத் தடுத்து, அவளின் மூக்கு நுனியில் வழிந்த குங்குமத்தை தன் கைக் குட்டையால் துடைத்து விட்டான். இப்போது அவளின் மூக்கு நுனியில் கோபம் வந்து நிற்க, அவள் பார்வை அவனைப் பஸ்பமாக்க விழைந்தது. அவளுடைய அந்தக் கோபமும், சுட்டெரிக்கும் பார்வையும் குளுகுளுவென்றிருந்தது அவனுக்கு.
அத்தனை நெருக்கத்தில் நின்றவளுக்கு அவனது கண்ணில் மின்னிய சிரிப்பை கண்டுகொள்ள முடியாதா என்ன?
“எதுக்குச் சிரிக்கறீங்க?”
“நாளைக்கு விடிஞ்சா நமக்குக் கல்யாணம். இன்னமும் என்னை இப்படி முறைச்சுட்டே இருக்காம பொறுப்பா நடந்துக்கோ” என்றான் அடிக்குரலில்.
“எப்படி ரெண்டு நாளைக்கு முன்னாடி நீங்க பொறுப்பா நடந்துக்கிட்ட மாதிரியா?” என்று நக்கலாகக் கேட்டாள்.
“அதெப்படி அதெப்படி? நீங்களே எனக்காக வேலைக்குச் சொல்லி வைப்பீங்களாம். ஆனா அந்த வேலைக்கான இன்டர்வியூக்கு நான் போகணும்னு சொன்னா முதல் ஆளா வேணாம்னு சொல்வீங்களாம். என்ன லாஜிக் இது? அப்ப எதுக்காக எனக்கு வேலைக்குச் சொல்லி வச்சீங்க?”
“பட்டாச முழுங்கிட்டியா குறிஞ்சி? எப்ப பாரு யோசிக்காம படப்படன்னு வெடிக்கிறது. உனக்கு வேலைக்குச் சொன்னேன்தான். அதுக்காக? கல்யாணம் முடிஞ்சி நாளைக்கே வேலைக்குப் போகப் போறியா நீ?” அவள் முகத்துக்கு நேராகக் குனிந்து அவன் கேட்க, சட்டென இரண்டெட்டு பின்னே வைத்தாள்.
“ரெண்டு நாள்ல கல்யாணத்த வச்சுட்டு யாராவது பொண்ணை வெளில அனுப்புவாங்களா? நீயே சொல்லு? பெரியவங்க வேணாம்னு சொல்றதுக்கு முன்னாடி நான் சொல்லிட்டேன். அம்மா போகாதன்னு சொல்லியிருந்தா நீ ஃபீல் பண்ணியிருப்ப” என்றான். அவன் சொல்வதில் இருந்த நியாயம் புரிந்தாலும், முகம் திருப்பினாள்.
“ஏய் குறிஞ்சியாத்தா”
“நீங்க மட்டும் வெளில போனீங்க? உங்களை யாரும் ஒன்னும் சொல்லலதானே?”
“ஏய் நான் கடைக்குப் போனேன்டி.”
“கடைக்குப் போறவர் அப்படியே என்னைய ஹாஸ்பிட்டலுக்கும் கூட்டிட்டு போய் இருக்கலாம்”
“லூசு மாதிரி பேசாத குறிஞ்சி” என்று அவள் தோளில் அவன் கைப் போட போகையில், மண்டபத்தில் உரத்து ஒலித்த குரல்கள் இருவரின் கவனத்தையும் ஈர்த்தது.
தயாவின் அத்தை கற்பகம் முன்னே நிற்க, அவருக்குப் பின்னே உறவினர் கூட்டம் நின்றிருந்தது.
பழனியப்பன், நாச்சம்மை அவர்களுக்கு முன்னே நின்றிருந்தார்கள். அவர்களுடன் துர்காவும் நின்றிருந்தாள்.
“அப்புறம் என்னப்பா பழனி, உங்கக்கா கற்பகம் சொல்றதும் சரிதானே? சொந்த பந்தம் அத்தினி பேரும் சபையில இருக்கோம். இப்பயே உன் மக துர்காக்கும், உங்கக்கா மகன் லட்சுமணனுக்கும் நிச்சயத்தை முடிச்சுடலாம். நீயென்ன சொல்ற?” என்று கேட்டார் பழனியப்பனின் சித்தப்பா.
“அதில்ல சித்தப்பா” என்று பழனியப்பன் ஆரம்பிக்க, அவரைப் பேச விடாமல், “பேச்சு மாறாத தம்பி. துர்காவ என் பையனுக்குக் கொடுக்கறேன்னு நீதானே சொன்ன? இப்போ நான் நிச்சயத்த வச்சுக்கலாம்னா ஏன் தயங்குற?” என்று காட்டமாகக் கேட்டார் கற்பகம்.
“அக்கா, அததுக்கு நாள் கிழமைன்னு பாக்க வேணாமா? பிள்ளைங்க விருப்பத்தைக் கேக்க வேணாமா?”
“நாள் பாக்காமயா நாளைக்குத் தயா கல்யாணத்தை வச்சிருக்கு? அதென்ன பிள்ளைங்க விருப்பம்? எல்லா நம்ம சொன்னா சரின்னு கேட்டுப்பாங்க. நாங்க என்ன வெளி ஆளா? துர்கா நான் பார்க்க வளர்ந்த பொண்ணு. உங்கக்கா நானு அவளை நல்லா பார்த்துக்க மாட்டேனா?” என்று அடித்துக் கேட்டார் கற்பகம்.
“அதானேப்பா. உங்கக்கா கற்பகம் வீட்ல பொண்ணைக் குடுக்க உனக்கென்ன பிரச்சினை? எல்லாம் ஏற்கனவே பேசி வச்சதுதானே?” என்று அவர்களின் சித்தப்பா கேட்க, பழனியப்பன் மறுக்கக் கூடச் சந்தர்ப்பம் கொடுக்கவில்லை கற்பகம்.
“பிரச்னைலாம் ஒன்னுமில்ல சித்தப்பா. நான் போய்த் தட்டு, வரிசை சாமான் வாங்கிட்டு வர்றேன். இப்பவே நீங்க எல்லோரும் இருக்கும் போதே நிச்சயத்த வச்சுப்போம்” என்று பரபரத்தார் கற்பகம்.
அவர் பக்கத்தில் நின்ற கணவர் கந்தசாமிக்குக் கண் காட்ட, “ஆமா பஜார்ல கடைங்கலாம் தொறந்துதான் இருக்கும். நீங்க சரின்னு சொல்லுங்க, இந்தா அரை மணி நேரத்தில போய்த் தேவையான எல்லாத்தையும் வாங்கிட்டு வந்துடுறோம்” என்றார்.
நாச்சம்மை நெஞ்சில் கை வைக்காத குறைதான். அலமேலு அவர் பக்கத்தில் வந்து நிற்க, “என்னைய சொல்லணும். நான்தான் சும்மா இல்லாம இவங்கள உள்ள இழுத்து விட்டேன். துர்கா கல்யாணத்த மட்டுமே யோசிச்சுட்டேன். என் பொண்ணு நல்லா இருக்கணும், நல்லவன் கூட இருக்கணும்னு பெத்த தாய் எனக்கு எப்படித் தோனாம போச்சு? இந்தப் பய இன்னைக்கு நம்ம முன்னாடியே சின்னது பெருசுன்னு இல்லாம அத்தனை பொம்பளைங்களையும் அப்படிப் பாக்கறான். இவன்லாம் திருந்தற ஆளா? இவனுக்குத் துர்காவ கட்டி கொடுக்கணும்னு நினைச்சாலே என்னமோ நம்ம பொண்ணைக் கழிச்சு கட்டி விடுறது போலருக்கு எனக்கு ” என்று அலமேலுவிடம் புலம்பினார் நாச்சம்மை.
“அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது அத்தாச்சி. அண்ணே பார்த்துப்பார். நீங்க கவலைப்படாம நில்லுங்க” என்று அவருக்கு ஆறுதல் சொன்னார் அலமேலு.
அந்நேரம் அங்கு வந்து நின்றான் தயாபரன். பட்டு வேட்டியை வேகமாக மடித்துக் கட்டினான். அவன் கையில் இருந்த காப்பை மேலேற்றி விட்டான்.
அவன் விரைந்து வந்த வேகமும் அவனது உடல் மொழியும் குறிஞ்சியை மிரட்டின.