நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 1 (2)

அலமேலு வெளியே வரவும், “குறிஞ்சி இன்னும் சென்னையில இருந்து கிளம்பலதானே அத்த?” என்று நேரிடையாகக் கேட்டான். அவரின் பதிலுக்காகக் காத்திருக்காமல், “நான் போய் அவள கூட்டிட்டு வர்றேன்” என்றான். அவரால் மறுக்க முடியவில்லை. மகளின் நடவடிக்கை அவரை மௌனியாக்கியிருந்தது. மறுகணம் வேகமாக வந்து வண்டியை ஆக்கிரமித்தான்.

வீட்டின் பக்கவாட்டில் நின்றிருந்த பழனியப்பன், “தயா என்னப்பா” என்று அவசரமாக அவனிடம் வந்தார்.

“நான் சென்னை வரைக்கும் போயிட்டு வர்றேன்ப்பா” என்று அவன் சொல்ல, அவன் வண்டிச் சத்தம் கேட்டு அங்கு வந்த நாச்சம்மை, “சென்னைக்குப் போறியா தயா? இப்போதான் முகூர்த்தக்கால் நட்டுருக்கு. இப்போ போய் வெளியூர் பயணம் போறேன்னு சொல்ற. இதுக்கப்புறம் எங்கேயும் போகக் கூடாதுய்யா நீ” அவர் கவலையுடன் சொல்ல, திரும்பி அப்பாவை பார்த்தான்.

“அம்மா சொல்றது சரிதான்ப்பா தயா. நாலு நாள்ல கல்யாணம் வச்சிருக்கு, இப்போ போய் நீ அவ்ளோ தூரம் போறது மனசுக்கு நெருடலா…” என்று அவர் சொல்லி முடிக்கவில்லை, “நாலு நாள் கழிச்சி எனக்கு நல்லபடியா கல்யாணம் நடக்கணும்னா ‍பொண்ணு இங்க இருக்கணும் இல்லப்பா?” என்று அடிக்குரலில் கேட்டான்.

“என்னப்பா சொல்ற? குறிஞ்சி..” என்று சந்தேகமாகக் கேட்ட அவன் பெற்றோர் ஒன்று போலத் திரும்பி குறிஞ்சி வீட்டை பார்த்தார்கள்.

“அவளுக்கு ஏதோ வேலையாம், நான் போய்க் கூட்டிட்டு வர்றேன்” என்றான். அவனை நம்பாத பார்வை பார்த்தார்கள் அவன் பெற்றோர்.

“என் ஃப்ரெண்ட் ஶ்ரீகாந்த் காரை வாங்கிட்டு போறேன். பத்திரமா போயிட்டு வந்துடுவேன். நீங்க பயந்து பதறாம இருங்க. நான் குறிஞ்சியோட காலையில இங்கருப்பேன்” என்று உறுதியாகச் சொன்னான்.

“அது கார்ல போறியாப்பா? அவ்ளோ தூரம் நீயே ஓடிட்டுப் போவியா தயா?” அம்மா கவலையுடன் கேட்க, நெற்றியை நீவி கொண்டான்.

“நீ பேசாம இரு நாச்சியா. அதெல்லாம் தயா பத்திரமா போயிட்டு வந்திடுவான்” என்ற பழனியப்பன், மகனுக்குப் பத்திரம் சொல்லி அனுப்பினார். அவனிருந்த மனநிலையில் அக்காவிடம் சொல்லிக் கொள்ளத் தோன்றவில்லை. அப்படியே கிளம்பி விட்டான்.

ஒரு மணி நேரத்தில் சென்னை நோக்கி விரைந்து கொண்டிருந்தான். காரின் கண்ணாடி இறக்கி விடப்பட்டிருக்கக் காற்று கண்டபடி வீசி அவனைக் கலைக்க முயற்சித்தது. அவனிடம் அப்படியொரு இறுக்கம். அனிச்சையாய் அவன் கை ஆறாம் விரலைத் தேடியது. ஒரு சிகரெட்டை தேடி எடுத்து பற்ற வைத்ததும்தான் அவனது மனஇறுக்கம் தளர்ந்தது. மிகுந்த நிதானமான வேகத்துடன் காரை செலுத்தினான். இடையில் உணவுக்காகக் கூட எங்கேயும் காரை நிறுத்தவில்லை அவன். அதனால் மாலை ஆறு மணியை நெருங்கும் போது சென்னையை அடைந்திருந்தான்.

குறிஞ்சி, வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கும் விடுதியில் தங்கியிருக்கிறாள். ஓரிரு முறை அவளைக் காண அவன் வந்திருக்கிறான். இப்போது நேராக அங்குச் சென்று, அவளுக்காகக் கூடத்தில் காத்திருந்தான்.

“குறிஞ்சி உனக்குக் கார் வந்தாச்சு, டிரைவர் வெயிட்டிங் ஹால்ல வெயிட் பண்றாங்க” என்று ஒரு குரல் கத்தி விட்டு செல்ல, அதுவரை அறைக்குள் பதற்றமாக நடைப் பயிற்சி மேற்கொண்டிருந்த குறிஞ்சி சட்டென நடையை நிறுத்தினாள்.

அவளின் கட்டில் முழுக்கப் பெட்டிகள் அடுக்கப்பட்டிருந்தன. எல்லாவற்றையும் ஏற்கெனவே தயாராக எடுத்து வைத்திருந்தாள். அவளும் எப்போதோ தயாராகி மஞ்சள் நிற சுடிதாரில் நின்றிருந்தாள்.

“அப்பாடா” ஒரு பெருமூச்சுடன் இரண்டு கைகளிலும் பெட்டியை தூக்கிக் கொண்டு அவள் கீழிறங்க, அங்கே பார்வையாளர் காத்திருப்பு கூடத்து இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தவனைக் கண்டு அதிர்ச்சியில் பெட்டியை தவற விட்டிருந்தாள்.

தயாபரன் நிதானமாக எழுந்து அவளிடம் வந்தான். அவள் தவற விட்ட பெட்டிகளைக் கையில் எடுத்தான்.

“போலாமா குறிஞ்சி?” அந்தக் குரல் அவளை எச்சில் விழுங்க வைத்தது. அவள் விழிகள் அதிர்ச்சியில் குத்திட்டு நின்றன.

பட்டு வேட்டி சட்டை அணிந்து நெற்றியில் காலையில் வைத்த சந்தனம் கூடக் கலையாமல் வந்து நிற்பவனைக் காண்கையில் தொண்டைக்குள் பயப்பந்து உருண்டது.

“குறிஞ்சி, புதுப் பிஜி போறேன்னு சொன்னல்ல? உனக்குக் கார் வந்துடுச்சா? லக்கேஜ் எடுத்து வைக்க ஹெல்ப் பண்ணவா?” பக்கத்து அறைத் தோழி அந்நேரம் பார்த்து அங்கு வந்து உதவி செய்கிறேன் என்று நிற்க, அவளுக்குப் பேச்சே வரவில்லை.

“எஸ் சிஸ்டர். குறிஞ்சியால அவ்ளோ வெயிட் தூக்க முடியாது. நானும் உள்ள வரக் கூடாது. நீங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன் பிளீஸ்” என்று தயாபரன் கேட்ட விதத்தில், மேலும் இரண்டு பெண்களை அழைத்து அவர்களுக்கு உதவினாள் அந்தப் பெண்.

“குறிஞ்சி வந்து கார்ல ஏறு” அவனைப் பின் தொடர்வதைத் தவிர அவளுக்கு வேறு வழி இருக்கவில்லை. அவள் முகமே கடினமாக இருக்க, அவனும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. தான் வந்த காரியத்தில் மட்டுமே கண்ணாக இருந்தான். அவளின் உடைமைகளைக் காரில் ஏற்றி விட்டு, “எல்லாம் சரியா இருக்கானு வந்து செக் பண்ணிக்கோ” என்றான்.

“சரியா இல்லனா என்ன பண்ண போறீங்க?” கோபத்துடன் கேட்டு விட்டாள்.

அவன் முகம் சட்டெனத் தீவிர பாவத்தைத் துடைத்தெறிந்தது. உதடுகள் லேசாக வளைய, “சரியா இல்லனா, மிஸ்ஸானதப் போய்த் தேடி எடுத்திட்டு வர சொல்லுவேன் உன் பிரெண்ட்டை. இப்போ உன்னைத் தேடி நான் வந்தது போல” என்று கடைசி வரியில் அழுத்தம் கொடுத்துச் சொன்னான். பட்டெனக் காரில் ஏறி அமர்ந்தாள். ஓட்டுநர் இருக்கையை அவனும் ஆக்கிரமிக்க, குறிஞ்சி இருமத் தொடங்கினாள்.

“என்ன?”

“கண்ணாடியை இறக்குங்க, ஒரே சிகரெட் ஸ்மெல்.” என்று மூக்கை ஒரு கரத்தால் மூடி படபடத்தாள்.

“எனக்குப் பிடிக்காதுன்னு தெரியாதா?” என்று அவள் கேட்க, “உனக்குப் பிடிக்கலன்னு நீ சொன்னியா?” என்று அவளின் கண் பார்த்துக் கேட்டான். அந்தக் கேள்வி நிச்சயமாக அவனது புகைப் பிடிக்கும் பழக்கத்தைப் பற்றியதல்ல என்பது அவளுக்கு விளங்கிட, வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

மெதுவாக இருமிக் கொண்டே, “கண்ணாடியை இறக்குங்க, என்னால இந்த ஸ்மெல்ல தாங்க முடியாது. நான் கார்ல ஏறுறதுக்கு முன்னாடியாவது ஏதாவது செஞ்சு இந்த ஸ்மெல்ல போக வச்சுருக்கலாம் இல்ல” என்றாள் கோபமாக.

“எதும் செய்ற ஐடியா இல்ல. இப்போதைக்கு எதுவும் நடக்காதுன்னு தெரியும். அப்புறம் நான் ஏன் ரெடியா வரப் போறேன்” என்று அவன் கடுப்பாகச் சொல்ல, என்ன சொல்கிறான் இவன் என்று அவனை அதிர்ச்சியுடன் நோக்கினாள் அவள். தயா அதற்கு மேல் நேரத்தை வீணடிக்காமல் காரை வேகமாக நகர்த்தினான்.

“வீட்டுக்கு கால் பண்ணி நாம வந்துட்டே இருக்கோம்னு சொல்லு குறிஞ்சி” என்றான். அதற்கு எதிர்வினை ஆற்றாமல் அமைதியாகக் கைகட்டி வெளியே வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

“குறிஞ்சி” எரிச்சலுடன் அழைத்தான். அப்போதும் அவள் அசையவில்லை.

“உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க?” கோபமாக அவன் கேட்க, அப்பொழுது அவனது கைப்பேசி அழைத்தது. பழனியப்பன் அழைத்திருந்தார்.

“குறிஞ்சிய கூட்டிட்டு இப்போதான்ப்பா கிளம்பினேன். நாங்க வர காலையில ஆகிடும்” என்றான்.

மறுநொடி, “என்னப்பா சொல்றீங்க? என்ன? அக்காவ காணோமா? ஜாக்கெட் வாங்கிட்டு வர்றேன்னு டெய்லர் கடைக்குப் போனவ இன்னும் வீட்டுக்கு வரலையா?” படபடவென்று பதற்றத்துடன் கேள்விகளை அடுக்கினான்.

“ரோஜா எங்க? அக்கா அவளையும் தூக்கிட்டுதான் போனாளா?” என்று கேட்டான். அதற்கு ஆமென்ற பதில் வரவும், “நான் என்ன பண்றதுன்னு பார்க்கறேன்ப்பா. நீங்க பயப்படாம இருங்க” என்று அவன் பேசிக் கொண்டிருக்க, குறிஞ்சி அவனைப் பயத்துடன் பார்த்திருந்தாள்.

தயா காரை ஓரமாக நிறுத்தி விட்டான். கண்களை மூடி ஆழ்ந்த மூச்செடுத்தவன், சட்டெனக் கண்களைத் திறந்து, “கல்யாண பொண்ணு மணமேடைக்கு வரலன்னா கையைக் கட்டிட்டு வேடிக்கை பார்த்துட்டு நிப்பேன்னு நினைச்சியா குறிஞ்சி?” என்று சிவந்த விழிகளுடன் அவளை நோக்கி வினவினான். அவள் பார்வையில் இறுக்கம். அதை ஆராயும் நிலையில் அவனில்லை.

“குறிச்ச தேதியில எனக்குக் குறிச்ச பொண்ணு குறிஞ்சியோட என் கல்யாணம் நடந்தாகணும், புரிஞ்சுதா?” அவன் கேட்க, மீண்டும் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவன் கரம் அவளை நோக்கி நீள, இருக்கையோடு ஒன்றினாள். சட்டெனக் கையைப் பின்னிழுத்து காரை இயக்கினான். அவனது கோபம் காரின் வேகத்தில் வெளிப்பட்டது.

error: Content is protected !!
Scroll to Top