நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 9 (2)

ஶ்ரீகாந்த் தன் மகளைப் பொறுப்பாகப் பார்த்துக் கொள்வானா? ரோஜாவை தன் மகளாக ஏற்றுக் கொள்வானா? அதைவிட முக்கியமாக அவன் குடும்பம் இதற்குச் சம்மதிக்குமா? என்றுதான் அவரும் சிந்தித்தார். அது குறித்தே மகனிடமும் பேசினார்.

“தயா, இது துர்கா வாழ்க்கைப்பா. நாம நம்ம இஷ்டத்துக்கு எடுத்தோம் கவுத்தோம்னு‌‍ எதுவும் செய்யக் கூடாது. அவ முடிவு இதுல ரொம்ப முக்கியம். நாம நிதானமா யோசிச்சு அவகிட்ட பேசிட்டு அப்புறமா ஒரு முடிவுக்கு வருவோம், சரியா?” என்று கேட்டார்.

“சரிதான்ப்பா. ஆனா அத்தை வீடு வந்தாங்கன்னா அவங்க வேற ஆரம்பிப்பாங்களே”

“அவங்கள நான் பார்த்துக்கறேன். உங்க அத்தைகிட்ட நான் பேசிக்கறேன். நீ கவலப்படாத”

“சரிப்பா” என்று யோசனையுடன் அவன் சொல்ல, “அதான் அவசரம் இல்லைனு ஶ்ரீகாந்த் சொல்லிட்டார்னு சொல்றியேப்பா தயா. அப்புறம் எதுக்கு இவ்ளோ யோசிக்கிற? என்னையும் உன்னையும் மீறி எதுவும் நடக்காது” என்று வேகமாக உத்திரவாதம் தந்தவர் குரலில் வேதனையின் அப்பட்ட சாயல் இருந்தது.

நான்கு வருடங்களுக்கு முன்பு அவர்கள் இருக்கும் போதே, அவர்களை மீறி துர்கா வாழ்வில் நிகழ்ந்த அசம்பாவிதத்தை அவர்களால் தடுக்க முடியவில்லை. ஆனால், இம்முறை அவளின் வாழ்வை நேர்ப்படுத்துவது அவர் பொறுப்பு என மனதில் உறுதி பூண்டார் அவர். அதற்குத் துணையாகத் தோள் கொடுக்கும் தோழனாக நின்ற மகனின் தோளை தட்டிக் கொடுத்தார்.‌

அப்போதே மனைவி மகள் இருவரையும் வைத்துக் கொண்டே பொதுவாக, தயா குறிஞ்சி கல்யாணம் முடியும் வரைக்கும் வேறெந்த பேச்சும் வீட்டில் எடுக்கப்படக் கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார்.

“முக்கியமா எங்கக்கா கிட்ட யாரும் எந்தப் பேச்சும் வச்சுக்க வேணாம். அக்காகிட்ட நான் பேசிக்கறேன்” என்று முடித்து விட்டார். அவர் கண்கள் கண்டிப்புடன் மனைவியின் மேல் கூடுதலாகப் படிந்து விலகின. தனிமையிலும் அவரிடம் எச்சரித்தார்.

“மகன் கல்யாணத்த நல்லவிதமா முடிக்கணும். அதுல கவனம் பண்ணு நாச்சியா” எனவும் மௌனமாகத் தலையசைத்தார் நாச்சம்மை.

கூடத்தின் மறுபுறம் இருந்த படுக்கை அறையில் துர்கா ரோஜாவை உறங்க வைத்துக் கொண்டிருக்க அவளிடம் சென்றான் தயா.

படுக்கையில் அமர்ந்த வாக்கில் அவனை ஏறிட்டு, “என்ன தம்பி?” என்று கேட்டாள்.

“அத்த முன்னாடி, லக்ஷ்மணன் மச்சா முன்னாடி எதுவும் பேசி வைக்காதக்கா பிளீஸ்” அவனது இயல்பு மீறி கெஞ்சலாகக் கேட்டான்.

“தயா, நீயே நல்லா யோசிச்சு பார்த்தீன்னா, நிச்சயமா என் முடிவு சரின்னு சொல்லுவ” அவன் முகம் பார்க்காமல் சுவரை வெறித்தபடி அவள் சொல்ல, “அதை என் மூஞ்சியைப் பார்த்துச் சொல்லுக்கா பார்ப்போம்” என்று கோபமாகக் கேட்டான் அவன்.

“இல்லன்னா ரோஜாவை‌‍ பார்த்து சொல்லேன்”

“தயா”

“கோபம் வருது இல்ல? நீ பேசுறதை கேட்கும் போது எனக்குக் கோபம் வரலக்கா, கஷ்டமா இருக்கு.” என்றான் வலி மிகுந்த குரலில். துர்கா கண்களை மூடி ரோஜாவை தட்டிக் கொடுக்க, “அக்கா” என்றழைத்தான்.

“சொல்லு தயா” கண்களைத் திறக்காமல் கேட்டாள்.

“அக்கா..”

இப்போது, “சொல்லுடா தயா” என்றாள் கண்களைத் திறந்து.

“என் கல்யாணத்துல நீ குறிஞ்சி கூடவே இருக்கணும். எல்லாத்துக்கும் நீ முன்னாடி நிக்கணும். அம்மா, அப்பா கூடவே நிக்கணும். அதை விட்டுட்டு எங்கயாவது ஓரமா ஒதுங்கி நின்னன்னு வச்சுக்கோ..”

“நான் முன்னாடி வந்து நிக்கக் கூடாது டா தயா. எல்லாம் தப்பா பேசுவாங்க.”

“எவன் பேசினா நமக்கென்னக்கா? எவன் பேசுறதும் எனக்கு முக்கியம் கிடையாது. என் அக்கா நீதான் எனக்கு முக்கியம்” என்றான் கரகரத்த குரலில்.

“என்னை மீறி எவன் பேசுவான்? எங்க என் முன்னாடி வந்து பேசச் சொல்லேன் பார்ப்போம்”

“ப்ச், தயா”

“என் அக்காவா எல்லாச் சடங்குலயும்‌‍ நீ வந்து முன்னாடி நிக்கற. நான் குறிஞ்சி கழுத்துல தாலி கட்டும் போது பின்னாடி வந்து மூனாவது முடிச்சை போடுற” என்று அன்புக் கட்டளையாகச் சொன்னான்.

அதற்கு அவள் முகத்தைச் சுவர் பக்கமாகத் திருப்பவும், “மூனாவது முடிச்சை போட நீ இல்லன்னா நான் குறிஞ்சி கழுத்துல தாலியே கட்ட மாட்டேன், பார்த்துக்கோ” என்று மிரட்டலாக மொழிந்தான்.

“அறிவில்லாதவன் போல அபசகுணமா பேசாதடா”

“என் ஆசை, உன் கடமையைச் சொன்னேன். அப்புறம் உன் விருப்பம்க்கா. என் கல்யாணம் மட்டுமில்ல, உன் செல்ல குறிஞ்சி கழுத்துலயும் தாலி ஏறாது பார்த்துக்கோ.” என்றவன் உறங்கிக் கொண்டிருந்த ரோஜாவின் கன்னம் வருடி, “நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். நீ முடிவு பண்ணிக்கோக்கா” என்று சாதாரணமாகச் சொல்லி, அறையை விட்டு வெளியேறினான். துர்கா அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள்.

ஊரும், உறவும் அவளைப் பற்றிப் பேசுவது அவளுக்குப் புதிதல்ல. ஆனால் இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போதுதான் அவர்கள் வீட்டில் ஒரு விசேஷம் நடக்கப் போகிறது. உறவுகள் ஒன்றாகக் கூடப் போவது இதுவே முதல் முறை. அதிலும் தயாபரனின் திருமணம் எனும் போது அவனுக்கு மூத்தவளான அவளின் திருமணம், குழந்தை குறித்த கேள்விகள் நிச்சயமாக எழும். அதிலும் விதவிதமாக வித்தியாசமாகக் கேட்பார்கள். அவர்களையும் குறை சொல்ல முடியாது. எல்லாம் பிறரின் அந்தரங்கத்தை அறிந்து கொள்ளும் ஆர்வம்தான்.

அந்தக் கேள்விகளைக் கூடக் கடந்து விடுவாள். ஆனால் மனிதர்களை அவர்களின் கோர முகங்களை எப்படிக் கடக்க? என்ற சிந்தனையுடன் படுக்கையில் சரிந்தாள்.

திருமணத்தன்று யார் கண்ணிலும் படாமல் ஒதுங்கிடலாம் என்று அவள் நினைத்திருக்க, அக்காவை நன்கு அறிந்தவனாகச் செயல்பட்டிருந்தான் தயாபரன்.

error: Content is protected !!
Scroll to Top