அங்கு நடந்தது எதுவுமே நாச்சம்மைக்குத் தெரியாது. அந்த நாடகத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு இன்னும் வாய்ப்பு வழங்காதது போல அவரை ஒதுக்கியே வைத்திருந்தார்கள் இளையவர்கள்.
ஆனால் தயா அப்படி இல்லையே. அவன்தானே அந்த நாடகத்தின் நாயகன். எப்படியும் அவனுக்கு இது விரைவில் தெரிந்து விடும். குறிஞ்சியால் இனிமேலும் அவனிடம் எதையும் மறைக்க முடியாது என்பதை அவளும் உணர்ந்திருந்தாள்.
“கடையில கஸ்டமர் நிறைய இல்லன்னா கொஞ்சம் வீடு வரைக்கும் வர முடியுமா தயா?” என்று அவனுக்குக் கைப்பேசியில் செய்தி அனுப்பி விட்டாள் அவள்.
“குறிஞ்சியாத்தா குட் இம்ப்ரூவ்மெண்ட்.” என்ற நக்கல் பதில் மட்டுமே அவனிடமிருந்து உடனடியாக வந்தது. ஆனால் அவனும் வந்திடுவான் என்று அவள் மனம் அடித்துச் சொல்லியது.
இருவரும் சிறு வயதில் இருந்து ஒன்றாக வளர்ந்தாலும் அப்படியொன்றும் நெருங்கி பழகியதில்லை. அதிலும் குறிஞ்சி குமரியானதும் தயா தானாகவே அவளிடமிருந்து ஒதுங்கி விட்டான். அவனது கவனம் முழுக்கக் குடும்பம், கடை, படிப்பு என இருக்க, அவளுக்கு அம்மா, அம்மாவை நன்றாகப் பார்த்துக் கொள்ளப் படித்து முன்னேற்ற வேண்டும் என்ற கனா நிறைந்திருந்தது நெஞ்சத்தில். ஆகக் காதல், கள்ளத்தனம் என எதையும் வளர்த்துக் கொள்ளவில்லை அவர்கள். அப்படியொரு எண்ணமோ, ஈர்ப்போ எதுவுமே இல்லை என்பதும் ஒரு காரணம்.
அவர்களின் திருமண நிச்சயமே துர்காவை முன்னிறுத்தியே என அவள் நிச்சயமாக நம்பியதால் அதன் பிறகும் கூடத் தயாவிடம் நெருங்கி பேசிடவில்லை குறிஞ்சி. அவனும் அவளிடம் பேச்சளவில் கூட நெருக்கம் காண்பிக்கவில்லை. இப்போது என்னவென்றால் உன்னைப் பிடித்துதான் திருமணம் செய்கிறேன் என்கிறான். அவளுக்கு அதுவே நிரம்பத் தெளிவை ஆசுவாசத்தை அளித்தது. இதுவரை முரண்டிய அவள் மனம் இப்போதுதான் அவனுடனான திருமணத்திற்குத் தயாராகத் தொடங்கியது.
ஶ்ரீகாந்தின் முகத்தில் அடித்தது போலத் துர்கா பேசியது அவளுக்குப் பிடிக்கவில்லை. அதிலும் லக்ஷ்மணனை மணக்கப் போகிறேன் என்று சொன்னதில் துளியும் உவப்பில்லை.
இப்பொழுது நாச்சம்மை முன் இதைப் பற்றிப் பேச விரும்பாமல், நேராக அவரிடம் சென்று நகைப்பையைக் கொடுத்தாள்.
“நான் நகை வாங்கும் போதே பார்த்துட்டேன் குறிஞ்சி. நீ ஒவ்வொன்னா எடுத்து உனக்குப் பிடிச்சிருக்கா பாரு. அப்படியே போட்டு காட்டு, நாங்களும் பாக்கறோம்” என்றார்.
குறிஞ்சி தலையசைத்து நகைப் பையைத் திறக்கவும், “இரு, முதல்ல தலையைச் சீவி பூவை வச்சுட்டு வா” என்று அவளை இழுத்து அவரே தலைவாரி விட்டார். இதுவொன்றும் முதல் முறை அல்லவே. சிறு வயதில் இருந்தே அவளுக்குச் செய்தவர்தானே.
பள்ளி செல்லவில்லை எனவும் ரோஜாவுக்கு ஒரே குஷிதான். ஓர் இடத்தில் நிற்காமல் அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டிருந்தாள். அவளையும் இழுத்து இரட்டை ஜடை போட்டு விட்டார்.
குளிர்சாதனப் பெட்டியில் இருந்த மல்லிகை சரத்தை எடுத்து இருவருக்கும் வைத்து விட்டு, மகளுக்கும் கொடுத்தார்.
மூவரையும் அப்படி அழகோவியமாகப் பார்க்க அவர் மனம் நிறைந்து போனது. கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டார்.
துர்காவின் முகம் வாடியிருப்பது கண்டு, “தயா கல்யாணம் முடியற வரைக்கும் உன் கல்யாணத்தைப் பத்தியே நான் பேசல துர்கா, போதுமா?” என்று மகளிடம் கேட்டார். கீற்றாகப் புன்னகைத்து தலையசைத்தாள் அவள்.
அதன் பிறகு குறிஞ்சி ஓவ்வொரு நகையாகப் போட்டு காண்பிக்க, அதை ரசித்துச் சிலாகித்து முடிக்கையில் வீடு வந்து விட்டான் தயாபரன்.
“நீ போய் நகையைப் பத்திரமா வீட்ல வச்சுட்டு வா” என்று குறிஞ்சியை விரட்டினார் நாச்சம்மை. அவள் வீடு செல்ல, அவளைப் பின் தொடர்ந்தான் தயா.
வாசலுக்கு வந்ததும் நின்று திரும்பி அவனைப் பார்த்தாள்.
“என்ன விஷயம் குறிஞ்சி? எதுக்கு என்னை வீட்டுக்கு வரச் சொன்ன?”
“ஶ்ரீகாந்த் அண்ணா கார் சாவி வாங்க வந்திருந்தாங்க”
“அப்டியா எனக்குத் தெரியாதே”
“நக்கல் பண்ணாதீங்க தயா. அண்ணாக்குத் துர்காதான் சாவி எடுத்துட்டு வந்து குடுத்தா. அவர்கிட்ட அத்தை மகனை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்லிட்டா, அண்ணா கோபமா போய்ட்டாங்க” என்றாள் சோகமாக.
அவன் உதட்டில் உண்டான புன்னகையை மீசை அழகாக மறைத்து விட்டது.
“இதையும் எங்கிட்ட இருந்து மறைச்சு உனக்கு ரொம்பப் பிடிச்ச துர்காவுக்குச் சாதகமா இருப்பன்னு நினைச்சேன். பரவாயில்லயே, தயாபரனுக்குக் குறிஞ்சியாத்தா தயவு காட்டுறீங்க போலயே”
“ஶ்ரீகாந்த் அண்ணா ரொம்ப நல்லவங்க. துர்கா லைஃப் நல்லாருக்கணும்னு நினைக்கறேன்”
“அதானே பார்த்தேன்” என்று அவன் முறைக்க, “இப்பவும் உங்க அக்காகாகத்தானே யோசிக்கறேன்” என்று பதிலுக்கு அவளும் முறைத்தாள்.
“நல்லது, யோசி யோசி. அப்படியே என்னையும் கொஞ்சம் சேர்த்து யோசி. நான் ஒருத்தனே எல்லோருக்கும் சேர்த்து யோசிக்க முடியாது இல்ல?” என்று அவளை நெருங்கி கேட்டவன், “ஶ்ரீகாந்த் என்கிட்ட பேசிட்டுதான் வீட்டுக்கு வந்தான்” என்றான்.
“ஆமா, சொன்னார்” என்று படபடத்தவள், அவன் பார்வையில் பரிகாசம் கூடுவது கண்டு, “என்ன பேசினாங்க?” என்று ஆர்வமாகக் கேட்டாள்.
“குறிஞ்சியாத்தா கொஞ்சம் லேட் பிக்அப்தான் போல?”
“அப்படியொன்னும் இல்ல” என்று அவள் வீராப்பாகச் சொல்ல, “அதையும் பார்க்கத்தானே போறேன்” என்றான் தீவிரமாக.
ஓர் ஆர்வத்தில் வேகமாக அவன் கையில் அடித்து, “ப்ச், அண்ணா என்ன பேசினாங்க? அதைச் சொல்லுங்க” என்று கேட்டாள்.
“இந்த அடிக்கிற வேலையெல்லாம் வச்சுக்கிட்டீன்னா கைய உடைச்சுருவேன்” நாக்கை மடித்து விரல் நீட்டி எச்சரித்தான். அவள் அசட்டையாகக் கண்ணை உருட்ட, “கண்ணை நோண்டிருவேன்” என்று மிரட்டினான்.
அவளோ அலட்டிக் கொள்ளாமல், “அண்ணா என்ன சொன்னாங்கன்னு சொல்லப் போறீங்களா இல்லையா தயா?” என்று கேட்க, “தயாவாம்ல தயா? என்னமோ எனக்கு இவதான் பேர் வச்சா மாதிரி எப்படிச் சட்டமா கூப்பிடுறா பாரு, மரியாதையே இல்லாம” என்று அவளின் உதட்டை சுண்டினான்.
அவளுக்கு வலித்திட, “ஆஆஆ..” என்று உதட்டை தேய்த்து விட்டு, பட்டென்று அவன் மார்பில் அடித்திருந்தாள்.
“கை நீட்டுற வேலையெல்லாம் வச்சுக்கீட்டீங்க..”
“ஓ என்னையே மிரட்டறியா நீ? ஆமா, நான் கைய நீட்டினா என்ன பண்ணுவியாம்?” வேண்டுமென்றே அவள் தோளில் கைப் போட்டு கேட்டான்.
அதைத் தட்டி விட்டு, “நான் நர்ஸ், ஞாபகம் இருக்குத்தானே?” என்று முகத்தை நிமிர்த்தி அவள் கேட்க, மீண்டும் அவள் உதட்டை சுண்டி விட்டுச் சத்தமாகச் சிரித்திருந்தான் அவன்.
“ஒழுங்கா, மரியாதயா கூப்பிடுற புரிஞ்சுதா?”
“மரியாத மனசுல இருக்கு” என்று அவள் உதடு சுழிக்க, “மனசுல நானும் இருந்தா சரிதான்” என்றான். அவள் சலிப்புடன் கண்ணை உருட்ட, “கொன்றுவேன் ராஸ்கல்” என்றான் கோபமாக.
“தயா மாமா, ஶ்ரீகாந்த் அண்ணா உங்ககிட்ட என்ன பேசினாங்க துர்கா பத்தி? பிளீஸ் எனக்குச் சொல்லுங்களேன்” என்று பவ்யமாகப் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு அவள் கேட்க, மீசையை நீவும் சாக்கில் சிரிப்பை சாமர்த்தியமாக மறைந்திருந்தான்.
இருவரும் வாசலில் நின்றிருக்க அதற்கு மேல் அந்த விளையாட்டைத் தொடர விரும்பவில்லை அவன். சடுதியில் அவன் முகம் தீவிர பாவத்திற்கு மாறியது.
துர்காவை ஶ்ரீகாந்த் விரும்புகிறான் என்பது தெரிந்த நொடியில் இருந்து அவனால் இயல்பாகவே இருக்க முடியவில்லை. நண்பனே ஆனாலும் அவனை விட மூத்தவன். அதற்காகவெல்லாம் அவன் தயங்கவில்லை. ஶ்ரீகாந்தின் அம்மாவை பற்றி அவனுக்கு நன்கு தெரியும்.
ஶ்ரீகாந்த்தை விடச் சில வருடங்கள் இளையவன் அவனுக்கே திருமணம் செய்கையில் ஶ்ரீகாந்த்துக்குத் திருமணம் பேசாமல் இருப்பார்களா? சில வருடங்களாக அவனுக்குப் பெண் பார்க்கிறார்கள். ஶ்ரீகாந்த், ஒரே மகன் என்பதால் சல்லடை போட்டுப் பெண் தேடாத குறை அவனுக்கு. எத்தகைய அழகி குணவதி வந்தாலும் குறை சொல்லி வேண்டாம் என்று ஒதுக்கி விடுவார் அவன் அம்மா. அது ஶ்ரீகாந்த்துக்கு வசதியாகப் போனது.
அப்படிப் பூதக் கண்ணாடி கொண்டு குறை காணும் ஒருவர், ‘துர்காவை மணக்க விரும்புகிறேன்’ என்று மகன் சொன்னால் என்ன செய்வாரோ என்ற தயக்கம் தயாவுக்கு. அது போக ஶ்ரீகாந்த்தின் மனம் அறிந்த பின் அவன் இயல்பாகத் தங்களின் வீடு வருவது அவனுக்கு இடறியது.
இதற்கெல்லாம் ஒரு முடிவு தெரியாமல் ஶ்ரீகாந்தே என்றாலும் அக்காவை அவன் நெருங்குவதில் தயாவுக்கு உடன்பாடில்லை.
கடையில் வேலையாக இருந்தாலும் அவன் மனம் இதற்குள்ளேயே உழன்று கொண்டிருக்க, அந்நேரம் அவனின் நினைவின் நாயகனே அழைப்பில் வந்தான்.
“சொல்லு ஶ்ரீகாந்த்” என்று அவன் அழைப்பு ஏற்றுப் பேச, “என்னடா தயா டல்லடிக்கற? பார்மலா பேரெல்லாம் சொல்லி பேசுற? ஆல் ஓகே?” என்று ஶ்ரீகாந்த் கரிசனத்துடன் விசாரிக்கவும், “மச்சா” என்று அலுத்துக் கொண்டான்.
“ஹ்ம்ம் அப்படி வா வழிக்கு” என்று சிரித்த ஶ்ரீகாந்த், “நான் உன்னய மச்சான்னு மனசுல இருந்துதான் கூப்பிடுறேன் தயா” என்றிருந்தான்.
தயா அதை உள்வாங்கும் முன், “காலம் முழுக்க அப்படியே கூப்பிடணும்னு நினைக்கிறேன்” என்றான் தீவிரமாக.
“ஶ்ரீ, டேய், மச்சா..” தயா தடுமாற்றத்துடன் அழைக்க, “நீயும் பதிலுக்கு என்னை மச்சான்னு சொல்லாம இனிமே மாமான்னு சொன்னீன்னா நல்லாருக்கும்.” என்றான் ஒரே போடாகப் போட்டு. கைப்பேசி வழியே அவனது சிரிப்பை தயாவால் உணர முடிந்தது. கடையின் கல்லாவில் அமர்ந்திருந்த தயா பைத்தியக்காரன் போலப் பற்கள் தெரிய புன்னகைத்துக் கொண்டிருந்தான்.
இன்னும் இரண்டே தினங்களில் அவனுக்குத் திருமணம். இதெல்லாம் இயல்புதானே என அவனது பணியாளர்களும் அவனைப் புன்னகையுடன் கடந்தார்கள்.
“ஶ்ரீகாந்த்”
“டேய் ஒன்னு என் வயசுக்கு மரியாதை குடுத்து கூப்பிடு. இல்லையா, இனிமே நமக்குள்ள வரப்போற உறவுக்கு மரியாத குடுத்து கூப்பிடு. இப்படி டேய் டோய்லாம் போட்டு கூப்பிட்டீன்னா என் மாமியார் வீட்ல உன்னைய தூக்கி போட்டு மிதிப்பாங்க மச்சான்” என்றான் குறுநகையுடன் கிண்டலாக. ஆனால் கிண்டலை மீறிய எதிர்பார்ப்பு அவன் குரலில் இருந்தது.
தயா, அக்கா வாழ்வு குறித்து எப்போதும் கலங்குபவன், இப்போது அந்தக் கலக்கம் லேசாக விலகிட, ஆழ்ந்த மூச்செடுத்து தலைக் கோதிக் கொண்டான். அவனே தேடித் திரிந்து தேர்ந்தெடுத்தாலும் ஶ்ரீகாந்த் போன்ற ஒருவனை அக்காவுக்கு அவனால் கண்டுபிடிக்க முடியாது. துர்காவை, ரோஜாவை நிச்சயமாக நல்லபடியாகப் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை அவனுக்கு நிரம்ப இருக்கிறது. ஆனால் அவளின் கடந்த காலம்? சட்டென அவனது மகிழ்வு கலைய, மனத்தைக் கலக்கம் ஆக்கிரமித்துக் கொண்டது.
“ஶ்ரீகாந்த், நீ மனசுல என்ன நினைச்சுட்டு இப்படிப் பேசுறேன்னு..” கேள்வி கேட்டுத் தெளிவுப்படுத்திக் கொள்ள அவன் முனைய, “மச்சா டேய் தயா, எனக்கு இதெல்லாம் நேரா உன் முகம் பார்த்துப் பேசத்தான் ஆச. ஆனா எனக்குச் சங்கடமா இருக்கே என்ன செய்ய?” என்று சிரிப்புடன் வினவினான்.
“நான் பேசுறது உனக்குப் புரியலயாக்கும்? அதுக்காக, உனக்கு என் மனச தொறந்து காட்ட நான் என்ன அனுமாரா மச்சா? சிலதெல்லாம் நண்பன் நீயாவே புரிஞ்சுக்கணும்டா. இல்ல எனக்கு மூளை கம்மின்னு ஒத்துக்க. ம்ம், நான் வேணும்னா ஒன்னு பண்றேன், வெத்தல பாக்கு தட்டோட வந்து மொறையா உன் வீட்ல பேசுறேன், தனியா இல்ல. என் குடும்பத்தோட” என்று தெளிவாகச் சொல்லி முடித்திருந்தான்.
“ஶ்ரீகாந்த் மச்சா, என் அக்கா..” என்று தயா தடுமாற, “அதெல்லாம் நாம நேர்ல பேசிக்கலாம். உனக்கு என்னை நல்லா தெரியும். அதுனால இப்பவே சொல்லிடுறேன். தேவையில்லாத கேள்வியெல்லாம் நீயே தவிர்த்திடு. அதைத் தேவையில்லாம கேட்டு என்னை எம்பேரஸ் பண்ணாத, என்ன? நாம அடுத்து ஆக வேண்டியதை மட்டும் பேசுவோம். நடக்க வேண்டிய நல்லதை மட்டும் பார்ப்போம்” என்று குறிப்பு கொடுத்துப் பேசினான்.
“நான் பாட்டுக்கப் பேசிட்டே போறேன். நீ நல்லா யோசி தயா, அப்படியே வீட்லயும் பேசிட்டு உன் முடிவை சொல்லு” என்ற ஶ்ரீகாந்த், “ஒன்னும் அவசரம் இல்லடா, கல்யாண மாப்ள நீ. இந்நேரம் இதை யோசிச்சு மண்டையை உடைச்சுக்காத. பொறுமையா உன் கல்யாணம் முடிஞ்ச மறுநாள் வீட்ல பேசிட்டு சொல்லு. நான் வெயிட் பண்றேன்” என்று முடிக்க, தயாவின் இறுக்கமெல்லாம் தளர்ந்திட, “கல்யாணம் முடிஞ்ச மறுநாள் கேட்டுச் சொன்னா போதுமா?” என்று கேட்டுச் சத்தமாகச் சிரித்திருந்தான் அவன்.
ஶ்ரீகாந்த்தும் சிரித்தபடி, “எனக்குக் கார் தேவைப்படுது தயா” என்றான்.
“கார் வீட்ல இருக்கே, நான் கடையில இருக்கேன்”
“அப்ப நான் வீட்டுக்குப் போய் எடுத்துக்கவா?” ஶ்ரீகாந்த் தயக்கத்துடன் கேட்க, “ம்ம் ஓகே. அம்மா இருப்பாங்க. சாவி கேளு, எடுத்து தருவாங்க” என்றான்.
“ரைட்டு, உங்கக்காகிட்ட நெருங்க கூடாதுன்னு என்னை மறைமுகமா மிரட்டுற? இன்னும் எனக்கான மரியாதையும் வரல உன்கிட்ட இருந்து. புரிஞ்சுதுடா மச்சா. நீ பொறுமையா மரியாத குடு. ஆனா எனக்கு நீ எப்பவும் மச்சான்தான்” என்றான் உறுதியாக.
“உன்னய வீட்டுக்குப் போய்ச் சாவி வாங்கிக்கோன்னு சொல்லும் போதே என் முடிவு உனக்குத் தெரிஞ்சுருக்கணும் ஶ்ரீ. அப்புறம் உங்கக்கா புருஷன நீ என்னான்னு கூப்பிடுவ?” என்று தயா இடக்காகக் கேட்க, ஒரு நொடி அதிர்ந்து, “நான் அவர மச்சான்னு.. டேய் மச்சா தயா” என்று ஆனந்தமாக அதிர்ந்து கத்தினான் ஶ்ரீகாந்த்.
“நீங்க சொன்ன மாதிரி அடுத்த வாரம் முறையா பெரியவங்க முன்னாடி பேசலாம். அதுக்கு முன்னால நான் அக்காகிட்ட பேசறேன் மச்சா. பொறுமையா இரு” என்று நண்பனுக்கு நாளை உறவாகப் போகும் நல்லவனுக்கு நம்பிக்கை அளித்தான் தயாபரன்.
ஶ்ரீகாந்த் சிரிப்புடன் அழைப்பைத் துண்டித்தான். அந்த ஆனந்த மனநிலையோடு வீடு தேடி வந்தவன் மனத்தைச் சுக்கலாக உடைத்து அனுப்பியிருந்தாள் துர்கா.
ஶ்ரீகாந்த் பேசியதை மேலோட்டமாகக் குறிஞ்சியிடம் பகிர்ந்தான் தயா.
“எல்லாமே ஒரே நாள்ல சரியாகாது குறிஞ்சி. சீக்கிரம் சரி பண்ணிடலாம். நீ வீட்டுக்கு போய் நகையை உங்கம்மா கிட்ட குடு” என்று அவளை அனுப்பினான். அவள் வீட்டுக்குள் நுழைந்தது கண்ட பிறகே அவன் அங்கிருந்து விலகினான்.
“என்னம்மா நீ அங்க வர்றேன்னு சொல்லிட்டு வரவேயில்ல?” என்று அம்மாவிடம் அவள் சடைக்க, “உன் நகைங்க எல்லாத்தையும் எடுத்து வச்சேனா. அதுலயே நேரம் போய்டுச்சு பாப்பா, அதான் வரல. அம்மாக்கு நகைய நாளைக்குப் போட்டுக் காட்டு” என்றார் அலமேலு.
அன்றிரவு கடையை அடைத்து வீடு வந்ததும் அப்பாவை தனியாகச் சந்தித்து, ஶ்ரீகாந்த்தின் விருப்பத்தை அவரிடம் தெரிவித்து விட்டான் தயா.
“என்னப்பா சொல்ற?” என்று நாடகத்தனமாக நெஞ்சில் கை வைத்து அதிரவெல்லாம் இல்லை பழனியப்பன்.