நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 8 (2)

“அம்மா எனக்காகக் கொஞ்சம் நகை வாங்கியிருக்காங்களாம். அதுவும் போட்டு பார்க்கணும். இரு, நான் வீட்டுக்கு போய் நகையை எடுத்திட்டு வர்றேன். அத்தைக்கும் போட்டு காட்டணும்” என்று குறிஞ்சி சொல்ல, நாச்சம்மை வேகமாகக் கூடத்துக்கு வந்து, “நானும் உங்கம்மாவும் போய்தான் உனக்கு நகை எடுத்தோம் குறிஞ்சி. முதல்ல உனக்கு நான்தான் செலக்ட் பண்ணேன்.” என்றார்.

“நாங்க பத்து பவுன் நகை எடுத்து கையில வச்சுட்டு, எப்படி ரெண்டு பொம்பளைங்க மட்டும் வீட்டுக்கு தனியா வர்றதுன்னு யோசிச்சுட்டு தயாவையும் கூடக் கூட்டிட்டு போனோம். நான் எடுத்த டிசைன்லாம் நொள்ள நொட்ட சொல்லி உனக்கு அவன்தான் எல்லாம் செலக்ட் செஞ்சான். அவனுக்குப் பழைய மாடலா இருக்கக் கூடாதாம், கல்லு வச்சிருக்கக் கூடாதாம், ரொம்ப மெல்லிசா இருக்கக் கூடாதாம், எப்பா எத்தன கோளாறு சொல்றான் தெரியுமா? அந்தக் கடை பொண்ணே அவனை அசந்து போய்தான் பார்த்துச்சு. உன் ஃபோட்டோவ அதுக்கிட்ட காட்டி எல்லாம் உனக்குப் பொருத்தமா இருக்குமான்னு கேட்டுக் கேட்டுதான் எடுத்தான். உன் ஆசைக்கு நீயும் போட்டு பாரு. நீ பிடிக்கலன்னு சொன்னா இங்க தயா பையன் போய் அந்த நகையை மாத்திட்டு வந்தாலும் வந்துடுவான், சொல்ல முடியாது” என்று நாச்சம்மை சொல்ல சொல்ல, நொடியில் குறிஞ்சியின் முகம் நாணம் பூசிக் கொண்டது.

நாச்சம்மையைப் பார்த்து புன்னகைத்தாள்.

அட தயாபரன் எனும் கடுவன் பூனை, அவளுக்காக இத்தனை செய்யுமா? அவளுக்குத் தெரியாதே? இந்த அம்மாவும் இதையெல்லாம் அவளிடம் கொஞ்சம் சொல்லியிருக்கலாம்.

“இன்னைக்குப் போய் நகை எடுத்துட்டு வந்தோம் பாப்பா. மாப்ளயும், அவங்க அம்மாவும் என் கூடத் துணைக்கு வந்திருந்தாங்க” என்று சொல்லியிருந்தார் அலமேலு. இந்தத் துர்கா துரோகி கூடச் சொல்லவில்லையே என்று அவள் திரும்பி துர்காவை முறைக்க, “உன் மாமியா இதெல்லாம் என்கிட்ட அப்போ சொல்லல குறிஞ்சியாத்தா. நகை கடைக்குப் போனோம், வந்தோம்னு கதை சொன்னாங்க. அவ்ளோதான் எனக்குத் தெரியும். எனக்கும், ரோஜாக்கும் வாங்கின நகையைக் காட்டி அந்தக் கதையைச் சொன்னதுல உன் கதையை மிஸ் பண்ணிட்டாங்க போல” என்று நமுட்டு சிரிப்புடன் துர்கா சொல்ல நறுக்கென்று அவளின் கையைக் கிள்ளி வைத்தாள் அவள்.

“பிசாசே” துர்கா கத்த, “பிசாசு சொல்லக் கூடாதும்மா” என்று அம்மாவை கண்டித்தாள் ரோஜா.

“அப்படிச் சொல்லுடி என் பட்டு ரோஜா. இனிமே அத்தைய திட்ட கூடாதுன்னு உங்கம்மாவ மிரட்டி வை. நானு நாளையில் இருந்து வெறும் குறிஞ்சி அத்த இல்ல, தயா மாமாவோட குறிஞ்சி அத்த. அந்தப் பயம் இருக்கணும் உங்கம்மாக்கு, புரிஞ்சுதா?” என்று தலையை ஆட்டி கேட்டாள். அவளைப் போலவே தலையை ஆட்டி, “புரிஞ்சுதாம்மா?” என்று அம்மாவிடம் கேட்டாள் ரோஜா.

“புரியல போங்கடி வாலுங்களா” என்று இருவரையும் இடக்கரத்தால் தள்ளி விட்டு உள்ளே சென்றாள் துர்கா.

“நான் போய் நகையை எடுத்துட்டு வர்றேன்த்த” ரோஜாவுடன் வீடு நோக்கி நடந்தாள். அங்கே அவளின் வீடு கல்யாண களை சூடி நின்றது.

அவர்களது வாடகை வீடென்றாலும் வீட்டு உரிமையாளரிடம் அனுமதி பெற்று, வீட்டுக்குப் புதியதாக வர்ணம் பூசியிருந்தார்கள். அப்போதே விடுமுறை எடுத்து வீடு வந்து அம்மாவுக்கு வீட்டை ஒதுக்க உதவியிருந்தாள் அவள். அவர்களுக்குப் பெரிதாக வேலை வைக்காமல் தயா கூட்டி வந்திருந்த ஆட்களே அனைத்தையும் பார்த்துக் கொண்டார்கள்.

அது முடிந்து ஓரளவு வீட்டை பழைய நிலைக்கு மாற்றி விட்டுத்தான் சென்னை சென்றிருந்தாள். இப்போது மீண்டும் வேலைக்கு இரண்டு ஆட்களை வைத்துக் கொண்டு அலமேலு வீட்டை முழுமையாகச் சுத்தம் செய்து, பொருள்களை ஒதுக்கி, வேண்டியதை அதனதன் இடத்தில் வைத்து என வீட்டை அழகுற மாற்றியிருந்தார்.

“எல்லாத்தையும் நீயே தனியா செய்வியாம்மா? என்னைக் கூப்பிட்டு இருக்கலாம் இல்ல?” என்று அவள் கோபிக்க, “ரெண்டு மணி நேர வேலை பாப்பா. அதுக்கு ஏன் உன்னைத் தொல்லை பண்ணணும்னு அம்மா சொல்லியிருக்க மாட்டாங்க. நீ வீட்டை பாரு. எதுவும் மாத்தணும்னா உனக்குப் பிடிச்சாப்ல மாத்திக்கோ. அப்போ நாங்க வர்றோம்” என்று அந்த இரண்டு பெண்களும் விடைபெற அவர்களை வழியனுப்பி விட்டு வீட்டுக்குள் வந்தாள்.

“நம்ம பக்கம் சொந்தக்காரன், உறவுன்னு யாரும் வீட்டுக்கு வரப் போறதில்லதான்.‌‍ ஆனாலும் நமக்குன்னு நாலு பேர் இருக்காங்க இல்ல. அவங்க வரும் போது வீடு நல்லா இருக்கணும்னு நினைச்சேன் பாப்பா.” என்றார் அலமேலு.

“நீங்க நகை எடுக்கப் போன கதையெல்லாம் நீ எங்கிட்ட சொல்லவே இல்லம்மா?”

“எந்தக் கதை?” என்று குழப்பத்துடன் அலமேலு கேட்க, “குறிஞ்சி தயா மாமா” என்று கூடத்தில் இருந்த அவர்களின் நிச்சயதார்த்த புகைப்படத்தைப் பார்த்துச் சொன்னாள் ரோஜா.

அதைக் கேட்டதும் அவருக்கு விஷயம் விளங்கி விட்டது.

“ஓ மாப்ள நகை எடுக்க வந்தத உன் மாமியா உங்கிட்ட சொல்லிட்டாங்களாக்கும்” கிண்டல் சிரிப்புடன் மகளின் முகத்தைக் கூர்மையாக நோக்கி அலமேலு கேட்க, “போம்மா, நீ வந்து நகையை எடுத்துக் கொடு. நான் அத்தைக்குப் போட்டு காட்டப் போறேன்.” என்று உள்ளே சென்று இரும்பு அலமாரியை திறந்தாள்.

“இரு, உனக்கு எங்க இருக்குன்னு தெரியாது. நான் வந்து எடுத்து தர்றேன்” என்று மகளைப் பின் தொடர்ந்து சென்று நகையை எடுத்துக் கொடுத்தார்.

“நீயும் வாம்மா”

“நீ போ நான் வீட்டை பூட்டிட்டு பின்னாடியே வர்றேன்” என்றார். அவர் கொடுத்த பையுடன் வெளியே வந்தாள். ரோஜாவும் சமத்தாக அவளின் கைப் பிடித்து அவளோடு நடந்தாள்.

அந்நேரம் அவளின் கைப்பேசிக்கு அழைப்பு வந்தது.

“ரோஜா இரு, அத்த போன் பேசிட்டு வர்றேன்” என்று சொல்லி நடையை நிறுத்தினாள். இருவரும் அவள் வீட்டு வாசலில் நின்றிருந்தார்கள்.

அழைப்பு புதிய எண்ணில் இருந்து வரவும் புருவங்கள் நெறிய அதை ஏற்பதா வேண்டாமா என்று யோசனையுடன் அவள் நிற்க, “குறிஞ்சி போன எடுத்து யாருனு கேளு” என்று கத்தினார் அலமேலு.

மறுநொடி அழைப்பை ஏற்று, “ஹலோ” என்றாள்.

“குறிஞ்சியா?”

“ஆமா, நீங்க?”

“காரைக்குடி, உமையாள் ஹாஸ்பிட்டல்ல இருந்து பேசுறோம். நாளைக்குப் பத்து மணிக்கு நீங்க ஹாஸ்பிட்டல் வந்து ஹெச்ஆரை பார்க்க முடியுமா?”

என்று அவர் கேட்கவும், “ஹெச்ஆரை பார்க்கணுமா? நான் உங்க ஹாஸ்பிட்டல்ல வேலைக்கு அப்ளை பண்ணலியே” என்று யோசனையும் தடுமாற்றமுமாகப் பதில் சொன்னாள்.

“நீங்க நர்ஸ் குறிஞ்சிதானே?”

“ஆமா, ஆனா..”

“ஒரு நிமிஷம் இருங்க” என்று அந்தப் பக்கம் முழுதாக ஒரு நிமிடம் அமைதிக்குச் சென்றது. அதன் பிறகு வேறொருவர் இணைப்பில் வந்தார்.

அவர் சொல்லிய தகவலில் அவளுக்கு நிரம்ப மகிழ்ச்சியும், அதை மீறிய அதிர்ச்சியும் உண்டானது.

தயாபரன் அவனுக்குத் தெரிந்த மருத்துவரின் மருத்துவனையில் அவளுக்கு வேலைக்குச் சொல்லி வைத்திருக்கிறான். அதுவும் இன்று நேற்று அல்ல. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்பே அவளுக்காக விசாரித்திருக்கிறான்.

இப்போது அங்கே அவசரமாகச் செவிலி தேவைப்படவும் அவனைத் தொடர்பு கொள்ள, அவன் தொடர்பில் வரவில்லை என்றதும் அவளின் ரெஸ்யூம் பார்த்து அவளுக்கு அழைத்திருக்கிறார்கள்.

“நீங்க சென்னையில வேலையை விட்டுட்டு ஊருக்கு வந்துட்டீங்களா? உங்களால எப்போ ஒர்க் ஜாயின் பண்ண முடியும்?” என அவர்கள் கேட்க, கடுவன் பூனை இத்தனை விவரம் சொன்னவன், அவர்களின் கல்யாணத்தைப் பற்றியும் சொல்லியிருக்கலாம். அவன் சொல்லா விட்டால் என்ன அவனது ரகசியத்தை அவள் சொல்லி விட்டு போகிறாள் என்ற எண்ணத்துடன் அவர்களிடம் உண்மையைப் பகிர்ந்தாள்.

என்ன பெரிய ரகசியம் அவர்களுக்கும் தெரிந்துதான் இருந்தது.

“அது தெரியுமே, நீங்க கல்யாணத்துக்கு அப்புறம் வந்து வேலையில ஜாயின் பண்ணுவீங்கன்னு முன்னாடியே சொல்லியிருந்தார். அதான் இப்பவே இன்டர்வியூ முடிச்சுடலாம்னு கூப்பிட்டோம்” என்றார்.

“உங்களுக்கு இந்த வாரம் கல்யாணங்கற ஞாபகம் இல்ல எனக்கு, சாரி. நீங்க கல்யாணம் முடிஞ்சு பொறுமையா வாங்க” எனவும், “நான் வீட்ல பேசிட்டு நாளைக்கே வர்றேன்” என்று அவசரமாகப் பதில் சொன்னாள் அவள். அவரும் சரியென்று வைத்து விட்டார். குறிஞ்சிக்கு அதுவரை இருந்த மனநிலை முற்றிலுமாக மாறிட இதழ்கள் தாமாகப் புன்னகைத்தன.

ஆக, தயாபரனுக்குத் தாராள மனம்தான் எனச் சிலாகித்தது அவள் மனம். ஏனோ மனதை அதுவரை பிராண்டிய பிராணி ஓய்வெடுத்திட, “ம்மா, சீக்கிரம் வாம்மா” என்று உள்நோக்கி குரல் கொடுத்து விட்டு தயாபரன் வீட்டை நோக்கி நடந்தாள்.

அப்பொழுது தயா வீட்டுக்கு ஶ்ரீகாந்த் வர, நாச்சம்மை வேலையாக இருந்ததால் துர்காதான் வாசலுக்கு வந்தாள்.

“இப்போ எதுக்கு இங்க வந்திருக்கீங்க?” எடுத்ததும் முகத்தில் அடிப்பது போலத் துர்கா கேட்க, “எதுக்குன்னு சொன்னா உடனே செஞ்சுடுவீங்களா துர்கா?” என்று நக்கலாகப் பதில் சொல்லியிருந்தான் அவன்.

“அதான் முடியாதுன்னு ஏற்கனவே சொல்லிட்டேனே. அப்புறமும் ஏன் தொல்லை பண்றீங்க?” அவள் எரிந்து விழ, “என்னது தொல்லை பண்றேனா? இங்க பாருங்க துர்கா, என் காரை உங்க தம்பி, என் ஃப்ரெண்ட் தயா, உங்க ஃப்ரெண்ட் குறிஞ்சியைக் கூட்டிட்டு வர சென்னை எடுத்துட்டுப் போனான் இல்ல? அதைத் திருப்பி வாங்கிட்டு போக, நான் வந்தேன். எனக்குக் கார் அவசரமா தேவைப்படுது அதுக்காக வந்தேன். ஆனா” என்று இழுத்து நிறுத்தினான்.

“உங்களுக்கு என்னைப் பார்த்தாலே வேற ஞாபகம் வருது போலயே? நான் கார் வாங்க வந்தா நீங்க நம்ம கல்யாணம் பத்தி பேசுறீங்க. ம்ம், உங்களுக்குத் தொல்லையா தெரிஞ்சாலும் நீங்க பேசுறத கேட்க எனக்குச் சில்லுன்னு இருக்கே துர்கா” என்றான் குறுநகையுடன். அவனது பார்வை அவளின் கண்களை விட்டு விலகவில்லை. அப்படியொரு நேர்பார்வை. குறி பார்த்து அம்பை பிடித்தது போல அவள் கண்ணிலிருந்து நகரவில்லை அவன் கண்கள்.

துர்காவுக்கு அந்தப் பார்வையும் பேச்சும் குறுகுறுப்புக்குப் பதில் மனக் குழப்பத்தையே தந்தது. தடுமாறும் தன் மனதை சரியான தடத்தில் இழுத்துப் பிடித்தாள்.

“கார் சாவி வேணும்னு நேரா கேட்க மாட்டீங்களா? தயாக்கு கால் பண்ணா அவனே வந்து எடுத்துக் குடுத்துருக்கப் போறான். அதை விட்டுட்டு எதுக்காக இப்படி வீடு வரைக்கும் வந்து தொல்லை பண்றீங்க? என் தம்பி கல்யாணத்துக்காக நாளைக்குக் காலையிலேயே எங்க வீட்டுக்கு ரிலேட்டிஸ்லாம் வந்துடுவாங்க. அப்பயும் இங்க வந்து இப்போ உளறின மாதிரி என்னத்தையாவது எல்லோர் முன்னாலயும் உளறி வைக்காதீங்க. எங்க அத்தை கேட்டுட்டு சும்மா இருக்க மாட்டாங்க” என்று அவள் சொன்னதும், அவன் கண்கள் இடுங்கின.

“என் அத்தை பையனை… கல்யாணம் பண்ணிக்க நான் சம்மதம் சொல்லிட்டேன்”

“யாரு அந்தப் பொறுக்கி நாயையா?”

“தேவையில்லாம பேசாதீங்க. என் அத்தை மகனைத்தான் நான் கல்யாணம் செஞ்சிக்கப் போறேன். இதுக்கு மேல என் வழியில நீங்க வராதீங்க. அவ்ளோதான் சொல்வேன்” என்று கறாராகச் சொன்னாள். அவள் முகம் பார்த்து மௌனமாக நின்றிருந்தான் ஶ்ரீகாந்த்.

குறிஞ்சி ரோஜாவுடன் அங்கே வந்திருக்க அவர்களின் இறுதி பேச்சை அவளும் கேட்டிருந்தாள். அதிர்ச்சி வருத்தம் கோபம் எனக் கலவையான உணர்வுடன் நின்றிருந்தாள்.

“இன்னமும் எதுக்கு இங்கேயே நின்னுட்டு இருக்கீங்க? இதுக்கு மேல நான் என்ன சொல்லணும்னு எதிர்பார்க்கிறீங்க?” துர்கா எரிச்சலுடன் கேட்க, “கார் சாவிய எடுத்துக் கொடுத்தா இப்போதைக்கு என் காரை எடுத்துட்டு நான் போகப் போறேன்.” இப்போதைக்கு என்பதில் அழுத்தம் கொடுத்துச் சொன்னான். “தயாக்கு போன் பண்ணேன். அவன்தான் வீட்ல போய்ச் சாவி வாங்கிக்கோ மச்சான்னு சொன்னான். இப்போ சாவியை எடுத்துட்டு வந்து தர்றீங்களா? இல்ல, நான் இங்கேயே இப்படியே நின்னு உங்களோட பேசணும்னாலும் எனக்கொரு அப்ஜெக்ஷனும் இல்ல” என்று தோள் குலுக்கினான்.

துர்கா அவனை முறைத்து நிற்க, ஶ்ரீகாந்த்தை கண்டதும் குறிஞ்சியின் கையை உதறி விட்டு, “ஶ்ரீக்கா” என்று அவனிடம் ஓடினாள் ரோஜா.

“பட்டு ரோஜா” என்று கொஞ்சி அவளைக் கையில் அள்ளிக் கொண்டான் அவன்.

இப்போது மகளையும் சேர்த்து முறைத்து துர்கா உள்ளே செல்ல, “வீட்டுக்குள்ள வாங்க அண்ணா” என்று அவனை அழைத்தாள் குறிஞ்சி.

“யாரு வந்திருக்காங்க துர்கா?” என்று நாச்சம்மை கேட்க, “கார் சாவி எங்கம்மா?” என்று அவரிடம் கேட்டாள் துர்கா.

அவர் வாசலை எட்டிப் பார்த்துக் கார் சாவியை எடுத்துக் கொடுத்தார்.

“துர்கா சொல்றது உண்மையா குறிஞ்சி? அவங்க அத்தை பையனுக்கு ஓகே சொல்லிட்டாங்களா?” குழந்தைக்குத் தெரிய கூடாது என்று அவளின் காதை பொத்திக் கேட்டான். ரோஜா அது விளையாட்டு என நினைத்து சிரிக்க, அவனும் புன்னகையுடன் குறிஞ்சியின் முகத்தைப் பதிலுக்காகப் பார்த்து நின்றான்.

குறிஞ்சிக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. அவளின் அமைதியே அவனுக்குப் போதுமான பதிலை தந்திருக்க, அவனது முகம் புன்னகையைத் தொலைத்தது.

இரண்டு நிமிடங்களில் காரெடுத்தவன் முகம் அத்தனை கடினமாக இருந்தது.

error: Content is protected !!
Scroll to Top