நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 8 (1)

தயாபரன் நேராகத் துர்காவிடம் சென்றான்.

“நான்தான் டைம் எடுத்துக்கோன்னு சொன்னேன் இல்லக்கா. எதையுமே நிதானமா யோசிச்சு ஒரு முடிவெடுக்க மாட்டியா நீ?” என்று அவனையும் அறியாமல் குரல் உயர்த்தி விட்டான். குறிஞ்சி வேகமாக அவன் கையில் இருந்த ரோஜாவை வாங்கிக் கொண்டாள்.

குறிஞ்சியின் கண்கள் துர்காவை குற்றம் சாட்டின. அவளுக்கும் துர்காவின் முடிவில் உடன்பாடில்லை என்பதைத் தன் உடல் மொழியிலேயே அப்பட்டமாக வெளிப்படுத்தினாள்.

“அவளே இப்பத்தான் சரின்னு சொல்லியிருக்கா, நீ வேற ஏன்ப்பா தயா திரும்ப அவளைக் குழப்பி விடுறது போலப் பேசுற?” என்று மகனிடம் ஆற்றாமையுடன் கேட்டார் நாச்சம்மை.

“கல்யாணத்துக்குச் சரின்னு சொல்லிட்டா இல்லம்மா, அதை மட்டும் பாருங்க. மாப்பிள்ளை கண்டிப்பா லக்ஷ்மணன் மச்சான் கிடையாது. அதுக்கு நான் ஒரு நாளும் ஒத்துக்க மாட்டேன்” என்று அம்மா, அக்கா இருவரையும் பார்த்துத் திட்டவட்டமாகச் சொல்லி விட்டான்.

“தயா”

“நீ ஒன்னும் சொல்ல வேணாம்க்கா. நீ என்ன கேட்ட? ரோஜாவை நீயே வளர்க்கணும்னுதானே? அதுக்கு நான் மறுத்தேனா? இல்லதானே? ஆனா லக்ஷ்மணன் மச்சான நீ கல்யாணம் பண்ணிக்கறதா இருந்தா நான் சத்தியமா ரோஜாவை உன்கிட்ட குடுக்க மாட்டேன் கா.”

“டேய், என்னடா தம்பி இப்படிப் பேசுற? மனசாட்சியே இல்லாம..”

துர்கா அழுகையுடன் கேட்க, “நீயும் மனசாட்சியைத் தொட்டு சொல்லுக்கா. அந்த ஆளை நம்பி ரோஜாவை நீ அவரோட ஒரு நாள் தனியா விடுவியாக்கா?” என்று அவன் கோபமாகக் கேட்க, துர்காவின் அழுகை கூடியதே தவிர அவளால் பதில் சொல்ல முடியவில்லை.

“ஊர் உலகத்துக்குப் பயந்து எவ்ளோ மோசமானவன் வந்தாலும் மகளைப் பிடிச்சு அவனுக்குக் கட்டி வச்சு, அவளை வீட்டை விட்டு துரத்தி விட்டுறணும்னு நினைக்கறியாம்மா நீ?” இப்போது அம்மாவிடம் அவன் திரும்ப, “அம்மா அப்படி நினைப்பேனா தயா? நீதான் உங்கக்கா மேல இருக்கப் பாசத்துல உலக நடப்பு தெரியாம பேசுற. உங்க அத்த கொஞ்சம் அதிகமா வாய் பேசினாலும் துர்காவ நல்லா பார்த்துக்கும்ப்பா. உங்கப்பா கொஞ்சம் அதட்டி வச்சா, அவருக்குப் பயந்து லக்ஷ்மணனும் ஒழுங்கா இருப்பான். அவனும் திருந்திட்டான்னு சொல்றாங்கல்ல? நான் விசாரிக்க வரைக்கும் இப்போ சமீபமா அவனைப் பத்தி தப்பான பேச்சு ஒன்னும் வரலப்பா. துர்கா நம்ம கண்ணு முன்னாடியே இருப்பா அதை யோசிச்சு பாரு” என்று மகளுக்கு மூளை சலவை செய்தது போலவே மகனையும் சம்மதிக்க வைக்க முயன்றார்.

அவனோ மறுப்பாகத் தலையசைத்து, “ம்ஹூம், எனக்கு மனசு ஒப்பலம்மா. அப்பாவும் நானும் சரின்னு சொல்லாம நீங்க அத்தைக்கிட்ட எதுவும் இந்த விஷயமா பேசி வைக்காதீங்க, சரியா?” என்று கேட்டான்.

நாச்சம்மை கோபமாக உள்ளே சென்று விட்டார்.

தயா, குறிஞ்சி வெளியே பேசிக் கொண்டிருக்கும் போது துர்காவிற்கு அத்தனை அழுத்தம் கொடுத்திருந்தார். கடந்த சில மாதங்களாகவே அதைத்தான் செய்கிறார். மகனின் திருமணமே அதன் பொருட்டு முடிவானதுதானே. இப்போது அந்த நாள் நெருங்க நெருங்க மகளுக்கு இன்னுமே நெருக்கடி கொடுத்தார்.

“தம்பிக்கு கல்யாணமாகையில அக்கா நீ தனியா நின்னுட்டு இருந்தா நல்லாவா இருக்கும். நீயே சொல்லு துர்கா?”

“கல்யாணத்துக்கு வர்றவங்க உங்கப்பா, தம்பிக்கு பயந்து கேள்வி கேக்க மாட்டாங்கன்னு வச்சுக்கோ. ஆனா நீயும் கொஞ்சம் யதார்த்தத்தை யோசிச்சு பாரு. எல்லா வீட்லயும் எதுக்காகத் தங்கச்சி இருக்கும் போது அண்ணனுக்குக் கல்யாணம் பண்றது இல்ல?”

“ஏன்னா பொம்பளை புள்ள கல்யாணமாகாம வீட்ல இருக்கையில, புதுசா கல்யாணம் ஆனவங்க சந்தோஷமா இருக்கச் சங்கோஷப்படுவாங்க இல்ல? அவங்க சும்மா பேசி சிரிக்கறத பார்த்துச் சின்னப் புள்ள மனசு கலைஞ்சுற கூடாதுன்னுதான் அதுக்கு மொத கல்யாணத்தை முடிச்சு அனுப்பறது” என்றார்.

“ம்மா” என்று கண்டனமாக அழைத்தாள்.

“ரெண்டு பேருக்கும் சங்கடம் துர்கா. பொம்பள புள்ளைய குறை சொல்லல நானு, புரிஞ்சுக்கோ”

“….”

“நாளைக்குத் தயாக்கு கல்யாணமானாலும் நீ தனியா இருக்கையில அவன் முழு மனசா குறிஞ்சியோட இதே வீட்ல சந்தோஷமா இருந்திடுவானா நீயே சொல்லு?”

“அவன் என்னைக்காவது குறிஞ்சி கிட்ட தனியா பேசி நீ பார்த்திருக்கியா? சிரிச்சு பேசி நீ பார்த்திருக்கியா? என்னமோ அதிசயமா இப்பத்தான் அவளைக் கூட்டிட்டு வர்றேன்னு சென்னை வரைக்கும் போயிட்டு வந்திருக்கான். அது கூட அவங்களுக்குள்ள ஏதோ பிரச்சனை போல. இல்லனா அவளைக் கூப்பிடவும் போய் இருக்க மாட்டான் உன் தம்பி. ம்ம்ம், இப்பவே இப்படி இருக்குதுங்க ரெண்டும். இதுல நாளைக்குக் கல்யாணமாகி உன் பிரச்சனையும் சேர்ந்தா அவன் உன்னைப் பார்ப்பானா? இல்ல, அவன் வாழ்க்கையைப் பார்ப்பானா?” என்று கேட்டிருந்தார். அவரின் கேள்விகள் துர்காவுக்கும் இருந்ததுதான். அதையெல்லாம் அவளும் யோசிக்காமல் இருப்பாளா என்ன? அம்மாவின் பேச்சு தந்த அழுத்தம் அவளை உடனடியாக முடிவெடுக்கத் தூண்டியது.

எப்போதும் அவசரமாக முடிவெடுத்து, அது தவறாகி போனதும் சாவகாசமாக அழுவதுதான் அவள் வாடிக்கை.

இப்போதும் திருமணம் என்று யோசித்தால், அவளை மணக்க கேட்ட ஶ்ரீகாந்தின் முகம்தான் அவள் கண் முன் வந்தது. ஆனால், அது நடக்காது. சரியும் வராது. அவளைப் போல ஒருத்தி ஶ்ரீகாந்த் போன்ற நல்லவனுக்கு வேண்டாம்.

அவள் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்ததே தம்பிக்காகத்தான். அதுவும் பெற்றோர் வற்புறுத்தியதால் மட்டுமே. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்பதுதான் தயாவின் விருப்பமும். ஆனால், அதற்காக அவளது விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்திட மாட்டான் அவன்.

அப்படிப்பட்ட தம்பியின் சந்தோஷத்திற்குத் தான் தடையாக நிற்பதா? என்ற அம்மாவின் கேள்வியே இப்போது அவளுக்கும் வர, தீவிர யோசனையுடன் அமர்ந்திருந்தவள் முன்புதான் தயாவும், குறிஞ்சியும் மகிழ்வான முகத்துடன் உள்ளே வந்தார்கள்.

அவர்களின் அந்த மகிழ்வு நிலைக்க, அவள் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால், அதற்கு அவள் நிச்சயமாகத் தயாராகிடுவாள்‌. அக்கணம் தன் மனம் மாறும் முன் முடிவை அம்மாவிடம் சொல்லி விட்டாள்.

தயாபரன் அந்த முடிவை முழுமையாக நிராகரித்துச் சென்றிருக்க, செய்வதறியாது திகைத்து அமர்ந்திருந்தாள் துர்கா.

தயா அதற்குள் வெளியே செல்லத் தயாராகி வந்தான். “நான் கடை வரைக்கும் போயிட்டு வர்றேன்ம்மா” என்றவன், துர்கா, குறிஞ்சி இருவருக்கும் தலையசைப்பை தந்து விட்டுச் சென்றான்.

அவன் கடைக்குச் சென்றதும், கல்யாண வேலைகளைப் பார்க்க வெளியில் சென்று விட்டார் பழனியப்பன்.

இங்கே வீட்டில் துர்காவை முறைத்துக் கொண்டிருந்தாள் குறிஞ்சி.

“சும்மா என்னை முறைச்சு முறைச்சு பார்க்காம திட்டி தொலை” துர்கா கடுப்புடன் சொல்ல, “அக்காக்கும் தம்பிக்கும் என்னைப் பார்த்தா எப்படித்தான் இருக்குமோ தெரியல. அப்படியே என்னைக் கண்டதும் எண்ணெயில விழுந்த தண்ணி மாதிரி தெறிக்கறீங்களே” என்று குறிஞ்சி பல்லைக் கடித்துச் சொல்ல, அவள் சொன்ன உவமையைக் கற்பனை செய்து சத்தமாகச் சிரித்து விட்டாள் துர்கா.

அம்மாவின் சிரிப்பைக் கண்டு ரோஜாவும் அழகாய் சிரித்தாள். நாச்சம்மை வேகமாகக் கூடத்தை எட்டிப் பார்த்து புன்னகையுடன் உள்ளே சென்றார்.

“துர்கா, நீ எனக்கொரு ப்ராமிஸ் பண்ண. பதிலுக்கு நான் உனக்கொரு ப்ராமிஸ் பண்ணேன். ஞாபகம் இருக்கா?”

“ம்ம்ம்”

“நான் செஞ்ச சத்தியத்தை, எங்க கல்யாணத்துக்கு முன்னாடியே உனக்குக் காப்பாத்தி குடுத்துட்டார் தயா”

“ம்ம், நடக்கட்டும். என் தம்பிக்கு இப்பவே சப்போர்ட்டா?”

“சப்போட்டா கொய்யாலாம் இல்ல. நான் கொடுத்த வாக்கை, அவர் காப்பாத்தி கொடுத்துட்டார். பதிலுக்கு நீயும், நீ சொன்னதைச் செஞ்சிடு. அவ்ளோதான் சொல்வேன். ரோஜா உன்கிட்டயே இருப்பான்னு தயா சொல்லிட்டார்தானே?”

“நேரா விஷயத்துக்கு வா குறிஞ்சி”

“ரொம்பச் சலிச்சுக்காத துக்கா” என்று அவள் பெயரை கேலி செய்து, நாக்கை நீட்டி பழிப்பு காட்டினாள். “எனக்குக் குடுத்த ப்ராமிஸை காப்பாத்த நீயும் சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கற. அப்புறம் எங்க கல்யாணத்துல ஒழுங்கா வந்து எல்லாத்துக்கும் பொறுப்பான நாத்தனாரா முன்னாடி நிக்கற, கேட்டுச்சா?” என்று அவளின் காதில் கத்தினாள்.

துர்கா தன் காதைத் தேய்த்து அவளை முறைக்க, அந்தக் கேட்டுச்சாவை மட்டும் கவனித்து, “கேட்டுச்சு கேட்டுச்சு” என்று கத்தினாள் ரோஜா.

ரோஜாவின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு, “அப்படிச் சொல்லுடி என் பட்டு ரோஜா” என்று கொஞ்சினாள்.

அந்தப் பட்டு ரோஜா என்ற கொஞ்சல் துர்காவுக்கு ஶ்ரீகாந்த்தை நினைவூட்டியது. வலிந்து அவனது நினைவை உதறினாள்.

“துர்கா” குறிஞ்சி அழைக்க,

“பெரியவங்க மாதிரி நீயும் என்னை நெருக்காத குறிஞ்சி” என்றாள் வெறுப்புடன்.

“எல்லாத்துக்கும் தொட்டா சிணுங்கி மாதிரி முகத்தைச் சுருக்கிட்டு இருக்காம, நல்லா சிரிச்ச முகமா, என் கல்யாணத்துக்கு வான்னு சொல்ல வந்தேன். அதுக்கும் மூஞ்சிய காட்டுற துர்கா நீ” என்று முறுக்கிக் கொண்டாள் குறிஞ்சி.

“அச்சோ சாரி குறிஞ்சி” என்று அவளின் கைப் பிடித்தாள், “என் கையை விடு, எனக்கு உன்னை விட்டா க்ளோஸ் பிரெண்ட் யாரு இருக்கா சொல்லு? நீதானே எனக்காக என் கூடவே இருக்கணும்?” என மனம் கரையும் விதமாகப் பேசினாள் குறிஞ்சி.

“உனக்கு வேற பிரெண்ட்டே இல்லயா? பொய் கோழி, எப்படி அடிச்சு விடுறா பாரு”

“அவங்கல்லாம் எனக்காகச் சென்னையில இருந்து வேலைக்கு லீவ் போட்டு இங்க வருவாங்களான்னு டவுட்தான். ஆனா நீ அப்படியில்ல இல்ல? எனக்காக என்ன வேணாலும் செய்வதானே?” குறிஞ்சி தன் போக்கில் சாதாரணமாகச் சொல்ல, அதுவே துர்காவின் மனதை முழுமையாகக் கரைத்து விட்டது.

“உன் கல்யாண ப்ளவுஸ் தச்சு வந்துருச்சே அதைப் போட்டு பார்த்தியா?” என்று கேட்டாள்.

“இல்லையே?” என்று குறிஞ்சி உதடு பிதுக்க, “சரி வா, இப்போ போட்டு பார்ப்போம்” என்று எழுந்தார்கள்.

error: Content is protected !!
Scroll to Top