“அம்மா இங்கருந்தா கண்டிப்பா அத்த மாமாவ விட்டுட்டு தனியா எங்கயும் வர மாட்டாங்க. அவங்க இங்கருக்க வரைக்கும் நம்ம ஹோட்டலுக்கு வேலைக்கு வராமயும் இருக்க மாட்டாங்க. அவங்களால சும்மா வீட்ல இருக்கவும் முடியாது. அதுனால அவங்களை என்னோட சென்னை கூட்டிக்கலாம்னு நினைச்சேன். நான் கொஞ்சம் வருஷம் வேலை பார்த்து, காசு சேர்த்து வச்சு இங்கேயே இடம் வாங்கி, சின்னதா அம்மாக்காக, எங்களுக்காக ஒரு வீடு கட்டிக்கணும்னு ஆசைப்பட்டேன். அதுக்கப்புறம் அம்மா ஆசைப்படி இங்கேயே வந்து செட்டிலாகிடுற பிளான்”
“தப்பில்ல” என்று ஒரே வார்த்தையில் அவளின் ஆசைகளை, கனவுகளை அங்கீகரித்தான் அவன்.
“இங்க பாரு குறிஞ்சி, நான் கல்யாணம் பண்றது குடும்பம் நடத்த, உன் கனவையெல்லாம் நிஜமாக்கி காட்டுவேன்னு வசனம் பேச நான் சினிமா ஹீரோ இல்ல. புரிஞ்சுதா?” என்று முன்பு கத்தியவன், இப்போது அமைதியாக நின்றான்.
திடீரென்று, “நம்ம ஹோட்டல்னு சொன்னியே, அதுவரைக்கும் சந்தோஷம்” என்றான்.
அவள் அதிர்ந்து விழிக்க, “ஓ, அப்போ அந்த வார்த்தை தானாவே உன் மனசுல இருந்து வந்திருச்சா? அது இன்னும் பெட்டர்” என்று புன்னகைத்தான்.
அந்தப் புன்னகை அவன் முகத்துக்கு அதீத வசீகரத்தை கொடுத்திருக்க, இமைக்காமல் அவனையே பார்த்து நின்றாள்.
“குறிஞ்சிக்கு கொஞ்சமா என்னைப் பிடிக்குது போலயே?” என்று புருவம் உயர்த்தினான்.
“மாத்தி மாத்தி பேசாதீங்க” என்று அவள் முணுமுணுக்க, “ஆமால்ல” என்று சிரிப்புடன் சொன்னவன், “சரி, இப்போ என்ன செய்யலாம்னு சொல்லு குறிஞ்சி. தெரிஞ்சோ தெரியாமலோ நாம ரெண்டு பேருமே இந்தச் சிக்கலுக்குள்ள நிக்கறோம். நம்ம ரெண்டு பேர் குடும்பமும் இருக்குது. நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி, எனக்குக் குறிச்ச தேதியில கல்யாணம் நடக்கணும் குறிஞ்சி. எக்காரணத்தைக் கொண்டும் நான் அதை மாத்த மாட்டேன். உன்னால முடிஞ்சா..” என்று நிறுத்த,
“முடிஞ்சான்னு முடிக்காம நிறுத்தினா எப்படி? சொல்லி முடிங்க” என்றாள்.
“என்ன சொல்ல? என்னால சினிமா ஹீரோ போல வசனம் பேச முடியாது, எனக்கு அது வரவும் வராது. தெரியவும் தெரியாது. நீயும் சும்மா கனவு காணுறத விட்டுட்டு நிஜத்துக்கு வா குறிஞ்சி” என்றான்.
“நிஜத்தை நான் ஏத்துக்கிறேன்”
“என்ன நிஜம்?” அவன் இடக்காகக் கேட்க, “நீங்க, உங்களோட கல்யாணம். எனக்கு ஓகேன்னு சொன்னேன்” என்றாள் அவன் கண் பார்த்து.
“நீ சொல்றதை கேட்கவே மனசு குளிர்ந்து போகுது குறிஞ்சியாத்தா. இவ்ளோ கேவலமா யாரும் கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லியிருக்க மாட்டாங்க” என்று நக்கலாகச் சொன்னான்.
“உங்களுக்கு மட்டும் பிடிச்சா என்னைக் கல்யாணம் பண்றீங்க? நீங்களும் உங்க குடும்பம், உங்க அக்கா, ரோஜான்னு எல்லோருக்காகவும் யோசிச்சு, வேற வழியில்லாமதானே என்னைக் கல்யாணம் பண்றீங்க?” என்று கேட்டே விட்டாள். எத்தனை முயன்றும் அவள் குரலில் வருத்தம் வெளிப்படையாக வெளிப்பட்டிருந்தது.
அதுவரை இருந்த கடுமையும், அசட்டையும் அவன் முகத்தில் இருந்து கணத்தில் நீங்கிட, சுவாரசியமாக அவளைப் பார்த்தான்.
“நீ சொல்ற காரணங்கள் சரி. ஆனா உன்னை ரொம்பப் பிடிச்சுதான் கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்னேன் குறிஞ்சி. உன்னைப் பிடிக்காம இப்படி உன் கைப் பிடிச்சுட்டு பக்கத்துல நிக்கறதுலாம் என்னால முடியாது. உன்னைப் பிடிச்சதாலதான் இப்படிப் பிடிச்சுட்டு நிக்கறேன்” என்றான். அவன் பேச்சு, அவன் பார்வை அவளைக் குழப்பியது. அதே நேரம் முரணாக தெளிவும் தந்தது.
அவன் பிடித்திருந்த தன் கரத்தை குனிந்து பார்த்தாள்.
எப்போது தன் கைப் பிடித்தான் என்ற குழப்பம் அவள் கண்களில் வெளிப்பட்டது.
அதை உணர்ந்ததைப் போல, “இப்பத்தான் பிடிச்சேன். உனக்கும் பிடிக்காம இல்ல போலயே.” என்றான் மெலிதான முறுவலுடன்.
அவன் பார்வையில் என்ன இருந்தது? ரசனையா, பரிவா? பிரியமா? அல்லது அதற்கு மேல் ஏதாவதா? அதற்கெல்லாம் வாய்ப்பில்லையே.
என்ன பார்வை அது? அவனது முரட்டு குணத்துக்கும், முசுட்டு முகத்துக்கும் துளி கூடச் சம்மந்தமே இல்லாத அந்தப் பார்வை அவளைக் குழப்பியது.
“எனக்கும் உங்களைப் பிடிக்கும் தயா. ஆனா கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு..”
“முதல்ல சொன்னியே அதுவே போதும் குறிஞ்சி. மத்தது தானாவே நடக்கும். ரொம்ப யோசிச்சி மனச போட்டு குழப்பிக்காத.” என்று அவளின் கையை அழுத்திச் சொன்னான்.
“உன் ஆசை, கனவு அதையெல்லாம் நாளைக்கே நிறைவேத்த நான் ஹீரோ இல்ல குறிஞ்சி. அதுக்காக ஒரேடியா ஒதுங்கிப்பேன்னும் சொல்ல மாட்டேன். நமக்காகக் காலம் என்ன வச்சிருக்குன்னு தெரியல. கொஞ்சம் வெயிட் பண்ணித்தான் பார்ப்போமே” என்றான் அவள் கண்ணோடு கண் பதித்து.
குறிஞ்சி எச்சில் கூட்டி விழுங்கினாள். அவள் தலை தானாக ஆடவும், அவன் முகம் தெளிந்தது.
“எனக்கு உன்னைப் பிடிக்கும். இப்போதைக்கு அது போதும்தானே? நான் இறுக்கி பிடிச்சா நீயும் என்னை லேசா பிடிச்சுக்க மாட்டியா என்ன?” கண் சிமிட்டி அவன் கேட்க, “ஐயோ, நீங்க கடுவன் பூனை போலக் கத்திட்டே இருங்க. அதான் உங்களுக்குச் சூட்டாகுது. அதை விட்டுட்டு இப்படியெலாம் ஹீரோ மாதிரி நீங்க வசனம் பேசினா எனக்குப் பயந்து படபடன்னு வருது” என்று அவள் உதடு சுழித்துச் சொல்லவும் பக்கென்று சத்தமாகச் சிரித்து விட்டான்.
சிரிப்பில் இளமையாகத் தெரிந்தான். முன்னுச்சி முடிகள் காற்றுக்குக் கலைந்து அவன் நெற்றியில் புரண்டு அவனுக்குக் கவர்ச்சி கூட்ட அவள் பார்வையில் ரசனை கூடியது.
அந்தப் பார்வை அவனை ஈர்க்க, அவள் கரத்தை விடுத்து தோள் பற்றிச் சேர்த்தணைத்தான். அவள் தலை தானாக அவன் நெஞ்சில் சாய்ந்தது. அவன் அதை எதிர்பார்த்திருக்கவில்லை.
நேசம் நிறைந்த நெஞ்சம் பலமாய் அதிர, இதயத் துடிப்பு ஏகத்துக்கும் எகிறியது. அனிச்சையாக நாணேற்றிய வில் போல உடல் இறுகி நிமிர்ந்தது.
“சென்னையில இருந்துதான் அம்மாவை நல்லா வச்சுக்கணும்ன்னு இல்லையே. இங்கருந்தே அம்மாவை நல்லா பார்த்துப்பேன்” என்றாள் அவன் மார்பிலிருந்து முகத்தை நிமிர்த்தி.
“ம்ம்ம்” என்றான். வீட்டின் வெளிப்பகுதி யாரேனும் வரக் கூடும் என்பதால் அவளை விட்டு விலகி நின்றான் தயா.
“போனா போகுதுங்கற மாதிரி, வேற வழியே இல்லாம சரின்னு ரொம்பச் சலிச்சுட்டு சொல்ற போல இருக்கே குறிஞ்சியாத்தா. உனக்கு இருக்கக் கொஞ்ச அறிவை கொஞ்சமா யூஸ் பண்ணி நல்லா யோசிச்சு பாரு. எல்லாமே நல்லதா தெரியும். காலம் முழுக்க உங்கம்மா உன் பக்கத்துலயே இருக்கப் போறாங்க. அது உனக்குக் கசக்குதா? உங்கம்மா நீ எட்டிப் பார்க்கற தூரத்தில இருக்கப் போறாங்க. அப்புறம்..”
“அதுனால உங்களை ஏத்துக்கறேன்” என்றாள் அவசரமாக.
“நீ என்னை ஏத்துக்கவே வேணாம் போடி. வந்துட்டா. எங்கக்கா, உங்கம்மான்னு காரணம் சொல்ல..” என்று கோபமாகச் சீறி சட்டையில் சிகரெட்டை தேட அது இல்லையென்றதும் கோபத்துடன் சலித்தான். அவள் முறைக்கவும் சட்டைப் பையைப் பிதுக்கி காண்பித்து, “என்ன முறைப்பு? என்கிட்ட வேற சிகரெட் இல்ல. என்னை என்ன செயின் ஸ்மோக்கர்னு நினைச்சியா? நீ சொல்லுவியே தலைவலி. அது வந்தா மட்டும்தான் சிகரெட்டை தேடுவேன் நான். அது இல்லனா டென்ஷனை சமாளிக்க முடியாது” என்று கடுப்புடன் சொல்லி விட்டு, விலகி, வேகமாக வீடு நோக்கி நடந்தான்.
“தயா..” எட்டி அவன் கைப் பிடித்தாள். சட்டென அவன் நடை நின்றது. ஆனாலும் திரும்பவில்லை அவன்.
“சாரி. நானும் எல்லாத்தையும் சரி பண்ணணும்னுதான் நினைக்கறேன். என் கனவை எல்லாம் விட்டுட்டு ரியாலிட்டிய ஏத்துக்க டைம்” என்றவள் நா கடித்து, “இல்லயில்ல நிஜத்தை சீக்கிரமே ஏத்துப்பேன். என் அம்மா மட்டுமில்ல, அத்த மாமா, துர்கா, நீங்க யாரும் தலை குனியற மாதிரி என்னைக்கும் நடந்துக்க மாட்டேன். பிராமிஸ்” என்றாள்.
“துர்கா விஷயத்துல நீங்க என்ன முடிவெடுத்தாலும், ரோஜாவை நாளைக்கு நாம வளர்க்கணும்னாலும்.. இல்ல ரோஜா, துர்கா எப்பவுமே உங்களுக்கு முக்கியம்னு தெரியும். அதான், உங்க முடிவுகள்ல..” என்று அவள் தடுமாற, தயா மெல்லத் திரும்பினான்.
“எல்லா நேரமும் வார்த்தைகள் முக்கியம் இல்ல போலவே குறிஞ்சியாத்தா” என்றான் தீவிரமாக. அவள் சொல்ல வந்ததைப் புரிந்து கொண்டான் என்றது அவன் பார்வை. அவளுக்கு அதுவே போதுமானதாகயிருந்தது. இருவர் மனதில் இருந்த குழப்பமும் பாரமும் விலக ஆசுவாசத்துடன் அமைதியாக நின்றார்கள்.
“குறிஞ்சி” நாச்சம்மை உள்ளிருந்து அழைக்கவும், “வா உள்ள போகலாம்” என்று தயா முன்னே நடக்க, அவனைப் பின் தொடர்ந்தாள் அவள்.
“குறிஞ்சி” என்று கத்திக் கொண்டு ஓடி வந்தாள் ரோஜா. தயா அவளைத் தூக்கிக் கொள்ள, கூடத்தில் அமர்ந்து இருவரையும் ஆராய்ச்சியாகப் பார்த்திருந்த துர்காவின் முகம் புன்னகையில் மலர்ந்தது.
அவளுக்கு மிகவும் பிடித்த இருவரின் வாழ்வும் இணையப் போகிறது. அதுவும் அவர்களுக்குப் பிடித்தே எனும் போது அவளால் எப்படி மகிழாமல் இருக்க முடியும்?
“அம்மா, நாளைக்கு அத்தை வரும் போது, நான் சரின்னு சொன்னேன்னு சொல்லிடுங்கம்மா” என்று நாச்சம்மையிடம் நேரடியாகச் சொல்லி விட்டாள் அவள்.
அதைக் கேட்டு தயா இறுகி நின்றான். குறிஞ்சி அதிர்ச்சியுடன் அங்கிருந்த மூவரையும் மாறி மாறிப் பார்த்தாள்.
“என் நெஞ்சுல பால வார்த்துட்ட துர்கா” என்று ஆனந்த கண்ணீருடன் சொன்னார் நாச்சம்மை.