நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 7 (1)

குறிஞ்சி அவன் பார்வையில் குழையவெல்லாம் இல்லை.

“சுய்யம் எடுத்துக்கோங்க. உங்களுக்காகச் செஞ்சது” என்ற இரண்டாம் வரியை அவள் சேர்த்து சொல்லவும், “அப்டியா?” என்ற கூர்பார்வையுடன் நோக்கி அவள் புறமாக ஓரெட்டு வைத்தான்.

“நான் செய்யல, அம்மாதான்”

“அதானே பார்த்தேன். குறிஞ்சி ஆத்தாக்கு என் மேல கருணை வந்தாதானே ஆச்சர்யப்படணும்”

“நான் ஏன் உங்கமேல கருணை காமிக்கணும்?” என்று அவள் முறைக்க, “இந்த முறைக்கிற வேலையெல்லாம் வச்சுக்காதன்னு ஏற்கனவே சொல்லியிருக்கேனா இல்லையா? முழியை நோண்டிருவேன்” வெகுசாதாரணமாகச் சொல்லி விட்டு தேநீரை அருந்தினான்.

“ம்ம்” என்று அவள் முகம் திருப்ப, “என்னைக் கட்டிக்கிட்ட பின்னாடி கருணை தானே வந்துடும். ரொம்ப ஃபீல் பண்ணாத” என்று அவன் சொல்ல, சிரிப்பில் பிரிய போன இதழ்களை இழுத்துப் பிடித்தாள் குறிஞ்சி.

“உனக்கு டீ எடுத்திட்டு வரல?”

“இல்ல, இருக்கட்டும். நீங்க குடிங்க”

“ஓ, அப்போ உனக்கு எடுத்துட்டு வந்த டீயைதான் எனக்குத் தந்துட்டியா?” அவன் கேள்வியில் அவள் கண்கள் பெரிதாக விரிய, “பரவாயில்ல குறிஞ்சியாத்தா, நல்ல முன்னேற்றம்தான்” என்று சிலாகித்தான்.

“சுய்யம் சூடு ஆறுறதுக்கு முன்னால துர்கா.. மதினிக்கு குடுத்துட்டு வர்றேன்” என்று நழுவினாள்.

“பாரேன், என்கிட்டலாம் சொல்லிட்டு செய்யறா. ம்ம், ம்ம்” என்று அவன் இழுக்க, அவனை முறைத்து விட்டு வீடு நோக்கி நடந்தாள். திரும்பி வரும் போது அவனுக்கு ஒரு சிறிய தட்டில் சுய்யம், சட்னி இரண்டும் எடுத்து வந்து நீட்டினாள்.

அவன் கையில் தேநீர் டம்ளர், உதட்டில் பற்ற வைக்கப்படாத சிகரெட் இருக்க, கடுமையாக அவனை முறைத்து, சிற்றுண்டி தட்டை துவைக்கும் கல்லின் மேல் சத்தமாக வைத்தாள்.

அக்காவின் வாழ்வு குறித்துச் சிந்தனை வயப்பட்டிருந்தவன் அந்தச் சத்தத்தில் கலைந்து அவளைப் பார்த்தான்.

“ஏய், சாப்பாட்டுக்கு மரியாத குடு. இப்படியா டம்னு வைப்ப?” என்று காட்டமாகக் கேட்டான்.

“ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிப்பீங்க?”

“ஏன் இனிமே எத்தனை பிடிக்கணும்னு கண்டிஷன் எதுனா போட போறியா? இல்ல எத்தனைன்னு சொன்னா நீயே வாங்கித் தர போறியா?” என்று நக்கலாகக் கேட்டான்.

“எனக்குப் பிடிக்காதுன்னு‌ தெரிஞ்சும். பிடிக்காதுன்னு‌ நானே சொன்னதுக்கு அப்புறமும் பிடிக்கறீங்கன்னா..”

“உனக்கு என்னைக் கூடத்தான் பிடிக்காது. ஆனாலும் என்ன பண்ண? கல்யாணம் பண்ணிக்கப் போறேனே. நாளைக்கு நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கப் போற மாதிரி இன்னையில இருந்து நீயும்..” என்று அவன் சொல்லி முடிக்கும் முன் இடையிட்டு, “நானும் அட்ஜஸ்ட் செஞ்சுக்கணுமா?” என்று கோபத்துடன் கேட்டாள்.

அவன் இறுகிய உதடுகளுடன் அவளை அழுத்தமாகப் பார்க்க, “உங்களைப் பிடிக்காதுன்னு உங்ககிட்ட சொன்னேனா நான்? இல்ல இந்தக் கல்யாணத்துல எனக்கு விருப்பம் இல்லைன்னு நான் உங்ககிட்ட சொன்னேனா? நீங்களா எதையாவது நினைச்சுட்டு..” என்று படபடத்தாள். மறுநொடி அவளை நெருங்கி நின்றான்.

அவளோ அசையவேயில்லை. அவள் விழிகள் மொத்தமாக விரிந்து அவன் விழிகளுக்குள் புதைந்து கொண்டிருந்தன.

“வார்த்தையால சொன்னா தானா குறிஞ்சி? நீ செஞ்சே காமிச்சுட்டியே?”

“என்ன செஞ்சேன்?” என்று புருவங்களைச் சுருக்கினாள். அவன் முகத்தில் கடுமை கூடியதை அவளால் கண் கூடாகக் காண முடிந்தது.

“என்ன செஞ்சீங்க குறிஞ்சியாத்தா? ஒன்னும் செய்யல. நாலு நாள்ல கல்யாணத்தை வச்சுட்டு ஊருக்கு வர வேண்டிய நேரத்துல வரல. அதைப் பத்தி கேட்டா மட்டும் பதிலே வராது” என்று கடுகடுத்தான்.

“நான் பதில் சொல்றேன். நீங்க டீயை குடிச்சுட்டு இதைச் சாப்பிடுங்க” என்று தட்டை எடுத்து அவனிடம் நீட்டினாள். அவன் சிலையென நிற்க, மெல்ல உயர்ந்த அவள் கரம் அவன் உதட்டில் விரல் போல நீண்டிருந்த சிகரெட்டை உருவியது.

அவள் கண்களைச் சுருக்கி கெஞ்சலாக அவனைப் பார்க்க, ஆறி போன தேநீரை ஒரே மடக்கில் வாயில் சரித்து விட்டு, சுய்யத்தை எடுத்து உண்டான்.

“நீயும் எடுத்துக்கோ” என்றான். அவளும் மறுக்காமல் இரண்டை உண்டாள்.

தயா தட்டில் இருந்த அனைத்தையும் காலி செய்து, கை கழுவி, இயல்பாக அவளின் துப்பட்டாவில் கை துடைத்து நிமிர்ந்து, “ம்ம் இப்போ சொல்லு” என்று அவளை நோக்கினான்.

“நான் அப்படிச் செஞ்சுருக்கக் கூடாது சாரி” எடுத்ததும் தடாலடியாக மன்னிப்பு கேட்டு விட்டாள்.

“சாரியா? எவ்ளோ தளுக்கா அதைச் சொல்லி தப்பிக்கப் பார்க்கற? உன் சாரியெல்லாம் எனக்கு வேணாம். காரணம் என்ன அதைச் சொல்லு? இந்தக் கல்யாணத்துல‌ விருப்பமில்லாம இல்லைன்னு சொல்ற. ஆனா உன் நடவடிக்கை எல்லாம் அதுக்கு நேரெதிரா இருக்குது. விளக்கம் கேட்டா வியாக்கியானம் பேசுவ”

“….”

“சரி உன் போக்குக்கே வர்றேன். அன்னைக்கு உங்கம்மா கால் பண்ணப்போ நீயேன் எடுக்கல? நான் கால் பண்ணப்பவும் ஏன் எடுக்கல?” என்று கறாராகக் கேட்டான்.

“ஊருக்கு வரலன்னு திட்டுவீங்கன்னுதான் போனை எடுக்கல தயா” அவன் நம்பாத பார்வை பார்க்கவும், “சத்தியமா” என்றாள்.

அவன் கண்கள் இடுங்க, “நான் நைட் பஸ் ஏறலன்னதும் அம்மா ரொம்பத் திட்டிட்டாங்க. காலையிலயும் அவங்ககிட்ட பேச்சு வாங்க வேணாம்னுதான் போன் எடுக்கல. நீங்க வரலைன்னாலும் நானே கண்டிப்பா அன்னைக்கு நைட்டு ஊருக்கு வந்திருப்பேன் தயா, நம்புங்க. அம்மாகிட்டயும் சொல்லியிருந்தேன்” என்றாள். அவள் கண்களில் இருந்த உண்மை அவனை நம்பச் சொன்னது.

“அம்மா தலைகுனியற மாதிரி நான் எதுவும் என்னைக்கும் செய்ய மாட்டேன் தயா. உங்களுக்கு என்னைத் தெரியாதா?”

“அப்போ நான், நாங்க தலை குனிஞ்சா உனக்கு ஒன்னுமில்லையா குறிஞ்சி? எங்களை மட்டும் அப்படியொரு இடத்துல நிறுத்துவியா?” என்று அவன் கேட்க, அவன் பார்வையைச் சந்திக்க முடியாமல் கண்களைத் தழைத்தாள்.

“அப்படியெல்லாம் உங்களை நிறுத்த மாட்டேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்”

“அப்படியா?” என்று இடக்காகக் கேட்ட அவன் குரலில் கோபத்தின் தடமிருந்தது.

“என்னை என்ன பண்ண சொல்றீங்க தயா? ஒரு பக்கம் எங்கம்மா, இன்னொரு பக்கம் நீங்களும், உங்க குடும்பமும் நிக்கறீங்க. நான் எங்கம்மாவை பார்ப்பேனா இல்ல எங்கம்மாக்கு வேலை குடுத்து, எங்களுக்கு ஆதரவு குடுத்து, என்னைப் படிக்க வச்சு, நான் இன்னைக்குச் சுயமா நிக்கக் காரணமான உங்க குடும்பத்தைப் பார்ப்பேனா? இல்ல, குழந்தையில் இருந்தே எனக்கு ரொம்ப க்ளோஸான துர்காவை பார்ப்பேனா? இல்ல என்னைத்தான் பார்ப்பேனா?” என்று தழுதழுத்த குரலில் முறையிட்டாள்.

“நீங்க கேட்டப்போ கல்யாணத்துல விருப்பம்னு சொன்னேன்தான். நான் மறுக்கல. ஆனா மனசாரச் சொல்லல தயா” என்றாள்.

தயா இறுக்கமாகக் கண்களை மூடித் திறந்தான். அவன் கரம் அனிச்சையாகச் சிகரெட்டை எடுத்தது.

“தயா பிளீஸ்” குறிஞ்சி அதைப் பறிக்க, “குறிஞ்சி” என்று அவளின் கையை அழுத்தமாகத் தடுத்துப் பிடித்தான்.

“என்னைப் பிடிச்சே நீ கல்யாணம் பண்ணாலும் உனக்காக எனக்குப் பிடிச்சதை என்னால விட முடியாது. இதுல.. ப்ச், சிகரெட்டை குடுடி” என்று மிரட்டலாக மொழிந்தான்.

“பிடிக்கல பிடிக்கலன்னு மூச்சுக்கு முந்நூறு பிடிக்கல சொல்றது நீங்கதான். நான் இல்ல” என்று கோபமாகக் கத்தி, அவன் கண் முன்னே கையில் இருந்த இரண்டு சிகரெட்டையும் துண்டு துண்டாகப் பிய்த்து போட்டாள்.

“பேசாம போயிடு. எனக்கிருக்கக் கோபத்துக்கு..” என்று பல்லைக் கடித்தான்.

“நான் படிச்சு நல்ல வேலைக்குப் போனதும், அம்மாவை இங்கருந்து கூட்டிட்டு போய்டணும்னு நினைச்சிருந்தேன் தயா” அவள் மெதுவாகச் சொல்ல, “என்னது? ஏன்?” என்று அதிர்ச்சியை மறைத்துக் கேட்டான்.

“நீ இங்கிருந்து போகணும்னு நினைச்சிருக்க, ஆனா நாங்க ஒரேயடியா உன்னை இங்க கட்டிப் போடுறோம். ம்ம், கஷ்டம்தான். உன் பிரச்சினை என்னான்னு இப்போ புரியுது. இவனுங்களே என்னைப் படிக்க வச்சானுங்க, ஆதரவா இருந்தானுங்க, அப்படியே அவங்க ஆதாயத்துக்காக, அவங்க மக வாழ்க்கைக்காக என்னை அவங்க வீட்டு மருமகளாக்க பார்க்கறானுங்கன்னு உன்னோட கோபம்..”

“நான் அப்படியெல்லாம் நினைக்கல தயா” என்று கத்தி அவன் சொல்ல வந்ததை முடிக்க விடாமல் செய்தாள்.

“அம்மாவை நல்லா வச்சுக்கணும்ன்னு நினைச்சேன். அது தப்பா? அவங்க வேலைக்குப் போறேன்னு அடுப்புலயும் பொகையிலயும் வெந்து சாகாம, வேர்த்து விறுவிறுத்து போய் இல்லாம, நிம்மதியா நல்லா இருக்கணும்னு ஆசைப்பட்டேன். ஒரு பொண்ணா என் ஆசை தப்பா சொல்லுங்க தயா?” என்று கேட்டாள்.

அவளின், “வெந்து சாகாமல்” என்ற வார்த்தையிலேயே அவன் மனம் வெந்து நொந்து விட்டது. அவனது உணவகத்தைதானே குறிப்பிடுகிறாள்.

அவள் சொன்னதில் இருந்த உண்மை கொதிநீராகச் சுட, அசையாமல் நின்றான்.

error: Content is protected !!
Scroll to Top