நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 6 (2)

“தயா, மூஞ்சி கழுவிட்டு சாப்பிட வாப்பா” என்று மகனை அழைத்தார் நாச்சம்மை.

“நீங்க சாப்பிட்டீங்களா?” அம்மா, அப்பா இருவரையும் பொதுவாகப் பார்த்துக் கேட்டான்.

“அதெல்லாம் ஒரு மணிக்கே சாப்பிட்டாச்சுப்பா. நீ சாப்பிடு. நான் கடை வரைக்கும் போயிட்டு வர்றேன்” என்று நகர்ந்தார் பழனியப்பன்.

“வெயிட் பண்ணுங்கப்பா, நானும் வர்றேன்”

“நீ வீட்டை பாருப்பா தயா” சோர்வுடன் சொல்லி விட்டு வெளியேறினார். அவர் சொன்னதன் உள்ளர்த்தம் அவனுக்குப் புரியாமலா போகும்?

அக்கா, வருங்கால மனைவி என இருவரிடம் பேச வேண்டும். மூன்றே நாள்களுக்குள் அனைத்தையும் சரி செய்ய வேண்டும். வீட்டுப் பெண்கள் சந்தோஷமாக இல்லையென்றால் அந்த வீடு நிம்மதியை இழந்து விடும் என்பது எத்தனை உண்மை?

“எதையும் யோசிக்காம சாப்பிடுப்பா” என்று அவனுக்குப் பிடித்த வெண்டைக்காய் புளி மண்டியை கூடுதலாகப் பரிமாறினார் நாச்சம்மை.

அவனிருந்த மனநிலையில் மற்ற நேரமாக இருந்திருந்தால் அளவில்லாமல் உண்டிருப்பான். இப்போது அவனது சிந்தனை எல்லாம் குறிஞ்சி, துர்கா, ரோஜாவை சுற்றியிருக்க அவனுக்குச் சோறே இறங்கவில்லை.

ரசத்திற்காகச் சோறு போட போனவரை, “போதும்மா” என்று தடுத்து எழுந்து விட்டான். அக்காவை தேடி வீட்டின் பின்பக்கம் சென்றான்.

மாலை நான்கு மணி, சூரியன் இறங்கிக் கொண்டிருந்தாலும் சூடு குறையவில்லை.

துர்கா மாமர நிழலில் போடப்பட்டிருந்த துணி துவைக்கும் கல்லில் அமர்ந்திருந்தவள், தம்பியின் காலடி சத்தம் கேட்டு திரும்பி கீழிறங்கப் போனாள்.

“உக்காருக்கா” என்று ஓய்வறை சுவரில் சாய்ந்து அக்காவின் முகம் பார்த்து நின்றான்.

“சாரி தயா” தம்பியை ஏறிட்டு மன்னிப்பை வேண்டினாள்.

“ப்ச், ஏதாவது உளறாம அமைதியா இருக்கா”

“என்னால உங்களுக்கு எவ்ளோ கஷ்டம் இல்லடா தயா. அதான் எங்கயாவது கண் காணாத தூரத்துக்குக் காணாம போயிடலாம்னு நினைச்சேன். ப்ச்‍, எங்க? என் ராசி அப்படி. எனக்கு எதுவும் சரியா நடக்காது. லைஃப்ல எல்லாத்தையும் தப்புத் தப்பா செஞ்சிட்டு தலை குனியறதுதான் என் தலைவிதின்னு‌‍ இருக்கு போல” தன்னைத்தானே நிந்தித்தப்படி சொன்ன அக்காவை கைகட்டி பார்த்து நின்றான் தயா.

“என்ன நம்பல இல்லக்கா நீ?”

அவன் வார்த்தைகளில் இருந்த வருத்தம் அவளை வருத்தியது.

“அப்படியில்ல தயா. நான் உன்னை நம்பாம வேற யாரை..” என்றவளை மேலே பேச விடாமல், “அப்போ ஏன்க்கா என்கிட்ட சொல்லாம வீட்டை விட்டு போன? நான் உனக்கு ஹெல்ப் பண்ண மாட்டேன்னு நினைச்சியா? இப்பவும் என் ஞாபகம் உனக்கு வரல இல்லக்கா? ரோஜாவ அப்படியா உன்கிட்ட இருந்து நான் பிடுங்கிடுவேன்னு நினைச்ச? என்னை விடு, குறிஞ்சி மேல கூடவா உனக்கு நம்பிக்கை இல்ல?” என்று அவளின் கண் பார்த்துக் கேட்டான்.

தம்பியின் கண்களையும், கேள்விகளையும் அவளால் எதிர்கொள்ள முடியவில்லை.

“எல்லாம் சும்மா பேச்சுக்குத்தான் இல்லக்கா?”

“அப்படியில்ல தயா, உனக்குப் புரிய மாட்டேங்குது. எனக்குக் கல்யாணம், அதைப் பத்தி யோசிச்சாலே, பயமா இருக்குடா” என்று மெய்யான பயத்துடன் பதற்றம் நிறைந்த குரலில் சொன்னாள்.

“உன்னையும், அப்பாவையும் தவிர வேற ஆம்பளைங்க யாரையும் என்னால நம்ப முடியல. நல்ல மாதிரியா பார்க்க முடியல. என்னை என்ன பண்ற சொல்ற?” என்று கேட்பவளிடம் அவனும் என்ன சொல்வான்?

ஶ்ரீகாந்த் பற்றிப் பேசலாம். ஆனால் அதற்கான தகுந்த சமயம் இதுவல்ல என்று தயங்கினான். மேலும், ஶ்ரீகாந்தின் மனம் அறியாமல், முழு உண்மை தெரியாமல் அவனால் எதுவும் அறுதியிட்டு பேசிட முடியாதே.

“கல்யாணமே வேணாங்கற என்னைக் குழந்தையையும் விட்டுட்டு வான்னா எப்படித் தயா? ரோஜா இல்லாம ஒரு லைஃப், சத்தியமா நான் சந்தோஷமா இருக்க மாட்டேன்டா, நீயாவது புரிஞ்சுக்கோ”

“எனக்கு, அம்மாப்பாக்கு உன் சந்தோஷம்தான்க்கா முக்கியம். இனிமே என்ன செய்யுறதா இருந்தாலும் நீயும் அதை மனசுல வச்சுட்டு செய்க்கா” என்றான் அழுத்தமாக. துர்கா மெலிதாகத் தலையசைத்தாள்.

“நான் அப்படியெல்லாம் உங்களை விட்டு போகணும்னு நினைக்கல தயா, சத்தியமா சொல்றேன் நான் பிளான் செஞ்சி எதுவும் செய்யல. அந்நேரம் மனசுல படவும் பட்டுன்னு பஸ் ஏறிட்டேன். மதுரை போற பஸ்ல ஏறினதுக்கு அப்புறம்தான் அங்கருக்க என் ஃப்ரெண்ட்டுக்கு அடிச்சி ஹெல்ப் கேட்டேன். அவளும் வா பார்த்துக்கலாம்னு ‍சொல்லவும் தைரியமா போயிட்டேன்டா”

“தெரியும்க்கா”

அவனை அதிர்ச்சியுடன் நோக்கினாள்.

“உன்னைக் காணோம்னு எனக்கு அம்மா கால் செஞ்சதும், ஏதாவது தகவல் தெரியுமான்னு விசாரிக்க இங்க உன் கூட வேலை பார்க்கிறவங்களுக்கு அடிச்சேன் கா. அவங்க அந்நேரம் என் போனை எடுக்கல. ஆனா காலையில பேசும் போது நீ ஸ்கூல்ல எதுவும் சொல்லலன்னு தெரிஞ்சுக்கிட்டேன்” என்றான். துர்காவின் முகம் வாடி விட்டது, பள்ளி ஆசிரியை அவள்.

இப்படிப் பொறுப்பில்லாமல் வேலை இடத்திலும் நடந்திருக்கக் கூடாதென்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு தம்பியை பார்த்தாள்.

அவனோ, “அம்மாப்பாவை, அத்தையை நான் பார்த்துக்கறேன்க்கா. அவங்ககிட்ட நான் பேசறேன். உனக்குப் பிடிக்காம இங்க எதுவும் நடக்காது. உன் கல்யாணம் மட்டுமில்லக்கா, ரோஜா உன்கிட்ட வளர்றதையும் சேர்த்துதான் சொல்றேன். சரியா?” என்று சத்தியம் செய்யாத குறையாகச் சொல்லி அவள் முகம் பார்த்தான். அவளோ, அவனைப் பார்க்காமல் தீவிர சிந்தனையில் மூழ்கியிருந்தாள்.

“அக்கா”

“லக்ஷ்மணன் மச்சானை கல்யாணம் செஞ்சுக்க எனக்குச் சம்மதம் தயா” திரும்பி அவன் முகம் பார்த்து சொல்லி விட்டாள். ஆனால் அந்தக் கல்யாணம் என்ற வார்த்தையை அத்தனை கசப்புடன் தடுமாற்றத்துடன் உச்சரித்தாள்.

தயா மறுப்பாகத் தலையசைக்க, “ரோஜா என் கூடத்தான் இருப்பா, இருக்கணும் எப்பவும். நீயும், அம்மாப்பாவும் அதுக்குச் சம்மதிக்கணும் தயா. அத்தைக்கிட்ட பேசு, அவங்க சரின்னுதான் சொல்லுவாங்க. நான், லக்ஷ்மணன் மச்சான கல்யாணம் செஞ்சிக்கறேன்” என்று படபடத்துக் கைகளில் முகத்தைத் தாங்கிக் கொண்டாள்.

அக்கா தன்னைத்தானே இத்தனை வருத்திக் கொள்வதைப் பார்க்கையில் அவனுக்கு வேதனையாக இருந்தது.

“என்னக்கா அவசரம், பொறுமையா யோசிச்சு ஒரு முடிவெடுக்கலாம். இது உன் லைஃப்..”

“என் லைஃப்னு சொல்லிட்டு என் முடிவை யாருமே மதிக்கலன்னா எப்படித் தயா?”

“அதுக்காக ஒழுக்கம் இல்லாதவன போய்” பல்லைக் கடித்துக் கோபமாகக் கேட்டு விட்டான்.

“நான் மட்டும் என்ன ரொம்ப ஒழுக்கமா? நான் உன் அக்காங்கறதால உனக்கு என் தப்பு கண்ணுக்குத் தெரியல. நான் உனக்கு ரொம்ப நல்லவளா தெரியுறேன். இதுவே வேற பொண்ணு என் நிலையில், என் இடத்தில் இருந்திருந்தா என்ன சொல்லியிருப்பன்னு யோசி”

“அக்கா” என்று கத்தினான்.

“உனக்குத் தெரியுமா? ஸ்கூல்ல கூட ஒரு பேரன்ட் என்னை அப்படித்தான் கேட்டாங்கடா. ரோஜா அப்பாவை பத்தி கேட்டு, என் புருஷன் எங்கன்னு கேட்டாங்க. நான் பதில் சொல்லாம இருக்கவும் அப்போதைக்கு ஒன்னும் சொல்லாம போயிட்டாங்க. இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னால என்னைப் பார்த்திட்டு ஒழுக்கம் சொல்லிக் கொடுக்கற இவளுங்களே ஒழுக்கமா இல்ல. இதுல பசங்களுக்கு என்ன ஒழுக்கத்தைச் சொல்லி கொடுத்திட போறாங்கன்னு என் மூஞ்சியில காரித் துப்பாத குறையா சொல்லிட்டு போனாங்க” என்றாள். யாருக்கோ நடந்ததைச் சொல்வது போலச் சாதாரணமாகத்தான் சொல்ல முயன்றாள். ஆனால் மனமும் கண்களும் கலங்கிட, குரல் உடைந்து விட்டது.

அக்காவின் கையை ஆதரவாகப் பற்றினான்.

“பிளீஸ் தயா” துர்கா கெஞ்ச, தயா அழுத்தமாக அசையாமல் நின்றான். ஶ்ரீகாந்த்திடம் நேரடியாகப் பேசி விடலாம் என்று எண்ணினான். ஆனால் ஶ்ரீகாந்த் குடும்பத்தை நினைக்க நினைக்கத் தன்னிச்சையாக அவனைப் பதற்றம் சூழ்ந்தது.

அவன் பிடித்திருந்த தன் கையைக் கோபத்தில் உதற முயன்றாள், அதை அழுந்த பற்றி, “எனக்குக் கொஞ்சம் டைம் குடுக்கா. நீயும் டைம் எடுத்துக்கோ. சரியா? நாம அவசரமா எந்த முடிவுக்கும் வர வேணாம்.” என்று நிதானமாகச் சொன்னான். வேறு வழியின்றித் தலையசைத்தாள் துர்கா.

அப்பொழுது, “ம்மா” என்ற ரோஜாவின் சத்தம் கேட்டது. ரோஜாவின் வாசம் வந்த பின்தான் அவள் வந்தாள்.

“ம்மா” என்று அடித் தொண்டையில் இருந்து கத்தியவள், மாமனை கண்டதும், “குறிஞ்சி, மாமா தூங்கல. இங்கதான் இருக்காங்க, வா” என்று பின்னால் திரும்பி குறிஞ்சியிடம் குதூகலத்துடன் கத்தினாள்.

இப்போது, “மாமா” என்று கத்தி அவனை நோக்கி ஓடி வந்தாள். அவளைக் குனிந்து ஒற்றைக் கையில் தூக்கியவன் கண்கள் குறிஞ்சியை நோக்கின.

அதிசயமாக அவனே ஆச்சரியப்படும் வகையில் அவன் கண்ணோடு கண் பதித்துப் பார்வையால் அவனிடம் உறவாடினாள் பாவை. அவன் புருவங்கள் கேள்வியாக முடிச்சிட, உதடுகள் புன்னகையில் சாயலே இல்லாமல் புன்னகைத்தன.

“இந்தாங்க டீ எடுத்துக்கோங்க” என்று அவனிடம் தட்டை நீட்டி துர்காவிடம் சொன்னாள்.

சுடச்சுட தேநீர் அதனுடன் சூடான மசாலா சுய்யம், கதம்பச் சட்னி கொண்டு வந்திருந்தாள்.

தேநீரை மட்டும் எடுத்துக் கொண்டவனைக் கண்ணால் அவள் மிரட்ட, அதைக் காணாதது போலக் கண்டு, “ம்க்கும்” என்று தொண்டையைச் செருமினாள் துர்கா.

“நீ வா ரோஜா, நாம உள்ள போய் டீ குடிச்சுட்டு, சுய்யம் சாப்பிடலாம்” என்று மகளை அவள் தூக்கப் போக, ரோஜாவை அவளிடம் விடாமல் பிடித்து வைத்துக் கொண்டாள் குறிஞ்சி.

“அப்போ நான் போறேன்” என்று கோபம் போலப் போலியாக முகம் திருப்பித் துர்கா உள்ளே சென்றிட, தயா நின்றிருந்த அசட்டை தோரணை மாறாமல் குறிஞ்சியைப் பார்த்து என்னவென்று புருவம் உயர்த்தினான்.‌

error: Content is protected !!
Scroll to Top