அவன் கண்களில் சோர்வும் உறக்கமும் மிச்சமிருந்தன. கை மறைவில் கொட்டாவி விட்டபடி, “ரோஜா எங்க?” என்று கேட்டான்.
“குறிஞ்சி வீட்ல இருக்கா” என்றார் பழனியப்பன். துர்கா, நாச்சம்மை இருவரும் மௌனமாகத் தலை குனிந்திருக்க, “நாச்சியா, தயாவுக்குச் சோறு எடுத்து வை” என்றார் அவர்.
“நீ போய் இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறதுன்னா தூங்குப்பா” என்றார் மகனிடம்.
அவனோ, “அத்தைகிட்ட அக்காக்கு வெளில, அவங்க உறவில தெரிஞ்ச பையனாதானேப்பா பார்க்கச் சொல்லி சொல்லியிருந்தோம். அவங்க பையனை வேணாம்னு சொன்னேன்தானே? அந்தப் பேச்சை வளர்க்க வேணாம்னு சொல்லியும் கேட்காம, ஏன்ப்பா?” என்று அதிருப்தியுடன் கேட்டான்.
“உங்க அத்தை பேசினது உனக்கும் ஞாபகம் இருக்குத்தானே தயா?” என்று மகனை ஏறிட்டு கேட்ட நாச்சம்மை, “அவங்க சொல்றதுலயும் நியாயம் இருக்குத்தானே?” என்று படபடத்தார்.
துர்காவால் அதையெல்லாம் கேட்டுக் கொண்டு அமைதியாக அமர்ந்திருக்க முடியவில்லை. வெளியாட்கள் அவளை விமர்சிப்பது வேறு. ஆனால் வீட்டினர் அப்படி விமர்சிக்கையில் அவளால் வாளாதிருக்க முடியாது. அவளின் அத்தையின் பேச்சை இப்போது நினைத்தாலும் மனம் ரணப்படப் பட்டென்று எழுந்து பின்பக்கம் சென்று விட்டாள்.
அதைக் கண்டதும் தயாவின் முகம் மேலும் சோர்ந்தது. “என்னம்மா நீங்க, இப்போ எதுக்கு இந்தப் பேச்சு? கொஞ்சம் பொறுமையா பேசலாம் இல்ல? எல்லாத்தையும் இன்னைக்கே பேசியாகணுமா? அக்காவே இப்போதான் வீட்டை விட்டுப் போய்த் திரும்ப வந்திருக்கா. அவளை இந்நேரம் இப்படி ஏதாவது பேசி திரும்பவும் தப்பான முடிவெடுக்க வைக்காதீங்கம்மா?” என்று கவலையும் கண்டிப்பும் கலந்திருந்த குரலில் அவன் சொல்ல, “அப்போ நான்தான் அவளைத் தப்பான முடிவெடுக்க வைக்கிறேனாப்பா தயா?” என்று கேட்டு சேலைத் தலைப்பால் வாய் மூடினார்.
“நானும் அதையேதான் சொல்றேன். உங்கம்மா எங்கப்பா கேட்குறா? அததுக்கான நேரம்னு ஒன்னு வர வேணாமா? உனக்கு உலை கொதிச்சதும் சோறு வெந்திடணும்னா எப்படி நாச்சியா? உன் அவசரத்துக்குச் சோறாகாதுன்னா புரியுதா உனக்கு?” பழனியப்பனும் மனைவியைக் கடிய, அழத் தொடங்கினார் அவர்.
“ம்மா” தயா தவிப்புடன் அழைக்க, “எல்லாம் என் தப்புதான். எனக்குப் பொண்ணை ஒழுங்கா வளர்க்கத் தெரியல. அன்னைக்கும் அவ என்ன பண்றான்னு நான் பாக்கல. இன்னைக்கும் என் கண்ணை மறைச்சிட்டு பிள்ளையைத் தூக்கிட்டு, நம்ம வீட்டை விட்டு மதுரை வரைக்கும் போயிட்டா. நான் இங்க எதுவும் தெரியாம உக்காந்து இருந்திருக்கேன்” என்று புலம்பி அழுதார்.
“சும்மா அழுது டிராமா பண்ணாத நாச்சியா. இது கல்யாண வீடுன்னு ஞாபகம் இருக்குதானே உனக்கு?” பழனியப்பன் கோபிக்க, தயாபரனுக்குப் போதிய உறக்கம் இல்லாததால் தலைவலியின் அறிகுறி தெரிய, நெற்றிப் பொட்டை அழுத்தினான்.
அதைக் கண்டு, “முதல்ல எந்திரிச்சி தயாக்கு சோறு போடு” என்று மனைவியை அதட்டினார். நாச்சம்மை கையைத் தரையில் ஊன்றி எழுந்தார்.
“கல்யாணத்துக்கு நாலு நாள் முன்ன வரைக்கும் கல்யாண பொண்ணு வீடு வரல்ல. நம்ம பையனே போய் அவள கையோட கூட்டிட்டு வர வேண்டியதா இருக்கு. இவனோட அக்கா அதுக்கும் ஒரு படி மேல போய், தம்பி கல்யாணத்தைப் பத்தி கவலைப்படாம வீட்டை விட்டு போயிட்டா. இவ்ளோ நடந்ததுக்கு அப்புறம் நான் எப்படிங்க அழாம இருக்க முடியும்? என் பிள்ளைங்க வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நான் நினைக்க மாட்டேனா? என் தவிப்பு உங்களுக்குக் கூடவா புரியல?” என்று தேம்பினார்.
“ம்மா, தயவுசெஞ்சு அழாதீங்க. எல்லாத்தையும் நான் சரி பண்றேன்” என்றான் தயா உறுதியாக.
“குறிஞ்சியைப் பத்தி தேவையில்லாம கவலைப்படாதீங்க. உண்மையாவே அவளுக்கு வேலை இருந்ததும்மா. அதான் அன்னைக்கு அவ ஊருக்கு வரல. நம்புங்கம்மா” என்றான் கோபமாக.
“நான் ஏன்ப்பா நம்பாம இருக்கப் போறேன். நம்ம குறிஞ்சியை எனக்குத் தெரியாதா? அவளுக்கு ஏதாவது காரணம் இருந்திருக்கும்” என்று சொல்லிக் கொண்டே முகத்தை முந்தானையால் அழுந்த துடைத்துக் கொண்டு சமையல் அறைக்குள் நுழைந்தார்.
தயாபரன் தன் திருமணம் அனைத்தையும் சரி செய்திடும் என்று நிச்சயமாக நம்பினான். இப்போது அந்த நம்பிக்கை ஆட்டம் காண, அவனுள் அதைச் சரி செய்திடும் தீவிரம் வளர்ந்தது.
“தயா” பழனியப்பன் மகனை தயக்கத்துடன் அழைக்க, “அத்தைக்கிட்ட இந்தக் கல்யாண பேச்சுலாம் வேணாம்னு சொல்லிடுங்கப்பா. லக்ஷ்மணன் மச்சான் துர்காக்கு செட்டாக மாட்டாப்ல. அவரு குணம் உங்களுக்குத் தெரியாதாப்பா? ஊருக்குள்ள கூட அவருக்கு நல்ல பேரு கிடையாது” என்று அப்பாவின் முகம் பார்த்துச் சொல்லி விட்டான்.
லக்ஷ்மணன், அவனைப் பற்றி அவருக்கும் நன்றாகத் தெரியும்தான். விவாகரத்தானவன். விவாகரத்து பெற்று இரண்டு வருடங்கள் ஆகிறது. அவனுக்கு இரண்டு பிள்ளைகள். இருவரும் விவாகரத்துக்குப் பிறகு அம்மாவிடம் வளர்கிறார்கள். அது நீதிமன்ற முடிவு. இவன் விரும்பினால் எப்போதேனும் அவர்கள் வீடு சென்று பார்ப்பதோடு சரி.
திருமண விவகாரத்திற்கு அவனது குணமும் நடத்தையும்தான் காரணம் என்ற உறவுகளுக்குள் பேச்சு அடிப்பட்டது. அதுதான் உண்மை என்று மாமனுக்குத் தெரியாமலா இருக்கும்?
அக்கா கற்பகத்திடம் அதைச் சொல்லியே பெண்ணைக் கொடுக்க மறுத்திருந்தார் அவர்.
“இல்லக்கா, நம்ம துர்காக்கு வெளில பார்க்கலாம்க்கா. அதான் சரியா வரும்.” என்று நாசூக்காக மறுத்து விட்டார். நாச்சம்மையின் முடிவும் அதுதான்.
கற்பகத்தின் கணவர் கந்தசாமிக்கு அதைக் கேட்டதும் அவமானமாகி போனது. முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
“என்ன தம்பி, நீயே என் பையன கை விட்டா எப்படி? அவன் குணம் உனக்குத் தெரியாதா? சின்னதுல அப்படி இப்படின்னு இருந்தான்தான். அதுக்குன்னு அவனுக்கே பொண்ணு பொறந்ததுக்கு அப்புறம் திருந்தாம இருப்பானா? அதெல்லாம் கல்யாணமானதும் நல்லாத்தான் இருந்தான். எல்லாம் அந்தத் திமிரு பிடிச்சவ வேலை. அவ பெரிய வேலைக்குப் போற திமிருல என்னென்னமோ செஞ்சி, நல்லா ஒழுக்கமா புருஷன் கூட வாழ துப்பில்லாம என் பிள்ள மேல பழிய போட்டு வெட்டிட்டு போயிட்டா. அதைப் போய் நீங்களும் நம்பிட்டு என்ன தம்பி இது?” என்று வருத்தம் தோய்ந்த குரலில் வினவினார்.
“நம்ம வீட்டு பொண்ணுன்னு துர்காவ நான் பார்க்கறேன். என் பையனுக்கு வயசுல ரொம்பச் சின்னவளா போயிட்டா, இல்லன்னா முன்னாடியே எனக்கு மருமகளா ஆகியிருப்பா. ஹ்ம்ம், இப்போ அந்தக் கொடுப்பினை வந்திருக்கு. அதையேன் விடணும்ங்கறேன். நம்ம ரெண்டு குடும்பத்துக்கும் நல்லதுன்னு நான் சொல்றேன். அப்புறம் உங்க விருப்பம் தம்பி” என்று தம்பியை அல்ல தம்பி மனைவியைப் பார்த்துச் சொன்னார். அப்போதும் மனம் இறங்கவில்லை நாச்சம்மை.
“துர்காக்கு மட்டும் என்ன ஊர்ல நல்ல பேரா? கல்யாணமாகாம புள்ளை பெத்தவள யாருக்கு மருமகளாக்க மனசு வரும்?” என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலக் கேட்டு விட்டார்.
பெற்றவர்களின் முகம் அப்படியே விழுந்து போனது. தலை குனிந்தார்கள்.
“நல்லா படிச்சு வேலை பாக்கற பொண்ணுங்களுக்கே இன்னைய தேதிக்குக் கல்யாணம் நடக்கறது குதிரை கொம்பா இருக்குது. இதுல கையில நாலு வயசு பொண்ணை வச்சிட்டு, பையன்னா கூடப் பரவாயில்ல பொம்பளை புள்ளைய வச்சுட்டு இவளுக்குக் கல்யாணத்துக்குப் பார்த்தா எவன் கட்டிக்கச் சம்மதிப்பான்?” என்று கேட்டிருந்தார். அதைத் துர்கா, தயாவுமே கேட்டிருக்க, “எனக்குக் கல்யாணமே வேணாம்” என்று துர்கா முடிவாக முரண்டியது அப்போதுதான்.
“ஏதோ நானா இருக்கப் போய் எதையும் பெருசா எடுத்துக்காம, நம்ம புள்ள தெரியாம தப்பு செஞ்சுடுச்சுன்னு இருக்கேன். எல்லாரும் அப்படியே இருந்திடுவாங்களா சொல்லுங்க?” என்று மேலும் அவர் பேச பேச, “அத்த போதும்.” என்று கோபத்தை அடக்கிய குரலில் கூறினான் தயா.
அவனது கோபம் கண்டு, அவர் மேலும் ஏதோ சொல்ல வர, “நீங்க ஒன்னும் சொல்ல வேணாம்த்த” என்று கையை உயர்த்திச் சொல்லி அவரின் வாயை அடைத்து விட்டிருந்தான்.
அவனுக்கு அத்தையின் பேச்சு கசப்பான உணர்வை தந்திருக்க, காலமெல்லாம் அக்கா வாழப் போகும் வீடு இதுவாக இருக்க வேண்டாமென முடிவு செய்திருந்தான்.
பெண்ணுக்கு புகுந்த வீட்டில் யாராவது ஒருவராவது நல்லவராக, அனுகூலமானவராக இருக்க வேண்டும் அல்லவா?
இங்கே அத்தையின் பேச்சும் சரியில்லை. அதற்கு மேல் லக்ஷ்மணனின் குணம், அது அவனுக்கு எப்போதுமே ஒவ்வாத ஒன்று.
மாமன் கந்தசாமி, அந்த வீட்டில் மிக்சர் மாமாதான். ஆகவே அந்த முடிவுக்கு வந்திருந்தான். இப்போது என்னவென்றால் எல்லாமே தலைகீழாக மாறியிருந்தது. அதற்கும் துர்காவே காரணம் எனும் போது அவனும் என்ன செய்வான்? சரி செய்யத்தான் வேண்டும். அக்காவின் வாழ்வு சுகப்படாமல் அவனால் சுகமாகச் சொகுசாக வாழ முடியாது என்பது நிச்சயமாக அவனுக்குத் தெரியும்.
“என் பிள்ளை, உன் மச்சான் இப்போல்லாம் ரொம்ப மாறிட்டான்ப்பா. அவன் முன்ன மாதிரி இல்ல. இப்போ அவனுக்கு ரொம்பப் பொறுப்பு வந்திருச்சு” கற்பகத்தின் பேச்சு அவ்வளவு எளிதில் நிற்கவில்லை.
வேறொரு சமயமாக இருந்திருந்தால் பழனியப்பன் பதிலே வேறாக இருந்திருக்கும். ஆனால் மகள் இருக்கும் சூழலில் அவரால் நெஞ்சை நிமிர்த்திப் பேச முடியவில்லையே. அது அக்காவே ஆனாலும் கூட. அதைத்தான் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார் கற்பகம்.
துர்காவின் திருமணப் பேச்சு ஆரம்பிக்கும் போதே, “குழந்தை இருக்கா? அப்பா எங்க? முதல் கல்யாணம் என்னா ஆச்சு? என்னது, கல்யாணமே ஆகலையா? அப்புறம்? கல்யாணம் ஆகாம குழந்தை எப்படி? நாளைக்கு அவங்க அப்பனுக்குத் தெரிஞ்சு வந்து பிரச்சனை செஞ்சா நாங்க என்ன பண்றது?” என்று ஆயிரம் கேள்வி கேட்டார்கள்.
துர்காவின் வயது, வசதி, வனப்பு ஆகியவற்றைக் கண்டு மனம் மாறி, “நாங்க யோசிச்சு சொல்றோம்” என்று அவர்கள் இறங்கி வந்தாலும், ரோஜாவை பற்றித் தெரிந்ததும், “நாலு வயசுல பொண்ணு வேற இருக்கா?” என்ற கேள்வியுடன் தயங்கினார்கள்.
தயாவின் குடும்பம் அதனால்தான் அந்த முடிவெடுத்தார்கள்.
ரோஜாவை, நாங்கள் வளர்க்கிறோம் என்று. நாளை எங்களுக்கு ஒன்றென்றால் என்ற கேள்வி எழவும், எங்கள் மகன் தயாபரன் பேத்தியை பார்த்துக் கொள்வான். பேத்தி அவன் பொறுப்பு என்று வாக்கு கொடுத்தார்கள்.
அதன் பொருட்டே அவனுக்குக் குறிஞ்சியை மணமுடிக்கப் பேசினார்கள்.
அவளும் அந்த முடிவுக்கு முழு மனதாகச் சம்மதம் தெரிவித்திருந்தாள்.
தன் பொருட்டு, தன்னால் தம்பிக்கும் நல்ல வாழ்வு அமையாமல் போய் விடுவோமோ என்ற கவலையில் துர்கா அந்நேரம் அவர்கள் சொன்ன அனைத்திற்கும் தலையாட்டி இருந்தாள். ஆனால், தம்பியின் திருமண நாள்கள் நெருங்க நெருங்க மகளைப் பிரிய நேரிடுமே என்ற எண்ணமே அவள் நெஞ்சை அழுத்தத் தொடங்கியது.
அந்நேரம் அத்தையின் குடும்பம் வேறு அவளின் திருமணம் குறித்து அடிக்கடி குறிப்புக் கொடுப்பது போலப் பேசவும், நொந்து போனாள் அவள்.
இப்போது எல்லாவற்றையும் யோசித்தபடி வீட்டின் பின் பகுதியில் இருந்த துணி துவைக்கும் கல்லில் அமர்ந்திருந்தாள்.