நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 5 (2)

ரோஜாவும் அவர்களின் பின்னே ஓட, “அவள பிடி குறிஞ்சி” என்று அதட்டினாள் துர்கா. அது காதிலேயே விழாதது போல, காப்பி டம்பளரை வைக்கச் சமையல் அறைக்குள் புகுந்து கொண்டாள் குறிஞ்சி.

“ரோஜா, இங்க வா. ஏய் குறிஞ்சி..” என்று துர்கா கத்த, ரோஜா எப்போதோ வாசலுக்கு ஓடியிருந்தாள். குறிஞ்சி அசைந்தாடி கூடத்துக்கு வந்தாள்.

முன்தினம் ஶ்ரீகாந்தின் பேச்சு அவளுக்குச் சிறு சந்தேகப் பொறியை கிளப்பி விட்டிருந்தது. அதன் உண்மைத் தன்மையை அவள் ஆராய வேண்டும், அதற்காகக் காத்திருந்தாள் அவள்.

“என்னையா துர்கா கூப்பிட்ட? எனக்குக் கேட்கல. இரு, நான் போய் ரோஜாவை பத்திரமா கூட்டிட்டு வந்ததுக்கு ஶ்ரீகாந்த் அண்ணாக்குத் தேங்க்ஸ் சொல்லிட்டு வாரேன்” என்று சாவகாசமாக அங்கிருந்து விலகினாள். துர்கா பல்லைக் கடித்து எழுந்து வந்தாள்.

கூடத்தில் நின்று பார்க்க வாசலில் ஶ்ரீகாந்த் நிற்பதும் அவன் தோளில் ரோஜா மலர்ந்த முகமாகத் தொற்றியிருந்ததும் நன்றாகத் தெரிந்தது.

“நீயும் வா துர்கா” என்று அவளையும் இழுத்துப் போனாள்.

“என் கையை விடு குறிஞ்சி” என்று கையை உதற முயன்றாள் துர்கா, ம்ஹூம் முடியவில்லை.

தயாபரன் நண்பனை நன்றியுடன் ஏறிட்டு, “ஶ்ரீகாந்த்” என்று ஆரம்பிக்கையில், “எப்பா டேய் தயாபரா, தேங்க்ஸ் மட்டும் சொல்லிடாதடா சாமி” என்று தலைக்கு மேலே கையை உயர்த்திக் கும்பிடு போட்டிருந்தான் ஶ்ரீகாந்த்.

“நேத்து நைட்டு உங்கம்மாப்பா சொன்ன தேங்க்ஸை வச்சே என்னா செய்யுறதுன்னு எனக்குத் தெரியல. இது நீ வேற ஆரம்பிக்காத” என்று அலுத்துக் கொண்டான்.

“இல்ல, மச்சா. நீ மட்டும் நேத்து மதுரைக்குப் போகலன்னா..”

“அதென்ன போகலன்னா? அதான் போய்ட்டேனே. அப்புறமென்ன அந்தப் பேச்சையே விடுங்கறேன்.” என்று அந்தப் பேச்சுக்குப் பெரிதாக முற்றுப் புள்ளி வைக்க முயன்றான் ஶ்ரீகாந்த்.

தயாபரனுக்கு இன்னுமே அக்கா வீட்டை விட்டு சென்ற அதிர்ச்சி விலகவில்லை. அவள் தற்போது பத்திரமாக இருக்கிறாள் என்று நிஜம் புரிந்தாலும், அவன் நெஞ்சம் தவியாய் தவித்துக் கொண்டிருந்தது.

“உனக்கு வேணாம்னாலும் பரவாயில்ல. என் நன்றியை வச்சுக்கோ” என்று நண்பனின் கரம் பிடித்து நன்றியை அவன் பகிர, தன் மறுகரத்தை தயாவின் கை மேல் வைத்து அழுத்தி புன்னகைத்தான் ஶ்ரீகாந்த்.

“மாமா.. ஶ்ரீக்கா..” என்று அவர்களை ஏலம் போட்டபடி பூவே புயலாக உள்ளிருந்து ஓடி வந்தாள் ரோஜா. இரண்டு ஆண்களும் அவளைத் தூக்க கை நீட்டியபடி ஒன்றாகக் குனிந்தார்கள்.

தன்னைப் போலவே ஶ்ரீகாந்த்தும் கை நீட்டியிருப்பதைக் கண்ட தயா தலையைத் திருப்பி அவனை ஆச்சரியமாகப் பார்த்தான்.

அதற்குள் ரோஜா ஶ்ரீகாந்த் கையில் இருந்தாள்.

“ஶ்ரீக்கா” என்று அவள் சிரிக்க, “ஶ்ரீகாந்த் சொல்லணும் பட்டு ரோஜா” என்று அவளிடம் செல்லக் கோபத்துடன் சொன்னான் ஶ்ரீகாந்த்.

ரோஜா இரட்டை ஜடை அழகாக அசைய மண்டையை வேகமாக ஆட்டி, “ஶ்ரீக்கா” என்று மழலையில் அழுத்தமாகச் சொன்னாள்.

“அக்கான்னு சொல்லாத வரைக்கும் ஓகே” என்று சுயபகடி செய்து சிரித்தான் அவன். தயாவும் சத்தமில்லாமல் சிரிக்க, அவனது பெற்றோர் வந்து ஶ்ரீகாந்திடம் பேசினார்கள்.

அவனுக்கு மீண்டும் மீண்டும் நன்றி சொன்னார்கள்.

“வீட்டுக்குள்ள வாங்க தம்பி, காப்பிக் குடிச்சுட்டு போங்க” இருவரும் வற்புறுத்தி அழைக்க, மென்மையாக மறுத்து விட்டான் அவன்.

“நான் போய் டிபன் வேலையைப் பாக்கறேன். நீங்க பேசிட்டு இருங்க” என்று நாச்சம்மை சொல்ல, “நானும் கடைக்குக் கிளம்பணும். என் போன் எங்க?” என்று மனைவியிடம் கேட்டார் பழனியப்பன். அந்நேரம் பழனியப்பனை தேடி ஒருவர் வர, “வாங்க தம்பி” என்று வந்தவரை வரவேற்று, “கோவிலுக்குப் போக வேனுக்குச் சொல்லியிருந்தேன் சொன்னேன்ல நாச்சியா. இந்தப் பையன்கிட்டதான் சொல்லியிருக்கு. வா நீயும் விவரத்த கேட்டுக்கோ” என்று மனைவியை அழைத்தார். நாச்சம்மை கண் காட்ட அலமேலுவும் அவர்களோடு இணைந்தார்.

இதற்கிடையில் ஶ்ரீகாந்த்தை காக்க வைப்பது உணர்ந்து, “நான் போய்க் கார் சாவியை எடுத்துட்டு வர்றேன்” என்று தயா சொல்ல, “நான் கார் எடுக்க வரல தயா. ரோஜாவை பார்க்க வந்தேன். காரை அப்புறமா பொறுமையா நீயே கொண்டு வந்து வீட்ல இல்லனா கடையில விடு” என்று தடுத்தான் ஶ்ரீகாந்த்.

“ஓ, ஓகே. உனக்குக் கடைக்குப் போகக் கார் தேவைப்பட்டிருக்கும், அதுக்குத்தான் வந்திருப்பன்னு நினைச்சு நான் சாவியை எடுக்கப் போனேன்”

“நான்தான் ரோஜாவை பார்க்க வந்தேன்னு சொன்னேன்ல தயா” என்று ஶ்ரீகாந்த் சொல்கையில், துர்காவுடன் அங்கு வந்தாள் குறிஞ்சி.

“அண்ணா.. ரொம்பத் தேங்க்ஸ்” குறிஞ்சி தயக்கத்துடன் சொல்ல, “இருக்கட்டும்மா. ரோஜா என் கண்ணுல பட்டு பத்திரமா என்னோட வரணும்னு இருந்திருக்கு. அவ்ளோதான்.” என்று அலட்டிக் கொள்ளாமல் சொன்னவன் கண்கள் துர்காவின் மேல் படிந்து படிந்து விலகின.

அவன் பார்வையைக் கவனித்த தயாவின் பார்வை கூர்மையானது.

ஶ்ரீகாந்த் ரோஜாவை குழந்தையில் இருந்தே பார்க்கிறான். தயா குழந்தையைக் கடைக்குத் தூக்கிச் சென்றாலோ, வெளியில் எங்கேனும் அழைத்துச் சென்றாலோ, ஶ்ரீகாந்த்தை சந்திக்க நேர்ந்தால், “பட்டு ரோஜா வாங்க” என்று படக்கென்று ரோஜாவை வாங்கிக் கொள்வான். குழந்தையைச் செல்லம் கொஞ்சி தீர்ப்பான். அதெல்லாம் இயல்புதானே? ஆனால் துர்காவின் மேல் பதியும் அவன் பார்வை புதிதாகத் தெரிந்தது தயாவுக்கு.

எத்தனையோ முறை துர்காவின் வாழ்க்கை குறித்து, அவனது சொந்த வாழ்க்கை குறித்து நண்பனாக அக்கறையுடன் அவனிடம் பலமுறை கேட்டிருக்கிறான். ஆலோசனை சொல்லியிருக்கிறான். ஆனால் அதற்குப் பின் வேறு காரணங்கள் இருக்குமோ என்று இப்பொழுது அவனுக்குச் சந்தேகிக்கத் தோன்றியது. அவனது புருவங்கள் கேள்வியாக முடிச்சிட நண்பனை ஆராய்ச்சியுடன் அளவிட்டான்.

ஶ்ரீகாந்தின் கண்கள் துர்கா, ரோஜாவின் மேலிருந்தன. ஆனால், குறிஞ்சியிடம் பேசிக் கொண்டிருந்தான் அவன்.

துர்கா குழந்தைக்காகக் கை நீட்ட, “என்கிட்ட இருக்கவளை ஏன் கட்டாயப்படுத்தி வாங்கறீங்க?” என்று கேட்டியிருந்தான் ஶ்ரீகாந்த்.

துர்காவின் முகம் கடினமாக, “ரோஜாவுக்கு இட்லி குடுக்கணும். நீ வாங்கிட்டு வா குறிஞ்சி” என்று படபடத்து உள்ளே சென்று விட்டாள் அவள்.

ஶ்ரீகாந்தை கூர்ந்து கவனித்தால் மட்டுமே அவன் உதட்டில் இருந்த புன்னகையைக் கண்டு கொள்ள முடியும், தயா அதைக் கண்டு கொண்டான். நொடியில் அவனுக்கு நூறு கேள்விகளும் சந்தேகங்களும் பிறந்தன. எல்லாவற்றையும் தெளிவுப்படுத்த இது நேரமில்லை என்று கண்ணை மூடி தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்து கண்ணைத் திறந்தான்.

“என்னடா மாப்ள நின்னுட்டே தூங்குற? போடா போய்ப் படு போ. இன்னைக்கும் வெள்ளைக்காரன் மாதிரி வேலைக்குக் கிளம்பிடாத” என்று ஶ்ரீகாந்த் கிண்டலாகச் சொல்ல, முறைத்தான் தயாபரன். முன்தினம் அணிந்திருந்த வேட்டி சட்டையில்தான் இருந்தான். அவன் நெஞ்சத்தைப் போலவே அதுவும் அலுங்கி கசங்கி போயிருந்தது.

நண்பன் முகத்தில் இருந்த சோர்வை கண்ணுற்று, “ஈவ்னிங் பார்க்கலாம் தயா” என்று ஶ்ரீகாந்த் விடைபெற, “ஶ்ரீக்கா கலர் பென்சில் வேணும்” என்று அவன் கன்னத்தில் கை பதித்துச் சொன்னாள் ரோஜா.

அந்தப் பிஞ்சுக் கரத்தை பற்றி, உள்ளங்கையில் முத்தமிட்டு, “பட்டு ரோஜா கேட்டு ஶ்ரீக்கா இல்லைன்னு சொல்லுவேனா. சாயந்தரம் வாங்கிட்டு வர்றேன். சரியா?” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டான். ரோஜா சிரிக்க, அவளைக் குறிஞ்சியிடம் கொடுத்து விட்டு, “வர்றேன் டா தயாபரா. தயாவின் தேவதைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கோ” என்று நட்பான எச்சரிக்கை தொனியுடன் சொல்லிச் சென்றான்.

“தயாவின் தேவதைகள்ல எங்கக்கா துர்காவும் சேர்த்தியா?” என்று தனக்குள் கேட்டு, ஶ்ரீகாந்த்தின் இரு சக்கர வாகனம் நகரவும், மெதுவாகத் திரும்பி குறிஞ்சியை நோக்கி கை கட்டி நின்றான் தயா. அவள் வேகமாக விலகப் போக, “அப்போ உனக்கு முன்னாடியே எல்லாமே தெரியும். அப்படித்தானே? இருந்தாலும் என்கிட்ட சொல்லல நீ” என்று கடினமான குரலில் கேட்டான்.

“என்ன தெரியும்? எனக்கொன்னும் தெரியாது”

“ஆமா ஆமா. உனக்கு ஒன்னும் தெரியாது. இதுக்கு முன்னாடி எதை என்கிட்ட மனசு விட்டுச் சொல்லியிருக்க இப்போ இதைச் சொல்றதுக்கு..” என்று நண்பன் போன திசையை நோக்கி சொன்னவன், “உன்னை இப்படியே விடுவேன்னு நினைக்காத. எனக்கு நீ பதில் சொல்லித்தான் ஆகணும். தெரிஞ்சுதா குறிஞ்சியாத்தா?” என்று லேசாக அவள் புறமாகச் சாய்ந்து வினவினான்.

“கேள்வி கேட்டாதானே பதில் சொல்ல முடியும்” என்று உதடு சுழித்து, உள்ளே ஓடி விட்டாள் அவள். அது ரோஜாவுக்கு விளையாட்டு போலத் தெரிய, சத்தமாகச் சிரித்தாள் குழந்தை.

பெரியவர்கள் பேச்சு முடித்து, வந்தவரை வழியனுப்பி வைத்தார்கள்.

குறிஞ்சி, “துர்கா, என்னோட எங்க வீட்டுக்கு வரியா?” என்று துர்காவிடம் கேட்க, மறுப்பாகத் தலையசைத்தாள் அவள்.

“மதியத்துக்கு மேல திரும்ப வந்துடலாம் வா”

“வரலன்னா விடேன் குறிஞ்சி. உன் வருங்கால மாமியார் என்னை ஒன்னும் செஞ்சிட மாட்டாங்க. நீ பயப்படாம போ. அப்படியே என்னை நாலு அடி போட்டாலும் நான் வாங்கிப்பேன். அப்படி அவங்க கோபப்பட்டு அடிச்சா கூடத் தேவலாம்னு இருக்கு எனக்கு” சற்றே முரணாக வார்த்தைகளைக் கோர்த்தவளை கரிசனையுடன் பார்த்தாள் குறிஞ்சி.

“அப்புறமா நானே வர்றேன். நீ போ” என்று விரட்டாத குறையாகச் சொன்னாள்.

பெரியவர்களிடம் சொல்லிக் கொண்டு குறிஞ்சி வெளியேற, தயா அவளின் பெட்டிகளைப் பின்னாலே தூக்கி கொண்டு வந்தான். இப்போதுதான் வாசலில் ஊன்றப்பட்டிருந்த முகூர்த்தக்காலை பார்த்தாள் குறிஞ்சி. அவள் அதை அண்ணாந்து பார்க்க, அவளை எரிக்கும் பார்வை பார்த்தான் தயா.

“குறிஞ்சியாத்தா கை என்னா பூவா பறிக்குது? ஒரு பைய பிடிக்கறது. என்னைப் பிடிக்காம கல்யாணம் பண்றவ பையை எல்லாம் என்னால பிடிச்சுட்டு வர முடியாது” என்று அவனது வழக்கமான முரட்டுக் குரலில் சொன்னாலும், அவளைப் பெட்டியை தூக்க விடவில்லை அவன்.

அவள் சென்னையில் வேலையை விட்டுவிட்டு ஒரேடியாக ஊர் திரும்பியிருக்க, பெட்டிகள் அதிகம்தான். தயாவே தூக்கி வந்து அவள் வீட்டில் வைத்தான்.

அவளது வீடு மிகவும் சிறியது. இன்னமும் வாடகைக்குதான் குடியிருக்கிறார்கள். கதவைத் திறந்தால் சிறிய கூடம், அதற்கடுத்து ஒரு பக்கம் இரட்டை கட்டில் போடும் அளவுக்குச் சிறிய படுக்கையறை, மறுபக்கம் சமையல் அறை இருந்தது. இங்கும் குளியல் அறை வெளியில்தான் இருந்தது.

அந்தக் கூடத்தைத் தன் உயரத்தால் சிறியதாக்கினான் அவன்.

“மாப்ள..” கையைப் பிசைந்து அலமேலு அவன் முகம் பார்க்க, “நானும் குறிஞ்சியும் பேசி எல்லாம் சரி செஞ்சிட்டோம்த்த. இல்ல குறிஞ்சி?” என்று அவன் கேட்க, குறிஞ்சியின் கண்கள் நொடி நேரம் அவனை அதிர்ந்து நோக்கின. பின்னர், “ஆமா.. ஆமாம்மா” என்று அதிவேகமாகப் பதில் சொன்னாள் அவன்.

தயாவின் உதட்டோரம் நக்கல் புன்னகை நெளிய, “நான் வர்றேன்த்த” என்று சொல்லி, “சாயந்தரம் கோவிலுக்குப் போயிட்டு வரலாம் குறிஞ்சி, ரெடியா இரு” என்று கடைசி வார்த்தைகளை அவளுக்குப் புரியும்படி அழுத்திச் சொல்லிச் சென்றான்.

இப்போதும் மண்டையை மண்டையை ஆட்டி வைத்தாள் அவள். அவளைச் சுவாரசியமாகப் பார்த்துச் சென்றான் அவன்.

அவன் தலை மறைந்ததும், “குறிஞ்சி” என்று அலமேலு ஆரம்பிக்க, “பசிக்குதும்மா, தூக்கமா வருது, மேலேல்லாம் கசகசன்னு இருக்கு. குளிச்சுட்டு வரவா?” என்று சாமர்த்தியமாக அம்மாவை சமாளித்தாள்.

“வேகமா குளிச்சுட்டு வா, தோச ஊத்துறேன்” என்றார் அலமேலு.

அங்கே தயா வீட்டுக்குள் நுழைகையிலேயே நாச்சம்மையின் குரல் உரத்து ஒலித்தது.

வேக எட்டுக்கள் வைத்து, “என்னம்மா?” என்று அம்மாவின் முன்னால் நின்றிருந்தான். அம்மாவின் எதிரே கண் கலங்க முகம் நிமிர்த்தி நின்றிருந்தாள் துர்கா. பழனியப்பன் கையில் ரோஜா இருக்க, “தயா இன்னும் நேத்து கட்டின வேட்டி சட்டையில் இருக்கப்பா நீ. எப்படிக் கசங்கி இருக்குன்னு பாரு. முதல்ல போய்க் குளிச்சு துணிய மாத்து. மத்தத பெறகு பேசிக்கலாம்” என்று மகனின் தோளில் தட்டிச் சொன்னார்.

அவர் கண்கள் மனைவியை எச்சரித்தன. தயா அறைக்குள் நுழைய, துர்கா மகளுடன் பின்னால் நடந்தாள்.

“இங்க பாரு நாச்சியா, உன் கவலை எனக்கு நல்லா புரியுது. எனக்கு மட்டும் கவலை இல்லையா என்ன? தயா கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னு எல்லாத் தெய்வத்தையும் வேண்டிட்டு இருக்கேன் நானு‌. ஏதோ நம்ம கெட்ட நேரம் கொஞ்சம் கெட்டதா நடந்தாலும் பிள்ளைங்க இப்போ நம்மகிட்டதானே இருக்காங்க. நல்லா இருக்காங்கதானே? அதை மட்டும் பாரு. தயா தூங்கி எந்திருக்கட்டும். எல்லாத்தையும் அப்புறமா பேசிக்கலாம். என்ன? பொறுமையா இரும்மா. நீ கோபப்பட்டுக் கத்தி உன் பிபியை ஏத்திக்காத” என்று அப்பா, அம்மாவை எச்சரித்தது அவர் மக்கள் இருவருக்குமே தெளிவாகக் கேட்டிருந்தது.

தயாபரன் குளித்து உணவுண்டு, அக்காவிடம் இயல்பாகப் பேசினான்.

“தயா, சும்மா என்னைப் பத்தியே யோசிச்சுட்டு இருக்காதடா தம்பி. உனக்கு நேத்து முழுக்கத் தூக்கமில்ல. நல்லா தூங்கி எந்திரிச்சி வா. நான் எங்கேயும் போகல. இங்கதான் இருப்பேன்” என்று துர்கா சொல்லவும், நிம்மதியாக உறங்கச் சென்றான்.

ஒரு முழு நாள் காரோட்டியிருக்கிறான். அசதி அவனை அழுத்த படுக்கையில் விழுந்த ஐந்தாம் நிமிடம் ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்திருந்தான்.

“இதென்ன கல்யாண வீடு போலயா இருக்கு? மூனு நாள்ல கல்யாணத்த வச்சுட்டு இப்படி ஆளுக்கொரு மூலையில மூஞ்சிய திருப்பிட்டு எந்த வீட்லயாவது உக்காந்திருப்பாங்களா சொல்லுங்க?” என்ற நாச்சம்மையின் குரல் அவனை அடித்து எழுப்பி விட்டது.

அவர் அழுகையுடன் கேவி, “வீட்ல பொண்ணு இருந்தா அவளுக்கு முதல்ல கல்யாணத்த முடிச்சிட்டுதான் பையனுக்குப் பார்ப்பாங்க. தங்கச்சியா இருந்தாலும் அஞ்சாறு வயசு இளையவளா இருந்தாலும் முதல்ல பொண்ணுக்குத்தான் முடிப்பாங்க. இங்க.. அக்கா இருக்கும் போது தம்பி எப்படிங்க அவளுக்கு முன்னால மனசாரக் கல்யாணம் பண்ணிப்பான்? உங்க பொண்ணுக்கு ஒரு நல்லது நடக்கணும்னு நாம எல்லாரும் பாடாப்படுறோம், இவளுக்குக் கொஞ்சமாவது அந்தக் கவலையிருக்கா பாருங்க.” மகளைக் கைகாட்டி கணவரிடம் முறையிட்டுக் கொண்டிருந்தார்.

“உங்க அக்காவே பெரிய மனசு பண்ணி அவங்க பையனுக்குக் கட்டுறதா சொல்லியிருக்காங்க. இவ அத கெடுக்கப் பாக்கறாளே. ரோஜாவ தயா வளக்கட்டும், எங்ககிட்ட குடுன்னா, எம் பொண்ணை நான்தான் வளர்ப்பேன்னு பிடிவாதம் பிடிக்கறாளே..” என்று அழுகையுடன் அவர் அங்கலாய்க்க, “ரோஜாவ பிரிஞ்சு என்னால இருக்க முடியாதும்மா. அப்படியொரு கல்யாணமே எனக்கு வேணாம். எனக்குக் கல்யாணம் பண்ணி வைங்கன்னு நான் உங்ககிட்ட கேட்டேனா?” என்று கண்ணீருடன் துர்கா எதிர்கேள்வி கேட்க, “எப்படி மனசாட்சி இல்லாம பேசுறா பாருங்க” என்று கையை ஓங்கி அவளை அடிக்கப் பாய்ந்தார் நாச்சியம்மை.

தயா அறை வாசலில் நின்று, “ம்க்கும்” என்று தொண்டையைச் செருமவும் அவரவர் இடத்தில் அப்படியே நின்று விட்டார்கள். மறுகணம் வீடே அமைதியானது. ரோஜாவின் சுவடே வீட்டில் இல்லை. தயாவின் கண்கள் குழந்தையைத் தேடின.

error: Content is protected !!
Scroll to Top