தயாபரனை கண்டதும் மகளின் மேலிருந்து அவசரமாகக் கையை விலக்கினார் அலமேலு.
“குறிஞ்சி உள்ள வந்து காப்பிக் குடிச்சுட்டு அப்புறமா வீட்டுக்கு போ, அம்மாவையும் உள்ள கூட்டிட்டு வா” என்று அவளுக்குக் குரல் கொடுத்தார் நாச்சம்மை.
“வா, குறிஞ்சி” என்று மகளின் கைப் பிடித்தார் அலமேலு.
“எனக்கு முதல்ல பாத்ரூம் போயிட்டுப் பிரஷ் பண்ணணும்மா. அப்புறம்தான் காப்பி எல்லாம். நீ உள்ள போம்மா. நான் வீட்டுக்கு போய்ட்டு அப்புறமா வர்றேன்” என்றாள். அங்கேயே நின்று அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த தயா, “உன் பாகில் பிரஷ் இருக்கும்ல? எடுத்து இங்கேயே யூஸ் செஞ்சிக்கோ. இதுக்காக வீடு வரைக்கும் போயிட்டு வருவியா?” என்று கேட்டான்.
அவன் சொன்னதற்கு ஒப்புதலாகத் தலையசைத்த அலமேலு, “தயா தம்பி சொல்றது படி செய்” என்றார் மகளிடம்.
“அம்மா..” என்று முரண்டினாள் மகள். அவரோ இன்னும் அழுத்தமாக அவள் கரம் பற்றினார்.
அந்த வீட்டு சூழலே குறிஞ்சியைக் கலவரப்படுத்தியது. அதற்குள் சென்று அவளும் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. ஏற்கெனவே துர்கா அவளை முறைத்து வீட்டுக்குள் சென்றிருந்தாள்.
துர்கா வீட்டை விட்டு சென்று திரும்பியது, குறிஞ்சி சரியான சமயத்தில் ஊர் வராமல் தயா சென்னை சென்று அவளை அழைத்து வந்தது என அந்த வீட்டினுள் பூகம்பம் வெடிக்கப் பல காரணங்கள் காத்திருக்க, அதை எதிர்கொள்ளும் மனநிலை அவளுக்கில்லை. அதற்காக ஒரேடியாகத் தப்பிக்கும் எண்ணமும் கிடையாது. கண்டிப்பா தயா கேள்வி கேட்டால் விளக்கம் சொல்ல தயாராகவே இருக்கிறாள்.
இப்போதும் அவன் முகம் பார்க்க, “அம்மாகிட்ட சொல்லிட்டு வீட்டுக்கு போ” என்றான்.
“மாமா” என்று கத்திக் கொண்டு அங்கு வந்தாள் ரோஜா. அவளைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டான் தயா.
“நீ இங்கேயே இரும்மா. நான் மட்டும் நம்ம வீட்டுக்கு போய்ட்டு வர்றேன். சத்தியமா பத்தே நிமிஷத்துல வந்துடுவேன்ம்மா” என்று கெஞ்சலாக அம்மாவிடம் சொன்னவள், எட்டி ரோஜாவை தயாவிடம் இருந்து பறித்து, “ரோஜா குறிஞ்சியை மறந்துட்டயா?” என்று குழந்தையின் மூக்கை உரசி கேட்டாள்.
“இல்லியே..” மூக்கை சுருக்கி ராகம் இழுத்தாள் ரோஜா.
“ம்ம், அப்டியா? நான் வந்து எவ்வளவு நேரம் ஆச்சு? என்கிட்ட வந்தியா நீ? உங்க மாமாகிட்டதானே ஓடின?” தலையை அசைத்து அசைத்து அவள் கேட்க, சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை போல, இவள் செய்ததைப் போலவே தானும் செய்தாள் ரோஜா.
தலையைப் பொம்மை போலத் தொடர்ந்து அசைத்து, “நா உன்ன பாக்கல குறிஞ்சி” என்றாள் மழலையில். தன்னைத்தானே கண்ணால் சுட்டி, “உன் மாமா ஹைட்ல முக்கால்வாசி இருக்கேன் நானு. ஆனா உனக்கு என்னைய கண்ணு தெரியல. இல்ல ரோஜா குட்டி?” என்று அவள் குழந்தையுடன் மல்லுக்கட்ட, “குட்டச்சி” என்று அவளுக்குக் கேட்கும் குரலில் முணுமுணுத்து அவளை இடித்து விட்டு உள்ளே சென்றான் தயா.
அலமேலு அவர்களுக்கு முன்னே உள்ளே சென்றிருந்தார்.
“எனக்கு நல்ல்ல்ல்லா கண்ணு தெரியுமே” அவளின் முகவாயை பற்றிக் கண்ணை விரித்துச் சொன்ன ரோஜாவின் பட்டுக் கன்னத்தில் பல் பதியாமல் கடித்து முத்தமிட்டாள் குறிஞ்சி.
“நல்லா கண்ணு தெரியும். ஆனா என்னை மட்டும் தெரியாது? இல்ல வாலு” என்று அவளின் குட்டி பின்னலை பிடித்திழுத்தாள்.
“ஆஆஆ, மாமா..” என்று ரோஜா மாமனிடம் முறையிடப் போக, “போட்டுக் கொடுக்காத அராத்து” என்று அவசரமாக அவளின் வாயை மூடினாள். உடனே கிளுக்கி சிரித்தாள் ரோஜா. இருவரும் சிரிப்புடன் கூடத்துக்குள் நுழைந்தனர்.
வீட்டினர் அனைவரும் இயல்பாக இருப்பது போலிருந்தாலும், அனைவரின் முகத்திலும் இறுக்கம் படர்ந்திருந்தது. எல்லோர் முகத்திலும் கவலை, சிந்தனை ரேகைகள். அடுத்தென்ன என்ற யோசனையுடன் அதைப் பற்றிப் பேசிட முடியாத தயக்கத்துடன் அமர்ந்திருந்தார்கள்.
துர்கா கால்களைக் கட்டிக் கொண்டு சுவரில் சாய்ந்தமர்ந்திருந்தாள்.
பழனியப்பன், “நாச்சியா நீ பிள்ளைகளைப் பாரு. நான் கடை வரைக்கும் போயிட்டு வர்றேன்” என்று கிளம்பினார்.
“நேத்து புல்லா நீங்கதானேப்பா பார்த்திருப்பீங்க, இன்னைக்கும் நீங்களே அலஞ்சுட்டு இருக்க வேணாம். பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க. நானும் வர்றேன்.” என்றான் கூடத்தில் அக்காவின் எதிர்ப்புறமாக நின்றிருந்த தயா.
“ரெண்டு நாள் நான் கடைக்குப் போறது பெரிய அலைச்சலா? நீ நேத்து காலையில இருந்து காரோட்டி இருக்க. உனக்கு ரெஸ்ட் வேணாமா? பேசாம சாப்பிட்டுட்டு இன்னைக்குப் பூரா தூங்கி எழுந்திரி சொல்லிட்டேன். ஹோட்டலை இன்னைக்கு நான் பார்த்துக்கறேன்ப்பா.” என்றார்.
தயாபரனுக்கு நல்ல அசதி. அதனால் அமைதியாக ஆமோதித்தான்.
“நீ போய்க் குளிச்சுட்டு சாப்பிட்டு படுப்பா” என்று மகனிடம் சொன்னவர், திரும்பி, “நீயும் சாப்பிட்டு ரெஸ்ட் எடும்மா குறிஞ்சி” என்று வருங்கால மருமகளிடமும் சொன்னார்.
“இந்த ரூம்ல இருக்கப் பாத்ரூம் யூஸ் பண்ணிக்கோ” என்று தயா அங்கிருந்த அறையைக் கண் காட்ட, குறிஞ்சி மறுத்து பேசவில்லை. ரோஜாவை கீழிறக்கி விட்டுத் தனக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு அந்த அறைக்குள் புகுந்து கொண்டாள்.
பழனியப்பனுக்குப் பல ஆண்டுகளாக உணவகம்தான் தொழில் என்றாலும், ஆரம்பத்தில் அது தேநீர் கடை மட்டும்தானே.
அவர்களுக்குப் பெரிதான வசதியெல்லாம் கிடையாது, நடுத்தர வர்க்கம்தான். உணவுத் தொழிலை பொருத்தவரை கொள்ளை லாபம் எல்லாம் அள்ளி விட முடியாது. இப்போது நகரங்கள் பெருகி, போக்குவரத்து அதிகரிக்கவும் ஓரளவு தொழில் நன்றாகச் செல்கிறது.
இந்த வீடு தயாபரன் பிறந்த பிறகு கட்டியது. இரண்டு சிறிய படுக்கை அறைகள், கூடம், கொஞ்சம் அளவான சமையல் அறை என நால்வருக்கு அடக்கமான, அழகான வீடது.
துர்கா படிப்பை முடித்த நேரம் அவளின் திருமணப் பேச்சு ஆரம்பமானது. அப்போதே வீட்டை எடுத்துக் கட்ட வேண்டும் என்று ஆலோசித்தார்கள். மேலே மாடி எழுப்பி விடலாம், நாளை தயாவுக்குத் திருமணமானால் தேவைப்படும் என்று கூறினார் நாச்சியம்மை. அதைச் செயல்படுத்தும் முன்னர்த் துர்காவின் திருமணப் பேச்சு தொடங்கும் போதே அவள் கர்ப்பமாகியிருந்தாள். கட்டிடம் கிடக்கிறது என்று அதை விட்டுவிட்டு மகளின் மேல் கவனம் செலுத்தினார்கள்.
சில மாதங்களுக்கு முன்னர்த் தயா, குறிஞ்சியின் திருமண நிச்சயம் முடிந்ததும், தயாவேதான் வீட்டை விரிவுப்படுத்துவது குறித்த பேச்செடுத்தான்.
ஒருபக்கம் அவனது படுக்கையறை, மறுபக்கம் சமையல் அறை, பின்புறம் தோட்டத்தை ஒட்டிய பகுதியில் ஒருபுறமாக ஓய்வறை இருந்தது. அங்கேயே துணி துவைக்கும் கல்லும் கிடந்தது. சமையல் அறைக்கு முன்பகுதியில் சலவை இயந்திரம் வைத்திருந்தார்கள். அந்தப் பழைய ஓய்வறையை மொத்தமாக இடித்து நன்றாகப் புழங்கும் வகையில் பெரிதாக, கொஞ்சம் நவீன வசதிகளுடன் கட்டினான். அத்தோடு சலவை இயந்திரம் வைக்கச் சிறிய அறையைச் சேர்த்துக் கட்டியிருந்தான்.
அத்துடன் தன் அறையை விரிவுப்படுத்தி, அறைக்குள்ளே நவீனமாக ஓய்வறை கட்டிக் கொண்டான்.
அதை இன்றுதான் உள்ளே சென்று பார்க்கிறாள் குறிஞ்சி.
“நல்லா பெருசாத்தான் இருக்கு. ம்ம், இதொன்னும் எனக்காகக் கட்டல” என்று உதடு சுழித்துக் கொண்டாள். கால் மணி நேரத்தில் காலை கடன் முடித்து முகம் கழுவி திருத்தமாக அவள் வெளியில் வர, கூடத்தில் சயனித்திருந்தான் தயாபரன். அவன் கை வளைவில் ரோஜா சுருண்டு படுத்து, “மாமா எந்திங்க. காப்பிக் குடிங்க” என்று பாட்டு பாடி கொண்டிருந்தாள் ரோஜா.
“இந்தா குறிஞ்சி, காப்பிக் குடி” என்று நாச்சம்மை அவளுக்கான காப்பியுடன் வர, வாங்கிக் கொண்டாள்.
“நீங்க குடிச்சீங்களா அத்த?”
“காலையிலேயே குடிச்சுட்டேன் குறிஞ்சி. இவ்ளோ நேரத்துக்குக் காப்பிக் குடிக்காம இருந்தா எனக்கு எங்கிருந்து வேலை ஓடும் சொல்லு?” என்று அலுத்துக் கொண்டார். மெதுவாக அவரின் கரம் பற்றினாள் அவள்.
“அத்த முந்தாநாள் வேலையில ஒரு சின்னப் பிரச்சினை. அதுனாலதான் நேத்து காலையில என்னால ஊருக்கு வர முடியல” என்று தயக்கத்துடன் அவள் சொல்ல, ரோஜாவை கையில் அள்ளிக் கொண்டு எழுந்து அமர்ந்திருந்தான் தயா. அவன் பார்வை அவளைத் துளைக்க, அவளுக்கு நா குழறியது.
அவன் பக்கமே பார்வையைத் திருப்பாமல், “உங்களுக்குத் தகவல் சொல்லாம விட்டது என் தப்புதான். சாரி அத்த” என்று மனதார உணர்ந்து அவள் சொல்ல, நாச்சம்மை எதுவுமே சொல்லவில்லை.
அந்நேரம் எதைப் பேசவும் அவருக்குப் பயமாக இருந்தது. “கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னா பொண்ணு இங்க இருக்கணும் இல்ல?” என்று கேட்டுவிட்டு மகன் சென்னை சென்றது அவருக்கு நினைவுக்கு வந்தது.
நாலு நாள்களில் திருமணத்தை வைத்துக் கொண்டு, இப்போது போய், “உனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லையா?” என்று அவளிடம் எப்படிக் கேட்பார். அவள் ஆமாம் என்று சொல்லி விட்டாள், அவர்களின் நிலை? அவரால் யோசிக்கவே முடியவில்லை. அதை நினைத்தாலே நெஞ்சத் துடிப்பு அதிகரித்துப் போகிறது.
“நாம என்னங்க பாவம் பண்ணோம்? நம்ம பொண்ணு வாழ்க்கை இப்படியாகிடுச்சுன்னு வருத்தப்பட்டா, அக்காவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையாம தயா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு பிடிவாதமா நிக்கறானே, நம்ம ரெண்டு பிள்ளைங்க கல்யாணத்தையும் நாம பார்க்காமயே போய்ச் சேர்ந்துடுவோமாங்க?” என்று கடந்த மூன்றாண்டுகளில் முந்நூறு முறை கணவரிடம் புலம்பியிருப்பார். இப்போது எல்லாம் கூடி வருகையில், அவரின் ஒரு கேள்வி எல்லாவற்றையும் கலைத்து விடுமென்றால், அதை நிச்சயமாகக் கேட்கப் போவதில்லை அவர்.
குறிஞ்சி இந்த வீட்டுக்கு மருமகளாக வருவது அவர்களுக்கு மிகவும் முக்கியம். அதன் பிறகுதானே மகளின் வாழ்க்கையைச் சீராக்க முடியும்.
“அத்த..” குறிஞ்சி அழைக்க, பெருமூச்சு விட்டு, “ம்ம் சரிம்மா குறிஞ்சி” என்றார். மகள் தானாகவே சூழலை சரி செய்வது கண்டு அலமேலு முகத்தில் நிம்மதி படர்ந்தது.
“காப்பிய குடிச்சுட்டுப் போய்க் குளிச்சுட்டு வா. டிபன் சாப்பிட்டுட்டு நீயும் கொஞ்சம் நேரம் தூங்கு. நைட்டெல்லாம் கார்ல வந்தது அசதியா இருக்கும்ல” என்று நாச்சம்மை புன்னகைத்து சொல்லவும், பதிலுக்குப் புன்னகைத்து காப்பியை அருந்தினாள் குறிஞ்சி.
அப்பொழுது, “தயா” என்று வாசலில் நின்று அழைத்தான் ஶ்ரீகாந்த்.
பழனியப்பன் இன்னமும் கடைக்குச் சென்றிருக்கவில்லை. அவரின் அக்கா கைப்பேசியில் அழைத்திருக்க, அவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.
“இதோ வர்றேன் ஶ்ரீகாந்த்” என்று சொல்லி ரோஜாவை மடியில் இருந்து நகர்த்தி எழுந்து கொண்டான். வேட்டியை சீர் செய்து வாசலுக்கு விரைந்தான்.
என்னதான் இரவு ஶ்ரீகாந்த்துக்கு நன்றி சொல்லியிருந்தாலும், இப்போது முறையாக அவன் முகம் பார்த்து நன்றி சொல்ல வேண்டும் என்று மகனைப் பின் தொடர்ந்து வாசலுக்கு விரைந்தார்கள் நாச்சம்மை, பழனியப்பன்.