அதிகாலை நான்கு மணி, பொழுது புலரத் தொடங்கியதின் அறிகுறியாகப் பறவைகள் இசைக்கத் தொடங்கியிருந்தன. எங்கோ சேவல் கூவும் சத்தம் கேட்டது. பல வருட பழக்கமாக அந்நேரம் அவனுக்கு விழிப்புத் தட்டி விட்டது. உடனடியாக எழுந்து விட்டான். கால் மணி நேரத்தில் குளித்துத் தயாராகிக் கடைக்குச் சென்றிருந்தான் தயாபரன்.
கடை என்றால் தேநீர் கடை. அத்துடன் கூடவே சிறிய உணவகமும் இருக்கிறது. அவனது அப்பா காலத்தில் சாதாரணத் தேநீர் கடையாக ஆரம்பித்துப் பின்னர்ப் பலருக்கும் அதன் சுவை பிடித்துச் சற்றே பிரபலமும் வாடிக்கையாளர்களும் கூடியதில், உணவகம் தொடங்கியிருந்தார்கள். அதுவும் கூட வாடிக்கையாளர்களின் வேண்டுகோளினால்தான்.
சிவகங்கை மாவட்டம் அமராவதிபுதூரில் அமைந்திருக்கிறது அவர்களின் உணவகம். மிகவும் பரபரப்பான காரைக்குடி தேவக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் கடை இருப்பதால் தொழில் நன்றாகவே நடக்கிறது. அவன் வீடும் அருகில்தான். கடையில் இருந்து ஐந்தே நிமிட தூரத்தில் இருக்கிறது.
காலை நான்கரை மணிக்குக் கடைத் திறந்தால் இரவு எல்லாம் எடுத்து வைத்து வீடு திரும்பப் பத்து மணியாகி விடும்.
தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் கடை என்பதால் பெரும்பாலும் டீ, காஃபிதான் அதிகமாக விற்கும். அது போக மூன்று நேரமும் உணவு உண்டு. மதியம் மட்டும் சைவ சாப்பாடும், அவர்களின் பிரபலமான மீன் குழம்பு சாப்பாடும் கிடைக்கும். காலை போலவே இரவும் இட்லி, தோசை, சப்பாத்தி என எளிமையான உணவுகள் கிடைக்கும். முன்னர் அவனின் குடும்பம் அனைத்துப் பொறுப்பையும் பார்த்துக் கொண்டது.
தயா கல்லூரி படிக்கும் போதே கடைக்கு வந்து விட்டான். அப்போதிருந்தே கடை வேலைக்கு ஆள் வைத்து விட்டான். இப்போதும் உணவக மேற்பார்வையும், கல்லாவும் அவனது பெற்றோர்தான் பார்க்கிறார்கள். அது போகச் சமையல் பொறுப்பைப் பல வருடங்களாக அவர்களிடம் பணிபுரியும் அலமேலு பார்த்துக் கொள்கிறார். அவர்கள் உணவகத்தில் ருசி அதிகம் பாராட்டப்படுவதற்கும், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மாறாமல் இருப்பதற்கும் அவர்தான் காரணம்.
அவன் கடையை அடைந்து இரு சக்கர வாகனத்தில் இருந்து இறங்க, “வாங்கண்ணே” என்று அவனைப் பார்த்துப் புன்னகைத்தான் ஆசைத்தம்பி. கடை வாசலில் டீ, காபி போடும் இடத்தில் நின்றிருந்தான். அவன்தான் டீ மாஸ்டர். ஒருபக்கம் பால் காய, மறுபக்கம் டீ டிக்காஷன் தயாராகிக் கொண்டிருந்தது.
ஆசைத்தம்பிக்கு லேசான தலையசைப்பை பதிலாகத் தந்து விட்டு உள்ளே சென்றான். இப்போது வானம் லேசாக வெளுக்கத் தொடங்கியிருந்தது. வெளிச்சக் கீற்றுகள் கடைக்குள் விழ, அதைக் கண்டபடியே உள்ளே சென்றான்.
அவனைக் கண்டதும் அவரது வயதுக்கு மீறிய வேகத்துடன் நடந்து அவனிடம் வந்தார் நடராஜன். அந்தக் கடையின் ஆல் இன் ஆல் அவர்தான். முன்னர்த் தயாவின் அப்பா பழனியப்பன்தான் தினமும் அதிகாலை வந்து கடைத் திறப்பார். இப்போது அவருக்கு ஓய்வு கொடுத்து விட்டு அந்தப் பொறுப்பை நடராஜனிடம் ஒப்படைத்து விட்டான் அவன். கடைக்குப் பின்னால் சிறிய ஓட்டு வீடு இருக்கிறது. அதில் குடும்பத்தோடு வசிக்கிறார் அவர்.
“தம்பி. வாங்க, வாங்க, என்ன இன்னைக்கும் கடைக்கு வந்திருக்கீங்க? அதுவும் இந்நேரமே?” என்று அவனிடம் கேட்டார்.
“அப்போ கடைக்கு லீவ் விட்டுருவோமாண்ணே?” சிரிப்பின் சாயலே தெரியாமல் கிண்டலாகக் கேட்டான்.
“ஐயோ என்ன தம்பி நீங்க, வீட்ல விசேஷம் வச்சிருக்கேன்னு கேட்டேன்” என்று அவர் சொல்ல, “அண்ணே காப்பி” என்று அவர்களின் பின்னே வந்து நின்றான் ஆசைத்தம்பி.
நன்றாக நுரைக்க ஆற்றிய மணமும் குணமுமான பில்டர் காப்பி. வாசம் நாசியை நிமிண்ட அதைக் கையில் வாங்கிய தயா, “அண்ணனுக்கு?” என்று நடராஜனை குறிப்பிட்டுக் கேட்டான்.
“காலையில பாலு காஞ்சதும் எனக்கு முதல்ல டீ போட்டு குடுத்துட்டான். நான் குடிச்சாச்சு. இல்லனா நமக்கு வேலை ஓடாதே. நீங்க குடிங்க தம்பி.” நடராஜன் சிரிப்புடன் சொல்ல, ஒரு நிமிடம் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து நிதானமாகக் காப்பியை அருந்தினான். அதன் பிறகு நடராஜனுடன் அவனும் வேலையில் இறங்கி விட்டான்.
சாலையில் விரையும் வாகனங்கள், வேகம் குறைத்து, அவர்களின் வாசலில் வந்து நிற்கத் தொடங்கின. கடை பரபரப்பாக, காலை உணவுக்கான ஆயத்தங்களைக் கவனிக்கச் சென்றான் அவன்.
விறகடுப்பில் பெரிய பானையில் இட்லி அவிந்து கொண்டிருந்தது. பொங்கல் தயாராகி இருக்க, நெய்யில் மிளகும், சீரகமும், இஞ்சியும் பொரியும் மணம் பசியைத் தூண்டியது. உளுந்து, பருப்பு வடை மாவுடன் உள்ளே வந்தார் நடராஜன். சாம்பார் சட்னி என எல்லாமும் தயாராகிக் கொண்டிருக்க, அனைத்தையும் ஓர் பார்வை பார்த்து விட்டு, “நீங்க பாருங்கண்ணா. நான் வீட்டுக்கு போய்ட்டு பத்து மணிக்கு மேல வர்றேன்” என்றான்.
“சரிங்க தம்பி” என்று நடராஜன் சொல்ல, அந்நேரம் பின் வாசலில் அன்றைய தினத்துக்கான மீன்கள் தொண்டியில் இருந்து வந்திருந்தன. தொண்டி மீன்பிடி தளம், தினமும் அங்கிருந்து நேரடியாக நல்ல மீன்கள் கடைக்கு வருமாறு ஏற்பாடு செய்திருந்தான். இன்றைக்கு முரல், விளை மீன், செந்நகரை, இறால் ஆகியன வந்திருந்தன. அதையும் ஓர் பார்வை பார்த்து விட்டே வீட்டிற்குக் கிளம்பினான்.
நாச்சம்மை இல்லம், அந்நேரமே விழித்து விறுவிறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
தயாபரனுக்கு இன்னும் நான்கு நாள்களில் திருமணம். இன்று முகூர்த்தக்கால் நடுகிறார்கள். அதற்கான பரபரப்பில் இருந்தது அவன் வீடு. வாசலை அடைத்துக் கோலம் போடப்பட்டிருந்தது. அதை அப்படியே தாண்டிக் கொண்டு எட்டி நாலு வீடு தள்ளியிருந்த பெண் வீட்டை பார்த்தான்.
அங்கும் வாசலில் கோலம் போட்டபடி நின்றிருந்தார் அவனது வருங்கால மாமியார் அலமேலு. ஆம், அவர்களின் கடையில் வேலைப் பார்க்கும் அதே அலமேலுதான்.
இருவர் வீட்டிலும் பேசி முடித்த திருமணம் அது.
இங்கு நின்றபடியே தலையை லேசாகச் சாய்த்து வீட்டுக்குள் பார்த்தான். அம்மா மட்டும் நடமாடிக் கொண்டிருந்தார். அப்படியே திரும்பி அலமேலு வீட்டுக்கு நடந்து விட்டான். அங்கே கோலம் போட்டு நிமிர்ந்தவர், அவனைக் கண்டதும், “மாப்ள, வாங்க” என்று தடுமாற்றத்துடன் அழைத்தார்.
“குறிஞ்சி வந்துட்டாளா அத்த?” அவன் இயல்பாகக் கேட்க, சற்றே தயங்கி, “இன்னும் இல்ல தம்பி” என்றார்.
“ஏன்? இந்நேரத்துக்கு வந்திருக்கணுமே? பஸ் லேட்டா?” என்று கைக் கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்துக் கேட்டான்.
அலமேலு கோலமாவு கிண்ணத்தை அழுத்தமாகப் பிடித்துத் தரையில் இருந்த கோலத்தைக் காணவும், “அவளே ஆட்டோ எடுத்துட்டு வந்துடுவாளா? இல்ல நான் போய்க் கூட்டிட்டு வரவா?” என்று கேட்டான். இப்போதும் அவர் பதில் பேசாமல் நிற்கவும், அவரைக் கூர்ந்து நோக்கினான்.
“ஏதாவது பிரச்சனையா அத்த?”
“அது தயா தம்பி, குறிஞ்சி நேத்து சென்னையில இருந்து கிளம்பல. பஸ்ஸ விட்டுட்டாளாம். இப்போ காலையில கிளம்பி வர்றேன்னு சொல்லியிருக்கா” என்றார் திணறலுடன்.
“சரிங்க அத்த” என்றவனுக்கு விசயம் தெளிவாக விளங்கி விட்டது. ஆனால் அவரிடம் கேள்விக் கேட்டுத் தெளிவுப்படுத்திக் கொள்ள மனம் வரவில்லை. அவனே குறிஞ்சியை அழைத்தான். அவனது அழைப்புகளை ஏற்கவில்லை அவள். சட்டென அவனுள் மூண்ட கோபத்தைப் பல்லைக் கடித்து அடக்கினான்.
“நீங்க போய் வேலையைப் பாருங்க அத்த” கண்ணை எட்டாத புன்னகையுடன் சொல்லி விட்டு தன் வீடு நோக்கி நடந்து விட்டான்.
“பால குடி முதல்ல” என்று பேத்தியை செல்லமாக மிரட்டிக் கொண்டிருந்தார் அவனின் அம்மா நாச்சம்மை. நான்கு வயதான அவனின் அக்கா மகள் ரோஜா, அவனைக் கண்டதும், உறக்கம் முழுதாகக் கலையாத கண்களைக் கசக்கி, “மாமா” என்றழைத்தாள்.
“மாமா வந்துட்டேன் செல்லம்” என்று அவளைத் தூக்கிக் கொண்டான். அவன் தோளில் முகம் புதைத்து அவள் தூங்க முயற்சிக்க, “பால குடிக்கணும் ரோஜா குட்டி” என்றான் கட்டளை போல. அந்தக் குரலுக்குப் பயந்து அவனைப் பார்த்து உதடு பிதுக்கினாள் குழந்தை. அவனே பாலை எடுத்துக் கொடுக்கச் சமர்த்தாகக் குடித்து முடித்தாள்.
“தயா, நீ போய்க் குளிச்சுட்டு வாப்பா. நேரமாகுது. எல்லாம் வந்துடுவாங்க இப்போ” நாச்சம்மை வாசலை பார்த்தவாறு சொல்லவும், “அக்கா எங்கம்மா?” என்று கேட்டான்.
“குளிக்கறா, நீயும் போய் ரெடியாகிட்டு வா” என்றார். ரோஜாவை அம்மாவிடம் கொடுத்து விட்டு உள்ளே சென்றான் அவன்.
ஒன்பது மணிக்கு முகூர்த்த நேரம் தொடங்குகிறது. எட்டரை மணிக்கே அதே ஊரில் இருந்த அவர்களின் நெருங்கிய உறவினர் வீடு வந்து விட்டார்கள். அவனது வீடே பரபரப்பாக, அவனது அக்கா துர்காவை மட்டும் காணவில்லை.
ஒன்பது மணியானதும் அவனது குடும்பத்தினரும், உறவினரும் வாசலில் கூடி விட்டார்கள். பட்டுக்கரை வைத்த வெள்ளை வேட்டி சட்டையில் இருந்தான் தயாபரன். அவன் கண்கள் அக்காவை தேடின. அவன் அப்பா பழனியப்பன் அங்கே காரியங்களைக் கவனித்துக் கொண்டிருக்க, அவரின் தோளில் இருந்தாள் ரோஜா. அவரை நெருங்கி, “அக்கா எங்கப்பா?” என்று தணிந்த குரலில் கேட்டான்.
“வீட்டுக்குள்ள இருக்காய்யா. நானும் கூப்பிட்டாச்சு, உங்கம்மாவும் போய் வம்படியா கையைக் கூடப் பிடிச்சு இழுத்துட்டா. உங்கக்கா வர்றதா இல்ல” என்று கோபமாகச் சொன்னார். ஆனால் கோபத்தை மீறி வருத்தமே நிறைந்திருந்தது அவர் குரலில்.
“இருங்கப்பா. நான் போய்க் கூட்டிட்டு வர்றேன்” என்று அவன் வீட்டுக்குள் செல்ல முனைய, “போ, நீ கூப்பிட்டாலாவது வர்றாளான்னு பார்ப்போம்” என்றார். அங்கே பின்கட்டில் அமர்ந்திருந்தாள் துர்கா. முழங்காலை கைகளால் கட்டிக் கொண்டு வெளிறியிருந்த வானத்தை இலக்கில்லாமல் வெறித்துக் கொண்டிருந்தாள்.
“க்கா” அவன் எவ்வளவோ வற்புறுத்தி அழைத்தும் அவள் அங்கிருந்து நகர்வதாக இல்லை.
“தயா, நேரமாகுது. நீ வாப்பா” அம்மா அழைக்க, வேறு வழியின்றி வாசலுக்கு விரைந்தான்.
முகூர்த்த நேரத்தில் நல்லபடியாக முகூர்த்தக்கால் நடப்பட்டது. அங்கிருந்தே பார்க்க அவனது மணமகள் குறிஞ்சி வீட்டிலும் அதே நேரம் முகூர்த்தக்கால் நட்டு சாமி கும்பிட்டதைக் காண முடிந்தது. அவன் வீடு போல அங்கே அதிகமான உறவுகள் இல்லை. அலமேலுவுடன் நான்கு பேர் நின்றிருந்தார்கள்.
“தயா, கடையில வடையும் கேசரியும் எடுத்துட்டு வரச் சொல்லியிருந்தேன். ஆசத்தம்பிய இன்னும் காணோம். என்னானு அடிச்சு கேளுப்பா” நாச்சம்மை சொல்ல, அவனின் கவனம் அவர் மேல் திரும்பியது. அவர் கேட்டதைச் செய்தாலும் மனம் முழுக்க அக்கா துர்காவிடமே நிலைத்திருந்தது.
அவன் திருமணத்தில் அக்கா இப்படித்தான் ஒதுங்கி நிற்கப் போகிறாளா என்ற வருத்தம் மேலிட, அவளையே யோசனையாகப் பார்த்து நின்றான்.
“யாரும் ஏதாவது சொல்லிடுவாங்களோன்னு பயப்படுறாப்பா” என்று அம்மா சொல்ல, “ப்ச்” என்றான் கோபமாக.
“எவன் என்ன சொல்றான்னு என்கிட்ட சொல்ல சொல்லுங்க. நான் பார்த்துக்கறேன்” என்று கடுமையாகச் சொன்னவன், கையில் அணிந்திருந்த காப்பை மேலேற்றி விட்டான்.
“வெளி ஆளுங்கன்னா பரவாயில்ல, வீட்டு ஆளுங்க பேசினா என்ன பண்ணுவ? இப்படிக் கையை மடக்கிட்டு அடிக்கப் போவியா?” மகனின் குணம் புரிந்து குணமாகத்தான் கேட்டார். தயாவின் பார்வை ஒரு நொடி அவரைத் துளைத்துப் பின் அக்காவைத் தேடியது.
ரோஜாவுடன் ஏதோ தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தாள் துர்கா. அவளுக்கு நான்கு வயது மகள் இருந்தாலும் ஊரை பொறுத்தவரை அவளுக்குத் திருமணம் ஆகவில்லை. அவளைச் சுற்றிலும் அத்தனை கதைகள் சுற்றின. ஆரம்பத்தில் அனைத்திற்கும் ஏதோவொரு விளக்கம் சொன்ன குடும்பத்தார் இப்போதெல்லாம் பதிலே சொல்வதில்லை. துர்காவுக்கும் குத்தல் பேச்சுகள், பார்வைகள் பழகி விட்டன.
பெண் ஒரு முறை தவறினால் அது வாழ்க்கைக்கும் தொடரும் என்பதைப் புரிந்து கொண்டாள். காலம் கடந்த புரிதலால் அவளுக்குப் பயனில்லை.
“எவனா இருந்தாலும் அடிக்கத்தான் செய்வேன்” என்று கடுமை மாறாமல் சொன்னவன் சட்டென வெளியேறி விட்டான்.
திரும்பவும் குறிஞ்சிக்கு அழைத்தான், இப்போதும் அழைப்பு முழுதாக ஒலித்து அடங்கவும், அவன் நேராகச் சென்றது குறிஞ்சி வீட்டிற்குத்தான்.