அந்த திருமண மண்டபமே பரபரப்பாகக் காணப்பட்டது.
ஏ.சி.பி. அன்புச்செல்வனுக்குத் திருமணம் என்பதால் நிறைய வி.ஐ.பி.க்கள் அந்த மண்டபத்தில் கூடியிருந்தார்கள்.
பாதுகாப்புக்கும் குறைவில்லாமல் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க, ‘நடப்பது கனவா நிஜமா?’ என்ற பரிதவிப்புடனே ஒவ்வொரு நிமிடங்களையும் கடத்திக் கொண்டிருந்தாள் இந்து.
அவளுக்கு மேக்கப் போட்டுக் கொண்டிருந்த ஆதிரா, “உங்களுக்குப் பிடித்தவரைத் தானேக்கா மேரேஜ் பண்ணிக்கப் போறீங்க? பின்ன ஏன் பதட்டமாக இருக்கீங்க? அம்மா அப்பாவைப் பிரியப் போறோம்-ன்ற கவலையா?” என்று கேட்கவும்,
“பக்கத்துலதானே அப்பாவும் அம்மாவும் இருக்காங்க? எனக்கு அந்தக் கவலை இல்ல ஆதிரா. உன்னோட மாமாவோட நிஜமாவே எனக்கு மேரேஜ் நடக்குதா? கடைசி நிமிஷத்துல அவர் மனசு மாறி கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டா என்ன பண்றதுன்னு பதட்டமா இருக்கு,” எனவும்,
“உங்களோட கற்பனைக்கு ஒரு அளவே இல்லாம போயிட்டு இருக்குக்கா. நீங்க என்ன.. என்னோட மாமாவை வற்புறுத்தியா கல்யாணம் பண்றீங்க? ரெண்டு பேரும் விரும்பித் தானே கல்யாண வாழ்க்கையில் இணையப் போறீங்க? நீங்க பேசறதைக் கேட்டா எனக்கே கோபம் வரும்போது மாமா இன்னும் அதிகமாகக் கோபப்படுவார். கொஞ்சமாவது மாமா மேல நம்பிக்கை வைங்க,” என்று கொஞ்சம் கோபமான குரலில் கூறிய பின்புதான், தன்னுடைய பதட்டத்தைக் குறைத்துக் கொள்ளவே செய்தாள்.
மணமேடைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரம் இருக்க, ஆதிராவின் போன் அலறவும், யார் என்று பார்க்க, அஜய் என்று இருந்தது.
“இவனுக்கு வேற வேலையே இல்லை. எப்ப பார்த்தாலும் லவ் டார்ச்சர் பண்ணிட்டு இருக்கான்,” என்று சந்தோஷமாகச் சலித்துக் கொண்டு போனை எடுக்க,
“மண்டபத்துக்கு வெளியில இருக்கேன் ஆதிரா. செக்யூரிட்டி ஃபோர்ஸ் அதிகமா இருக்கு. இன்விடேஷன் இல்லாமல் உள்ள விட மாட்டேன்னு சொல்றாங்க. அவங்க கிட்ட என்னால விளக்கம் சொல்லிட்டு இருக்க முடியாது. நீ வெளியில வந்து என்னைக் கூட்டிட்டுப் போ,” என்று கட்டளையாகச் சொல்ல,
“ஒரு நிமிஷம் இருங்க அக்கா, நான் வந்துடுறேன்,” என்று இந்துவிடம் கூறிவிட்டு அவசரமாக வெளியே சென்றாள்.
தான் அழைக்காமலேயே திருமணத்திற்கு வந்த அஜய்யின் மேல் மையல் அதிகரிக்க, அவனைப் பார்த்து இருபது நாளுக்கு மேல் ஆகிவிட்டது என்பதால், அவனைப் பார்க்கக் கிட்டத்தட்ட வேக வேகமாக ஓடி வந்தாள் என்றே சொல்லலாம்.
உள்ளிருந்து செக்யூரிட்டிக்குத் தகவல் கொடுத்து இருக்கலாம்.
ஆனால் நேரில் சென்று அஜய்யை அழைத்துக் கொண்டு வர வேண்டும் என்ற ஆசையோடு அங்கே செல்ல, ஆதிராவைப் பார்த்துவிட்ட அஜய்யும் போலி கோபத்தோடு விலகித் திரும்ப நடக்க, “அஜய்! எங்க போறீங்க?” என்று மரியாதைப் பன்மையோடு அழைக்கவும் நின்று விட்டான்.
தன்னை பெரும்பாலும் ஒருமையில் அழைப்பதுதானே அவள் வழக்கம்!
மூச்சு வாங்க அவன் அருகில் வந்து நின்றவள், “திடீர் சர்ப்ரைஸ் பண்ணி இருக்கீங்க,” என்று கேட்டுக்கொண்டு அவனது கையோடு கைகோர்க்க, இது எல்லாம் அவனுக்குப் புதிதே.
அவளாக அவனது அருகில் நெருங்கிக் கூட அமர மாட்டாளே!
“இன்னைக்குத் தேவி தரிசனம் சிறப்பா கிடைக்கும்னு என்னுடைய உள்ளுணர்வு சொல்லுச்சு. அதான் கிளம்பி வந்துட்டேன்,” என்று கண்ணைச் சிமிட்டிச் சொன்னவன்,
“ரொம்ப அழகா இருக்க ஆதிரா,” என்று அவளது காதுக்குள் மென்மையாகச் சொல்ல, வெட்கம் வந்து ஒட்டிக்கொண்டாலும், தங்களையே செக்யூரிட்டிகள் பார்ப்பதை உணர்ந்து,
“முதல்ல மண்டபத்துக்குள்ள போலாமா?” என்று அவனை அழைத்துக் கொண்டு செல்ல,
“உன்னை மாடர்ன் டிரஸ்லதான் பார்த்திருக்கேன். ட்ரெடிஷனல் லுக்ல ரொம்ப ரொம்ப அழகா இருக்க ஆதிரா,” என்று விடாமல் சொல்லிக் கொண்டே அவளுடன் நடந்தான்.
“ரொம்ப வழியறிங்க, தொடைச்சுக்கோங்க,” என்று அவள் சொல்ல, தங்களையே சிலர் பார்ப்பதை உணர்ந்தாலும் கண்டுகொள்ளாமல் அவனை அழைத்துக் கொண்டு சென்றவள், நேராக அன்புச்செல்வன் தங்கி இருந்த அறைக்குள் தான் நுழைந்தாள்.
தன்னுடைய அக்கா மகள், தைரியமாக ஒருவனின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு, நெருக்கமாக நடந்து வருவதை அன்புச்செல்வன் முறைத்துப் பார்க்க, அஜய் வேண்டுமென்றே, இவள் என்னவள் என்று அன்புச்செல்வனுக்குக் காட்டும் விதமாக, தோளோடு தோள் அணைத்து, “ஹாய் சார்!” என்று சொல்ல,
“ரொம்பத் தைரியம்தான்,” என்று சொன்னவன், தன்னைச் சுற்றி இருந்த சொந்தங்களையும் நட்புக்களையும் ஒரு பார்வை பார்க்க, அனைவரும் வெளியே சென்று விட்டார்கள்.
“பார்வையாலே மிரட்டுறார் ஆதிரா,” என்று சொன்னது ஆதிராவிற்குக் கேட்டாலும்,
“எப்படி மாமா என்னோட செலக்சன்?” என்று சந்தோஷமாக அன்புச்செல்வனிடம் கேட்டாள்.
“உருவத்தை மட்டும் பார்த்து எடை போட முடியாது ஆதிரா.இவரோட குடும்பப் பின்னணியையும் விசாரிச்சுட்டு, அதுக்கப்புறம் உன்னோட செலக்சன் எப்படின்னு சொல்றேன்,” எனவும்,
“நான் எல்லாம் பொண்ணு எப்படி என்று மட்டும் தான் பார்க்கச் செய்வேன் சார். அவளோட பின்னணியைப் பார்த்து காதலிக்கிற ரகம் நான் இல்லை. நீங்களும் நான் எப்படி என்று மட்டும் பாருங்க. ஏன்னா, எங்க வீட்லயும் காதலுக்குச் சம்மதம் சொல்ற ஆட்கள் இல்லை. வில்லத்தனம் பார்க்கத்தான் செய்வாங்க,” என்று முன்கூட்டியே சொல்லிவிட,
அன்புச்செல்வன் புருவம் உயர்த்தினாலும்,
“சரி, அதை பின்னாடி பார்க்கலாம். முதல்ல ரெஃப்ரெஷ் ஆகு,” என்று அந்த அறையில் இருந்த இன்னொரு அறையைக் காட்ட, அவன் ஆதிராவைப் பார்க்கவும்,
“போங்க,” என்று கண் காட்ட, இருவரின் பார்வை பரிமாற்றத்தைப் பார்த்துக் கொண்டே இருந்த அன்புச்செல்வனுக்கு, அவர்களின் நெருக்கம் கொஞ்சம் பயத்தைத்தான் கொடுத்தது.
இளமையின் ஆரம்பப் புள்ளியில் இருப்பவர்கள் தடுமாறும் வயது.
இருவரையும் குறை சொல்ல முடியாது.
சில வருடங்களுக்கு இருவரையும் பிரித்து வைப்பதுதான் சரி என்று அந்தக் கணம் அன்புச்செல்வன் முடிவெடுத்துவிட்டான்.
“உன்னோட பாய் ஃப்ரெண்டை பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு. நீ இந்துவை கவனி,” என்று ஆதிராவை அனுப்பிவிட்ட அன்புச்செல்வன்,
‘ ஆதிராவிற்கு படிப்பு முடிய இன்னும் ஒரு வருடம் இருக்கிறது… அஜயும் அவனுக்கு இறுதி தேர்வு முடிந்த பின், எப்படியும் அவனது கம்பெனி பொறுப்புகளை நிர்வகிக்கச் சென்று விடுவான். ஆனாலும் அடிக்கடி இருவரும் பார்க்க நேரம் இருந்தால் சரியாக வருமா?’ என்று யோசித்துக் கொண்டே இருந்தவன், அவனது நண்பர்கள் நேரமாவதை உணர்ந்து மணமேடைக்கு அழைக்க, மற்ற சிந்தனைகளைப் புறக்கணித்துவிட்டு, சந்தோஷமாக மாலை அணிந்து மணமேடைக்குச் சென்று அமர்ந்தான்.
சில நிமிடங்களில் இந்துவை ஆதிரா அழைத்து வர, ஒரு நொடி இந்துவை நிமிர்ந்து பார்த்துவிட்டு, மீண்டும் தன்னுடைய கம்பீரம் குறையாமல் மேற்பார்வை பார்த்தபடி அமர்ந்து கொண்டான் அன்புச்செல்வன்.
அவன் அருகில் அமர்ந்த இந்துவிற்கு, அவன் தன்னைத் திரும்பிப் பார்க்க வேண்டும், ‘அழகாய் இருக்கிறாய்’ என்று சொல்ல வேண்டும் என்ற ஆசைகள் எல்லாம் இருந்ததுதான்.
அதெல்லாம் கனவில் கூட நடக்காது என்ற உண்மையும் புரிந்தாலும், கொஞ்சம் ஏக்கமாகக்கூட இருந்தது.
இந்துவின் கழுத்தில் அன்புச்செல்வன் சந்தோஷமாகத் தாலி கட்ட,
இந்துவின் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாகக் கொட்ட ஆரம்பித்துவிட்டது.
அதை அன்புச்செல்வன் சுத்தமாக எதிர்பார்க்கவே இல்லை.
“எதுக்கு அழற இந்து?” என்று அவன் கேட்க,
“ஒன்றும் இல்லை,” என்று சந்தோஷமாகச் சிரிக்க, ஆதிரா டிஷ்யூ பேப்பரை எடுத்து அவளின் மேக்கப் கலையாதவாறு ஒற்றி எடுத்தாள்.
இதுபோலச் செய்து வைப்பாள் என்று ஆதிராவிற்கு முன்பே தெரிந்திருந்தது.
மிகவும் உணர்ச்சிவசப்பட்டவளாக இந்து இருக்க, அன்புச்செல்வனுக்குத்தான் அவளிடம் கடினமாக நடந்துகொண்டோமோ?’ என்று தோன்றினாலும், அவளிடம் பேசும் நேரம் இது இல்லை என்பதால், அடுத்தடுத்து நடக்க வேண்டிய சம்பிரதாயங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவன்,
“நான் முழு மனசோட சம்மதித்ததால தான் நீ என் பக்கத்துல இருக்க. அதை மட்டும் ஞாபகத்துல வச்சுக்கோ,” என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு சொல்லியும் விட்டான்.
அதன் பின்பே இந்துவும் தெளிவாக அவளது பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்கிய பின்பு, சாரதாவிடம் ஆசீர்வாதம் வாங்க வர, தனக்காகவே திருமணத்தைத் தள்ளிப் போட்ட தம்பியின் நல்ல மனதை மனதில் வைத்து, இருவரையும் ஆசிர்வாதம் செய்தார்.
தன் தம்பிக்கும், இந்துவிற்கும் இடையேயான ஜோடிப் பொருத்தம் தான் அவரது மனமாற்றத்திற்குக் முக்கிய காரணம்.
தன்னுடைய மகள் தம்பியின் முன் மிகவும் சிறு பெண்ணாக இருக்கிறாள். நல்ல வேளை, இருவருக்கும் திருமணம் செய்து வைத்துத் தவறு செய்துவிடவில்லை என்று அந்தக் கணம் முழுவதுமாக உணர்ந்து கொண்டார்.
அவரது சந்தோஷத்தையும் நிம்மதியையும் சாய்க்க என்றே அஜய் அங்கு வர, “இங்கேயே வந்துட்டானா?” என்று ஆச்சரியத்துடன் மகளைப் பார்க்க, அவள் மிகவும் சந்தோஷத்துடன் அம்மாவிடமும் அறிமுகப்படுத்தி வைத்தாள்.
சுற்றியுள்ளவர்களைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல், கண்களில் காதலுடன், வெட்கத்தோடு அஜய்யை அறிமுகப்படுத்தி வைக்கும் பொழுது, அவருக்குத் தன்னையே பார்ப்பது போல இருந்தது.
தன்னைப் போலவே மகளும் திருமணத்திற்கு முன்பே தவறான முடிவை எடுத்து தடுமாறி விடுவாளோ என்ற பயம் அவரின் கண்களில் அப்பட்டமாகப் பிரதிபலித்தது.