அத்தியாயம் 8
“ரொம்ப நேரமா நீ கத்திட்டு இருக்க மாதிரி இருக்கு அஜய்,” என்று கேலியாகக் கேட்டான் அஜய்யின் நண்பன் பிரஜித்.
“என் தாத்தா பேசியதை கேட்டுட்டு தான இருந்த?” என்று கேட்க,
“கேட்டேன், கேட்டேன். ஏதோ பழைய படத்தைப் பார்த்துட்டு வந்திருப்பாரு போல. அதான் நாலு வருஷம் பார்க்காமல் இருங்க, பேசாமல் இருங்கன்னு புது ஐடியா கிடைச்சது போல, உன்கிட்ட வந்து சொல்லிட்டு இருக்கார். பக்கத்திலேயே அழகான காதலியை வச்சிக்கிட்டு, நீ ஏன்டா பார்க்காமல், பேசாமல் விரதம் இருக்கணும்? அவர் காலத்து மைண்ட் செட்ல பேசிட்டு போறார்.. நீ கண்டுகாதே மச்சி,” என்று அறிவுரை கூற,
“அவர் யோசனை ரொம்பப் பழசுதான். அவரோட கண்டிஷனுக்குக் கட்டுப்படலைன்னா வேற ஏதாவது வில்லங்கமா வேலை பார்த்துட்டு வருவார்னு பயமா இருக்கு ப்ரஜித். அவர் வயசுக்கு தேவையில்லாம வேலை பார்த்துட்டு இருக்கார். காலம் போன கடைசியில, நல்லதா நாக்குக்கு ருசியா சாப்பிட்டோமா, உடம்பு ஆரோக்கியமாக இருக்கா, எம்.ஜி.ஆர், சிவாஜி படத்தை டிஜிட்டல்ல புதுசா பார்த்தோமான்னு இல்லாம, என்னோட உயிரை வாங்கிட்டு இருக்கார்!
“ஆதிராக்கு நல்ல மூடு வந்து, இப்போதான் என்னோட காதலுக்குப் பச்சைக்கொடி காட்டியிருக்கா. இவர் இடையில புகுந்து வில்லங்கம் பண்ண நினைக்கிறார். ரொம்ப கடுப்பா இருக்குடா,” என்று புலம்ப,
“சரி, நீ அவரோட கண்டிஷனுக்கு ‘சரி’ன்னு சொல்ற நிலைமையில தான் இருக்கேன்னு புரியுது. ஒண்ணு மட்டும் பண்ணிடு: எப்படியாவது பதிவுத் திருமணம் பண்ணிடு. நாலு வருஷம் வெயிட் பண்றதுக்கு, நீ வேணா தயாரா இருக்கலாம். . எந்தவிதமான உறுதியும் இல்லாம, ‘நீதான் வேணும்னு காத்திருக்க ஆதிராவிற்கு எந்த அவசியமும் கிடையாது. இடையில் உன்னோட மனசும் மாறலாம். ஆதிரா மனசும் மாறலாம். அதுல எந்தவிதமான தப்பு கிடையாதுனாலும், இன்னொருத்தரைப் பார்த்து தடுமாறுவதற்கு நீயே ஒரு வாய்ப்பு கொடுத்திராதே.
“நீதான் அவளோட காதலன், கணவன்னு உறுதிப்படுத்துற மாதிரி ரிஜிஸ்டர் பண்ணிட்டேன்னா, பிரச்சனையே இல்லாம நம்பிக்கையோட காத்திருக்கலாம்,” என்று நண்பன் சொல்வதும் அஜய்க்குச் சரி என்று தான் பட்டது.
“சரிடா, நான் ஆதிரா கிட்ட பேசி பார்க்கிறேன்,” என்றவன் உடனடியாக ஆதிராவிற்குக் போன் செய்ய,
அவள் “பதினைந்து நாள் கழிச்சு நேர்ல பார்த்துப் பேசிக்கலாம். அதுவரைக்கும் தொந்தரவு பண்ணாதே அஜய்,” என்றுவிட, இந்துவுக்கும்,அன்புச்செல்வனுக்கும் திருமணம் என்பது அவனுக்கும் தெரிந்திருந்ததால் காதலியை அதிகமாக கட்டாயப்படுத்தவில்லை.
அவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று கவலைப்படும் ரகம் அஜய் இல்லை.
ஆதிராவின், தனிப்பட்ட உணர்வுகளுக்கு எப்போதும் மதிப்பு கொடுப்பான்.
அதுதானே அவனிடம் அவளுக்குப் பிடித்த விஷயம்!
தன்னுடைய இறுதித் தேர்வு வரைக்கும், தன்னை எப்படியும் தாத்தா தொந்தரவு செய்ய மாட்டார் என்பதால், அவனும் அவரது பேச்சை இலகுவாக எடுத்துக் கொண்டான்.
எதையும் சீரியஸாக எடுத்துக் கொண்டு பிரஷரை ஏற்றிக் கொள்வது அஜய்க்கும் பிடிக்காத ஒன்று.
பெங்களூரில் திருமண ஏற்பாடுகள் முழுமூச்சுடன் நடந்துகொண்டிருக்க, இந்துவும்,ஆதிராவும் குறுகிய காலகட்டத்தில் நட்பாகிவிட்டனர்.
இந்து, ஆதிராவிடம், “உன்னோட மாமா என்னை எப்படி எல்லாம் டார்ச்சர் பண்ணினார் தெரியுமா? என் காதலை அவர் கடைசி வரைக்கும் ஏத்துக்கிட்டேன்னு சொல்லவே இல்லை,” என்று பெரும்பாலும் அன்புச்செல்வனைப் பற்றித் தான் புகார் வாசித்துக் கொண்டிருப்பாள்.
“எங்க மாமாவோட அழகுக்கு எத்தனை பேர் போட்டி போட்டாங்க தெரியுமா? மத்தவங்களை எல்லாம் விட்டுட்டு உங்க காதலுக்கு மரியாதை கொடுத்திருக்கார்னா என்ன அர்த்தம்? அவரும் உங்களை விரும்புகிறார் என்று அர்த்தம். சின்ன லாஜிக் கூடத் தெரியாம, ‘உங்க காதலை ஏத்துக்கலை’ன்னு எப்படி நீங்க சொல்லலாம்?” என்று அன்புச்செல்வனுக்குப் பரிந்து கொண்டு சண்டைக்குச் செல்வாள்.
“நீ சொல்றது சரிதான். என்னோட சந்தோஷத்துக்காகவாவது, என்னை லவ் பண்றேன்னு ஒரு முறையாவது சொல்லி இருக்கணும் தானே? ஏதோ பிடிக்காமல் போனால் போகுதுன்னு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி எனக்கு ஃபீல் ஆகுது,” என்று அவ்வப்போது கவலைப்பட்டுக்கொண்டே இருந்தாள்.
அஜய்-ஆதிரா காதல் விஷயம் இந்துவுக்கும் தெரிந்த பின்பு தான் அவளது வருத்தமும் அதிகமாகியது.
“நீ காதலிக்கிற விஷயம் மட்டும் உன்னோட மாமாக்கு தெரிய வரலைன்னா இப்பவும் என்னை திரும்பி பார்த்து இருக்க மாட்டார்” என்று வருத்தத்துடன் கூற
“அப்படியெல்லாம் இல்லைக்கா, மாமாக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்” என்று சமாதானம் செய்ய, அதை அவள் ஏற்றுக்கொண்டது போல தெரியவில்லை.
அன்புச்செல்வனுக்கும், இந்துவின் மனக் கவலை பற்றித் தெரியும் என்பதோடு, ஆதிராவிடமும், இந்துவின் மனக்கவலையைப் பற்றிச் சொல்லியிருந்தான்.
‘ நீங்க தேவையில்லாம கண்டதையும் யோசிச்சு வருத்தப்படுறீங்கன்னு மாமா என்கிட்ட சொன்னாங்க’ என்று கூறி விடலாம் தான்,
ஆனால் அவர்களது தனிப்பட்ட விஷயத்தை தன்னிடம் அன்பு சொன்னதற்காக, இந்து கோபப்பட்டால் என்ன செய்வது என்று மாமன் தன்னிடம் கூறியதை மறைத்துவிட்டு, “நான் ஏற்கனவே சொன்னது தான் அக்கா. நீங்க மாமா பின்னாடி லவ் பண்றேன்னு அஞ்சு வருஷமா சுத்தி இருக்கீங்க. அவர் நினைச்சிருந்தால், நீங்க அவர் பக்கம் திரும்பாத அளவுக்குப் பண்ணியிருப்பார். அவருக்கும் உங்களைப் பிடித்திருந்ததால் தான், உங்களைத் திட்டறது போல நடிச்சிட்டு, நீங்க அவர் பின்னாடி லவ் பண்றத ரசித்திருக்கார். அவருக்குப் பிடிக்காமல் உங்களை அவர் வாழ்க்கையில ஏத்துக்கிறதுக்கு என்ன கட்டாயம் இருக்கு? சொல்லுங்க?” என்று பல விதங்களில் பேசி இந்துவைச் சமாதானப்படுத்தி வைத்திருந்தாள்.
சாரதாவும், தம்பி கல்யாணத்தில் பெரிய அளவில் ஈடுபாடு காட்டிக் கொள்ளவில்லை.
“என் பொண்ணு இன்னொருத்தனைப் பிடிச்சிருக்குன்னு சொன்ன உடனே, கொஞ்சமும் யோசிக்காமல் அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்றேன்னு சொல்லிட்டான்னா என்ன அர்த்தம்? ஏற்கனவே அந்தப் பொண்ணு அவன் மனசுல இருந்திருக்கா. என் பொண்ணுதான் இடைஞ்சலா இருந்திருக்கணும். அவ காதலிக்கிறேன்னு சொன்ன உடனே, ‘வாய்ப்பைத் தவற விடக்கூடாது’ன்னு உடனே சொல்லிச் சம்மதமும் வாங்கிட்டான். என்னோட ரகசியத்தையும் என் மகள் கிட்டப் போட்டு உடைச்சுட்டான். எல்லாரும் சுயநலவாதிகள்தான்,” என்று விரக்தியில் தான் இருந்தார்.
வயது குறைந்த ஆணை காதலிப்பது ஒன்றும் பெரிய குற்றமில்லை.
விரும்பித்தானே காதல் வாழ்க்கையில் விழுந்தனர்;
குழந்தையும் பெற்றுக் கொண்டனர்.
ஒரு கட்டத்தில் பிடிக்கவில்லை என்று விலகிய பின்னர், சாரதா அவருக்கு என்று தனிப்பட்ட முறையில் ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கலாம். அவரது
பெற்றோரும் எவ்வளவோ முயற்சி செய்தார்கள்.
சாரதா தான், “என் வாழ்க்கையில வேற யாருக்கும் இடமில்லை,” என்று உறுதியாக மறுத்துவிட்டார்.
காதல் என்ற வார்த்தையே அவருக்குக் கசந்து போனது.
அவரது காதலனைத் தவிர வேறு யாரிடமும் அவருக்கு ஈர்ப்பு தோன்றவே இல்லை என்பதுதான் உண்மையான விஷயம்.
அதுதான் அவரை அதிகமாகத் தாக்கியது.
கடைசி வரை மகளுக்காகவே வாழ்ந்துவிடலாம் என்று நினைத்தாலும், மகள் தன்னைப்போல தவறான வழியில் செல்லக்கூடாது என்று அவளிடம் மிகவும் கண்டிப்புடன் நடந்துகொள்வார்.
தன்னுடனே இருந்தால், அவளது அப்பாவைப் பற்றி கேள்வி வரும் என்பதால்தான் ஹாஸ்டலில் விட்டு விட்டார்.
அது அவருக்குத் தவறு என்றும் தோன்றவில்லை.
அவரது வட்டாரத்தில் இருப்பவர்களின் குழந்தைகள் பெரும்பாலும் ஹாஸ்டலில் தான் வளர்வார்கள்.
சாரதாவும் அன்புச் செல்வனும் கூட, அப்போதிலிருந்து ஹாஸ்டலில் வளர்ந்து படித்தவர்கள் தான்.
விடுமுறை தினத்தில் தான் வீட்டிற்கு வருவார்கள்.
அதையேதான் தன் மகளுக்கும் அவர் கடைப்பிடித்தார்.
அதேபோல, மகளுக்குப் பருவ வயது தொடங்கிய போது, ‘அன்புச்செல்வன் தான் உன் கணவன்’ என்று, தவறு என்று தெரிந்தாலும், அப்போதே மனதில் பதிய வைக்கத் தொடங்கியிருந்தார்.
தன்னைப் பற்றித் தெரிந்தால் மகளின் வருங்காலக் கணவனின் வீட்டில் நிச்சயம் பிரச்சனை செய்வார்கள்;
தன்னைப்போலத்தான் மகளும் இருப்பாள் என்று குத்திக் காட்டுவார்கள் என்ற பயம் அவருக்கு அன்றிலிருந்து இன்று வரை இருந்து கொண்டே தான் இருக்கிறது .
அனைத்திற்கும் தீர்வாகத் தன்னுடைய தம்பிதான் தன்னுடய மருமகனாக வருவான், மகளுக்குச் சரியான ஏற்ற துணை என்று அவராக ஒரு முடிவெடுத்து, பல வருடக் கனவில் வாழ்ந்துகொண்டிருக்க, இன்று அது இல்லை என்று ஆகிப்போனதை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
அதே நேரம், மகளுக்கும் இன்னொருவனின் மேல் பிடித்திருக்க, மறுபுறம் தம்பிக்கும் இன்னொருத்தியைப் பிடித்திருக்க, வலுக்கட்டாயமாக இருவரையும் வாழ்க்கையில் ஒன்றிணைத்துத் தவறு செய்யவும் விரும்பவில்லை.
பட்டும் படாமலும் திருமண வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
மகள் தன்னிடம் பேச வரும் பொழுது, “வேலை இருக்கு, அப்புறம் பேசலாம்,” என்று ஆற்றாமையில் புறக்கணிக்கவும் செய்தார்.
அன்புச்செல்வனின் திருமணத்திற்கு முதல் நாள், ஆதிரா, “அம்மா, என்னோட வாழ்க்கை என்னாகுமோ என்று நினைத்துக் கவலைப்படாதீங்க. நான் லவ் பண்ற அஜய் ரொம்பவே நல்லவன். அவன் என்னை நல்லாப் பார்த்துப்பான். இதுல எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஒருவேளை நீங்க பயப்படுற மாதிரி அஜய் வீட்டுல என்னை ஏத்துக்கலைன்னாலும், அஜய் என்னைப் பற்றித் தவறாகப் பேசினாலும், நான் அதற்காகக் கவலைப்பட்டுட்டுக் கண்ணீர் விட்டு நிற்கிற ரகம் கிடையாது. உண்மையைச் சொல்லித் தான் அவனை கல்யாணம் பண்ணிப்பேன்..
“அதுக்குப்பின்னும் என்னோட பிறப்பை பற்றி ஆராய்ச்சி பண்ணா, அது அவனோட, அவன் குடும்பத்தோட தவறா இருக்கும். என்னை நானே கஷ்டப்படுத்திட்டு ஒரு வாழ்க்கைக்குள்ள இருக்க நான் நினைக்க மாட்டேன்.
“ஆரம்பத்துல ஏமாற்றம் அளித்தாலும், எனக்கான சரியான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து நல்ல முறையில் வாழ்வேனே தவிர, ‘வாழ்க்கையே போயிடுச்சு’ன்னு ஏமாந்துட்டு ஒரு ஓரத்துல, மூலையில் ஒடுங்கிப் போய் உட்கார்ந்து விட மாட்டேன்,” என்று தெளிவுடன் பேசவும் தான், சாரதாவிற்கு நிம்மதியே பிறந்தது.