தீராதோ உன் மயக்கம் – 7

அத்தியாயம் 7

தன்னுடைய மாமனுக்கு, அவனது காதலியுடன் திருமணம் நிச்சயமாகிவிட்டதை அஜய்க்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று ஆதிராவின் மனம் பரபரத்தது.

தங்களது திருமணத்திற்கு அன்புச்செல்வன் பிரச்சனையாக இருக்க மாட்டான், முழு ஆதரவு தெரிவிப்பான் என்று தெரிந்தால் போதும், உடனடியாகக் கிளம்பி அஜய் அவள் வீட்டிற்கு வந்து விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அவன் வருவதில் தனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை; 

அவனது வருகையை அம்மா விரும்ப மாட்டார் என்று ஆதிராவிற்குப் புரிந்ததினால், நேரடியாக கல்லூரிக்கு சென்று அஜயிடம், அன்புச்செல்வன்-இந்துவின் திருமணத்தைப் பற்றித் தெரிவித்துக் கொள்ளலாம். அவனது முகம் காட்டும் பாவனைகளையும் பார்த்து ரசிக்கலாம் என்று தனக்குள்ளாகவே முடிவு செய்து கொண்ட ஆதிரா, அஜய்யின் அழைப்புகளை ஏற்காமல் அவனைத் தவிக்கவிட்டாள்.

“பிக் அப் தி போன் ஆதிரா, ஆர் யூ சேஃப்? வீட்ல பிரச்சனை இல்லையே? நான் வரட்டுமா? நீ ஓகே தானே?” என்று விதவிதமாகக் குறுந்தகவல் அனுப்பிக் கொண்டே இருந்தான் அஜய்.

ஒரு கட்டத்தில் அவனைத் தவிக்க விடுவது ஆதிராவிற்கே தவறாகப் பட, அவனுக்குப் போன் செய்துவிட்டாள்.

“வீட்டில் பிரச்சனை இல்லை தானே ஆரா?” என்று எடுத்தவுடன் கேட்கவும், 

“அதெல்லாம் எதுவும் இல்லை, நான் நல்லா இருக்கேன். நீங்க காலேஜ் போகலையா?” என்று கேட்க, 

“இல்ல ஆரா. நீ எனக்குப் பதில் மெசேஜ் அனுப்பலையே? அதான் உனக்கு என்னவோன்னு ரொம்பத் தவிப்பாக இருந்தது. உன்னோட போலீஸ் மாமன் உன் போனை எடுத்து வச்சிட்டு, உன்னை ரூம்குள்ள அடைச்சு வச்சுட்ட மாதிரியும், உனக்குக் கட்டாயத் தாலி கட்டி மனைவியாக்கிக் கொள்வது போலவும் கனவு வந்துச்சு. என்னால நிம்மதியாக இருக்க முடியல. நான் உன்னைப் பார்க்க வரட்டுமா?” என்று தவிப்புடன் கேட்கவும், ஆதிரா உருகிப் போய்விட்டாள்.

“நீ பயப்படுற அளவுக்கு இங்க எதுவுமே நடக்கல அஜய். நடக்கவும் நடக்காது. என் வீட்ல என்னோட விருப்பத்துக்கு மதிப்பு கொடுப்பாங்க. இது வரைக்கும் கட்டாயப்படுத்தி என்னை எதையும் செய்ய வைத்தது கிடையாது.”

“அவங்க கட்டாயப்படுத்த மாட்டாங்க சரிதான். நீயே விரும்பி, ‘உன்னோட மாமாதான் உனக்குப் பொருத்தமா இருப்பார்’ என்று அவசரமாக அவரைத் திருமணம் பண்ணிக்க மாட்ட என்று என்ன நிச்சயம்?” என்று வேண்டுமென்றே அவளை சீண்டுவதுபோல கேட்க,

“நீங்க சொல்றதும் சரிதான். எப்போ வேணா என்னோட மனசு மாறலாம்னு தான் அம்மாவும் காத்திருக்காங்க. நீங்க சொன்னதுக்கு அப்புறம் எனக்கும் சந்தேகமா இருக்கு அஜய். காலேஜ்ல உங்களை பார்க்கும்போது பிடிக்குது, வீட்டுக்கு வந்த பின்ன மாமாதான் எனக்குச் சரியா இருப்பார்னு தோணுது. நிலையற்ற மனசோட இருக்கேன். இன்னும் கொஞ்ச நாள் போகவும், உங்க ரெண்டு பேர் இல்லாம வேற யாரையாவது எனக்குப் பிடிக்குமோ?” என்று அவனை வெறுப்பேற்றிப் பார்ப்பதற்காகக் கேட்க, 

“கண்டபடி உளறிட்டு இருந்த. நேர்ல வந்து உன்னைக் கொன்னுடுவேண்டி! எப்ப பார்த்தாலும் ‘அவனையும் பிடிக்கும், என்னையும் பிடிக்கும்’னு கடுப்பேத்திட்டு இருக்க. உன்னோட கண்ணு என்னைப் பார்க்கும் போது எப்படிப் பார்க்கும் என்று எனக்குத் தெரியும். நீ உளறிட்டு இருக்கறதைக் கேட்டு, உன்னோட மாமன்காரன் உனக்கு அவனைத்தான் பிடிக்கும்னு நினைச்சுட்டு, உன்னை நினைத்து மனசுக்குள்ள ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்க போறான். லூசுத்தனமா பேசுறதை நிறுத்திடு!” என்று கோபமாக பேசியது கூட, ஆதிராவிற்கு குளுகுளுவென்று தான் இருந்தது.

அவனைத் தவிர யாரையும், தான் காதலிக்க மாட்டேன் என்று உறுதியாகவே நம்புகிறானே…

இதைவிட ஒரு காதலியாக தனக்கு என்ன வேண்டும் என்று நினைத்தவள், “லவ் யூ அஜய்!” என்று சொல்லிவிட்டு உடனடியாக போனை வைத்து விட, அந்தப் பக்கம் அஜய், ஆதிரா தன்னிடம் காதலைச் சொன்னாளா என்பதைக்கூடத் தாமதமாகவே உணர்ந்தவன், திரும்பத் திரும்ப அழைக்க, அவனது அழைப்பை அவள் ஏற்கவே இல்லை.

“பக்கத்துல இருக்கும்போது ‘காதலிக்கலை’ன்னு சொல்லி வெறுப்பேத்துறா. தூரத்தில் இருந்து ‘லவ் பண்றேன்’னு சொல்றா. பக்கத்துல இருந்தாலாவது அட்லீஸ்ட் ஒரு முத்தமாவது கொடுத்து என்னோட சந்தோஷத்தை அவகிட்டக் காட்டி இருப்பேன். என்னை வெறுப்பேத்தி பார்க்கிறா. இதுக்காகவே தினமும் என்னைப் ‘லவ் பண்றேன்னு’ சொல்லச் சொல்லி அவளை டார்ச்சர் பண்ணப் போறேன்,” என்று காதலியின் மேல் செல்லக் கோபம் கொண்டு, அவளுக்கு விதவிதமாகக் காதல் சித்திரவதை செய்ய யோசித்து வைத்திருக்க, அவனது தாத்தாவும் வழக்கம் போல அவனது சந்தோஷத்திற்குக் குறுக்கே வந்தார்.

அஜய்யைத் தன்னுடைய கண்காணிப்பில் வைத்திருப்பது போலவே, ஆதிராவையும் தன்னுடைய கண்காணிப்பில் தான் வைத்திருந்தார் வீரசிங்கம்.

ஆதிராவிற்கும், அன்புச்செல்வனுக்கும் தான் திருமணம் முடிவாகியிருக்கிறது; தங்களைப் போலவே, வெளியே திருமணம் செய்யும் பழக்கம் இல்லை என்று வீரசிங்கம் நினைத்திருந்தார். 

அவளது தாய் வெளிநாட்டில் ஒருவனைத் திருமணம் செய்திருந்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் அவளது அப்பாவின் தூண்டுதலால் காதலனைக் கழட்டிவிட்டு, அப்பா தான் வேண்டும், அவரது சொத்துக்கள் தான் வேண்டும் என்று இந்தியாவிற்குத் திரும்பி வந்து விட்டதாக அவருக்குத் தகவல் கிடைத்து இருந்தது. 

சாரதாவும் தன் மகளை எக்காரணத்தைக் கொண்டும் அன்புச்செல்வனைத் தவிர வேறு யாருக்கும் திருமணம் செய்து தரமாட்டேன் என்று தொழில் துறையில் உள்ள அத்தனை பேரிடமும் சொல்லி வைத்திருக்க, வீரசிங்கமும் ஆதிராவிற்கு, அன்புச்செல்வனுடன் தான் திருமணம் நடக்கும் என்று அத்தனை உறுதியாக நம்பியிருந்தார். 

அவரது நம்பிக்கை ஆட்டம் காணும் விதமாக, அன்புச்செல்வனுக்கும் இந்துவிற்கும் திருமணம் என்று முடிவாகிவிட்டதைக் கேள்விப்பட்டவர், “எதற்காக வெளியில கல்யாணம் பண்ணிக்கிறாங்க?” என்று தோண்டித் துருவி விசாரித்த போது, அதுவும் இந்துவின் குடும்பத்திலேயே விசாரித்த போது தான், சாரதாவிற்குத் திருமணமே நடக்கவில்லை என்பது தெரிந்தது.

இந்துவுடன் திருமணம் நிச்சயம் நடந்துவிட்ட பிறகு, அன்புச்செல்வனிடம், “நீங்க ஏன் உங்க அக்கா பொண்ணை வயசு வித்தியாசம் மீறி கல்யாணம் பண்ணிக்கணும்னு உறுதியா இருந்தீங்க?” என்று கேட்டதற்கு, 

“ஏற்கனவே சொல்லி இருந்தேனே, சொந்தத்தில் கல்யாணம் பண்றது தான் எங்க வீட்டுப் பழக்கம்,” என்று அவன் சொல்லியிருந்தாலும், இந்து நம்பாமல் அவனது வீட்டில் வேலை செய்பவர்களிடம் போட்டு வாங்க, சாரதா வீட்டில் சண்டை நடந்த பொழுது அன்புச்செல்வன், சாரதா விஷயத்தை ஆதிராவிடம் பேசியதை, வீட்டில் இருந்த வேலைக்காரன் ஒட்டுக் கேட்டு இந்துவிடமும் விஷயத்தைச் சொல்லி விட்டான்.

சாரதாவை நினைக்கும் பொழுது பாவமாகத்தான் இருந்தது. 

மற்றபடி, அவரின் மேல் இருந்த மரியாதை அவளுக்குக் கொஞ்சமும் குறையவில்லை. 

ஆனால், பெண்கள் வாய்தான் சும்மா இருக்காதே! 

அவளது வீட்டில் உண்மையை கூறிவிட, வீரசிங்கத்திற்கும் விஷயம் தெரிந்துவிட, தன்னுடைய பேரனிடம், “நீ உனக்குப் பார்த்திருக்க பொண்ணு, அப்பன் பேர் தெரியாதவள்,” என்று மும்பையில் அவன் தங்கியிருந்த வீட்டிற்கே சென்று ஆதாரத்தோடு சொல்லிவிட்டார். 

அவன் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், “சோ வாட் தாத்தா? நான் அவளைத்தான் விரும்பினேன். அவளோட பின்னணி எனக்குப் பிரச்சனை இல்லை,” என்று எளிதாக முடித்துவிட, 

“அப்படி என்ன உனக்குச் சொக்குப்பொடி போட்டு மயக்கி வச்சாளோ தெரியல..நீ அவ பின்னாடி சுத்திட்டு இருக்க..!” என்று தாங்க முடியாத ஆத்திரத்துடன் கேட்க,

“தாத்தா, எனக்கு உங்களோட மனநிலை புரியுது. ஒருவேளை ஆதிராவோட அப்பா,அம்மா ஒண்ணா நல்லபடியாக ஒரே வீட்டில் வாழ்ந்திருந்தாலும், ‘அவங்களும், நாமளும் வேற வேற’ன்னு சொல்லி எங்க காதலை நீங்க மறுக்கத்தான் செய்திருப்பீங்க. ஆதிராவை ஏற்றுக் கொள்ள உங்களுக்குப் பிடிக்கவே பிடிக்கல. அது எனக்கு நல்லாவே தெரியும்..

“அதனால, நீங்க விதவிதமான காரணத்தைக் கொண்டு வந்தாலும், என்னோட பதில் ஒண்ணே ஒண்ணுதான்: ஆதிராவை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு. என்னோட எதிர்காலம் அவள்தான் என்று முடிவு பண்ணி வருடங்கள் ஆச்சு. நீங்க கட்டாயப்படுத்தி திவ்யாவை எனக்குக் கல்யாணம் பண்ணி வச்சாலும், திவ்யா கடைசி வரைக்கும் மாமாவோட பொண்ணா மட்டும் தானே இருப்பாளே தவிர, எனக்கு மனைவியாக மாட்டாள்..!

“என்னோட வாழ்நாள் கடைசி வரைக்கும், திவ்யாவை தேவையில்லாமல் நான் தண்டிக்கிற மாதிரியான ஒரு சூழ்நிலையை நீங்க உருவாக்கிடாதீங்க,” என்று அத்தனை பொறுமையாக, திடமாக எடுத்துச் சொன்ன பின்னர், வீரசிங்கத்திற்கு அவனைக் கட்டாயப்படுத்திப் பிரயோஜனம் இல்லை என்று புரிந்து விட்டது.

“சரி, நான் உன்னோட விருப்பத்துக்கே வரேன். நீ காலேஜ் ஃபைனல் இயர் தான் பண்ணிட்டு இருக்கே…” எனவும்,

“பி.ஜி. ஃபைனல் இயர். அதத் தெளிவாச் சொல்லுங்க தாத்தா!” 

“சரி. பி.ஜி. இரண்டாவது வருஷம் பண்ணிட்டு இருக்க. நீ சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. படிச்சு முடிச்சுட்டு நம்ம கம்பெனிக்கு வா. ஒரு நாலு அஞ்சு வருஷம் கழிச்சு உன்னோட கல்யாணத்தைப் பத்தி பேசலாம். எனக்கு ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் தான் இருக்கு,” எனவும், அவர் இத்தனை தூரம் இறங்கி வந்தது பெரிது என்பதால்,

“என்ன கண்டிஷன்?” என்று கேட்க,

“ஒரு நாலு வருஷத்துக்கு நீ அந்தப் பொண்ணைப் பார்க்கக் கூடாது, பேசக் கூடாது. இந்த இடைப்பட்ட நாலு வருஷத்துல உன்னோட காதல் அப்படியே இருந்தா, தாராளமா நீ அந்தப் பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கோ. அப்புறம் இன்னொரு விஷயம், அந்தப் பொண்ணோட மனசு நிலையற்றதுன்னு உனக்கு ரொம்ப வருத்தம் தானே? இது மூலமா அந்தப் பொண்ணு உன்னை உண்மையா விரும்புகிறாளா இல்லையான்னு தெரிஞ்சுடும்,” எனவும், அஜய் திடுக்கிட்டுப் 

போனான்.

“தாத்தா! என்னோட போனை டிராக் பண்றீங்களா?” என்று கேட்க,

“ஆமாம். நீ எவகிட்டயும் ஏமாந்துடக் கூடாதுன்னு நான் முன்னெச்சரிக்கையாக இருக்குறதுல தப்பு இல்லையே? ஆனா நான் நேரடியா நீ பேசுவதைக் கேட்கிறது இல்ல. அதுக்குன்னு ஆள் வச்சிருக்கேன்,” எனவும், தங்களுடைய அந்தரங்கத்தைப் பற்றி இதுவரை பேசிக் கொண்டதில்லை என்றாலும், தாத்தா செய்ததை அஜய்யால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

“நீங்க இதுக்கு மேல என்னோட போனை டிராக் பண்ணக் கூடாது தாத்தா!”

“நீ என்னோட கண்டிஷனுக்கு ஒத்துக்கிட்டா, தாராளமா நானும் உன்னோட கால் ட்ரேஸ் பண்றத நிறுத்திடுறேன்,” எனவும்,

“இது நான் சம்பந்தப்பட்ட முடிவு மட்டுமில்ல தாத்தா, ஆதிரா கிட்டவும் நான் கேட்கணும். அவகிட்ட பேசிட்டு நான் உங்ககிட்ட முடிவா சொல்றேன். தயவு செஞ்சு கால் ரெக்கார்ட் பண்றத நீங்க நிறுத்தலைன்னா, இதுவரைக்கும் வார்த்தைக்குத்தான் சொல்லிட்டு இருந்தேன். இப்போ உண்மையைச் சொல்லுறேன். உங்களோட எந்தத் தொடர்பும் வச்சுக்க மாட்டேன் தாத்தா!” என்று எச்சரிக்கையான குரலிலேயே சொல்ல,

வீரசிங்கமும், “சரி, நீ நல்ல முடிவு சொல்வன்ற நம்பிக்கையோட கிளம்பறேன்,” என்று கிளம்பிவிட, தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான் அஜய்.

error: Content is protected !!
Scroll to Top