தன்னுடைய அப்பாவும், அம்மாவும் நியூசிலாந்தில் பழகித் திருமணம் செய்துகொண்டவர்கள் என்றுதான் ஆதிராவிற்குச் சொல்லப்பட்டது.
தனக்கு ஒரு வயது இருக்கும் பொழுது இருவருக்கும் ஏற்பட்ட சண்டையால், திருமண உறவை அங்கேயே முடித்துக்கொண்டார்கள் என்று அவளது தாத்தாவும், மாமாவும் சொல்லியிருக்க, அப்பாவின் பேச்சை எடுத்தாலே அம்மாவிற்குப் பிடிக்கவில்லை, அம்மா வருத்தப்படுகிறார் என்று நினைத்துக் கொண்டு, சாரதாவிடம் அப்பாவைப் பற்றி ஆதிரா கேட்பதைக் குறைத்துக் கொண்டாள்.
வருடங்கள் கடக்க, அப்பாவைப் பற்றி யாரிடமும் கேட்பதில்லை.
‘அப்பா இல்லை’ என்ற குறை இருந்தாலும், குடும்பச் சூழ்நிலையில் வளராமல் ஹாஸ்டலிலேயே வளர்ந்தாள் என்பதோடு, அவளது நட்பு வட்டத்தில் இருந்தவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் விவாகரத்து பெற்றவர்களாகவே இருந்தனர்..அல்லது பிள்ளைகளைக் கண்டு கொள்ளாது வேலை வேலை என்று பணத்தின் பின்னே ஓடுபவர்களாக இருந்தனர் என்பதால், காலப்போக்கில் தனக்கு அப்பா என்ற உறவு இல்லை என்பதை ஏற்றுக் கொண்டாள்.
“உன்னோட அப்பா போட்டோ காட்டு. அவர் உன்கிட்ட பேசவே மாட்டாரா?” என்று கேட்கும் நண்பர்களிடம்,
இல்லை என்று மறுப்பாக தலையாட்ட,
“எங்க வீட்டிலேயும் அப்படித்தான். நான் இருக்கேனா இல்லையான்னு கூட நினைச்சுப் பார்க்க அவங்களுக்கு நேரம் இருக்காது,” என்று அனைவரும் ஒன்று போல பதிலும் சொல்லிக் கொள்வார்கள்.
அதனால், அப்பா பற்றிய கேள்விகளும்,பதில்களும் தேவையில்லாமல் போனது ஆதிராவிற்கு..!
ஆனாலும், மனதில் அப்பாவை ஒருமுறையாவது நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கத்தான் செய்தது.
அதை யாரிடமும் அவள் வெளிப்படுத்தியதில்லை.
இனி வெளிப்படுத்தியும் பிரயோஜனம் இல்லை என்று புரிந்தது.
அதே நேரம், அஜயின் நினைவு வர, கூடவே அவனது தாத்தாவின் குணத்தைப் பற்றி அவன் சொன்னதும் ஞாபகம் வந்தது.
“எதுக்கெடுத்தாலும் ‘கௌரவம், கௌரவம்’னு உருட்டிட்டே இருப்பார்,” என்று அடிக்கடி சொல்வான்.
தன்னுடைய குடும்பம் பாரம்பரியமானது என்றாலும், வசதியானது என்றாலும், தன்னுடைய அம்மாவிற்குத் திருமணமாகாமல், தான் பிறந்தவள் என்று தெரிய வரும் பொழுது, எப்படித் தன்னை அஜய்க்குத் திருமணம் செய்யச் சம்மதிப்பார்?
தன்னை ஏற்றுக் கொள்வாரா? என்று குழப்பமாகவும் இருந்தது.
முன்பு தன் வீட்டில் அஜய்யை ஏற்றுக் கொள்வார்களா என்று கவலைப்பட்டது சென்று, இப்போது அஜய் வீட்டில் தன்னை ஏற்றுக் கொள்வார்களா என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பதை நினைத்து வேதனையாகவும் இருந்தது.
சாரதா, தன் மகளுடன் இயல்பாகப் பேசியிருந்தால் கூட, ஆதிராவும், அம்மாவுடன் சகஜமாகப் பேச ஆரம்பித்திருப்பாள்.
அவரோ, தன்னைப்பற்றி மகளுக்குத் தெரிந்ததும், மகள் தன்னைப்பற்றிக் குறைவாக நினைக்க ஆரம்பித்து விட்டாள்; இனி தன்னை மதிக்க மாட்டாள் என்று அவராகவே நினைத்துக் கொண்டு, மகளை நேருக்கு நேர் பார்ப்பதைத் தவிர்ப்பதற்காகவே, விரைவாகவே அலுவலகம் சென்று விடுகிறார்.
மூன்று நாட்கள் இதையே அவர் தொடர, அன்புச்செல்வன், “வாக்கிங் என்னோட வரியா ஆதிரா?” என்று கேட்டு அக்கா மகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவர முயற்சி செய்ய,
அவளுக்கும் வீட்டிற்குள்ளேயே இருந்ததில் மண்டை சூடாக இருக்க, “வரேன் மாமா!” என்று அவனுடன் ஜாகிங் செல்லப் புறப்பட்டுவிட்டாள்.
ஜாகிங் செய்து கொண்டிருந்த பொழுது, “உங்க லவ்வர் என்ன செய்றாங்க மாமா?” என்று கேட்க,
“ரொம்ப நேரமா நம்மளைப் ஃபாலோ பண்ணிட்டு வந்துட்டு இருக்கா,” என்று சிரிக்காமல் சொல்ல,
“என்ன?” என்று கேட்டவள் திரும்பிப் பார்க்க, இந்து தங்களைப் பின்தொடர்வது தெரிந்தது.
“நீங்க இந்து அக்காகிட்ட உங்க காதலை சொல்லலையா?” என்று கேட்க,
“இன்னும் இல்லை. பேசணும்னு ரெண்டு நாளைக்கு முன்னாடியே சொன்னேன். உனக்கும் எனக்கும் கல்யாணம் முடிவாகியிருக்குன்னு சொல்வதற்காகத்தான் கூப்பிடறேன்னு நினைச்சிட்டு, வர முடியாதுன்னு சொல்லிட்டா,” என்று இந்துவின் மனதைத் தெளிவாகப் படித்தவனாகக் கூற,
“நீங்க மெசேஜ்ல சொல்லி இருக்க வேண்டியதுதானே?” என்று கேட்டவள்,
“உங்களை நம்பி பிரயோஜனம் இல்லை. பாவம் அந்த அக்கா,” என்றவள்,
“நீங்க போங்க, நான் அக்காவோட பேசிட்டு வரேன்,” என்று திரும்பவும்,
“வேண்டாம்,” என்று அன்பு,ஆதிராவின் கையைப் பிடிக்கவும், இந்து ஓடுவதை நிறுத்திவிட்டவள், அழுவதைப்போல ஆகிவிட்டாள்.
மனதின் ஓரத்தில் அன்புச்செல்வன் மேல் கொஞ்சம் நம்பிக்கை இருந்தது.
இன்று ஆதிராவின் கையை அன்புச்செல்வன் பிடித்ததும், அவன் மேல் இருந்த கொஞ்ச நம்பிக்கையும் சுத்தமாகப் போய்விட, பொது இடம் என்பதையும் மறந்து, தரையில் மடிந்து அமர்ந்து அழத் தொடங்கிவிட்டாள்.
இந்துவைத் திரும்பப் பார்க்காது நின்றபடி ஓடிக் கொண்டிருந்த அன்புச்செல்வனிடம், “அக்கா அழறாங்க மாமா!” என்றவள், அவனது பதிலை எதிர்பார்க்காது வேகமாக இந்துவிடம் சென்னை
“அக்கா எதுக்காக அழறீங்க?” என்று கேட்க, அவளிடம் பேச விரும்பாதவள் அழுது கொண்டிருக்கவும், அங்கே வந்த அன்புச்செல்வன்,
“நீ பார்க்ல. வெயிட் பண்ணு ஆதிரா,” எனவும், அன்புச்செல்வன் விஷயத்தை இந்துவிடம் தெரிவிக்கட்டும் என்று நினைத்தவள், அவர்களுக்குத் தனிமை கொடுத்துவிட்டு நகர்ந்து விட்டாள்.
“இன்னும் எவ்வளவு நேரம் ரோட்ல உட்கார்ந்து அழறதா உனக்குத் திட்டம்? என்னைப் பார்க்கிறவங்க, ‘ஏசிபி இந்தப் பொண்ணை ஏமாத்திட்டாரு’ன்னு சொல்லணும்னு நினைக்கிறியா?” என்று கேட்கவும், படாரென்று நிமிர்ந்து அவனை முறைத்தவள், கண்களைத் துடைத்துவிட்டு எழுந்து அவ்விடம் விட்டு நகர முனைய, அவளது கைகளை அன்புச்செல்வன் பிடிக்கவும், ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் அவனைப் பார்க்க,
“உன்னைப் பார்க்கணும்னு மெசேஜ் பண்ணேனே, ஏன் ரிப்ளை பண்ணல?” என்று கேட்க, தன்னிடம் நீண்ட வார்த்தைகளாகப் பேசிவிட்டான் என்று அதிசயித்தவள்,
” உங்களுக்கும் அந்தப் பொண்ணுக்கும் கல்யாணம் ஆகப்போகுதுன்னு சொல்லத்தானே கூப்பிட்டீங்க?” என்று சொல்லும் பொழுதே, இந்துவிற்கு அழுகை வந்துவிட்டது.
“அதுக்கு ஏன் உனக்கு கூப்பிட்டுச் சொல்லணும்? எனக்குச் சம்பந்தமே இல்லாதப் பெண்ணை வெறுப்பேத்தி பார்க்கிற பழக்கம் எனக்கு இல்லை,” எனவும்,
“அப்புறம் ஏன் என்கிட்ட நின்னு பேசிட்டு இருக்கீங்க?” என்று கேட்க,
“உனக்கு அறிவு கொஞ்சம் கம்மின்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆனாலும் இந்த அளவுக்கு இருக்க வேண்டாம்,” என்று விட்டு முன்னே நடக்க,
“எதுனாலும் தெளிவாப் பேசிட்டுப் போங்க. இப்போ நீங்க சொல்றதுதான் முடிவு. இதுக்கு மேல அந்தப் பொண்ணைத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறீங்கன்னு சொன்னா, நான் உங்களைப் பின்தொடர மாட்டேன்!” என்று கத்தி சொல்லிவிட,
” பதினொரு மணிக்கு, உன்னோட அப்பா கிட்ட பேச வீட்டுக்கு வரேன். எங்கேயும் போகாமல் வீட்டிலேயே இரு,” என்று விட்டு ஜாகிங் சென்றுவிட, அவன் சொன்னது உண்மையா என்று அவனிடம் கேட்கக் கூடா முடியாமல், சந்தோஷத்தில் கூட அழுகை முட்டிக்கொண்டு வர, அவன் சென்ற திசையை கண்ணிமைக்காமல் வெகு நேரமாகப் பார்த்துக் கொண்டே இருந்தவள், பதினொரு மணிக்கு இன்னும் நான்கு மணி நேரங்களே இருக்க, வீட்டில் தன் காதலைச் சொல்லிச் சம்மதம் வாங்க வேண்டும் என்று கிளம்பிவிட்டாள்.
இந்து, ஒருவனைக் காதலிப்பது அவளது பெற்றோருக்குத் தெரியும்.
ஆனால் அது ஏசிபி அன்புச்செல்வனாக இருக்கும் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
“நிஜமாதான் சொல்றியா? அவர் பெரிய இடம் என்று கேள்விப்பட்டோம்,” என்று அவளது அப்பா நம்பாமல் கேட்க, இந்துவிற்குமே அந்தச் சந்தேகம் வந்துவிட்டது.
“அப்பாவைப் பார்க்க வரேன்னுதான் சொன்னார், கல்யாணம் பேச வரேன்னு சொல்லலையே,” என்று இருந்த நம்பிக்கையும் பாதியாக,
“அவர் வருவார், அவர் கிட்ட கேளுங்க,” என்று மெதுவாகச் சொல்லிவிட்டு, பதினொரு மணி எப்போது ஆகும் என்று அவனுக்காகக் காத்துக் கொண்டிருக்க, சரியாகப் பதினொரு மணி ஆவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பே, தன்னுடைய அக்காவையும் ஆதிராவையும் அழைத்துக் கொண்டு, இந்துவைத் திருமணம் பேசி முடிக்க வந்துவிட்டான்.
இந்து, இந்த உலகத்திலேயே இல்லை, வானத்தில் பறந்து கொண்டிருந்தாள்.
எல்லாம், ஆதிரா…அஜய் என்ற ஒருவனைக் காதலிப்பதினால், அவளின் காதலுக்குப் பிரச்சினை வரக் கூடாது என்பதற்காகத் தன்னை அன்பு திருமணம் செய்ய முடிவெடுத்திருக்கிறான் என்று தெரியும் வரைதான்.
தெரிந்த பின்பு, “எனக்கு நீங்க வாழ்க்கை பிச்சைப் போட வேண்டாம்!” என்று கோபித்துக் கொண்டு சென்றுவிட, தனக்கு மனைவியாகப் போகிறவளைத் திருமணத்திற்குப் பின்பு சமாதானம் செய்து கொள்ளலாம் என்று அன்புச்செல்வனும் அசட்டையாக விட்டுவிட்டான்.
அவனது வேலையும், வீட்டுச் சூழ்நிலையும் இந்துவிடம் மனம் திறக்க விடாது சதி செய்துவிட்டது என்பதே உண்மை.