அத்தியாயம் 5
“உன்னை இன்ஜினியரிங் படிக்கத்தான் மும்பைக்கு அனுப்பினேன் ஆதிரா. காதல் பாடம் படிக்க அனுப்பலை!” என்று ஆதிராவின் அம்மா சாரதா கோபமாகப் பேசிக் கொண்டிருக்க,
“இது ரொம்ப பழைய வசனம் மம்மி,” என்று மனதிற்குள் கவுண்டர் கொடுத்துக் கொண்டிருந்தாள் ஆதிரா.
நேரில் அவரிடம் தைரியமாகப் பேசவெல்லாம் ஆதிராவிற்கு வரவே வராது.
மிகவும் கண்டிப்புடன் இருக்கும் சாரதாவிடம், தனக்கான அன்பை எதிர்பார்த்து எத்தனையோ நாள் ஏமாந்து போயிருக்கிறாள் ஆதிரா.
“பதில் சொல் ஆதிரா!” என்று தலைகுனிந்து அமர்ந்திருந்த மகளிடம் சாரதா கேட்க, இருவரையும் பார்த்தபடி கைகட்டிச் சுவற்றில் சாய்ந்தபடி நின்றிருந்தான் அன்புச்செல்வன்.
தன்னுடைய அக்கா மகள் கண்ணீருடன் அமர்ந்திருப்பதைப் பார்க்கச் சகிக்கவில்லை அன்புச்செல்வனுக்கு.
“நான் பார்த்துக்கிறேன்- கா . நீ உன்னோட வேலையைப் போய்ப் பார்,” எனவும்,
“ஒவ்வொரு முறையும் அவ தப்பு பண்ணிட்டு வரும்போது எல்லாம், அவளுக்கு ஆதரவாகப் பேசினதின் விளைவுதான் இது அன்பு. உனக்காகத்தான் இவன்னு ஆரம்பத்திலேயே பேசி நாம முடிவு பண்ணது இவளுக்குத் தெரியும் தானே? அப்புறம் இன்னொருத்தனுடன் நெருக்கமாப் பழகுறது எந்த விதத்தில் நல்லது? சொல்லு!” எனவும்,
“வரலாறு திரும்புது, வேற ஒண்ணும் இல்லை,” என்று அன்புச்செல்வன் முணுமுணுத்தது சாரதாவிற்குக் கேட்க, அடிபட்டது போன்ற பாவனையுடன் தம்பியைப் பார்த்தார்.
சத்தம் இல்லாமல் அன்பு முணுமுணுத்தது ஆதிராவிற்குக் கேட்டாலும், என்னவென்று சரியாகப் புரியவில்லை.
“என்ன சொன்னீங்க மாமா?” என்று நிமிர்ந்து கேட்க,
“அதை விடு. உனக்கு அந்தப் பையனைப் பிடிச்சிருக்கா?” என்று கேட்கவும், மீண்டும் பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்து கொண்டாள்.
அக்கா மகளின் மனம் தெளிவாகப் புரிந்துவிட்டது அன்புச்செல்வனுக்கு.
தன்னுடைய மொபைலுக்கு ஆதிராவும், அஜய்யும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வரவும், ஒரு முடிவெடுத்துவிட்டான்.
கல்லூரிக்குள் நடக்கும் விஷயம் அன்புச்செல்வனுக்குத் தெரிய வாய்ப்பில்லை.
கல்லூரிக்குள் ஆதிராவைக் கண்காணிக்க ஆட்களை ஏற்பாடு செய்து, அவளின் சுதந்திரத்தைக் கெடுக்க அன்புச்செல்வனுக்கு மனமில்லை.
ஆனால் அவள் கல்லூரியை விட்டு வெளியேறிய நிமிடம் முதல், அவளின் பாதுகாப்பிற்காக இரண்டு நபர்கள் எப்பொழுதும் அவள் பின்னேயே வருவார்கள்.
அது ஆதிராவிற்கும் தெரியும்.
அதனால்தான் அஜய் பேச வரும்போதெல்லாம் கண்டுகொள்ளாமல் சென்று விடுவாள்.
நேற்று அவன் அழைத்தபொழுது, ‘வீட்டிற்கு எப்படியாவது தெரியட்டும்’ என்ற முடிவுடன் தான் அவனுடன் அந்தப் பார்க்கிற்குச் செல்லவே முடிவெடுத்தாள்.
உடனடியாக தனக்கு அன்புச்செல்வனுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துவிட்டால் என்ன செய்வதென்று மனதிற்குள் பயந்து கொண்டே தான் இருந்தாள்.
ஆனாலும் எத்தனை நாட்கள் பயந்து கொண்டே இருப்பது?
இதை ஒரு வாய்ப்பாகக் கருதியவள், தன்னுடைய மாமாவிற்குத் தன்னுடைய காதல் விஷயம் தெரிந்து, தனக்காக அம்மாவிடம் பரிந்து பேசினால் நல்லது தானே என்ற முடிவுடன் தான் அஜய்யுடன் மிகவும் நெருக்கமாக அமர்ந்திருந்தாள்.
பொது இடம் என்பதால் அஜய் வழக்கமாகக் கன்னத்தில் கொடுக்கும் முத்தத்தைக்கூட கொடுக்க மாட்டான் என்று நினைத்திருக்க, அவனோ ‘நான் உன் காதலன்’ என்ற அடையாளமாக அவளது இதழில் அழுத்தமாக இதழ் பதித்து விட்டுச் சென்றிருக்க, அதை ஒருவன் புகைப்படம் எடுத்து மாமாவிற்கு அனுப்புவான் என்றெல்லாம் யோசிக்கவில்லை.
அந்த நேரம், அஜய்யின் இதழொற்றல் கொடுத்த தித்திப்புதான் மனதில் இருந்தது.
நேற்று இரவு சாரதா போன் செய்யும் வரைக்குமே அந்த மயக்கம் நீடித்திருந்தது.
அவர் போன் செய்த போதே விஷயம் இதுவாகத்தான் இருக்கும் என்று உணர்ந்து கொண்டிருக்க, ஊரில் உள்ள அத்தனை தெய்வங்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தவள், தன்னைக் கூர்மையான பார்வையோடு கவனித்துக் கொண்டிருக்கும் மாமனைப் பார்த்ததும் அவளது தைரியமெல்லாம் எங்கேயோ மொத்தமாய் ஓடிப் போய்விட்டது.
“ஆதிரா! என்னை நிமிர்ந்து பார்!” என்று அன்புச்செல்வன் அழைக்கவும், கண்ணீருடன் அவனைப் பார்க்க,
“உனக்கு அந்தப் பையனைப் பிடிச்சிருக்கான்னு கேட்டேன். பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம்? அவனைப் பிடிக்கலைன்னு நான் முடிவு பண்ணிக்கட்டுமா?” என்று கேட்க,
“இல்லை!” என்று உடனடியாகத் தலையாட்ட,
“வாயைத் திறந்து பதில் சொல்லு!” என்று கண்டிப்புடன்,
“அஜய்யை ரொம்பப் பிடிக்கும்!” என்று எப்படியோ தைரியத்தை வரவழைத்துச் சொல்லிவிட்டாள்.
நெஞ்சில் கை வைக்காத குறையாக, சாரதா தொப்பென்று சோபாவில் அமர்ந்துவிட, அவருக்கு அடுத்த அதிர்ச்சியாக அன்புச்செல்வன், ” அக்கா, உனக்காகத்தான் விருப்பம் இல்லை என்றாலும் ஆதிராவைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதித்தேன் அக்கா,” எனவும்,
“விருப்பம் இல்லாமலையா?” என்று அதிர்ந்து போய்க் கேட்க,
“ஆமாம். என்னைவிடப் பதினைந்து வயசு சின்னப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க என் மனசு உறுத்தாதா? நீ என்கிட்டச் சத்தியம் வாங்காத குறையாக கெஞ்சிக் கேட்டுகிட்டதுனாலதான் சம்மதித்தேன். இப்போ ஆதிராவுக்கும் என்னைப் பிடிக்கல, வேற ஒருத்தனைப் பிடிச்சுருக்குன்னு தெரிஞ்சுடுச்சு. இதுக்கு மேல நான் ஆதிராவைக் கல்யாணம் பண்ணிக்க யோசிக்கிறதுகூட ரொம்பத் தப்பு,” என்றவன்,
“இந்த போட்டோவைப் பார்,” என்று தன்னுடைய மொபைலில் இருந்து இந்துவின் போட்டோவைக் காட்ட,
“யார் இந்தப் பொண்ணு?” என்று அப்படியிருக்கக் கூடாது என்ற பதட்டத்துடன் கேட்க,
அக்காவின் கண்களைப் பார்த்து அவரின் மனதைப் படித்தவன், “நீ நினைக்கிறது சரிதான் அக்கா. இந்தப் பொண்ணை எனக்குப் பிடிச்சிருக்கு. நாளைக்கு அவங்க வீட்டுக்குச் சம்பந்தம் பேசப் போகலாம்,” எனவும், சாரதாவிற்கு பேச்சே வரவில்லை.
அதுவரை அமைதியாக இருந்த ஆதிரா ஓடிவந்து மாமனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு தொங்க,அவனுக்கு ஆதிரா சிறுபிள்ளையாகத்தான் தோன்றினாள்.
அவன் தூக்கி வளர்த்த பிள்ளையை எப்படித் திருமணம் செய்து கொள்வான்?
அவளை திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே அன்புச்செல்வனுக்கு எப்போதும் இருந்தது கிடையாது.
சில நேரம் ஆதிராவின் பார்வை மாற்றம் உணர்ந்து, தன்னை அவளுக்குப் பிடித்திருக்கிறதா என்று நினைத்துத் தன்னையே குழப்பிக் கொள்பவன், ஆதிராவிற்குக் பக்குவம் வந்த பிறகு எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும் என்று நினைத்திருந்தான்.
அவளுக்குத் திருமண வயது வரும்பொழுது, வேறு ஒருவனை அவளுக்குப் பார்த்துத் திருமணம் செய்து வைக்கும் எண்ணம்தான் அவனுக்கும்.
தன்னுடைய ஒரே கடமையான அக்கா மகளின் திருமணத்தை நடத்திவிட்டுத்தான் தன்னுடைய திருமணத்தை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவன், தற்சமயத்திற்குத் தன்னுடைய திருமணம் நடந்தால்தான் ஆதிராவை அக்கா நிம்மதியாக மூச்சு விட விடுவார் என்று புரிந்துவிட, இந்துவின் புகைப்படத்தைக் காட்டிவிட்டான்.
சாரதாவிற்கு மனதே இல்லை.
‘நீயும் என்னை ஏமாற்றிவிட்டாயே’ என்பது போலப் பார்க்க,
“யாரும் உன்னை ஏமாற்றலக்கா, நீதான் உன்னை ஏமாத்திட்டு இருக்க. உன் வாழ்க்கையில் சறுக்கல் நடந்துட்டதனால் எல்லாரோட வாழ்க்கையும் தவறாக முடிந்துவிடும்னு நினைக்கிறது பெரிய தப்பு,” எனவும், ஆதிரா மாமனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு இருந்தவள்,
அவனிடமிருந்து விலகி,”என்னோட அப்பா பெயர் மட்டும் தான் எனக்குத் தெரியும் மாமா. அவர் யார்? எங்க இருக்கார்? அட்லீஸ்ட் உயிரோடுதான் இருக்காரா? எனக்குப் பதில் சொல்லுங்க ப்ளீஸ்!” என்று பல வருடங்களாகக் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்வியை இன்றும் கேட்க,
அதற்கு சாரதா ‘சொல்லாதே’ என்பது போல் தலையாட்ட,
“அது…” என்று அன்புச் செல்வனும் தயங்க,
“நான் விரும்பற பையன் வீட்ல என்னோட அப்பா என்ன செய்றாருன்னு கேட்பாங்க தானே மாமா? அப்போ உண்மையைச் சொல்லித்தான் ஆகணும். மறைக்க முடியாது,” என்று சொல்ல,
சாரதா ஆத்திரத்தோடு அன்புவிடம்,”இதுக்குத்தான் ஆதிராவை நீயே கல்யாணம் பண்ணிக்கன்னு சொல்றேன். என்னோட மரியாதைக்காக நீ இதைக் கூடச் செய்ய மாட்டியா?” என்று திட்டவும், ஒன்றும் புரியாமல் ஆதிரா விழிக்க,
“வேற ஒருத்தனை விரும்பற பொண்ணைக் கல்யாணம் பண்ணி, மிச்சம் இருக்கிற என்னோட வாழ்க்கையை நரகமாக்க எனக்கு விருப்பம் இல்லைக்கா,” என்றவன்,
“ஆதிரா, உன்னோட அம்மாவும் அப்பாவும் ஒருத்தருக்கு ஒருத்தர் விரும்பிய சமயத்திலேயே நீ பிறந்திட்ட..அவங்க இரண்டு பேருக்கும் இடையில ஐந்து வருஷம் வயசு வித்தியாசம் இருந்துச்சு,” எனவும்,
தன்னைப் பெற்றவர்களுக்கு திருமணத்திற்கு முந்தியே தான் பிறந்து விட்டோம் என்றெல்லாம் ஆதிரா கவலைப்படவில்லை.
“5 வருஷம் ஒண்ணும் பெரிய வயசு வித்தியாசம் இல்லையே மாமா,” என்று புரியாமல் கேட்க,
“உன்னோட அம்மாவை விட அவருக்கு 5 வயசு கம்மி,” எனவும்,
“அதனால?” என்று புரிந்தும் புரியாமல் கேட்க,
“காதலிக்கும் போது வயசு கண்ணுக்குத் தெரியல. குழந்தை பெத்துக்கும் போதும் தெரியல. குழந்தை பெத்ததுக்கு பின்னாடி ‘அழகு போச்சு’ன்னு தன்னைத்தானே வருத்திக்கிட்டு, உன்னோட அப்பாவையும் டார்ச்சர் பண்ணித் துரத்திவிட்டது உன்னோட அம்மா தான். இப்போ சட்டப்படி அவருக்கு மேரேஜ் ஆகி வேற குடும்பம் இருக்கு. ‘அப்பா’ன்னு நீ உறவு கொண்டாடிட்டுப் போக முடியாது. அவரோட குடும்பத்துக்கு நீயும் உன்னோட அம்மாவும் பிரச்சனையாகப் போய் நின்னுடாதீங்க,” எனவும், ஆதிராவால் நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
தன்னுடைய அம்மாவைப் பார்க்க, அவரோ மகளை நிமிர்ந்தும் பார்க்க முடியாமல், தன்னுடைய பழைய வாழ்க்கை கொடுத்த கசப்பில் இருந்து வெளிவர முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்.
தான் கொஞ்சமும் யோசிக்காமல், வயது வித்தியாசம் பார்க்காமல், அன்னிய தேசத்தில் படிக்கப் போன இடத்தில், தன்னுடன் பழகிய ஒருவனுடன், திருமண உறவைத் தாண்டிய ஒரு பந்தத்தை உருவாக்கிக் கொண்டதை நினைத்து, எப்போதும் போல இன்றும் வருத்தப்பட, காலம் அவரை மேலும் வருத்தப்பட வைப்பதற்குக் காத்திருந்தது என்பது அவருக்குத்தான் தெரியவில்லை.