தீராதோ உன் மயக்கம் – 4

“இங்கே எதுக்கு என்னை வரச் சொன்ன அஜய்?” என்று, அந்தப் பார்க்கில் இருந்த இளம் வயதினர் நெருக்கமாக இருப்பதைப் பார்க்க முடியாமல், போனைப் பார்த்துக் கொண்டே கேட்டாள் ஆதிரா.

“காதலர்கள் சந்திக்கிற இடத்துக்குத்தானே,காதலியை அழைச்சிட்டு வர முடியும்?” என்று இலகுவாகக் கேட்க, 

“உனக்கு நான் காதலியா? நான் எப்போ உன்னைக் காதலிக்கிறேன்னு சொன்னேன்?” என்று மீண்டும் பழைய பல்லவியையே ஆதிரா படிக்க,

“அநியாயத்துக்குப் பொய் சொல்லாதே ஆதிரா. உன்னைப் பார்க்கும் போதெல்லாம் கன்னத்தில் முத்தம் கொடுக்கிறேன்., உனக்கு கொஞ்சமும் பிடிக்காதவன்,முத்தம் கொடுத்த உடனே ‘பிடிக்கலை’ன்னு என் கன்னத்தில் மாறி மாறி அறைய வேண்டியது தானே. அத விட்டுட்டு கன்னத்தில் இருக்கிற ஈரத்தை மட்டும் துடைப்பதை தானே வழக்கமா வச்சிருக்க?” என்று கேட்டவன், இப்போதும் அவளின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டுக் கேட்க, மீண்டும் கன்னத்தில் இருந்த ஈரத்தைத் துடைத்தாளே தவிர, 

அவனை தள்ளிவிட்டு, “கொஞ்சமும் நாகரிகம் இல்லாமல் நடந்துகொள்ளாதே!” என்று அவனைத் திட்டவில்லை.

“சீ… ஆதிரா! உன்னோட பொய்யான நாடகத்தை தயவுசெய்து நிறுத்து. எனக்கு ரொம்பவே கோபம் வருது. உனக்காக நான் என்னோட சுகபோக வாழ்க்கையை விட்டுட்டு தினமும் கஷ்டப்பட்டு இருக்கேன். நீ என்னடான்னா என்னோட காதலைக் கொஞ்சம்கூட மதிக்கவே மாட்டேங்குற,” என்று எரிச்சல் பட,

“என்ன கஷ்டப்பட்ட?” என்று தெரிந்தும் தெரியாதது போலவே கேட்டாள். 

அதில் அவனுக்கு இன்னும் கோபம் அதிகமாக விட, 

“உன்னைக் காதலிக்க ஆரம்பித்த நாளிலிருந்து ,பார்ட் டைம் வேலை பார்க்கிறேன். அது உனக்குத் தெரியும் தானே? என்னோட தாத்தாவுக்கு என்னோட அத்தை பொண்ணு திவ்யாவை கல்யாணம் பண்ணி வைக்கிறதுதான் ஆசை. அவரோட பேச்சை மீறினால், சொத்தில் இருந்து ஒரு ரூபாய்கூடக் கொடுக்க மாட்டார். அவரோட குணம் தெரிந்ததால் தான், உன்னைக் காதலிக்க ஆரம்பித்த நாளிலிருந்து, என்னோட செலவுகளுக்கு அவர் கிட்ட பணம் வாங்காமல், நானே வேலை பார்த்து சம்பாதிக்கிறேன். உனக்கு கிஃப்ட் பண்றதுகூட என்னோட சொந்தப் பணம். நான் வேலை பார்த்து சம்பாதிக்கிற பணம். 

“என்னோட மாற்றம் எல்லாம் உனக்காக என்று உனக்கு நல்லாவே தெரியும். இருந்தாலும் நீ வேணும்னே என்னை அலட்சியப்படுத்தற… ஒருத்தன் இதுக்கு மேல இறங்கிவர முடியாது ஆதிரா” என்று அவளிடம் கோபமாகப் பேசிவிட்டான்.

அவனின் கடுமையான பேச்சில், ஆதிராவின் கண்கள் கலங்கிவிட, “நீ அழுத உடனே சமாதானப்படுத்துற அளவுக்கு நான் நல்ல மூட்லயே இல்லை ஆரா. தாத்தா வேற திவ்யாவை மேரேஜ் பண்ணிக்கச் சொல்லி உயிரை வாங்குறார். இருபத்திமூணு வயசு கல்யாணம் பண்ணிக்கிற வயசு இல்லைன்னு சொன்னாலும் ஏத்துக்க மாட்டேங்கிறார்…

“உன்னைக் காதலிக்கிறது தெரிஞ்சும் மூணு வருஷமா அவர் அமைதியாக இருந்ததற்குக் காரணம், எப்படியும் நமக்குள்ள செட்டாகாது, வயசுக் கோளாறு, சீக்கிரமா பிரிஞ்சிடுவோம் என்ற நம்பிக்கை இருந்ததால்தான்… !

“சமீப காலமா அவருக்கு நான் உன்னை ஆழமாக நேசிக்கிறது புரிந்திருக்கணும். அதனாலதான், அவர் பேச்சைக் கேட்காமல் போயிடுவேன்னு பயத்துல திவ்யாவை மேரேஜ் பண்ணிக்கக் கட்டாயப்படுத்திட்டு இருக்கார். அவர் கிட்ட ‘முடியாது’ன்னு சொல்லிட்டு மொத்தமாக உதறித் தள்ளிட்டு வர எனக்கு ரொம்ப நேரம் ஆகாது,” எனவும், 

“அப்புறம் ஏன் செய்யாமல் இருக்க?” என்று அவள் கேட்க,

“நீ உறுதியான வார்த்தையைச் சொன்னா, நான் என்னோட அம்மாவைக் கூட்டிட்டு மும்பைக்கே வந்துடுவேன். நீ காதலிக்கிற மாதிரியும் பழகற, வெறுக்கிற மாதிரியும் நடிக்கிற. முழுமையான நிலைப்பாட்டுடன் இருக்க மாட்டேங்கற. எனக்கு அதுதான் உன் மேல கோபமே!” எனவும்,

“இதுதான் காதல் என்று எதை அடிப்படையாக வைத்துச் சொல்றதுன்னு தெரியல அஜய். சின்ன வயசிலிருந்து மாமாவைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு என் மனசுல பதிய வச்சுட்டாங்க. அவரைப் பார்க்கும் போது என்னோட மனசுலயும் பட்டாம்பூச்சி பறந்தது நிஜம். நிறைய முறை அவரை நேருக்கு நேர் பார்த்துப் பேச முடியாமல் வெட்கத்துல தயங்கி இருக்கேன்,” எனவும், 

அஜய் கடுப்போடு, “என்ன சொல்ல வர? அவர தான் உயிருக்கு உயிராக் காதலிச்சேன்னு சொல்ல வரியா?” என்றவன், 

“இரு, இரு, ஒரு நிமிஷம்… நீ வெட்கப்பட்ட சரி.. அந்த மனுஷன் உன்கிட்ட ரொமான்ஸ் பண்ணாரா?” என்று கிட்டத்தட்டக் கத்தவே செய்ய, மற்றவர்கள் தங்களைத் திரும்பிப் பார்க்கவும், தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவன்,

“சொல்லுடி! அமைதியாக இருந்தா என்ன அர்த்தம்?” எனவும், 

அவனை முறைத்தவள், “மாமா என்னை ஒருபோதும் தவறாக ஒரு பார்வை பார்த்தது கிடையாது. அவர் ரொம்ப நல்லவர். நீதான் என்னைக் காதலிக்கிறேன்னு சொல்லிட்டுத் தப்பு தப்பாப் பேசற, தப்பு தப்பா பார்க்கிற,” என்று அன்புச்செல்வனைக் குறை சொல்லியதும், ஆதிராவும் கோபமாய்ப் பேச, 

கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளாமல், “இப்போ தான் எனக்கு உயிரே வந்துச்சு! உன்கிட்ட ரொமான்ஸ் பண்ற முதல் ஆள் நானாத்தான் இருக்கணும். கடைசி ஆளும் நானாகத்தான் இருக்கணும்,” என்று, அதுதான் அவனுடைய தலையாய பிரச்சனை என்பது போலப் பேசியவன், 

ஆதிராவின் முகம் தெளிவில்லாமல் இருப்பதைக் கண்டவன், 

“வீட்டில் ஒருத்தரை, மேரேஜுக்குப் பேசி இருக்கும்போது இயல்பான ஈர்ப்பு ஏற்படுவது தப்பில்ல ஆரா. இவங்களைத்தான் திருமணம் செய்துக்கப் போறோம்னு வீட்டிலேயே பேசி வச்ச ஒரு ஆள் மேல ஈர்ப்பு வரது இயல்பான விஷயம்,” எனவும்,

“அப்போ உனக்கு திவ்யா மேல ஈர்ப்பு இருந்துச்சா?” என்று பதட்டமாகக் கேட்கவும், 

சிரித்தவன், “திவ்யா மேல மட்டும் இல்ல, நான் ஸ்கூல்ல படிச்ச டைம்ல இருந்து, ஏன் நம்ம காலேஜ் சேர்ந்த புதுசுல, நிறைய பேர் மேல எனக்கு ஈர்ப்பு வந்து இருக்கு. அதுக்காக அவங்க கிட்டப் போய்க் காதலிக்கிறேன்னு நான் வழிஞ்சதும் இல்லை. கல்யாண கனவு கண்டதும் இல்லை. 

“என்னோட வாழ்க்கை துணை எப்படி இருக்கணும்னு, எனக்கு ஒரு கற்பனை இருந்தது. அந்தக் கற்பனைக்குள்ள பொருந்தி வந்தது நீ மட்டும் தான். மத்தவங்களை எல்லாம் ரசித்ததுடன் நிறுத்திட்டேன். உன்னைப் பார்த்ததுக்கு அப்புறம் நான் வேற எந்தப் பெண்ணையும் வேறான கண்ணோட்டத்தில் பார்த்ததே கிடையாது,” என்று அவளுக்குத் தேவையான உறுதியையும் கொடுத்து விட்டவன், 

“உன்னோட மாமாகிட்ட நான் பேசட்டுமா?” என்றும் கேட்டான்.

அதற்கு மறுப்பாக ஆதிரா தலையசைக்க, “உன்னை என்ன பண்றதுன்னு எனக்குத் தெரியலடி! எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு இப்பவே உன்னைக் கடத்திட்டுப் போய்க் கல்யாணம் பண்ணிக்கணும்னு வெறியே வருது. ஆனாலும், உன்னோட சம்மதம் இல்லாம எதுக்கும் வற்புறுத்தக் கூடாதுன்னு அமைதியா இருக்கேன். இப்போ என்னோட கோபத்தை வேற நான் குறைச்சாகணும்,” என்றவன், தான் இருக்கும் இடம் காதலர்களுக்கான இடம் என்பதாலோ, வெகு நேரமாகக் அங்கு நடந்து கொண்டிருக்கும் காதல் லீலைகளைப் பார்த்ததினாலோ என்னவோ, திடீரென்று அவள் இதழில் அழுந்த முத்தமிட்டுவிட்டு, 

“நாளைக்கு நல்ல முடிவாச் சொல்லு. நான் என் வீட்டில் பேசணும்,” என்று விட்டு அவளிடம் இருந்து தப்பித்துச் சென்றுவிட்டான்.

“ராஸ்கல்! ஃபீல் பண்றதுக்குள்ள ஓடிப் போயிட்டான்,” என்றுதான் ஆதிராவிற்குத் தோன்றியது.

தனக்காகவே காத்திருக்கும் அன்புச்செல்வனின் நினைவு வந்ததும் குற்றம் செய்வது போல குறுகுறுக்க, தன் மாமனிடம் ஒரு முறை பேசிப் பார்த்தால் என்னவென்று தோன்ற, அந்த வாரத்தில் வரும் விடுமுறையில் பெங்களூருக்குச் செல்ல அவள் திட்டமிட்டு இருக்க, 

அன்று இரவே ஆதிராவிற்கு, “உடனே ஊருக்கு வா” என்று அவளது அம்மாவிடமிருந்து போன் வந்தது.

தயங்கிக் கொண்டிருக்கவெல்லாம் அவளுக்கு நேரமில்லை. 

விமானச் சீட்டு பதிவு செய்யப்பட்டு, அவளைக் கல்லூரியிலிருந்து ஏர்போர்ட்டிற்கு அழைத்துச் செல்ல காரும் வந்திருக்க, வேறு வழியில்லாமல் உடனடியாகப் பெங்களூருக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டாள்.

error: Content is protected !!
Scroll to Top