மும்பையில் உள்ள மிகப்பெரிய கல்லூரியில் இன்ஜினியரிங் மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருந்த ஆதிரா,வெகு நேரமாக ஒருவனின் போன் காலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தாள்.
தினமும் இரவு 7 மணிக்கு ஆதிராவிற்கு தவறாமல் போன் செய்து விடுவான்.
“நான் எடுக்கலைன்னாலும், ஸ்வேத க்கு போன் பண்ணி என்கிட்ட கொடுக்க சொல்வான். இன்னைக்கு என்ன ஆச்சு அவனுக்கு? காலேஜுக்கு வந்திருந்தானே, அப்புறம் ஏன் எனக்கு போன் பண்ணல?” — என்று குழப்பத்தில் சோகமாக அமர்ந்திருக்க,
ஸ்வேதா, “அஜய் உனக்கு போன் பண்ணலன்னு தானே கவலையா இருக்க?” — எனவும்,
இல்லை என்பது போல
மறுப்பாக தலையாட்டியவள், ஸ்வேதாவின் ஆராய்ச்சி பார்வையில்“ஆமாம்…” என்று உண்மையை ஒத்துக் கொண்டாள்.
“அஜயும்,நீயும் ‘டேட்’ பண்றது நம்ம காலேஜ் பிரண்ட்ஸ் எல்லாருக்கும் தெரியும்.ஆனாலும் அவனை காதலிக்கிறேன்னு, முழு மனசோடு சொல்ல விடாமல், எது உன்னை தடுக்குது ஆதிரா? உன்னால நானும் அவனை பிக் அப் பண்ண முடியாமல் ஒதுங்கி நிற்கிறேன்! – அவன் உனக்கு வேணுமா? வேண்டாமா? இன்னைக்கு நீ உறுதியா சொல்ற” — என்று கேட்க,
“வேண்டாம்!” — என்று பட்டு சொல்லிவிட்டாள்.
“உன்னை தவிர வேற யாரையும் அஜய் பார்க்க மாட்டான் என்ற தைரியம் உனக்கு..! உன்னோட அலட்சியமே உனக்கு எதிரியா மாறப் போகுது பார்!” — என்று கிட்டத்தட்ட சாபம் கொடுத்து விட்டு, தன்னுடைய பாய் பிரண்டுடன் பேச சென்று விட்டாள்.
அந்த கல்லூரியிலேயே ஸ்வேதாவிற்கு மூன்று ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள்.
அதில் இரண்டு பேருடன் காதல் என்று ஸ்வேதாவும் தயங்காமல் சொல்வாள் —
அந்த இரண்டு பேரில், ஒருவனை கூட அவள் திருமணம் செய்ய போவதில்லை.
இது ஒரு டைம் பாஸ் லவ்.
ஸ்வேதாவின் பேச்சை பொருட்படுத்தாது,அஜய்க்கு போன் செய்யலாமா வேண்டாமா என்று எட்டு மணி வரை யோசித்துக் கொண்டிருந்த ஆதிரா —
அதற்கு மேலும் தாங்க முடியாமல் அஜய்க்கு போன் செய்துவிட்டாள்.
அப்பொழுது தான்…
தாத்தாவுடன் போனில் மும்முரமாக சண்டை போட்டுக் கொண்டிருந்த அஜய்க்கு,ஆதிராவே தனக்கு அழைத்ததை பார்த்ததும் குஷியாகிவிட்டது.
அவளது போன் அழைப்புக்கு முன் வரை,அம்பி மோடில் அவனது தாத்தாவிடம் பேசிக் கொண்டிருந்தவன், காதலி தனக்கு போன் செய்துவிட்ட உத்வேகத்தில் அந்நியனாக மாறி “தாத்தா! நீங்க திவ்யாக்கு வேற இடத்துல மாப்பிள்ளை பாருங்க! சொந்தத்தில் கல்யாணம் பண்றது தப்புன்னு, எத்தனை டாக்டர் அட்வைஸ் பண்ணாலும், உங்கள மாதிரி ஆளுங்க கேட்க மாட்டாங்க! நீங்க சொத்து வெளியில போகக்கூடாது என்று தானே கவலைப்படுறீங்க? என்னோட பேர்ல நீங்க எதையும் எழுதி வைக்க வேண்டாம்! மொத்தத்தையும் உங்க மகளோட வாரிசுக்கே எழுதிக் கொடுத்துடுங்க! நான் ஏன்னு கேட்கவே மாட்டேன்! என்னை நிம்மதியா படிக்க விடுங்க! எனக்குன்னு ஏதாவது ஒரு வேலையை தேடிக்கிட்டு எனக்கு பிடித்த பொன்னை கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழ்ந்துட்டு போறேன்! உங்க கௌரவத்துக்காக என்னோட நிம்மதியை அழிக்க பார்க்காதீங்க!” — என்று கத்தியவன், ஃபோனை வைத்து விட்டு உடனடியாக ஆதிராவிற்கு போன் செய்து விட்டான்.
முதல் ரிங்கிலேயே ஆதிராவும் எடுத்துவிட்டாள்.
“ஏன் எனக்கு போன் பண்ணல? யார் கூட பேசிட்டு இருந்த?” — என்று ஆதிரா கோபமாக கேட்க,
“ நீ ஏன் அதை கேட்கிற! உனக்கு தான் என்னை கொஞ்சமும் பிடிக்காதே! நான் என்ன பண்ணா உனக்கு என்ன?” — என்று கோபமாய் கேட்டான்.
அவனின் கோபத்தில் பேச முடியாமல் திகைத்து நின்ற ஆதிராவிடம் “என்னை லவ் பண்றேன்னு ஒரே ஒரு முறை சொல்லு! உனக்கு காலம் முழுக்க அடிமையாக இருப்பதற்கு நான் தயாரா இருக்கேன்!” — என்று வழக்கமான காதலனாக இஷ்டத்திற்கு அடித்துவிட,
“யார்..நீ எனக்கு அடிமையாக இருப்பியா? நீ சொல்றத உன் பக்கத்துல இருக்க பிரண்ட் கூட நம்ப மாட்டான்! உனக்கு மத்தவங்கள அதிகாரம் பண்ணி தான் பழக்கம். அதனால தான் உன்னோட காதல ஏத்துக்க எனக்கு பயமா இருக்கு!” — என்று விட,
“இது தான் நீ என்னை பிடிக்காத மாதிரி நடிக்கிறதுக்கு காரணமா? நான் காதலிக்கிற பொண்ணு கிட்ட மட்டும் தான் அடிமையாக இருக்க முடியும்! நீ லவ் சொல்லி என் கூட காதலியா பழகி பார்! உன்கிட்ட நான் எப்படி பழகுறேன்னு உனக்கு தெளிவா புரியும்!
“அதை விட்டுட்டு மத்தவங்க கிட்ட நான் அதிகாரமா இருக்கேன், அலட்சியமா இருக்கேன்னு என்னோட குணம் எப்படின்னு, நீயா ஒரு முடிவு பண்ணி என்னை விலக்கி வைக்கிறது ரொம்ப தப்பு!
“இதுவரைக்கும் உன்னை நான் அலட்சியப்படுத்தி இருக்கேனா? அதிகாரமா ஒரு வார்த்தை பேசி இருக்கேனா? கடந்த மூன்று வருஷமா, நான் உன்கிட்ட பேசின விஷயங்களை எல்லாம் கொஞ்சம் ஞாபகப்படுத்தி பார்!” — என்று சொல்ல,
“நீ என்கிட்ட நல்ல விதமா தான் பழகற. ஆனால் உன்னோட காதல நான் ஏத்துக்கிட்டால்… கொஞ்ச நாள்ல, நீ மத்தவங்க கிட்ட நடந்துக்கிற மாதிரி என்கிட்டயும் நடந்துக்க மாட்டேன் என்ன நிச்சயம்? என்னை நீ அலட்சியப்படுத்தினால் என்ன செய்வது?” — என்று கேள்வியாக நிறுத்த,
“சோ… உனக்கு என்னை புடிச்சிருக்கு? என்னை லவ் பண்ற.. இந்த ஒரு காரணத்துக்காக தான் லவ்வை சொல்ல மறுக்குற! கரெக்ட்டா?” — எனவும்,
“ஆமாம்…” — என்று சொல்லிவிட்டு நாக்கை கடித்துக் கொண்டாள்.
“வாவ்! அப்போ நாம லவ் பண்றது கன்ஃபார்ம் தானே! நாளைக்கு எங்க மீட் பண்ணலாம்? இல்ல.. இப்பவே எங்க மீட் பண்ணலாம் சொல்லு! நீ லவ் சொன்னதை நான் கண்டிப்பா கொண்டாடியே ஆகணும்!” — என்று குதூகலத்துடன் பேச,
அவன் பேச பேச —
ஆதிராவிற்கு வெட்கமும், சிரிப்பும் வந்தாலும்
கோபம் எனும் போர்வையில் மறைத்துக் கொண்டாள்.
உரிமையாக காதலை சொல்லிவிட்டால் போதும்…
அதற்கு பின்பு, தன் கைகளைப் பிடித்து பேசிக் கொண்டிருப்பவன்,
அவனது ஆசையின் அளவை அடுத்த கட்டமாக எடுத்து செல்ல தயங்கவும் மாட்டான்..செயல்படுத்தவும் தயங்கமாட்டான் —என்று ஆதிராவிற்கு நன்கு தெரியும்.
தன் வீட்டு ஆட்கள், தங்கள் காதலுக்கு சம்மதம் சொல்வார்களா.. மாட்டார்களா என்று உறுதியாக தெரியாமல்,
அஜயிடம் காதலை சொல்லி விட்டு, அவனோடு அன்னியோன்யமாக பழகியும் விட்டு,அவனை ஏமாற்ற ஆதிராவிற்கு விருப்பமில்லை.
அவன் மேல் காதல் இருந்தாலும் , அஜயிடம் சொல்ல தயங்கிக் கொண்டிருப்பது,அவளது குடும்பத்தினரால் தான்.
தனக்காக 35 வயதாகியும், திருமணம் செய்து கொள்ளாமல் காத்திருக்கும்,அன்புச்செல்வனை நினைத்தாலே அவளுக்கு பதறியது.
அன்புச்செல்வன் நினைவு வந்ததும்,அவளிடம் இருந்த வெட்கமும், தயக்கமும் ஓடிப் போய் விட,“உன்னை நான் காதலிக்கல! என்னால எங்கேயும் வர முடியாது!”
— என்று பட்டென்று போனை வைத்து விட்டாள்.
மறுமுனையில் இருந்த அஜய்,”ஆசை காட்டி ..ஒவ்வொரு முறையும் மோசம் பண்றதே இவளுக்கு வழக்கமாக போச்சு” —என்று காதலியை கண்ணா பின்னாவென்று திட்ட ஆரம்பிக்க,அவனுடன் அறையை பகிர்ந்து கொண்டிருந்த பிரஜித்,
“உனக்கு தினமும் இதே வேலையா போச்சு?” — என்று திட்டிவிட்டு அறையை விட்டு வெளியே போய் விட்டான்.
அந்த அளவிற்கு ஆதிராவை நினைத்து கத்திக் கொண்டிருந்தான்..
எதிலும் எக்ஸ்ட்ரீம் தான் அஜய்.
அதுவுமே ஆதிராவிற்கு ஒரு பயத்தை கொடுக்க — “எப்படி தன் வீட்டில் விஷயத்தை சொல்வது?” — என்று தயங்கிக் கொண்டிருந்தாள்.
அவளது அம்மா மிகவும் கண்டிப்பானவர்.
தன்னுடைய சொந்த தம்பியை,மகள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் அவருடைய விருப்பம்.
அவருடைய பேச்சை மீறினால், தேவையில்லாத சிக்கல்களை தனக்கு கொடுப்பார் என்று ஆதிராவிற்கு நன்கு தெரியும்.
“எனக்கு ஏன் இவன் மேல காதல் வந்துச்சு?” — என்று
எப்போதும் போல நொந்து கொண்டாள்.
“இந்த மாமாவாவது அவர் வயசுக்கு ஏத்த மாதிரி, வேற யாரையாவது காதலித்து கல்யாணம் பண்ணி இருக்க கூடாதா? இவரால அம்மாவும் பிடிவாதமா இருக்காங்க! எனக்காகவே மாமா காத்துட்டு இருக்காங்கன்னு சொல்லி சொல்லி, அம்மா என்னை ஒரு வழி பண்ணுறாங்க! ஆண்டவா! என்னை இந்த பிரச்சனைல இருந்து காப்பாத்து!” — என்று கடவுளை வேண்டிக் கொள்ள,அவளுக்காகவே இந்துவை அன்புச்செல்வனின் வாழ்க்கையில்
கடவுள் அனுப்பி வைத்திருப்பது —
ஆதிராவிற்கு தான் தெரியவில்லை…