தீராதோ உன் மயக்கம் – 20

அத்தியாயம் 20

அஜய்கும்,ஆதிராவிற்கும் இன்னும் ஒரு மாதத்தில் நிச்சயதார்த்தம் வைக்கப்போவதாக வீட்டில் முடிவு செய்துவிட்டார்கள். 

இந்த விஷயம் தெரியாத ஒரே ஒரு நபர் ஆதிரா என்றால், நம்பித்தான் ஆக வேண்டும்.

“யாரும் அவளிடம் சொல்லக் கூடாது” என்று அஜய் கட்டளையாகச் சொல்லிவிட,

“எப்படியும் ஆதிராவுக்குத் தெரியத்தான் போகுது அஜய்,அதுக்கு நாமளே சொல்லிடலாம்” என்று சுமதி மகனிடம் கூறவும், 

“நீங்கதான் சொல்வீங்கன்னு நினைக்கிறேன். கொஞ்ச நாளைக்கு அவகூட பேசாதீங்க. நம்ம வீட்டில் வேலை செய்றவங்களை, அவ துணைக்கு நைட் இருக்க வச்சுக்கோங்க. நீங்க போக வேண்டாம்” என்றும் சொல்லிவிட, சுமதி மகனை பாவமாக பார்த்தார்.

கடந்த ஒன்பது நாட்களில் ஆதிராவிற்கும்,அவருக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டிருந்தது.

அவர் வீட்டில் இருப்பவர்கள் யாரும் சண்டை போட்டால், உடனடியாக சமாதானமாகும் ரகம் இல்லை. 

ஆதிரா அவர்களில் விதிவிலக்காக இருந்தாள். 

சுமதி முகம் கொடுத்து பேசவில்லை என்றாலும், அவரிடம் சென்று, “என் மேல உங்களுக்கு என்ன கோபம்?” என்று கேட்டு, அவரிடம் சமாதானமாகப் பேசி, சண்டை போடாமல் சரி செய்துவிடுவாள்.

“என்னைச் சமாதானப்படுத்துற மாதிரி என் பையனைச் சமாதானப்படுத்த முடியாது. அவன் பிடிவாதக்காரன்,” என்று மகனின் பெருமை பாட,

“நீங்கதான் ,உங்க பையன் பிடிவாதம் பிடிச்சா, மாத்த முடியாதுன்னு சொல்லிச் சொல்லி, பெரிய பிடிவாதக்காரனா மாத்தி, கெட்ட பையனாக்கிட்டீங்க ,” என்று அவரை குறை கூற,, அவர் கோபமாக முறைக்கவும், அசடு வழிந்து சமாதானமும் செய்துவிடுவாள்.

“நாளைக்கு உங்க பையன்கிட்ட நான் பேசத்தான் போறேன். என்னை யாரும் தடுக்க முடியாது,” என்று வீறாப்புடன் பேசியவள், அவன் தன்னை புறக்கணிப்பதை தாங்க முடியாமல், இரவு நேரத்திலேயே அவனது அறையைத் தேடி கண்டுபிடித்து, கதவைக்கூடத் தட்டாமல் உள்ளே நுழைந்துவிட்டாள். 

வீரசிங்கம் தூங்கச் சென்றிருக்க, சுமதிக்குத்தான் படபடப்பாகி விட்டது.

இரவு நேரத்தில், தன்னுடைய மகன் அருகில் ஒரு பெண், அதுவும் அவனுக்குப் பிடித்த வருங்கால மனைவி என்றாலும், ஒரே அறையில் இருப்பது அவருக்குப் பதைபதைப்பாகத்தான் இருந்தது.

மாமனாருக்கு விஷயம் தெரிந்தால், நிச்சயதார்த்தமே வேண்டாம் என்று மறுத்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 

“உன்னோட சண்டையை காலையில் வைத்துக்கொள்ளக் கூடாதா?” என்று சொல்லிப் பார்த்தும் அவள் அடங்குவதாய் தெரியவில்லை.

“அத்தை, நான் ஒன்னும் சின்னப் பொண்ணு கிடையாது, பக்குவப்பட்ட பொண்ணு. என்னை விடுங்க.. உங்க பையன் மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்குதானே? சரியா அரை மணி நேரத்தில் நான் கெஸ்ட் ஹவுஸுக்குப் போயிடுவேன். அதுவரைக்கும் உங்க பையன் கற்புக்கு ஒரு பங்கமும் வராது. பயப்படாதீங்க,” என்று கேலியாகச் சொல்லிவிட்டு, அவனது அறைக்குச் சென்றாள்.

அதற்கு மேல் சுமதியும், அங்கு நின்று காவல் காத்துக்கொண்டிருக்கவில்லை.

படார் என்ற கதவை மூடும் சத்தத்துடன் அறைக்குள் நுழைந்தவளை, கொஞ்சமும் அஜய் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

அவன் முன் சென்று நின்றபோதும், கொஞ்சமும் கவனித்துக்கொள்ளாமல் லேப்டாப்பிலேயே பார்வையைப் பதித்திருக்க, “என்னை ஏன் தவிர்க்கிறீங்க அஜய்? இதுக்கு நீங்க என்னைப் பார்க்க வராமலேயே இருந்திருக்கலாம். நானும் ஏதோ ஒரு மூலையில் ‘இதுதான் என் வாழ்க்கை’ன்னு முடிவு பண்ணி வாழ்ந்துட்டு போயிருப்பேன்,” என்று சொன்னபோதும் அவன் நிமிரவில்லை.

“அஜய்!” என்று பெட்டில் அமர்ந்திருந்தவனின் கையைப் பிடிக்கவும், பட்டென்று அவளது கைகளை உதறிவிட்டான்.

அழுகையே வந்துவிட்டது ஆதிராவிற்கு.

அவனது கோபத்தை தணிக்கும் பொருட்டு தன்னிலை விளக்கம் சொல்ல ஆரம்பித்தாள்.

“என்னோட அம்மா, நீ என்னோட வாழ்க்கையில இருக்கக் கூடாதுன்னு சொன்னாங்க அஜய். நான் உண்மையா அவங்க பேச்சை மதிக்கவே இல்லை. காதல் கல்யாணத்தை அவங்க விரும்பல. அவங்க வாழ்க்கையில் பட்ட கஷ்டத்தால, நானும் அவங்களைப் போலவே தனியாகவே வாழற சூழ்நிலை வந்தால் என்ன செய்வதுன்னு பயந்துட்டு காதலை எதிர்க்கிறாங்கன்னுதான் நினைச்சேன். 

“ஆனால், உன்னோட மாமா என்னோட அப்பாவா இருப்பார் என்று எனக்குத் தெரியல அஜய். அந்த மனுஷன் அவரோட ரெண்டு பசங்களை முன்வைத்து, அவங்களோட எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்று சொல்லும் பொழுது, என்னால் என்ன செய்ய முடியும்? அப்பா இல்லாமல் நான் வாழ்ந்தேன். என்னைப் போலவே அவங்களும் அப்பா இல்லாமல் வாழனும்னு என்ன தலையெழுத்து! 

“அவர் என்கிட்ட பேசும் பொழுது, அவரோட குட்டிப் பையனுக்கு ரெண்டு வயதுதான் அஜய். கிட்டத்தட்ட எனக்கும் அவனுக்கும் பதினெட்டு வயசுக்கு மேல வித்தியாசம் இருக்கும். எப்படின்னு பார்த்தியா? எனக்கு முதல்ல அதை ஜீரணிக்கவே நேரம் தேவைப்பட்டுச்சு,” என்று அந்த நாளுக்கே சென்றுவிட்டவள் போலப் பேசியவள்,

“அந்தக் குட்டி குழந்தையோட முகத்துக்காகத்தான் நான் உன்னைவிட்டுப் போகணும்னு முடிவு பண்ணேன். தப்புதான் தெரியும். உன்னைக் காயப்படுத்திட்டேன்னு தெரியும். நான் நினைச்சிருந்தால், உன்னோட தாத்தா கண்டிஷன் போட்டபடி, ‘நாம நாலு வருஷம் விலகி இருப்போம்னு சொல்லாமல், அப்பவே நாம பிரிந்துவிடலாம்’னு சொல்லி இருக்க முடியும் அஜய்,” எனவும், அதுவரை அவளது பேச்சைக் காது கொடுத்துக் கேட்காததுபோல லேப்டாப்பில் கவனம் வைத்தவன், இறுதி வார்த்தையில் அவளை நிமிர்ந்து பார்க்க,

“நான் ஏன் செய்யலைன்னு உனக்கும் புரிந்திருக்கும். எனக்காக நீ காத்திருப்பன்னு தெரியும்,” எனவும், 

“அதனாலதான் என்னைக் காயப்படுத்த, இன்னொருத்தனோட இருக்கிற மாதிரி போட்டோ அனுப்பினியா?” என்று லேப்டாப்பைத் தூக்கிக் கீழே போட்டுவிட்டு எழுந்து நின்று கோபமாய்க் கேட்க,

“நான் சாதாரணமாக என்ன சொன்னாலும், ‘விளையாட்டுக்குத்தான் சொல்றேன்னு’ நீ நினைச்சுப்ப. என்னைத் தேடி வந்துருவேன்னு எனக்குத் தெரியும்,” எனவும், அன்றைய நாள் கூட அவள் தன்னைப் பிராங்க் செய்கிறாள், எப்படியும் தன்னைப் பார்க்க வந்துவிடுவாள் என்று நம்பிக் காத்திருந்தானே! 

அன்றைய நினைவில் அஜயின் முகம் மேலும் கோபத்தைப் தத்தெடுக்க, “சோ, என்னோட உணர்வுகளைப் பத்தி தெளிவாக புரிந்த பின்னாடியும், என்னைக் காயப்படுத்தி இருக்க!” என்று ஆக்ரோஷமாய்க் கேட்டான்.

“ஆமாம். இல்லை,” என்று இரு பக்கமும் தலையாட்டி, 

“என்னை நீ விட்டுக்கொடுக்க மாட்டேன்னு ஒரு நம்பிக்கை இருந்துச்சு. அதனாலதான், ‘முன்னாடியே நீ எனக்கு வேண்டாம்’ என்று நான் சொல்லலை அஜய், நாலு வருஷம் என்னோட நினைவிலேயே நீ வாழ்ந்த பின்னாடி, யாருக்காகவும் என்னை விட்டுவிட மாட்டன்னு ஒரு நம்பிக்கை இருந்ததால் தான், திலீபனுடன் நான் இருக்க மாதிரி போட்டோ அனுப்பி வச்சேன். 

ஆரம்பத்திலேயே இந்த உறவு வேண்டாம் என்று சொல்லியிருந்தால், கடந்து போன நாலு வருஷமும் நான் இல்லாமல் நீ வாழப் பழகியிருப்ப. ‘நான் இல்லை என்பதை ஏத்துக்கிட்டு, உன்னோட வாழ்க்கையில இன்னொரு பொண்ணு வந்துட்டா…” என்று முழுமையாக பேசக்கூட முடியாமல் அவள் நிறுத்த, 

“சரியான சுயநலவாதி நீ ஆதி! இதுக்கு மேல நீ எதுவும் சொல்லத் தேவையில்லை. ரூமை விட்டு வெளிய போ,” எனவும், 

“முடியாது. உன்னோட விஷயத்துல நான் சுயநலவாதியாக இருந்துட்டுப் போறேன் அஜய். உன்னோட மாமா வாழ்க்கைக்காக என்னோட காதலை விட்டுக்கொடுக்க நிறையவே முயற்சி பண்ணேன். என்னால முடியல அஜய். என்னோட காதலைக் காப்பாற்றிக்கொள்ள சின்னதா ஒரு வாய்ப்புக் கிடைத்தாலும் பயன்படுத்திக்கணும்னு நினைச்சு தான், நாலு வருஷம் முடிஞ்ச பின்ன,நான் இன்னொருத்தனைக் காதலிக்கிறதா சொன்னேன். நான் எதிர்பார்த்தபடி நீ என்னைத் தேடி வந்த. 

என்னைக் கெஸ்ட் ஹவுஸுக்கு வரச் சொன்னபோது கோபம் தான். 

“தவறான எண்ணத்துல வரச் சொல்லியிருக்க மாட்டேன்னு தெரியும். இருந்தாலும், நான் உன்னை ஏமாத்திட்டேன்னு நினைச்சு நீ, என்னை வேற விதமா ட்ரீட் பண்ணி இருந்தால், அதோட நாம சேர முடியாமல் ஒரு சூழ்நிலைகூட வந்திருக்கும். 

நீ அப்படிப் பண்ண மாட்டேன்னு என்ற நம்பிக்கை, நீ இந்து அக்காவைக் கூட்டிட்டு வந்த உடனேயே வந்துடுச்சு. ஆனாலும், அந்தப் பத்து நாள் நீ எப்போ வருவேன்னு காத்துகிட்டுத் தான் இருந்தேன். கட்டாயப்படுத்தி உன்னோட வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடுவ, உன்னோடவே வச்சிக்குவேன்னு ரொம்பவே எதிர்பார்த்தேன்,” என்று மனதில் இருந்ததை எல்லாம் மொத்தமாகக் கொட்டிவிட, அவள் பேச அவன் அவகாசம் கொடுத்து, கைகளைக் கட்டிக்கொண்டு நிதானமாகக் கேட்டுக் கொண்டிருப்பதை, பாவம், அவள் தான் அறியவில்லை.

தன்னை அவன் புரிந்து கொள்ள வேண்டும் என்று உயிர் உருகப் பேசிக்கொண்டிருந்தாள்.

தன் மனதில் இருந்ததை மொத்தமாகக் கொட்டி விட்ட பின்பும், அவன் பார்வையில் எந்தவிதமான மாறுபாடும் இல்லை என்பதை உணர்ந்தவள், “என்னை மன்னிக்க மாட்டியா அஜய்?” என்று அழுகையோடு கேட்க,

“முடியாது,” என்றவன் கதவை நோக்கி கைகளைக் காட்ட, அவளுக்குள் இருந்த காதலின் திமிருடன் கூடிய அவனின் காதலி, மீண்டும் அவளோடு ஒட்டிக்கொள்ள, 

“முடியாது. நீ வேணா வெளியே போ. நான் இங்கதான் இருக்கப் போறேன்,” என்று அவனது படுக்கையில் உறுதியாக அமர்ந்து கொண்டாள்.

அவனும் வெளியே போவது போலத் தெரியவில்லை. 

அவளும் படுக்கையை விட்டு எழுந்து விடுவது போலத் தெரியவில்லை.

இறுதியில் இன்டர்காமில் மகனுக்கு அழைத்த சுமதி, “ஆதிரா எங்கப்பா?” என்று கேட்கவும்,

“உங்க மருமகளுக்கு, எங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிவானது தெரியல. அதனால பிடிவாதம் பிடிச்சிட்டு வெளியில போக மாட்டேன்னு உட்கார்ந்துட்டு இருக்கா,” எனவும்,

அவர் பாவமாய், “தாத்தாவுக்குத் தெரிஞ்சா பிரச்சனையாகும்,” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, இன்டர்காமின் அழைப்பு தடைப்பட்டது.

“அப்போ இவ்வளவு நேரம் நீ என்னை வேணும்னே அழுக விட்டியா?” என்று அஜயின் நடிப்பில் ஏமாந்து போன ஆதிராவும் அவனது நெஞ்சை வலிக்கும்படி குத்திக்கொண்டிருந்தாள்.

“நாலு வருஷமா நீ என்னைப் பார்க்காமல், பேசாமல், நீ எங்க இருக்க என்ற தகவலைக் கொடுக்காமல் என்னைக் காயப்படுத்திட்டு இருந்த. உன்கிட்ட நான் முழுசாப் பத்து நாள் மட்டும், அதுவும் என் பக்கத்திலேயே வச்சுட்டுதான் பேசாமல் இருந்திருக்கேன். உன்னைக் காத்திருக்க வச்சேன். அதுவே உன்னால பொறுக்க முடியலை இல்ல?” என்று கோபமாய்த்தான் கேட்டான்.

அவள் ஏன் செய்தாள் என்ற காரணம் இருந்திருந்தாலும், தன்னை விட்டுக்கொடுத்து விட்டாளே என்ற கோபம் அவனிடம் இருக்கத்தானே செய்யும்? 

அவனின் மனதை தெளிவாகப் புரிந்து கொண்டவள், “இனி ஒரு முறை உன்னை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் அஜய். பழசையெல்லாம் விட்டுடு. நீ கஷ்டப்பட்ட அளவுக்கு உன்னை ரொம்பச் சந்தோஷமாக வைச்சுப்பேன். என்னை நம்பு, ப்ளீஸ்,” என்று முகத்தைச் சுருக்கிச் செல்லமாக அவனிடம் கொஞ்சிக் கொஞ்சிப் பேசி சமாதானம் செய்ய, கல்லூரியில் படித்த பொழுது தான் பார்த்த ஆதிராவைத் திரும்பவும் பார்ப்பது போல் இருந்தது அஜய்க்கு. 

இதுதானே அவனுக்கும் வேண்டும்!

“என்னைச் சந்தோஷமாக வச்சுக்க என்ன செய்வ? ,” என்று புருவத்தை உயர்த்தி கேட்டு, அவனது கண்களிலேயே அவனது ஆசையையும், அவளுக்கான தேடலையும் உணர்த்த, காற்றுக்கூடப் புக முடியாத அளவிற்கு அவனை இறுகக் கட்டிக் கொண்டவள், அழுத்தமாக அவனது நெஞ்சிலும் தன்னுடைய இதழைப் பதித்து, அவனிடம் விதவிதமாக மன்னிப்புக் கேட்டு, அவனுக்குப் பிடித்த விதத்தில் அவனைச் சமாதானம் செய்து கொண்டிருந்தாள் அஜயின் காதலி…!!

முற்றும்

error: Content is protected !!
Scroll to Top