தீராதோ உன் மயக்கம் – 2

“ஒரு பொண்ணோட மனச புரிஞ்சுக்க தெரியல ..நீங்க எல்லாம் அசிஸ்டன்ட் கமிஷனரா இருந்து என்ன பிரயோஜனம்” — என்று தெருவில் நின்று கத்திக் கொண்டிருந்தவளை எந்த சலனமும் இல்லாமல் பார்த்து கொண்டிருந்தான் அன்புச்செல்வன்.

“உங்களை அஞ்சு வருஷமா காதலிக்கிறேன். என்னோட காதலை சொல்லியும் மூணு வருஷம் ஆச்சு. உங்களையே நெனச்சிட்டு இருக்க என்னை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், எப்படி உங்களால உங்க அக்கா பொண்ணை கல்யாணம் பண்ணிக்க யோசிக்க முடியுது? 

“உங்களை விட 15 வயசு சின்ன பொன்னை, உங்களுக்கு மேரேஜ் செய்து கொடுக்க ஆசைப்படுறாங்களே உங்க அக்கா..அவங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா இல்லையா?” — எனவும்,

“வார்த்தையை அளந்து பேசு.” — என்று இதற்கு மட்டும் வாயைத் திறந்தான் அன்புச்செல்வன்.

“உங்க அக்காவை சொன்னவுடனே கோபம் வந்திடுமே! நான் சொன்னதுல என்ன தப்பு இருக்கு? யாராவது 15 வருஷம் வயசு வித்தியாசத்தில் இருக்கிற ஒரு ஆம்பளைக்கு, தன்னோட பொண்ண கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசைப்படுவாங்களா? உங்களையும், ஆதிராவையும் பக்கத்துல பக்கத்துல நிக்க வச்சா, அப்பாவும் பொண்ணுமான்னு நானே கேட்பேன்!” — எனவும் அன்புச்செல்வன் அவளை முறைக்க,

“உண்மைய சொன்னா கோபம் வருதா? உங்களுக்கு வயசு 35 ஆச்சு! காலகாலத்தில் கல்யாணம் பண்ணி குழந்தையை பெத்துக்குவோம்னு எண்ணம் கிடையாது! சும்மா அக்கா சொன்னாங்க, ஆட்டுக்குட்டி சொன்னாங்கன்னு அவங்க பொண்ண தான், கல்யாணம் பண்ணிப்பேன்னு பைத்தியக்காரத்தனமா உளறிட்டு இருக்கீங்க!” — என்று, என்றும் இல்லாமல் அதிசயமாக அவனிடம் கோபப்பட, கொஞ்சமும் தன்னுடைய உணர்வை காட்டாமல் நின்று கொண்டிருந்தான்.

இந்துவிற்கு அழுகையே வந்து விட்டது.

“என்னை பார்த்தா உங்களுக்கு பாவமா இல்லையா? பிடிக்கலன்னா கண்ணு முன்னாடியே வராதன்னு சொல்லி இருக்கலாம் தானே? நான் உங்க பின்னாடி வர்றேன்னு தெரிஞ்சும் ஏன் கண்டுக்காமல்,கண்டிக்காமல் விட்டீங்க? 

“ஆரம்பத்திலேயே தடுத்திருந்தால்,உங்களுக்கு என்னை பிடிக்கும்னு நம்பி, நானும் என்னோட அஞ்சு வருஷத்தை வீணடிச்சிருக்க மாட்டேனே!” — என்று அழுது கொண்டே ஆவேசமாக சொல்ல,

“என்னோட நேரத்தை வீணடிச்சிட்டு இருக்கது நீ தான் இந்து. உன்கிட்ட பலமுறை நான் சொல்லிட்டேன், என்னோட அக்கா பொண்ணு இருக்கும்பொழுது, வேற யாரையும் மேரேஜ் பண்ணிக்கிற எண்ணம் எனக்கு இல்லைன்னு தெளிவா சொன்ன பின்னாடியும்,என் மனசை மாத்தியே தீர்வேன்னு என் பின்னாடி அலைஞ்சுட்டு இருக்கிறது நீதான். இதுக்கு மேலயாவது நீ புத்தியோட நடந்துக்கோ.” — என்று விட்டு அவளைக் கடந்து செல்ல,

“உங்களுக்கு என்னை பிடிக்கலைன்னா நேரடியா என் கண்ண பார்த்து ‘என்னை பிடிக்கலை’னு சொல்லுங்க! உங்க பின்னாடி வர்றதை நிறுத்திடுறேன்… ஆனால் பொய் சொல்ல கூடாது!” — என்றவளின் குரல் தெளிவாக அவனின் காதில் விழுந்தாலும், கண்டுகொள்ளாமல் நடக்க, வேகமாக அவன் முன் சென்று நின்றாள்.

அவனுடைய வேக நடையை ஈடு கொடுப்பதற்கு, அவள் ஓடி சென்றாலும் முடியாது.

அவளுக்காக அவன் நிதானமாக நடந்து கொண்டிருந்தானோ —அது அவனும், அவளும் மட்டும் அறிந்த ரகசியம்.

“எதுக்குங்க என்னை அலையவிட்டு வேடிக்கை பாக்கறீங்க? நீங்க பெரிய போலீஸ்காரர் தான், ஊரே உங்களைப் பற்றி புகழ்ந்து பேசுது தான், நீங்க ரொம்ப பெரிய பணக்காரர் தான்… ஆனால் என்னோட காதலுக்கு முன்னாடி இதெல்லாம் பெரிய விஷயமா உங்களுக்கு?” — என்று கேட்க,

“பிடிக்கலைன்னு சொன்ன பின்னாடியும் என் பின்னாடியே வந்து டார்ச்சர் பண்ணாத!” — என்று தெளிவாக சொல்லி விட்டான்.

“சரிங்க! இனிமேல் நான் உங்க பின்னாடி வரமாட்டேன். ஆனால் நான் உயிரோட இல்லைன்னு தகவல் தெரிஞ்சா கூட நீங்க என் வீட்டு பக்கம் வந்திடக் கூடாது!” — என்று அழுகையோடு சொல்லிக் கொண்டே அங்கிருந்து சென்றுவிட்டாள்.

இதோடு பலமுறை தன்னை மிரட்டுவதற்காக சொல்லியிருந்தாலும், இன்றும் கோபத்தில் தான் சொல்லிவிட்டு போகிறாள் என்பதில் தெளிவாக இருந்தான் அன்புச்செல்வன்.

அவனுக்கும் அவளைப் பற்றி நன்கு தெரியும்.

“நான் உங்க பின்னாடி வரதுனால தான், இன்னும் அந்த பொண்ண நீங்க கல்யாணம் பண்ணாம இருக்கீங்க. நான் என்னுடைய முயற்சியில் இருந்து பின் வாங்கி உங்களுக்காக செத்துப் போயிட்டா… எப்படி? ஒரு ரெண்டு மாசம் எனக்காக என்னை நினைச்சு அழுவீங்க? 

ம்ஹூம்..இல்ல.. இல்ல.. நீங்க என்னை நினைச்சு மட்டும் பார்ப்பீங்க. அப்புறம் அந்த பொண்ண ஜோரா கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழ ஆரம்பிச்சுடுவீங்க… அதெல்லாம் நடக்க விட மாட்டேன்! அதுக்காகவே நான் சாகவும் மாட்டேன்!” — என்று வாய்ஸ் மெசேஜ் போடுவாள்.

இன்றும் அதுதான் நடந்தது.

15 நிமிடங்களில் வாட்ஸ்அப்பில் வந்து விழுந்த குறுந்தகவலை கேட்டு சிரித்தும் கொண்டான்.

“நான் என்ன மெசேஜ் அனுப்பினாலும் உடனே பார்த்துடுறது… ஆனால் பதில் சொல்றதில்ல!” — என்று கடுப்புடன் நினைத்துக் கொண்ட இந்துவிற்கு, அன்புச்செல்வனின் மேல் கொள்ளை காதல்தான்.

இந்து, பேஷன் டிசைனராக இருக்கிறாள். 

சமூக வலைதளங்களின் புண்ணியத்தினால் நிறையவே அவளுக்கு ஆர்டர் வருகிறது. 

வருமானமும் இருக்கிறது.

விளம்பர மாடல் போல தன்னை அலங்கரித்துக் கொள்வதில் இந்துவை மிஞ்ச முடியாது.

மிகவும் அழகாக இருக்கும் இந்துவிற்கு, அவளது அழகால் தான் பிரச்சனை வந்தது.

சமூக வலை தளத்தில் ஒருவன் அவளை தொடர்ந்து தொந்தரவு செய்ய, அவளுக்கு என்னவோ, தனக்கு தெரிந்த ஒரு நபர் தான் தன்னை தொடர்ந்து தாக்கி பேசிக் கொண்டிருக்கிறான், தன்னை கண்காணித்துக் கொண்டும் இருக்கிறான் என்று தெரிய, லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளெயிண்ட் கொடுத்து விட்டாள். 

அங்கு அவளுக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை.

ஒரு நாள் பிரஸ்மீட்டில் அன்புச்செல்வன்,“பெண்கள் அவர்களது பாதுகாப்புக்காக எந்த நேரமும் எனக்கு போன் செய்யலாம்” — என்று அவனது பிரைவேட் நம்பரை அறிவித்திருந்தான்.

முதலில் போன் செய்தது இந்து தான்.

அவளை தொந்தரவு செய்பவன் அவளோடு கல்லூரியில் படித்த, அவளை ஒருதலைப் பட்சமாக காதலித்தவன் என்று தெரிந்து, அவனை அரெஸ்ட் செய்தும் விட்டான். 

இந்துவின் பிரச்சனையும் அதோடு முடிந்து விட்டது.

ஆனால் இந்துவினால் அன்புச்செல்வனுக்கு தொடர்ந்து பிரச்சினைகள் வர ஆரம்பித்துவிட்டது.

அவளுக்கு ஒரு பிரச்சனை என்றால் ACP அன்புச்செல்வன் வந்து நிற்பார் என்ற அளவிற்கு பொய்யான தகவல்களை மற்றவர்களிடம் பரப்பிக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு அவனை மிகவும் பிடித்து விட்டதுதான் காரணம்.

அவனது குடும்பப் பின்னணியை ஆராய்ந்தாள்.

அவனது குணத்தைப் பற்றியும் பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டவள், தன் பிடித்தத்தின் அளவை அவனுக்கு காட்ட வேண்டி,

அன்பு செல்வனும், தானும் காதலிப்பதாக பொய்யாக தகவலை பரப்பி விட்டாள்.

அவனை தன் பக்கம் திரும்பி பார்க்க வைக்க,அவளுக்கு கிடைத்த ஒரே வாய்ப்பு இதுதான் என பயன்படுத்தத் தொடங்கினாள்.

ஆனால்…

ஒருவரை பற்றி முழுவதும் அறியாமல்,

 “இவர்தான் என் வாழ்க்கை துணை” — என்று பொதுவில் பரப்புவது மிகவும் தவறான விஷயம் அல்லவா?

அந்த ஒரு காரணத்திற்காகவே, இந்துவை கண்டாலே அன்புச்செல்வன், எரிமலையை போல கொதித்து போவான்.

ஒரு நாள் அவன் கையால் அடியும் வாங்கி விட்டாள்.

“எதுக்கு அடிச்சிங்க?” — என்று அழுது கொண்டே கேட்க,

“என்னை பத்தி என்ன தெரியும் உனக்கு? நியூஸ் பேப்பர்ல, டிவில நான் பேசறத பார்த்து மயங்கி உடனே என் மேல காதல்னு கண்ட இடத்துல உளறி வச்சிருக்க! எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு உன்னை ஊரைவிட்டே துரத்தனும் போல ஆத்திரம் வருது… பாவம் சின்ன பொண்ணு! உன் குடும்பத்தை நீ தான் தாங்கிப் பிடிக்கிறேன்னு உன்னை சும்மா விடறேன்… இதுக்கு மேல உன் கூட என்னை சேர்த்து வைத்து பேசின, சும்மா விடமாட்டேன்!” — என்று அவளது சமூக வலைதள மறைமுக பதிவுகளுக்கு கண்டனம் தெரிவித்து விட்டு போனான்.

சமூக வலைதளத்தில் பதிவிடுவதை நிறுத்திவிட்டால் தான்…

ஆனால் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம்

 அவனை பின் தொடர்வதையும்

 தன்னுடைய காதலை பட்ட வர்த்தனமாக அவனிடம் அறிவிப்பதையும் அவள் நிறுத்தவே இல்லை.

இந்துவிற்கு, அன்புச்செல்வன் காதலனாக, கணவனாக வேண்டும்.. அவ்வளவுதான்..!!

error: Content is protected !!
Scroll to Top