அத்தியாயம் 19
அஜய்யின் வீட்டிற்கு ஆதிரா வந்து சரியாக ஒரு வாரம் முடிந்துவிட்டது.
அவள் வந்தால் என்ன நடக்கும் என்று சத்யவேந்த் பயந்தாரோ, அதெல்லாம் சிறப்பாகவே நடந்து முடிந்தது.
சாரதாவை மறந்து விட்டு, இன்னொரு பெண்ணை நினைப்பதற்கே அவருக்குப் பல வருடங்கள் தேவைப்பட்டது.
முழுவதுமாக ‘சாரதா இனி தன் வாழ்க்கையில் இல்லை’ என்ற மனநிலைக்கு வந்த பின்பு தான் நளினியைக் கைப்பிடித்தார்.
அந்த விஷயத்தில் சத்யவேந்தை குறை சொல்லவே முடியாது.
திருமணத்திற்கு வீட்டில் பெண் பார்க்கும் முடிவுக்கு வந்தவுடனே சாரதாவுக்கு அழைத்து, “நான் என்ன பண்ணட்டும்?” என்று கேட்கத்தான் செய்தார்.
“என்கிட்ட ஏன் கேட்கிற?” என்று சத்யவேந்தின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் போனை வைத்துவிட்டது சாரதா தான்.
மிகுந்த யோசனைக்குப் பின்புதான் நளினியிடம் தன்னுடைய பழைய வாழ்க்கையைப் பற்றிக் கூறி, இனி அந்த வாழ்க்கைக்குள் எக்காரணத்தைக் கொண்டும் நுழைய வாய்ப்பே இல்லை என்று சத்தியம் செய்யாத குறையாக உறுதி கூறிய பின்புதான் நளினியுடன் இல்வாழ்க்கையில் இணைந்தார்.
அவருக்குத் திருமணம் ஆகி சரியாகப் பத்து வருடங்கள் தான் ஆகியிருந்தது.
எட்டு வயதில் ஒரு மகனும், ஆறு வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள்.
இருவருக்கும் ஒன்றும் புரியாத வயதுதான்.
பதின்ம வயதில் இருக்கும் பிள்ளைகளுக்கே புரிதல் வராது. இதில் பிஞ்சுக் குழந்தைகளுக்கு என்ன புரியும்?
தகப்பனிடம் விடாமல் நளினி பிள்ளைகளைத் தன் கூட்டுக்குள் அடைத்து வைத்துக்கொண்டு, சத்யவேந்தை வில்லனாகக் காட்ட முயற்சி செய்து கொண்டிருக்க, ‘என்ன நடக்குமோ அதுதான் நடக்கும்,’ என்ற மனநிலைக்குச் சென்றுவிட்டார்.
யாருடைய வாழ்க்கையையும் கெடுக்க அவர் நினைத்ததில்லை.
விதி தன் வாழ்க்கையில் விளையாடும் பொழுது, அமைதியாக அதைக் கடந்து விடுவதுதான் சரி என்று புரிந்துவிட்டது.
ஆதிராவை அஜய் திருமணம் செய்தால், சாரதாவின் வரவைத் தடுக்க முடியாது.
தன்னுடைய முன்னாள் காதலியை எதிர்கொள்வதில் சத்யவேந்திற்கு எந்த விதமான தடுமாற்றமும் இல்லை தான்.
அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றபோது பார்க்கப் போனதுகூட, மனதில் இருந்த மெல்லிய அன்பு மட்டுமே தானே தவிர, காதல் என்று சொல்வதற்கு இல்லை.
நளினிக்கு உண்மையாக இருக்க நினைத்து, ஆதிராவின் மனதை அவர் காயப்படுத்தியிருக்க, இனி அதற்கான அவசியமே இல்லை என்று அவருக்கும் தோன்றி விட்டது.
மகள் ஒரு முடிவெடுத்த பின்பு, அவளின் வாழ்க்கையில் குறுக்கே நிற்பது, தான் செய்யும் மிகப்பெரிய பாவம் என்று இந்த ஒரு வாரத்தில் புரிந்துகொண்டிருந்தார்.
அதற்கு அஜய்யும் ஒரு காரணம்.
“உங்க பொண்ணோட பிறப்புக்குக் காரணமாய் இருந்தீங்களே தவிர, அவளுக்கு வேற என்ன உறவா, உதவியா நீங்க இருந்திருக்கீங்க? அப்பா இல்லாமல் வளர்வதில் உள்ள கஷ்டம் எனக்கு நல்லாவே தெரியும். எனக்குன்னாலும்,என்னோட அப்பா பதினைந்து வயசு வரைக்கும் உயிரோட இருந்தார். அவளுக்கு நீங்க இருந்தும் இல்லாத மாதிரிதான். இனியும் அவள் உங்க கிட்ட ‘அப்பா’ உறவு எதிர்பார்த்து வரப்போவதில்லை. அது உங்களுக்கு நல்லாவே தெரியும்.
“நீங்கதான் அப்பான்னு தெரிஞ்ச பின்னாடியும், உங்ககிட்ட ஒரு வார்த்தை பேசல. அப்படிப்பட்டவளுக்கு நீங்க என்ன செய்யணும் மாமா?” என்று கேட்க,
அவரின் பதில் இல்லாத மௌனத்தைக் கண்டு,
“எனக்கு உங்க சூழ்நிலை புரியுது. உங்களுக்காக நாங்க எங்களோட காதலைப் பலி கொடுக்க முடியாது மாமா. ஆரம்பத்திலேயே நீங்கதான் எங்க காதலுக்குப் பிரச்சனையாக இருந்திருக்கீங்கன்னு தெரிந்திருந்தால், அவளை நான் என்னை விட்டுப் போகவே விட்டிருக்க மாட்டேன். எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பா? கொஞ்சமாவது யோசிச்சீங்களா?..
“நான் கூட இந்த நாலு வருஷத்துல தாத்தா போட்ட கண்டிஷனுக்காகத்தான் பிரிந்து இருக்கா, எப்படியும் திரும்பி வந்து விடுவாள் என்ற ஒரு நம்பிக்கையோட அவள் மேல இருந்த காதலோட வாழ்ந்துட்டு இருந்தேன். ஆனால், ஆதிரா.. என்னோட சேரவே முடியாதுன்னு முடிவு செய்து, என்னை மறக்கவும் முடியாமல், என்னோட பேசவும் முடியாமல் எந்த அளவு தவிச்சுப் போயிருப்பா?..
“அப்படி என்ன ஊர்ல இல்லாத காதல் என்று உங்களுக்குத் தோணலாம். என்னைப் பொருத்தவரைக்கும் அவள்தான் என்னோட உலகம். அவளுக்கும் அப்படி தான். இந்தப் பந்தம் எப்படி உருவாச்சுன்னு தெரியாது. விளையாட்டுத்தனமா ஆரம்பிச்ச காதல் உயிரோட கலந்துடுச்சு. இதுக்கு மேல நீங்க எங்களைப் பிரிக்க நினைச்சா தாராளமா பிரிச்சுக்கோங்க மாமா…
“எங்க இருந்தாலும் எங்களோட காதல் மாறப்போவதில்லை என்று எங்க ரெண்டு பேருக்குமே புரிஞ்சுடுச்சு. ஒரே வீட்ல,ஒரே ரூம்ல இருந்தா தான் காதல் ஜெயிச்சதுன்னு அர்த்தமா?” என்று கேட்டுவிட்டுச் சென்றுவிட, தானும் விளையாட்டுத்தனமாகத்தான் காதலிக்க ஆரம்பித்தோம்.
அது விபரீதமாக முடிந்துவிட்டது என்று தன்னுடைய கடந்த கால வாழ்க்கையைப் பற்றி நினைத்தவர், ஒரு முடிவுக்கு வந்தவராய் வீரசிங்கத்தை அழைத்து விட்டார்.
“ஆதிரா என்னோட பொண்ணு தான்னு உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன் மாமா. எப்போ உங்க பேரனுக்கும், என் பொண்ணுக்கும் நிச்சயதார்த்தத்தை வச்சுக்கலாம்?” என்று நேரடியாக விஷயத்துக்கு வந்து விட்டார்.
“நளினி?” என்று கேள்வியாக அவர் நிறுத்த,
“அம்மா, அப்பா ஸ்தானத்துக்கு அன்புச்செல்வனும் அவனுடைய மனைவியும் நிற்கிறதா சொல்லிட்டாங்க. நானும் சாரதாவும் நிக்கப்போவதில்லை. அப்படி சபையில் நின்றால் தானே பிரச்சனை வரும்? நளினிக்கான உரிமையை நான் எங்கேயும் விட்டுக் கொடுக்கப் போறது இல்லை,” எனவும்,
“சாரதாவுக்கான உரிமை?” என்று கேட்க,
“திருமண அங்கீகாரம் இல்லாத ஒரு உறவுக்கு உரிமை இல்லைன்னு சட்டமும் சொல்லுது, நம்ம சம்பிரதாயமும் சொல்லுது மாமா. அது முடிஞ்சு போன கதை. புதிதாக அத்தியாயத்தை எழுத எனக்கு விருப்பம் இல்லை. சாரதாவுக்கும் தான்,” எனவும்,
“ஒருவேளை நளினி சம்மதிச்சா, நீயும் சாரதாவும் அப்பா அம்மா ஸ்தானத்தில் நிற்கலாம் தானே?” என்று கேட்க,
“வேண்டாம் என்று முடிவு பண்ணியாச்சு மாமா. இதுக்கு மேல எதுக்கு அதைப் பத்திக் கேட்டுட்டு இருக்கீங்க?” என்றவர்,
“நல்ல நாள் பார்த்து சொல்லுங்க. நிச்சயதார்த்தத்தை நடத்திடலாம்,” எனவும்,
“பத்திரிகைல அம்மா அப்பா பெயர் போடணும் தானே? அதுக்கும் அன்புச்செல்வனையும், இந்துவோட பெயரையும் போட்டுவிட முடியுமா? அது என்னோட கௌரவத்துக்குச் சரியா வராது,” என்று அவர் பிடிவாதம் பிடித்தார்.
“எப்போன்னாலும் எல்லாருக்கும் தெரிய வர வேண்டிய உண்மைதான் மாமா. என்னோட பசங்களுக்கும், நான் அவங்க அம்மாவை இரண்டாவதாகத்தான் திருமணம் செய்தேன் என்று தெரிய வேண்டிய அவசியம் வந்தால் தெரிஞ்சுக்கட்டும். நான் யார்கிட்டயும் எதையும் எப்பவும் மறைக்கல. இனியும் மறைக்கப் போவதும் இல்லை. தாராளமா போடுங்க,” என்றவர்,
“நம்ம வழக்கப்படி பொண்ணுக்கு என்ன செய்யணும் சொல்லுங்க, அதை நான் செய்திடுவேன்,” என்று சொல்ல,
“இதுவரைக்கும் நீ பேசினது சரிதான். கடைசியாகச் சொன்னது உன்னோட வாழ்க்கையில பெரிய பிரச்சனையையே உண்டு பண்ணும். உனக்கும் ரெண்டு பசங்க இருக்காங்க. ஏற்கனவே நளினிக்கு என்னோட பொண்ணு உங்க வீட்டுக்கு வந்ததில் பிடிக்கல. இதுல உன் பங்குல இருந்து வர சொத்து ஆதிராவுக்கு வருதுன்னு தெரிஞ்சா, பத்திரகாளியா மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை,” என்ற கேலியாக சொல்லி சிரித்தவர்,
“எங்க கிட்டயும் அளவில்லாத பணம் இருக்கு. ஆதிரா அம்மா கிட்டயும் இருக்கு. நீ அப்பான்ற ஸ்தானத்தை மட்டும் விட்டுக் கொடுக்காமல் சபையில் வந்து நில்லு. வேற எதுவும் தேவையில்லை,” என்று சொல்லிவிட, நளினிக்குப் பயப்படவில்லை என்றாலும், தன்னுடைய இரு மகன்களின் எதிர்கால வாழ்க்கை நிம்மதியாகச் செல்ல வேண்டும் என்பதால், வீரசிங்கத்தின் சொல்லுக்கு தலையசைத்து விட்டார்.
வீரசிங்கம், நளினியிடமும் பேச, குடும்பத்தின் மூத்த உறுப்பினர் என்பதால் அவரது பேச்சைத் தட்ட முடியாமலும், ஆதிராவிற்குச் சத்யவேந்தின் சொத்தில் இருந்து எந்தப் பங்கும் வேண்டாம் என்றும் சொல்லிவிட, “சரிங்க பெரியப்பா.நீங்க தாராளமா அவர் பெயரை போட்டுக்கோங்க,” என்று பெரிய மனது செய்து விட்டுக்கொடுத்து விட்டாள் நளினி.
இத்தனை வருடங்களாகத் தனக்கு இன்னொரு குடும்பம் இருக்கிறது. அவர்களுக்கும் சொத்து போய்விடும் என்றுதான் நளினி தன்னை காயப்படுத்தி இருக்கிறாள் என்பதே சத்யவேந்துக்குத் தாமதமாகப் புரிய வர, கோபத்தையும், வெறுப்பையும் மொத்தமாக மூட்டை கட்டிவிட்டு, தன் இரண்டு மகன்களுக்காக நளினியின் போக்கிற்குத் தன்னை இட்டுச் சென்றுவிட்டார்.
நாம் செய்யும் சில முரணான செயல்களால், அழகாக அமைய வேண்டிய வாழ்க்கை கூட அலங்கோலமாகி விடுகிறது என்பது சத்யவேந் மற்றும் சாரதாவின் வாழ்க்கையில் உண்மையாகிவிட்டது.