அத்தியாயம் 18
சென்னையில் ஆதிராவிற்குத் தெரிந்த ஒரே ஒரு நபர் என்றால் அது அஜய் மட்டும் தான்.
அவனும் போ என்று விட,எங்கு தங்குவது என்றும் தெரியவில்லை.
மனதில் கோபம் இருந்தாலும், தன்னைத் தனியே விடமாட்டான்; அழைத்துக் கொண்டு சென்று விடுவான் என்றெல்லாம் அஜய்க்குச் சாதகமாக அவளது மனது முடிவு செய்திருந்ததில், ஹோட்டலில் தங்குவதைப் பற்றி அவள் யோசிக்கவே இல்லை.
நேரடியாக அவனது அலுவலகத்திற்குத் தான் வந்திருந்தாள்.
இப்போது எங்கே தங்குவது என்று வேறு யோசிக்க வேண்டும்.
மீண்டும் கொஞ்சமும் யோசிக்காமல் அன்புச்செல்வனுக்குத்தான் அழைத்தாள்.
“முன்னாடி அவனோட கெஸ்ட் ஹவுஸில் தானே நீயும்,இந்துவும் இருந்தீங்க, அங்கேயே போ,” எனவும்,
“விளையாடாதீங்க மாமா! என் மேல கோபமா இருக்கான். எப்படி என்னை கெஸ்ட் ஹவுஸ்க்குள்ள நுழைய விடுவான்?” எனவும்,
“ஓ, அப்போ நேரடியா அவன் வீட்டுக்கே போ. அவனோட அம்மா கிட்ட நியாயம் கேளு,” என்று கேலி செய்ய,
“என் பக்கம் என்ன நியாயம் இருக்குன்னு அவங்ககிட்ட போய் நான் நியாயம் கேட்க முடியும் மாமா? நீங்கள் சமயம் பார்த்து என்னைப் பழி வாங்குறீங்க, சரிதானே?” என்று சொல்ல,
“நம்ம கிட்ட நியாயமே இல்லை என்றாலும் நியாயம் இருக்க மாதிரி பேசணும்,” என்று கேலி செய்தவன்,
“ரொம்ப யோசித்தால் யோசித்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். உன்னோட வருங்கால மாமியார் ரொம்பவே அன்பானவங்க. அவங்களுக்கு அஜய் உன்னை விரும்புவது தெரியும். நீ அவனை விட்டுட்டுப் போனதால் ரொம்ப வருத்தத்தில் இருந்து இருப்பாங்க. அவன் தான் வேணும்னு நீ போய்ச் நின்னேன்னா நிச்சயம் உன்னை ஏத்துப்பாங்க,” எனவும்,
“முன்னாடி தான் அவங்க வேற வீட்டில் தங்கியிருந்தாங்க மாமா. இப்போ அஜயோட தாத்தா வீட்ல தான் இருக்காங்க. கல்யாணத்துக்கு முன்னாடியே எப்படி நான் அங்க போய் தங்க முடியும்?” எனவும்,
“நீ ரொம்பக் கேள்வி கேட்கிற. முதல்ல உன்னை அங்க தங்க விடுவாங்களான்னு பாரு. வெளியே போன்னு துரத்தி விட்டால் எனக்குப் போன் பண்ணு. நல்ல ஹோட்டலா பார்த்து உனக்கு ரூம் புக் பண்ணி வைக்கிறேன்,” என்று வைத்துவிட்டான்.
அவனுக்கு இருக்கும் வேலையில் தனக்குப் போன் செய்து பேசியதே பெரிது என்பதால், அவன் சொன்னபடி நேராக அஜய்யின் தாத்தா வீட்டிற்கு முன்பு சென்று நிற்க, வாட்ச்மேன் உள்ளே நுழைய விட வேண்டுமே!
சுமதியின் பெயரைச் சொன்னதும், “இருங்கம்மா நான் கேட்டுட்டு சொல்றேன்,” என்று இன்டர்காமில் அழைத்து கேட்டபோது,
சுமதி, “உள்ளே அனுப்பு,” என்றவர், பதட்டத்தோடு அவளை வரவேற்கப் பாதி வழியிலேயே வந்துவிட்டார்.
தன்னுடைய மாமனாருக்கு விஷயம் தெரிந்தால் என்ன ஆகுமோ?
இரவு நேரத்தில் தேடி வந்திருப்பவளை அனுப்பவும் முடியாது.
முடிவெடுக்கத் தெரியாமல், “உள்ள வாம்மா,” என்று அழைத்து, அவளைப் பேசக்கூட விடாமல், முன்பு தன்னுடைய கணவர், மகனுடன் தான் தங்கி இருந்த தோட்ட வீட்டுக்குள் அவளை அழைத்துச் சென்றுவிட, உள்ளே இன்னமும் அவரது திருமணப் புகைப்படங்கள், அஜய் குழந்தையாக இருந்த புகைப்படங்கள் என்று நிறைய இருந்தது.
“இன்னும் நீங்க முழுசா அந்த வீட்டுக்கு ஷிஃப்ட் ஆகலையா அத்தை?” என்று உரிமையாக ‘அத்தை’ என்று அழைக்கவும்,
“நீ என் பையனை ரொம்பவே கஷ்டப் படுத்திட்டே. அவன் சமாதானம் ஆகற வரைக்கும் உறவு முறை வைத்து எல்லாம் என்னைக் கூப்பிடக் கூடாது,” என்று கண்டிப்பான முறையில் சொல்லவும்,
“உங்க பையனைக் கரக்ட் பண்ணினா தான் உங்களை கரக்ட் பண்ண முடியும் என்று சொல்றீங்க. அதுக்கு முதல்ல உங்க பையன், என்கூட நின்னு பேசணும்ல்ல அத்தை? ஆபீஸ்கு வந்தவளை, ‘சாப்பிட்டியான்னு கூடக் கேட்கல. காலையிலிருந்து நைட் வரைக்கும் என்னைக் காக்க வச்சுட்டான்..
“எனக்கு இப்போ ரொம்பப் பசிக்குது. தண்ணி குடிச்சுக் குடிச்சு ரொம்ப டயர்ட் ஆகிட்டேன். என்ன சாப்பிடக் கொடுப்பீங்க?” என்று கேட்கவும்,
“உனக்கு ரொம்பத் தான் தைரியம். இந்தத் தைரியம் இல்லைன்னா, இந்த வீட்ல குப்பை கொட்ட முடியாது,” என்று அதற்கும் சேர்த்துச் சொன்னவர்,
“இரு. நான் வேலை செய்றவங்களுக்குப் போன் பண்ணி இங்கே கொண்டு வர சொல்றேன்,” என்று உடனடியாகப் போன் செய்து சொல்ல, சூடாக நான்கு தோசைகளை, விதவிதமான நான்கு சட்னிகள் வைத்து, ஹாட்பேக்கில் கொண்டு வந்துவிட்டார்.
இலவச இணைப்பாக அங்கு வீரசிங்கமும் வந்து சேர, ஒரு வாய் உணவு கூட உள்ளே இறங்காமல், அவரைப் பார்த்துத் திருதிருவென விழித்தார்கள் மாமியாரும், மருமகளும்.
நரைத்த மீசையை நன்றாக முறுக்கி விட்ட கிழவர், “சாப்பிடும்,” என்று கட்டளையாகச் சொல்ல, அவள் மாமியாரை தான், என்ன செய்யட்டும்?’ என்பது போல பார்த்தாள்.
“சாப்பிடு,” என்று அவரும் கண்காட்டவும் தான், இரண்டு தோசைகளைச் சாப்பிட்டுவிட்டு,
“போதும்,” எனவும்,.
“உனக்காகக் கொண்டு வந்தது. நீ தான் சாப்பிடணும்,” என்று மேலும் இரண்டு தோசைகளை அவளைச் சாப்பிட வைத்துவிட்டு,
“நீயும் இந்தப் பொண்ணோடையே இருமா. காலையில் பேசிக்கலாம். தனியா தங்க வைக்க வேண்டாம்,” என்று விட்டுச் சென்று விட்டார்.
‘தான் வந்த தகவல் அஜயை சென்று சேர்ந்து விட்டது’ என்று ஆதிராவிற்கும் புரிந்தது.
என்ன மனநிலையில் இருப்பான் என்று யோசித்துக் கொண்டே, அதிகமாகச் சாப்பிட்டதால் தூங்கியும் விட்டாள்.
சுமதிக்குzதன் மகனின் வாழ்க்கைச் சந்தோஷமாக மாறிவிடும் என்ற எண்ணம் இருந்தாலும், கடந்த சில மாதங்களில் தன் மகனைக் காயப்படுத்திவிட்டு, கொஞ்சமும் குற்ற உணர்வு இல்லாமல் தன்னுடைய வீட்டிற்கு வந்து நிற்பவளின் மனநிலை எப்படி இருக்கிறது என்று அவரால் கணிக்கவே முடியவில்லை.
எதையும் எளிதாக எடுத்துக் கொள்பவளா?
அப்படி என்றால் எதற்காகத் தன் மகனைக் காயப்படுத்தினாள்? என்று மீண்டும் மீண்டும் அந்தக் கேள்விகள் ஓடிக் கொண்டிருக்க, இரவெல்லாம் அவருக்குத் தூக்கமே இல்லை.
அவருக்கு இருப்பது ஒரே ஒரு மகன்.
அவன் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரது மிகப்பெரிய ஆசையே..!
எப்படியோ மனதைப் போட்டுக் குழப்பிக் கொண்டு, சரியாகத் தூங்காததால், தூக்கமும் விழிப்புமாகப் புரண்டு கொண்டிருந்தார்.
அஜய் சமாதானம் ஆகாமல், வேறு யாரிடமும் என்ன பேசிச் சமாதானமானாலும் அது சரி வராது என்று ஆதிராவிறகு தெரியும்.
காலையில் அஜய்யைச் சந்தித்துவிட்டுத்தான், வேறு எதைப் பற்றியும் சிந்திக்க வேண்டும் என்று ஐந்து மணிக்கே எழுந்துவிட, சுமதியும் விழித்து விட்டார்.
“உங்க பையன் எத்தனை மணிக்கு எழுந்திருப்பார் அத்தை?” என்று கேட்க,
“வழக்கமா ஆறு மணிக்கு எழுந்திருப்பான். நேத்து நைட் சரியா தூங்கி இருப்பானான்னு தெரியலை. அனேகமா இன்னைக்குத் தாமதமா தான் எழுந்திருப்பான்னு நினைக்கிறேன்,” எனவும்,
“நான் என்ன நினைக்கிறேன்னா, நேத்து நைட் நல்லாத் தூங்கி, வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் முன்னாடி எழுந்திருப்பார் என்று நினைக்கிறேன்,” எனவும்,
“வாய்ப்பே இல்லை,” என்று சொல்ல,
“சரி, யார் சொன்னது சரின்னு பார்ப்போம். என்னை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறீங்களா?” என்று கேட்க, அப்பொழுதுதான் அவளது திட்டமே புரிந்தது.
“மாமா சம்மதம் சொல்லாமல் உன்னை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போக முடியாது. அவர் சாஸ்திர சம்பிரதாயங்களை மதிப்பவர். உன்னோட அவசரத்துக்கு இங்க எந்த வேலையும் நடக்காது. முதல்ல பொறுமையைக் கத்துக்கோ,” என்று புத்திமதி சொல்ல,
“சரிங்க அத்தை, உங்க பேச்சை நான் மீறவே மாட்டேன். உங்க பையன் ரூம் எது?” என்று ஜன்னல் வழியாகப் பார்க்க,
“இரண்டாவது மாடியில் வலது பக்கம் இரண்டாவது ரூம்,” எனவும்,
“விடிந்த பின்னும் லைட் எரியுதே..அந்த ரூமா?” என்று சிரிப்பை வெளிக்காட்டாது கேட்க,
“ஆமாம்,” என்று ஆச்சரியப்பட,
“இங்கிருந்து தான் பார்த்துட்டு இருக்காருன்னு நினைக்கிறேன்,” என்று கண்ணடித்துச் சொல்ல,
“நல்ல பொருத்தம் தான். மனசுக்குள்ள அம்புட்டு ஆசையை வச்சுட்டு, என் மகனைக் கஷ்டப்படுத்த உனக்கு எப்படித்தான் மனசு வந்துச்சு?” என்று ஆற்றாமையை வெளிப்படுத்திவிட்டு,
“இனிமேல் மத்தவங்களுக்காக என் பையனை விட்டுக் கொடுக்க நினைச்சா, அதுதான் நீ அவன் வாழ்க்கையில் இருக்கிற கடைசி நிமிஷமா இருக்கும். இது என்னோட முடிவு இல்லை. அவனுடைய முடிவு தான். ரொம்பப் பிடிவாதம் பிடிப்பான். அவனுக்கு மரியாதை இல்லாத இடத்தில் இருக்கவே மாட்டான். உனக்காக, உன்னைத் தேடி நிறைய முறை உன்னோட வீட்டுக்கு வந்து அவமானப்பட்டு திரும்பி இருக்கான்,” எனவும்,
“என் வீட்டு ஆளுங்க எக்காரணத்தைக் கொண்டும் அஜய்யை அவமானப்படுத்தி இருக்க மாட்டாங்க அத்தை. நான் சொன்னதுல அஜய் காயப்பட்டு இருக்கலாம். அதுக்கு நான் அவர்கிட்டயும், உங்க கிட்டயும் மன்னிப்புக் கேட்டுக்கறேன். மத்தபடி மாமாவும், இந்து அக்காவும், ஏன் என்னோட அம்மா கூட அஜய் கிட்ட மரியாதை குறைவாப் பேசி இருக்க வாய்ப்பே இல்லை,” என்று உறுதியாகச் சொல்ல,
“சரி. நீ அவனை காயப்படுத்தினதை தான், அவமானப்படுத்திட்டன்னு நான் சொன்னேன். இரண்டும் கிட்டத்தட்ட எனக்கு ஒண்ணா தான் தெரியுது,” என்று சொன்னவர்,
“நான் வீட்டுக்குப் போறேன். நீ குளிச்சு ரெடியா இரு,” எனவும், சந்தோஷத்தோடு புதிய சேலை கட்டி, அஜய்க்குப் பிடித்தவாறு தயாராகிக் காத்திருக்க, அவளைக் கொஞ்சமும் பொருட்படுத்தாது, காலையிலேயே காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டான், பிடிவாதத்திற்குப் பெயர் போனவன்!