அத்தியாயம் 17
“திலீபனுக்கு என்ன பதில் சொல்லப் போற?” என்று கேட்டான் அன்புச்செல்வன்.
தன் கை விரல்களின் நகங்களை ஆராய்வது போல, தலையை குனிந்தபடி அமர்ந்திருந்த ஆதிராவிடம்,
“உன்கிட்ட தான் கேட்கிறேன் ஆதிரா. நீ அஜய்யை மறக்கலைன்னு தெளிவாத் தெரியுது. உன்னோட அம்மா விருப்பத்துக்காக நீ திலீபனை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறது சரியா? உன்னால திலீபனை முழு மனசோட ஏத்துக்கிட்டு வாழ முடியுமா? உன்னால முடியாதுன்னு தோணுச்சுன்னா இப்பவே விட்டுடு..
“நாம திலீபனை படிக்க வைத்து நல்ல வேலையில் உட்கார வைத்திருக்கோம் தான்..அந்த நன்றிக் கடனுக்காக, கடைசி வரைக்கும் உன்னோட பாரத்தை அவன் சுமக்கனும்னு எந்த விதமான அவசியமும் இல்லை. நீ எடுக்கிற முடிவுல தான் உங்க மூணு பேரோட வாழ்க்கையும் அடங்கி இருக்கு. ஏற்கனவே பாதி வாழ்க்கை வாழ்ந்து முடித்த பெற்றோருக்காக, உன்னோட எதிர்கால வாழ்க்கையை வீணாக்காதே,” என்று சொல்லவும்,
“திலீபனும் நானும் நல்ல ஃப்ரெண்ட்ஸ்,” என்று அவனின் அத்தனை கேள்விகளுக்கும் ஒரு பதிலில் முடித்துவிட,
“அஜய்யைக் கோபப்படுத்துவதற்காக டிராமா பண்ணி இருக்கேன்னு புரியுது. ஆனால், உன்னோட அம்மா நீ திலீபனை விரும்பறதா நினைச்சுட்டு பதினைந்து நாள்ல மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணி இருக்காங்களே, அதுக்கு என்ன பண்ணப் போற?” என்று கேட்கவும்,
“அஜய் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. என்னை விட்டுக் கொடுக்க மாட்டான்,” என்றவளின் கன்னத்தில் மாறி மாறி அடித்தால் என்ன?’ என்று தோன்றிற்று அன்புச்செல்வனுக்கு.
“ஒருத்தனை எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான் என்று முடிவு பண்ணி அடிச்சுக்கிட்டே இருக்கக் கூடாது ஆதிரா. அவன் திருப்பி அடிச்சா, மரண அடியா இருக்கும்,” எனவும்,
“போலீஸ் மாதிரியே பேசாதீங்க மாமா,” என்று கேலி செய்து, தன்னை இயல்பாக இருப்பது போலக் காட்டிக் கொள்ள முயற்சி செய்தாள்.
அது அவனுக்கும் புரிந்தது.
“ஏற்கனவே நீ செய்து வச்சிருக்க காரியத்தினால் அஜய் உன் மேல பயங்கர கோபத்தில் இருக்கான். இதுல நீ அவன் உனக்காக முடிவெடுப்பான் என்று நினைத்துக் கொண்டு திலீபனோடு மணமேடை வரைக்கும் போனேன்னா, நிச்சயம் அஜய் உன்னை மன்னிக்கவே மாட்டான்..
“ஒவ்வொரு முறையும் அவனை நீ விட்டுக் கொடுத்துட்டே இருக்க. ஆனால், அவன் மட்டும் உன்னை விட்டுக் கொடுக்காமல் இருக்கணும்னு எதிர்பார்க்கிறது முட்டாள்தனம், சைக்கோதனம். புரிஞ்சுக்கோ!” எனவும்,
“அம்மா பிளாக்மெயில் பண்றாங்க மாமா. அம்மாவோட சேர்ந்துட்டு என்னுடைய பிறப்புக்குக் காரணமானவரும் என்னை பிளாக்மெயில் பண்றார். அவரோட வாழ்க்கை கேள்விக்குறியாகிடுமாம், ரெண்டு பசங்க வாழ்க்கை என்ன ஆகும்னு கேட்கிறாங்க. என்னோட வாழ்க்கை என்ன ஆகும்னு ரெண்டு பேருமே யோசிக்கல மாமா…
“எனக்குத் தெரியுது, நான் அஜய்யை ரொம்பவே காயப்படுத்திட்டேன். வேற ஒருத்தனா இருந்திருந்தால் எப்படியோ போன்னு விட்டுட்டுப் போயிருந்திருப்பான். இவன், நான் இன்னொருத்தன் ஓட இருக்கிற மாதிரி போட்டோ அனுப்பின பின்னாடியும் என் மேல முழு நம்பிக்கை வச்சு, அவனை விட்டு வேற எவனையும் நினைக்க வாய்ப்பே இல்லைன்ற நம்பிக்கையோட என்னைத் தேடி வந்திருக்கான்…
“அவனை விட்டுட எனக்குக் கொஞ்சம்கூட மனசே இல்லை. எப்படி இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கிறது என்று தெரியலை மாமா. நீங்க உங்களால முடிஞ்சா எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்க,” என்று தன்னுடைய குழப்பமான மனநிலையையும் அவனுக்குத் தெளிவாகவே சொல்லிவிட,
அன்புச்செல்வன், “உன்னைப் பெத்தவங்க செய்த தவறுக்கு நீ ஒண்ணும் செய்ய முடியாது. உன்னோட வாழ்க்கையைத் தான் நீ பார்க்கணும். அஜய் கிட்டத் தெளிவாப் பேசு. நீயா வரணும் என்பதுதான் அவனுடைய எதிர்பார்ப்பா இருக்கும்,” எனவும்,
“என்னால இவங்க பண்ற பிளாக் மெயில் மீறி போக முடியாது மாமா. அம்மாக்கு ஏதாவது ஆச்சுன்னா, கடைசி வரைக்கும் அந்தக் குற்ற உணர்ச்சி என்னை நிம்மதியாக வாழ விடாது. எனக்கு எல்லாரோட சம்மதத்தோட அஜய்யைக் கைப்பிடிக்கணும். அதுக்கு ஒரு வழி சொல்லுங்க,” எனவும், அதற்குத் தீர்வு அவனிடமும் இல்லையே.
சாரதாவின் பிடிவாதத்தைப் பற்றி யாரும் சொல்லி அறிய வேண்டும் என்று இல்லை.
அவரது இத்தனை வருடத் தனிமை வாழ்க்கை அவரது பிடிவாதத்தின் அளவைப் பறைசாற்றிவிடும்.
“எல்லாருக்கும் நாம நல்லவங்களா இருந்திட முடியாது ஆதிரா. யாரையும் காயப்படுத்தாமல் நம்மால வாழ்ந்திட முடியாது. என்னோட அக்கா என்னோட அப்பா,அம்மாவை எந்த அளவுக்குக் காயப்படுத்தி இருக்கான்னு தெரியுமா? உன்னைக் கட்டுப்பாடோடு வளர்க்கிறேன் என்று உன்னையும் காயப்படுத்தி இருக்கா. உன்னைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு என்னையும் டார்ச்சர் பண்ணி இருக்கா. எல்லாம் முடிவும் அவளோடதாவே இருந்திருக்கு…
“இந்த முறை முடிவு உன்னுடையதாக இருக்கட்டும். உன்னோட வாழ்க்கை சிறப்பா இருக்கணும்னா, நீ தான் முடிவெடுத்து அஜய் கிட்டப் போகணும். ‘சூழ்நிலை உங்கள் வாழ்க்கையை மாற்றும்’னு நினைச்சுட்டு இருந்தேன்னா, அஜய் கைப்பிடித்தாலும் உன்னால சந்தோஷமா இருக்க முடியாது. அவன் தன்னுடைய ஏமாற்றத்தைப் பல விதங்களில் உன்கிட்ட காட்ட ஆரம்பிச்சா உன் வாழ்க்கை நரகமாகிடும். புரியுதா?” எனவும்,
“புரியுது மாமா. இந்து அக்கா உங்க பின்னாடி சுத்தின போதெல்லாம் கண்டுக்கலைன்னாலும், அவங்க காதலுக்கு மரியாதை கொடுக்குற மாதிரி, நீங்களே அவங்களைத் தேடிப் போய்க் கல்யாணத்துக்கு நாள் குறிச்சு அவங்களைச் சந்தோஷப்படுத்துனீங்க. அதே மாதிரி நானும் செய்யணும்னு சொல்றீங்க. ஆனால்…” என்று மீண்டும் அம்மாவை நினைத்துக் கலங்க,
“நான் பார்த்துக்கிறேன். நீ இப்போவே கிளம்பு,” எனவும்,
“அஜயோட தாத்தா?” என்று அடுத்த கேள்வியோடு நிறுத்தவும்,
“அவருக்குச் சொந்தத்துல அஜய்க்குத் திருமணம் பண்ணணும். அதுதான் ஆசை. நீ சொந்தக்காரப் பொண்ணு தானே? அஜய் உடைய உரிமையான மாமாவோட பொண்ணு. சோ உன்னை ஏத்துப்பார்,” என்று அனைத்திற்கும் தீர்வு சொல்லி ஆதிராவிற்குத் தைரியமூட்டி, அஜய் இடம் அனுப்பி வைத்தான்.
முன்பே தன்னுடைய மாமாவிடம் உண்மையைச் சொல்லி இருந்தால், அப்போதே தீர்வு கிடைத்திருக்கும்;
அஜய்யின் மனதையும் காயப்படுத்தி இருக்கத் தேவையில்லை என்று காலம் கடந்து உணர்ந்த ஆதிரா, நேராக அஜய்யின் அலுவலகத்திற்கு வந்து நிற்க, அப்பாயின்ட்மென்ட் இல்லாமல் வந்து நின்றவளை உள்ளே அனுப்ப ரிசப்ஷனிஸ்ட் தயாராக இல்லை.
அவளின் பெயரைச் சொல்லியும், அஜய்யிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை.
தன் மேல் அவன் கோபப்படாமல் இருந்தால் தான் ஆச்சரியம் என்பதால் பொறுமை காத்தாள்.
அலுவலகத்தை விட்டு அனைவரும் கிளம்பிய பின்பு அஜய்யும் கிளம்பியவன், அங்கே ஒருத்தி தனக்காகக் காத்திருக்கிறாள் என்பதை மறந்துவிட்டவன் போல கடந்து சென்றுவிட, “அஜய்!” என்று அவனை அழைத்துக் கொண்டு, அவன் முன்பு நின்றதும்,
“பொது இடத்தில் உன்னை அடிக்கக் கூடாதுன்னு பார்க்கிறேன். என் கண் முன்னாடி வந்திடாதே. மத்தவங்களுக்காக என்னை விட்டுக் கொடுக்க நினைக்கிறவள் எனக்குத் தேவையே இல்லை. இப்போ நீ வழியை விட்டு விலகலைன்னா, நாளைக்கு உனக்கு ஷாக் கொடுக்கிற மாதிரி திவ்யாவை மேரேஜ் பண்ணிட்டு வந்து நிப்பேன். உன்னால தாங்கிக்க முடியும் என்றால், இங்கேயே இரு.. ,” என்று சொல்ல, அழுகையோடு அவனுக்கு வழிவிட்டு நின்று விட்டாள்.
தான் அவனை விட்டு விலக முடிவு செய்த பொழுது, மனம் ரணமாக வலித்தது தான்.
தன்னைவிட அஜய்க்கு வலிக்கும் என்று நினைத்து, தன்னைத் தானே நிறையக் காயப்படுத்தியிருக்கிறாள்.
இப்போது தனக்கு அஜய் அதே வலியை திருப்பிக் கொடுக்கும் பொழுது, ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று நினைத்தாலும், ரணப்பட்ட மனதை எப்படி ஆற்றுவது என்றே தெரியவில்லை.
சிறிது நாட்கள் கழித்து அஜய்யைச் சமாதானப்படுத்தலாம் என்று நினைத்தாலும், இன்னும் பதினொரு நாட்களில் திருமணம் என்று அம்மா சொல்லி இருப்பது வேறு கோபத்தை அதிகப்படுத்தியது.
ஒருவர் கூடத் தன் மனதைப் புரிந்து கொள்ளாமல் காயப்படுத்திக் கொண்டே இருக்க, ‘யாரும் எனக்குத் தேவையில்லை’ என்று மீண்டும் கலிபோர்னியாவிற்குச் சென்று ஓடி ஒளிந்து கொள்ளலாம் என்று சொன்ன மனதை, வெகு சிரமப்பட்டு அமைதிப்படுத்தினாள்.