தீராதோ உன் மயக்கம் – 16

அத்தியாயம் 16

ஆதிராவின் வீட்டில், அவளைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை. 

எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தவளின் முன், அஜய் வந்து நிற்க, தன் வீட்டில் அவனை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை என்று தெளிவாகச் சொன்னது அவளின் கண்கள்.

“உன்னோட திருமணத்துக்கு வாழ்த்துக்கள் சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்,” எனவும், அவன் கூற்றை அவளால் எப்படி நம்ப முடியும்?

அம்மாவை பார்ப்பதற்காக, தன்னுடைய பிறப்பிற்கு காரணமான நபர் வந்திருப்பதாக ஆதிராவிற்கும் தகவல் வந்தது. 

அஜய்க்கும் விஷயம் தெரிந்து விட்டது என்று உணர நிறைய நேரம் எல்லாம் ஆகவில்லை.

மனதில் இருக்கும் வேதனைகளை அஜய்யிடம் காட்டி மட்டும் என்னவாகி விடப் போகிறது என்ற நினைப்போடு, “நீயே சொல்,” என்பது போல ஆதிரா பார்த்திருக்க,

“எனக்கு ஒரே ஒரு பதில் தான் தெரியணும் ஆதிரா. அதுக்கு நீயும் நானும் இவ்வளவு டிஸ்டன்ஸ்ல இருக்குது சரியா வராது,” என்றவன் அவளை நெருங்கி, இடையை வளைத்து நெருக்கமாகத் தன்னோடு பிணைத்துக் கொள்ள, அவனிடமிருந்து விடுபடப் போராடிய ஆதிராவின் முயற்சிகள் அவளுக்குக் கொஞ்சமும் உதவவில்லை.

தன் நெஞ்சிலே அடித்துக் கொண்டிருந்த ஆதிராவின் கைகளைத் தடுக்காமல் இருந்தவன், “என்னோட கண்ணைப் பாரு,” என்று அவளின் முகத்தை நிமிர்த்தித் தன் முகம் பார்க்கச் செய்தவன், அவளின் கண்களை ஆழ்ந்து நோக்க, அவனின் முகம் பார்க்க மறுத்து அங்குமிங்கும் முகத்தைத் திருப்பினாள். 

ஒரு கட்டத்தில் அவனின் கண்ணோடு கண் பார்த்த நிமிடத்தில் ஆதிராவின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாகக் கொட்டத் தொடங்கிவிட்டது. 

நிமிட நேரப் பார்வையைக்கூட எதிர்கொள்ள முடியாமல், அவனது நெஞ்சில் இறுகச் சாய்ந்து கொள்ள, இதுவரை அவளை இறுக்கிப் பிடித்திருந்தவன், அவள் அழுததும் தன்னுடைய அணைப்பைவிட்டு விலகி அவளைத் தூர நிறுத்தினான். 

அவன் விலக்கி நிறுத்துவான் என்று எதிர்பாராமல், திகைத்து போய்ப் பார்க்க, “எனக்குத் தேவையான பதில் கிடைச்சிடுச்சு,” என்றவன் அதே வேகத்தில் அங்கிருந்து சென்றும் விட்டான்.

‘தான் அவனின் மனதைக் காயப்படுத்தியும், தன் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முயன்று வெற்றியும் பெற்றிருக்கிறான்’ என்று நினைத்துச் சந்தோஷமாகவும் இருந்தது. 

அவனுடன் வாழ முடியாது, தன்னைக் கட்டுப்பாட்டில் நிறுத்தி வைத்திருக்கும் சூழ்நிலையை நினைத்து வேதனையாகவும் இருந்தது.

அவள் நினைவுகள், அன்புச்செல்வனின் திருமண நாளை நோக்கி நகர்ந்தது.

அஜய்யுடனான ஆதிராவின் நெருக்கம், சாரதாவைப் பதட்டமடையச் செய்ய, அஜய் பற்றிய முழு விவரங்களையும் சேகரிக்க ஆரம்பித்துவிட்டார். 

அதுவரை அவனைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று அவர் நினைக்கவே இல்லை.

அவன் எந்த ஊர் என்று விபரம் பார்த்ததும் சாரதாவின் மூளைக்குள் மின்னல் வெட்ட, அவர் எதிர்பார்த்தது போன்று அடுத்தடுத்து அவருக்குக் கிடைத்த தகவல்கள் அவருக்கு நெஞ்சுவலியைக் வரவைத்துவிட்டது என்பதுதான் உண்மை.

ஆதிரா படித்த கல்லூரியில் எத்தனையோ தகுதி உள்ள ஆண் மகன்கள் இருக்க, தன்மகள் ஏன் இவனைப் போய்த் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று இன்றுவரை சாரதா வேதனை படாத நாளில்லை.

யாரை வேண்டாம் என்று தன் வாழ்க்கையில் ஒதுக்கி வைத்தாரோ, அவரின் வீட்டில் உள்ள ஒருவனையே தன் மகள் காதலிக்க.. அங்கு தன் மகள் நிம்மதியாக, சந்தோஷமாக வாழ முடியாது என்று தெரிந்த பின்னரும் எப்படி அவரால் மகளின் திருமணத்திற்கு சந்தோஷமாக சம்மதிக்க முடியும்?

அதுவும் தன் மகள் என்று தெரிந்து விட்டால், சத்யவேந்தின் மனைவி எப்படி நடந்துகொள்வார் என்று வேறு தெரியாதே! 

இப்படி அவர் குழம்பிக் கொண்டிருக்க, சத்யவேந்துக்கு அவரது மனைவி நளினி மூலமாகத்தான், அஜய்யின் கல்லூரி கால காதலும், ஆதிராவின் அம்மா சாரதா திருமணமாகாதவர் என்றும், வெளிநாட்டில் ஒருவனைக் காதலித்துக் கர்ப்பமாகி, குழந்தை பெற்ற பின்பு வேண்டாம் என்று சொன்ன தகவலும் கிடைத்திருக்க, நளினி “இது நீ விரும்பின பொம்பளை இல்லை தானே?” எனவும், 

“நாகரீகமா பேசணும்னு உனக்கு எத்தனை முறை சொல்வது?” என்று மனைவியைக் கடிந்து கொண்டார் சத்யவேந்த் l.

“உங்களை கல்யாணம் பண்ண பிறகு, அப்படி ஒன்று இருப்பதே எனக்கு மறந்து போச்சு,” என்று வார்த்தைகளால் காயப்படுத்தியவள், 

“உண்மையை சொல்லுங்க, நீங்க காதலிச்ச பொம்பளை தானே இது?” எனவும், 

‘இல்லை’ என்று மறுத்துவிட்டார் சத்யவேந்த்.

‘ஆமாம்’ என்று கூறி ஒவ்வொரு நாளையும் நரகமாகக் கழிக்க சத்யவேந்துக்கு விருப்பமே இல்லை.

படிக்கச் சென்ற இடத்தில் படிப்பை மட்டும் பார்க்காமல், அங்கு சாரதாவின் வலையில் விழுந்ததை நினைத்து இன்றும் சத்யவேந்துக்கு உச்சகட்டக் கோபம்தான். 

காதலித்ததில் தவறில்லை. 

இருவரும் சேர்ந்து வாழ்ந்ததில் கூடத் தவறில்லை. 

குழந்தை பெற்ற போது, சாரதாவைத் கையில் வைத்துத் தாங்காத குறையாக சத்யவேந் தாங்கியதை, சாரதா ஒருபோதும் மறுக்க முடியாது.

“நாம வீட்டில் சொல்லிடலாம்,” என்று சத்யவேந்த் சொன்னபோதெல்லாம், 

“கொஞ்ச நாள் போகட்டும்,” என்று நாட்களைத் தள்ளிக் கொண்டே வந்த சாரதா, குழந்தை பெற்ற பின்பு ஏற்பட்ட மன அழுத்தங்கள் தாங்க முடியாமல், தேவையில்லாததைப் பற்றி எல்லாம் எண்ணிக் கொண்டே இருப்பார். 

அப்படித்தான் இருவரின் வயது வித்தியாசமும் சாரதாவின் மனதை அதிகமாக உறுத்தத் தொடங்கியது. 

இருவருக்கும் ஐந்து வயது வித்தியாசம். 

அது ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை தான். 

அங்கே இருக்கும் கலாச்சாரத்தில் ஐந்து வயது என்பது மிகவும் கடந்து போகக்கூடிய வயதுதான். 

ஆனால், அங்கு இருப்பவர்களைப் போலவே சத்யவேந்தையும் மதிப்பிடத் தொடங்கியதில் தான் பிரச்சனையே ஆரம்பித்தது.

‘முன்பைப் போல, தான் அழகாக இல்லை. சத்யவேந்தை விட, தான் பத்து வயதிற்குமேல் மூத்தப் பெண்ணாகத் தெரிகிறோம். டீன் ஏஜ் பையன் போல் இருக்கும் சத்யவேந்த்.. கடைசி வரை தன்னோடு வருவானா?’ என்பது போன்ற குழப்பங்கள் அதிகமாக, தினமும் சண்டை வந்து கொண்டே இருந்தது. 

ஒரு கட்டத்தில், “நீ என் வாழ்க்கையை விட்டுப் போயிடு,” என்று சாரதா சொல்லிவிட, எவ்வளவோ முடியாது என்று சத்யவேந் மறுத்துப் பார்த்தான்.

“நீ என்னை விட்டுப் போயிடுவியோன்னு பயந்துட்டு ஒவ்வொரு நாளும் மன உளைச்சலில் வாழ்ந்துட்டு இருக்க முடியாது. இப்படியே போனால் நான் தற்கொலை தான் பண்ணிக்குவேன். அதுதான் உனக்கு வேணுமா?” என்று ஒருநாள் சண்டையில் உச்சகட்டக் கோபத்தில் கத்தி விட, கண்களில் வேதனையோடு சாரதா தங்கியிருந்த வீட்டை விட்டு வெளியேறியவன், அந்த நாட்டை விட்டு வெளியேறி தன் வீட்டுக்கு வந்துவிட்டான். 

அதன் பிறகும் இரண்டு, மூன்று வருடங்கள் விடாமல் சாரதாவைச் சமாதானம் செய்ய எவ்வளவோ முயற்சி எடுத்தும், சாரதா தன் பிடியில் இருந்து மாறவே இல்லை. 

சத்யவேந்திற்கு இன்னொரு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் கொஞ்சமும் இல்லை. 

இப்படியே வாழ்ந்து விடலாம், ஒருத்தி கொடுத்த காயமே போதும் என்று வாழ்ந்து கொண்டிருக்க, வீட்டில் இருப்பவர்களுக்கும் அவனது காதல் விவகாரம் தெரியும் என்பதால் அவனை இன்னொரு திருமணம் செய்து கொள்ள அவசரப்படுத்தவில்லை.

சொந்தத்தில் மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணத்தில் இருப்பவர்கள், ‘நடந்தது எல்லாம் நன்மைக்கே’ என்னும் விதத்தில் நடந்துகொள்ள, அவரது முப்பதாவது வயதில் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். 

அதற்கும் ஒப்புக் கொள்ளவில்லை. 

சில வருடங்களுக்கு முன்பு தான் நளினியைப் பார்த்துத் திருமணம் செய்து கொள்ளவும் சம்மதித்தார். 

வசதியான வீட்டுப் பெண்தான்.

தன்னுடைய பழைய வாழ்க்கை பற்றிச் சொல்லித் தான் திருமணம் செய்திருந்தார்.

பணக்கார வீட்டு ஆண்களுக்கு இது சகஜம் என்ற மனப்பான்மையோடு நளினியும் திருமணம் செய்து கொண்டு, இரண்டு குழந்தையும் ஆகிவிட்டது.

அதற்காக நளினி சத்யவேந்தனின் மனம் அறிந்து நடந்துகொண்டார் என்று சொல்வதற்கு இல்லை. 

சண்டையில்லாத நாட்கள் இல்லை என்று சொல்லிக் கொள்ளலாம். 

இயற்கையின் உந்துதலால், இரண்டு குழந்தைகள் உருவாகிவிட்டது. 

சமூகத்திற்காக அந்த இரண்டு குழந்தைகளையும் கலைக்காமல் நளினி பெற்றுக் கொண்டார் என்பதுதான் உண்மை.

இப்படி அவரது வாழ்க்கை சென்று கொண்டிருக்க, அஜய் காதலித்த பெண் தன்னுடைய மகள் தான் என்று தெரிந்ததும் முதலில் சத்யவேந்திற்கு சந்தோஷமாகத்தான் இருந்தது. 

ஆனால், தன் பெண்ணைப் பார்க்க விடாமல் செய்த சாரதாவின் மேல் எக்கச்சக்கக் கோபம். 

கொஞ்சம் நிறுத்தி நிதானமாக யோசித்த போது தான், அவருக்கும் சில விஷயங்கள் புரிந்தது. 

அஜய்-ஆதிரா திருமணம் செய்து கொண்டால், நிச்சயம் தன்னுடைய வாழ்வில் இருக்கும் கொஞ்ச நஞ்ச நிம்மதியும் பறிபோய்விடும். 

எல்லாவற்றிற்கும் மேல், ஒவ்வொரு விசேஷத்திற்கும் சாரதாவும் வந்து செல்வார். 

‘வராதே’ என்று சொல்லவும் முடியாது.

‘சாரதாவுக்குத் திருமணம் ஆகி இருந்தால் எப்படியோ. தனித்தே வாழ்ந்து கொண்டிருக்கும் சாரதாவின் தனிமை வாழ்க்கை தன்னால்தான்’ என்ற குற்ற உணர்ச்சியும், அவள் தான் அவளுடைய தனிமை வாழ்க்கைக்கு காரணம் என்ற கோபமும் சேர, நேரடியாக சாரதாவின் அலுவலகத்திற்குச் சென்று நின்றார்.

அங்கே சாரதாவை நேருக்கு நேர் பார்த்ததும் இன்னும் கோபம் அதிகமாகியது. 

வயது வித்தியாசத்தைப் பற்றிச் சொல்லிதான் சாரதா பிரிந்து இருந்தார். 

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நேருக்கு நேர் நின்ற இருவரில் சாரதாதான் மிகவும் இளமையாக, அழகாகத் தெரிந்தார்.

முன் தலையில் வழுக்கை விழுந்து, தொப்பையோடு மிகவும் வயதாகிவிட்ட தோற்றத்தோடு நின்றிருந்த சத்யவேந்தைப் பார்த்து, சாரதா தான் அதிர்ந்து போய்விட்டார்.

அந்த சூழ்நிலையிலும் சத்யவேந் சாரதாவிடம் ஒன்றும் பேசாமல், இருவரும் சேர்ந்தபடி புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொள்ள, சாரதா, “என்ன பண்றீங்க?” என்று அதிர்ந்து போய்க் கேட்க, 

“இதை நீ அடிக்கடி பார். நீ செய்த தவறு உனக்கு நல்லாவே புரியும். நீயும் நல்லா வாழாமல் என்னையும் மோசமான வாழ்க்கை உள்ளே தள்ளிவிட்டு, ரொம்ப நல்ல காரியம் செய்துட்ட” என்று கோபமான குரலில் சொன்னவர், 

“நான் வந்த விஷயத்தை விட்டு வேற ஏதாவது பேசிட்டு இருக்கேன். ஆதிரா விரும்புவது. என்னோட சொந்தக்காரப் பையன் அஜயை தான்,” எனவும், சாரதாவிற்கும் அது தெரியும் என்பதால் தயக்கத்தோடு நிற்க,

“தாராளமா நம்ம பொண்ணை அஜய்க்குத் திருமணம் செய்து வைக்கலாம். அதுக்கு நீ ஒண்ணே ஒண்ணுதான் செய்யணும். நீ என்னோட முதல் மனைவியா என்னோட வீட்டுக்கு வரத் தயாரா இருக்கியா?” என்று சாரதாவால் செய்ய முடியாத ஒரு காரியத்தைத் தெரிந்தே கேட்க, 

“லூசுத்தனமா பேசாத சத்யா!” என்று கோபப்படவும்,

“அஜய்-ஆதிரா திருமணம் நடந்தால், ‘நீயும் நானும் சேர்ந்து வாழ ஆசைப்பட்டுதான் ஆதிராவை வைத்து அஜய்யை மயக்கினோம்’ என்று தேவையில்லாத கதை எல்லாம் கட்டுவாங்க,” எனவும், அவரின் முரண்பட்ட கூற்றில் சாரதா செயலற்று நிற்க,

“உன்னோட பெயரும் கெட்டுப் போகும். அதனாலதான் சொல்றேன். எனக்கு உன்னோட சேர்த்து வச்சுப் பேசுறதுல எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. உன்னோடு நான் வாழ்ந்ததை யார்கிட்டயும் நான் மறைக்கவும் இல்லை. இனியும் மறைக்கப் போவதும் இல்லை. என் பொண்ணுன்னு உரிமையா ஆதிராவை என் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து, சகல சௌகரியத்தோட வாழ வைக்க எனக்கு ஆசைதான். தூரத்தில் இருந்து என் பொண்ணைப் பார்த்து வருத்தப்பட்ட காலம் போதும்னு நினைச்சு சந்தோஷப்படுவேன். ஆனால்…” என்று நிறுத்திவிட்டு, தான் சொன்ன காரணத்தை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்த, சாரதாவால் சத்யவேந்தோடு தன்னைச் சேர்த்து வைத்துப் பேசுவதை கொஞ்சமும் ஜீரணிக்கவே முடியவில்லை.

‘தன்னால் இன்னொரு பெண்ணின் வாழ்க்கை வீணாவதா? நளினிக்கு முன்பு, தான் சத்யவேந்தின் வாழ்க்கையில் வந்துவிட்டாலும், முறையாகப் பேசிப் பிரிந்த பின்பு, இன்னொரு வாழ்க்கையும் சத்யவேந்திற்கு அமைந்துவிட்ட பின்பு, தான் குறுக்கே சென்று நிற்பது, தவறாகிவிடும். 

தன்னை தவறானவளாக சித்தரித்து,மற்றவர்கள் பேசுவதை தன்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது,’ என்று தோன்ற, 

“என் பொண்ணு அஜய்யைத் திரும்பி கூடப் பார்க்க மாட்டா,” எனவும்,

“என்னோட சேர்த்து வச்சுப் பேசறது உனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கு, இல்ல?” என்று அந்த சூழ்நிலையிலும் வேதனையோடு சொல்லிவிட்டுச் சென்றுவிட, தான் எடுத்த முடிவு தவறு என்றாலும் காலம் கடந்து அதைச் சரி செய்ய முடியாத சூழ்நிலையில், என்னதான் செய்ய முடியும்? 

‘இன்னொரு பெண்ணுக்குத் துரோகம் மட்டும் செய்து விடக்கூடாது’ என்று மட்டும் உறுதியாக முடித்துக் கொண்டவர், தன்னைப் போலவே காதல் தோல்வியில் மகளும் நித்தமும் துன்பப்படப் போகிறாள் என்பதை மட்டும் வசதியாக மறந்துவிட்டார்.

error: Content is protected !!
Scroll to Top