அத்தியாயம் 15
அம்மாவின் ஓய்ந்து போன தோற்றத்தைப் பார்த்த பிறகுதான், அவருக்கு உண்மையாகவே உடல்நிலை சரியில்லை என்று நம்பவே செய்தாள் ஆதிரா.
அதுவரை, தான் சென்னையில் இருப்பதை அறிந்து கொண்டு, தன்னை வரவழைப்பதற்காக நாடகமாடுகிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.
ஆதிராவைப் பார்த்ததும் சாரதா கண்கள் கலங்கி, “வா,” என்று கண்களாலேயே அழைக்க, ஆதிராவும் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு அம்மாவின் அருகில் செல்லவும், மகளை அணைத்துக் கொண்டார் சாரதா.
“உனக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைக்காமலேயே போய் சேர்ந்திடுவேன்னு ரொம்பப் பயந்துட்டேன் ஆதி. நெஞ்சைப் பிடிச்சுட்டு விழுந்த நிமிஷம் தொடங்கி எனக்கு உன்னோட நினைப்புத்தான் அதிகமா இருந்துச்சு. முன்னாடி உனக்கு பதினைந்து நாள்ல நிச்சயதார்த்தம் செய்துவிடலாம்னு முடிவு செய்திருந்தேன். இப்போ நான் இருக்க நிலையில, அந்த நாள்ல உனக்குக் கல்யாணமே வச்சுவிடலாம் என்று முடிவு பண்ணிட்டேன்,” எனவும்,
எந்த உணர்வும் இல்லாமல், “சரி,” என்று கேட்டுக் கொண்டாள்.
“உனக்குச் சந்தோஷம் தானே?” என்று கேட்கவும்,
“ரொம்பச் சந்தோஷம்மா… உங்க ஆசைப்படி பதினைந்து நாள்ல என்ன, நாளைக்குக் கல்யாணம் பண்ணிக்கச் சொன்னாலும் பண்ணிக்கிறேன். என்னை நினைச்சு நீங்க உங்க உடம்பை கெடுத்துக்காதீங்க” என்று சொன்ன மகளை ஆதரவாகப் பார்த்தார்.
என்றும் அவர் சொல்லை அவள் மீறியதே இல்லை;
இன்றும் தன்னுடைய சொல்லை மீறாது தனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் மகளை நினைத்து ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும், இன்னொரு பக்கம் வேதனையாகவும் இருந்தது.
இவர்களின் பாசப் போராட்டத்தை எந்த உணர்வும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான் அன்புச்செல்வன்.
இந்துவும் அப்படியே.
சிருஷ்டியை அன்புச்செல்வனிடம் கொடுத்துவிட்டு வெளியே வந்த இந்து, அஜய்க்குப் போன் செய்தவள், “உண்மையாவே சாரதா பெரியம்மாவுக்கு உடம்பு முடியல அஜய். நாங்க நினைச்ச மாதிரியே அவங்களுக்கு உடல்நிலை சரியில்லாததைப் பயன்படுத்தி, பதினைந்து நாள்ல மேரேஜ் நடக்க ஏற்பாடு செய்துட்டாங்க. ஆதிராவும் சம்மதிச்சுட்டா,” எனவும், அந்தப் பக்கம் அமைதியாகக் கேட்டுக் கொண்டான் அஜய்.
“நீ அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம் அஜய்? உனக்காகத் தானே பேசிட்டு இருக்கேன்? ஆதிராவுக்கு உன் மேல விருப்பம் இருந்தது நிஜம். சாரதா பெரியம்மாதான் அவ மனசைக் கலைச்சிருக்காங்க. திலீபனை மேரேஜ் பண்ணிக்கிட்டா ஆதிரா, தன்னை கைப்பிடிச்சவனுக்காக அவ மனசை மாத்திக்கிட்டுச் சந்தோஷமா வாழ ஆரம்பிப்பா. ஆனா கடைசி வரைக்கும் மனசுக்குள்ள ஒரு குற்ற உணர்ச்சியோட தான் வாழ்ந்துட்டு இருப்பா.. நீ மட்டும் என்ன, ஆதிராவை மறந்துட்டு வேற ஒருத்தியை உன் வாழ்க்கையில் நுழைய விட்டுடுவியா?” என்று கேட்க,
‘முடியவே முடியாது’ என்று அஜய்யின் மனம் அலறியது அவனுக்கு மட்டும் தான் தெரியும்.
தன்னுடைய ஆதங்கத்தை, வேதனையை கொஞ்சமும் தன்னுடைய குரலில் வெளிப்படுத்தாமல் பேசினான்.
“வலுக்கட்டாயமா ஆதிராவை என் வாழ்க்கையோட இணைச்சுக்குறதுல எனக்கு விருப்பமில்லை அண்ணி. அவள் விருப்பப்படி செய்யட்டும். நீங்கதான் சொன்னீங்களே, திலீபனை மேரேஜ் பண்ணால் சந்தோஷமாத் தான் இருப்பான்னு? அப்படியே இருக்கட்டும்..
“என் வாழ்க்கையில் என்ன நடக்கணும்னு இருக்கோ, அது தான் நடக்கும். நானும் ஒரு நாள் மனசு மாறலாம். எனக்குப் பிடிச்ச பொண்ணைப் பார்க்கலாம். அவள் என் மனசைப் புரிஞ்சுகிட்டு என் கூடக் காதலோட சந்தோஷமா வாழ ஆரம்பிக்கலாம். எதுவும் நடக்கிறது சாத்தியம்தானே? காலம் எல்லா விதமான காயத்தையும் ஆற்றும் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கு..
“எனக்காக நீங்க யோசிச்சதுகூட எனக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கு அண்ணி. அப்புறம் மறக்காம இன்விடேஷன் அனுப்பி வையுங்க. நிச்சயம் அவளோட மேரேஜுக்கு வருவேன். அவள் எனக்கு இல்லை, வேற ஒருத்தனுக்குச் சொந்தமானவள்னு கண் முன்னால நான் பார்த்துட்டா, என்னோட மனசு நிதர்சனத்தை ஏத்துக்க ஆரம்பிச்சுடும். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு,” என்று நிதானமான குரலில் சொல்ல, இப்படி ஒருவனை விட்டுவிட்டு எதற்காகத் திலீபனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கோபமாகத்தான் வந்தது இந்துவிற்கு.
திலீபனும் மோசமானவன் கிடையாது.
ஆனால், அஜய் அளவிற்கு ஆதிராவைத் திலீப்பால் காதலிக்கவே முடியாது என்பதுதான் இந்துவின் எண்ணம்.
அதை ஆதிரா அல்லவா புரிந்துகொள்ள வேண்டும்?
பெருமூச்சு விட்டு, நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டு, இந்து ஆதிராவின் திருமண ஏற்பாட்டைச் செய்வதற்குத் தன்னால் ஆன உதவியைச் செய்ய ஆரம்பித்துவிட்டாள்.
வேறு என்ன செய்ய முடியும் அவளால்?
இந்துவுடன் அஜய் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவனுடைய இரண்டு மாமாக்களும் உடன் இருந்தனர்.
அவர்களிடம் மறைத்துப் பேசுவதற்கு ஒன்றுமில்லையே.
திவ்யாவின் அப்பா (இளவரசன்), “உன்னை அந்தப் பொண்ணு நம்ப வச்சு ஏமாத்திட்டா. உனக்கு கோபம் வரலையா அஜய்?” என்று கேட்க,
“அவங்க அம்மாக்கு என்னைப் பிடிக்கவில்லை என்று ஆரம்பத்திலேயே புரிஞ்சுது மாமா. அவங்களுக்காக ‘என்னை வேண்டாம்’ என்று சொல்லிட்டா. வேற பெரிய காரணம் இருக்கதா தெரியல. இப்போ அவங்க அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வேற வந்திருக்கு. இதுக்கு மேல நான் என்ன சொன்னாலும் அவ கேட்கப் போறதில்ல. அவ மனநிலையும் மாறப்போவதில்ல. அப்படி கட்டாயப்படுத்தி என்னோட வாழ வச்சாலும் அந்த வாழ்க்கை கடைசி வரைக்கும் நிலைக்காது மாமா,” என்று சித்தாந்தம் பேச, அவருக்கு மருமகனை நினைத்துக் கவலை ஆகிவிட்டது.
“அந்தப் பொண்ணுக்கு முன்னாடி, நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன? நீ என்னோட பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்ல மாட்டேன். உடனடியா உனக்கு வேற பொண்ணு கூடப் பார்க்கலாம். என்ன சொல்ற?” என்று கேட்க,
“நீங்க எனக்காக யோசிச்சதே போதும் மாமா. அவளைப் பழிவாங்குறதுக்காக, உடனடியா இன்னொரு பொண்ணை என் வாழ்க்கையில கொண்டுவருவது சரியா வராது. அது என்னை நம்பி வரப் பொண்ணுக்குச் செய்ற துரோகமா இருக்கும். நான் மனசு மாறின பின்னாடி உங்ககிட்ட சொல்றேன். அப்ப பார்த்துக்கலாம்,” என்று நிதானமாகச் சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட,
திவ்யாவின் அப்பா வருத்தமாய் தம்பியிடம், “இவனை இப்படியே விட்டா சரி வராது. மனசுக்குள்ளேயே எல்லாத்தையும் போட்டு அழுத்தி வச்சிட்டு கஷ்டப்படுவான்,” எனவும்,
“நாமளும் அவன் வயசைக் கடந்து வந்தவங்க தானே அண்ணா? இன்னும் கொஞ்சம் வருஷம் போனா அவன் மனசு மாறி இன்னொரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிட்டு, வருஷம் முடியறதுக்குள்ள ஒரு குழந்தையைப் பெத்துக்கவும் செய்வான். இதுதான் இயற்கை. நீங்க அவனை நினைச்சுக் கவலைப்படுவதை விடுங்க,” என்று சத்யவேந்த் சொல்ல, தம்பியை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவர்,வேலையைப் பார்க்க சென்றுவிட்டார்.
சரியாக இரண்டு நாட்கள் கழித்து அஜய், ஆதிராவின் அம்மா சாரதா அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்குச் செல்ல, அங்கு அவன் எதிர்பார்த்தபடியே காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருந்தது.
அங்கு அவனை எதிர்பார்த்திராத அன்பு செல்வன் “உனக்கும் சந்தேகம் இருந்ததா?” என்று கேட்க,
“ஆம்,” என்று தலையாட்டியவன்,
“ஒரு போலீஸ்காரரா இருந்துட்டு, வீட்ல என்ன நடக்குதுன்னு கண்காணிக்காமல் விட்டது சரியா அண்ணா?” என்று அவனிடம் கேட்கவும்,
“என்னோட அக்கா வாழ்க்கையில என்ன நடக்குதுன்னு கண்காணிக்க எனக்குப் பிடிக்கல அஜய். எனக்கு அது அவசியம் என்றும் தோணல,” எனவும், அன்புச்செல்வனின் கூற்றும் சரியென்று பட, அவனிடம் தலையசைத்துவிட்டு, சாரதா அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கதவைத் தட்டாமலேயே உள்ளே நுழைந்தான்.
அங்கு சத்யவேந்த் ஒரு சேரில் அமர்ந்தபடி சாரதாவைப் பார்த்துக் கொண்டிருந்தவர், அஜய் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் திரும்பிப் பார்க்க, அங்கு அஜய்யை அவர் எதிர்பார்க்கவில்லை என்பதை அவரது முகம் அப்பட்டமாகக் காட்டிக் கொடுத்தது.
“சோ, ஆதிராவோட அப்பா நீங்க தான்!” எனவும்,
“ஆமாம். அதனால என்ன இப்போ? என் வீட்ல இருக்கவங்க கிட்ட உண்மையைச் சொல்லப் போறியா? தாராளமா சொல்லு. எல்லாருக்குமே தெரியும். நான் ஃபாரின்ல படிக்கும்போது சாரதா கூடப் பழகுனதும் தெரியும். எனக்கு ஒரு பொண்ணு இருக்குதுன்னும் தெரியும்..எல்லாம் தெரிஞ்சுதான் நளினி என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா,” என்று கொஞ்சமும் அசராமல் பதில் சொல்ல,
“உங்க ரெண்டு பசங்களுக்குத் தெரியுமா மாமா?” எனவும், அவர் பதில் சொல்வதற்கு முன் சாரதா,
“உனக்கு என்ன வேணும்? நீ எதுக்கு இங்க வந்த?” என்று கோபமாகக் கேட்க,
“ஹார்ட் அட்டாக் வந்தும் உங்க எனர்ஜி லெவல் கொஞ்சம்கூடக் குறையவே இல்லை அத்தை. உங்களோட முடிஞ்சு போன வாழ்க்கைக்காக நீங்க என்னோட வாழ்க்கையை கேள்விக்குறியாக்க நினைத்தது சரியா தப்பா? இப்ப நீங்க பதில் சொல்லியே ஆகணும்! இல்லைனா என்ன செய்வேன் தெரியுமா..
“இதோ என்னோட மாமா, அவரோட பர்சனல் விஷயங்கள் சிலவற்றை வீட்ல இருக்க இளைய தலைமுறைக்குத் தெரியாம மறைச்சு வச்சிருக்கார் தெரியுமா? அதை எல்லாருக்கும் தெரியும் படி செய்திடுவேன். அவரோட திருமண வாழ்க்கைக்கு எந்தப் பாதிப்பும் வந்துடக் கூடாதுன்னு தான் ஆதிரா என் வாழ்க்கையை விட்டு விலக நினைச்சான்னு ஒரு கெஸ் இருக்கு. எதை நினைச்சு நீங்க பயந்தீங்களோ அதையெல்லாம் நான் நடத்திக் காட்டிடுவேன்..
“அப்புறம் நளினி அத்தை அவங்க வீட்டுக்குப் போயிடுவாங்க. ஏற்கனவே அவங்க குணத்துல ராட்சசின்னு எனக்கு நல்லாவே தெரியும்,” எனவும்,
கண்களை மூடித் திறந்த சத்யவேந், “சாரதாக்கும், ஆதிரா உன்னை விட்டுப் பிரிஞ்சதுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. நான்தான் என் பொண்ணுக்கு நீ சரியா வரமாட்டன்னு சொன்னேன். ஆதிராவுமபுரிஞ்சுகிட்டு விலகிப் போயிட்டா. அவளை நீ விட்டுடு,” என,
“திடீர்னு அப்பா பொண்ணு பாசம் எப்படி வந்துச்சு மாமா? புரியலையே,” என்று ராகமாக இழுத்தவன்,
“ஆதிரா கிட்ட கேட்டுக்கிறேன். அதுவரைக்கும் நீங்க உங்க ரொமான்ஸைத் தொடருங்க,” என்று கேலியாகச் சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு அஜய் சென்றதும், சத்யவேந் கண்களாலேயே சாரதாவைச் சுட்டு எரிக்காத குறைதான்.
சத்யவேந்தனின் வாழ்க்கையை மொத்தமாகத் திசை மாற்றி, நிம்மதி இல்லாமல் செய்த மொத்தப் பெருமையும் சாரதாவை மட்டுமே சேரும்.