அத்தியாயம் 14
சுற்றுலாவிற்கு வந்த சந்தோஷத்துடன் சென்னையில் உள்ள முக்கிய இடங்களைப் பார்த்துக் கொண்டிருந்த இந்துவை சந்தேகப் பார்வையுடன் கவனித்துக் கொண்டே இருந்தாள் ஆதிரா.
அஜய்க்கு உதவி புரியும் விதமாக அன்புச்செல்வன், இந்துவை அனுப்பி வைத்திருக்கிறான் என்று தெளிவாகவே புரிந்தது.
அதை ஏன் தன்னிடம் வெளிப்படுத்தாமல், ‘சுற்றுலாவிற்கு வந்தது போல’ நடித்துக் கொண்டு இருக்கிறாள் என்பதுதான் ஆதிராவின் கேள்வியே.
அதைக் கேட்டால், “நீ எதுக்கு அஜய் வீட்ல இருக்க? நீதான் திலீபனைக் காதலிக்கிற. அவனை வேண்டாம்னு முடிவு பண்ணிட்டு அஜயையே மறுபடியும் காதலிக்க ஆரம்பிச்சுட்டியா? உன்னோட மனசு ஏன் அலைபாயுது? யாராவது ஒருத்தனைக் காதலி. இவன் இல்லைனா அவன், அவன் இல்லைனா இவன்… இப்படி இருக்கிறது உன்னோட வாழ்க்கைக்கு நல்லதில்ல,” என்று பக்கம் பக்கமாக அறிவுரை கூற ஆரம்பித்துவிடுகிறாள்.
ஒரு முறை அல்ல, இருமுறை அல்ல, கடந்த நான்கு நாட்களில் ஐந்து முறை கூறிவிட்டாள்.
ஆதிராவே எரிச்சலுடன், “எனக்கு என்ன தேவைன்னு தெரியும் அக்கா. நீங்க தேவையில்லாத பேசாதீங்க,” என்று சொல்லிவிட,
“ஏதோ என் மனசுல பட்டதைச் சொன்னேன். நீ கோவிச்சுக்காத,” என்று அவளது கோபத்தை கொஞ்சம்கூடக் கண்டுகொள்ளாமல் இயல்பாகக் கடந்துவிட்டு, மறுபடியும் அவளுடன் பேச ஆரம்பித்துவிட, தலையைப் பிடித்துக் கொள்ளாத குறைதான் ஆதிராவிற்கு.
அஜய் தான், தன்னை காயப்படுத்துவான் என்று நினைத்துக் கொண்டிருக்க, இந்து அவனது வேலையைச் சரியாகச் செய்து கொண்டிருந்தாள்.
திலீபன், அவனது வீட்டிற்குச் சென்று விட்டான் என்ற தகவல் அவளுக்கு கிடைத்துவிட்டது.
வீட்டில் அடைத்து வைப்பேன் என்று சொன்னவன், சுதந்திரமாகத் தன்னை உலாவ விட்டிருக்கிறான்.
தன்னுடைய துணைக்கு அக்காவையும், சிருஷ்டியையும் ஏற்பாடு செய்திருக்கிறான்.
‘இன்னும் என்னென்ன செய்து இருக்கிறானோ?’ என்று
ஆயாசமாக இருந்தது.
‘வேண்டாம் என்று சொன்னால் விட்டு விட்டுப் போக வேண்டியதுதானே?’ என்று கடுப்பாகவும் இருந்தது.
மூன்று வருடம் காதலித்துவிட்டு, தனக்காக நான்கு வருடங்கள் காத்திருக்கவும் செய்துவிட்டு, தான் பேசுவது அதிகப்படி என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்.
அதற்காக அவனை ஏற்றுக் கொள்வது சாத்தியமில்லாத ஒன்று எனும் பொழுது, எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
புரிந்துகொள்ள மறுத்துத் தன்னைக் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறானே என்று கோபம் தான் வந்தது.
அதிலும் நான்கு நாட்களாக அவன் வரவும் இல்லை, போன் செய்யவும் இல்லை,
எந்தவிதமான தொந்தரவும் செய்ய மனம் இல்லாதவன், எதற்காகத் தன்னை இங்கே அழைக்க வேண்டும்?
‘இன்னும் ஆறு நாட்களை எப்படி கடக்கப் போகிறோம்?’ என்று நினைக்க நினைக்க பைத்தியமே பிடித்து விடும் போல இருந்தது.
அவள் மீதி இருந்த ஆறு நாட்களையும் மிகுந்த குழப்பத்துடன் தான் கடத்தினாள்.
காத்திருப்பு எவ்வளவு பெரிய வெறுப்பைத் தரும் என்பதை அவள் புரிந்து கொண்ட நாட்கள் அவை.
சரியாகப் பதினொன்றாவது நாள் அஜய் அந்த வீட்டிற்கு வந்தவன், “ஊர் சுத்திப் பார்த்தாச்சா அண்ணி?” என்று இந்துவிடம் தான் சிரித்தபடி கேட்டான்.
அஜய்க்கும் ,நான் இங்கு வந்ததற்கும் சம்பந்தமே இல்லை’ என்று ஆதிராவிடம் சொன்ன இந்து, தான் பேசியதை மறந்துவிட்டாள் போல.
அஜய்யிடம், “ரொம்ப வருஷமா சென்னைக்கு வரணும்னு நினைச்சிட்டே இருந்தேன். முடியல. இப்போ உன்னால சாத்தியமாகி இருக்கு. மதுரையில் இருக்கும் கோவிலுக்குப் போகணும்னு ஆசை. அங்கேயும் கூட்டிட்டுப் போறியா?” என்று கேட்க,
ஆதிரா”அக்கா, இதெல்லாம் நீங்க மாமாகிட்ட கேட்கணும். இவன்கிட்ட எதுக்கு கேட்டுட்டு இருக்கீங்க?” என்று இடைமறிக்க,
“யார்கிட்ட கேட்டா கூட்டிட்டுப் போவாங்களோ அவங்க கிட்டதான் கேட்க முடியும். உன்னோட மாமா, எந்நேரமும் காக்கி சட்டை போட்டுக்கிட்டு, விறைப்பா’இந்த மொத்த உலகமும் அவரோட கண்ட்ரோல்ல இருக்க மாதிரி’ லீவு கூடப் போட மாட்டார். அவரை நம்பினால் கடைசி வரைக்கும் நான் நாலு சுவத்துக்குள்ள அடைந்து கிடக்க வேண்டியதுதான்,” என்று புலம்பியவள்,
“நீ சொல்லு அஜய். நாங்க மதுரைக்கும் போயிட்டு, அப்படியே கன்னியாகுமரி எல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு, அதுக்கப்புறம் பெங்களூர் போகலாம் தானே? நீ கூட எங்களோட வரலாம், எங்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை,” என்று அவர்களோடு அஜயையும் அழைக்கப் பார்க்க,
ஆதிராவின் முகத்தில் தெரிந்த அதிருப்தியை எந்த உணர்வும் இல்லாமல் பார்த்தவன், “கொஞ்சம் வேலை இருக்குக்கா. அதெல்லாம் முடிச்சிட்டு இன்னொரு நாள் உங்களோட வரேன். இப்போ நீங்க மட்டும் போயிட்டு வாங்க. எல்லா ஏற்பாடும் பண்ணிடறேன். இன்னைக்கு நீங்க கிளம்பத் தயாரா இருந்தா உடனே டிக்கெட் ஏற்பாடு பண்ணிட்டேன்,” எனவும்,
“இல்ல, நாளைக்கு போறோம். உங்க அண்ணாகிட்டயும் சொல்லணும். அவர் ஏற்கனவே பத்து நாளா நாங்க இல்லாம கோபத்தில் இருக்கார். அவரை சமாதானம் பண்ணிட்டு நாளைக்கு நாங்க மதுரைக்குக் கிளம்புறோம்,” எனவும்,
“உங்க விருப்பம் அக்கா,” என்றவன்,
ஆதிராவிடம், “இனி இங்க இருக்கணும் என்ற கட்டுப்பாடு அல்ல. நீ எப்ப வேணா கிளம்பலாம்,” என்று விட்டு, இந்துவின் பெண் குழந்தையைக் கொஞ்சிவிட்டுச் சென்று விட்டான்.
பத்து நாட்களாகத் தன்னை என்ன காரணத்திற்காக இங்கேயே இருக்கச் சொன்னான் என்று குழம்பிக் கொண்டிருந்தவள், தன்னை ஏதும் செய்யாமல், ‘உன் விருப்பப்படி’ என்பது போல விட்டு விட்டது கூட ஒரு விதத்தில் ஆதிராவிற்கு எரிச்சலைத்தான் தந்தது.
தன்னுடைய குற்ற உணர்வை அதிகப்படுத்தி விட்டுச் சென்றிருக்கிறான் என்று மட்டும் நன்றாகப் புரிந்தது.
“அக்கா, நீங்க வேணா சுத்திப் பார்த்துட்டு வாங்க. நான் நாளைக்கு புறப்படுறேன். இன்னும் ஒரு வாரத்துல நான் மறுபடியும் கலிபோர்னியா போக போறேன் ,” எனவும்,
“நீ வேலையை விட்டுட்டதாக தான் அஜய் சொன்னான். அப்போ வேலைய விடலையா..அப்புறம் உனக்கும் திலீபனுக்கும் இன்னும் பதினைந்து நாள்ல நிச்சயதார்த்தம் ஏற்பாடு பண்ணி இருக்கோம்,” என்று வேறு பெரிய இடியை ஆதிராவின் தலையில் இறக்கினாள்.
“என்னைக் கேட்காமல் எப்படிக்கா முடிவு செய்றீங்க?” என்று கோபப்பட,
“என் மேல கோபப்பட்டு ஒரு புண்ணியமும் இல்லை.. உன்னோட அம்மா தான் அவசரப்படுறாங்க. ஏன்னு தெரியல. நீ அஜய் கூட இருக்கிறது அவங்களுக்குத் தெரியாது. அஜய் கூட பத்து நாள் இருந்ததை சொல்லாமல், ஏன் திலீபன் கூட உனக்கு நிச்சயதார்த்தம் வைக்க அவசரப்படறாங்கன்னு அவங்க கிட்டயே கேட்டுக்கோ,” எனவும், தன்னுடைய அம்மாவிற்குத் தெரியக்கூடாது என்பதற்காக இந்துவுடன் ஊர் சுற்றிப் பார்க்க வந்தது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறான் என்று புரிந்தது.
கண்ணை மூடி ஆயாசமாக அமர்ந்து விட்டவள், மனம் மட்டும் கொதித்துக் கொண்டே இருந்தது.
யார் யாரோ தன் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்க, தான் அவர்களின் கையில் பொம்மையாக ஆடிக்கொண்டிருப்பது பிடித்து, கண்களில் கண்ணீரும் துளிர்த்தது.
அதை இந்து பார்க்கும் முன்னர் துடைத்துக் கொண்டாள்.
மறுநாள் இருவரும் மதுரைக்குக் கிளம்ப முடிவு செய்து காத்திருக்க, சரியாகப் விமானத்தில் ஏறுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே ஆதிராவிற்கு ஃபோன் வந்துவிட்டது.
அன்புச்செல்வன் தான் அழைத்திருந்தான்.
“சாரதாக்காவை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கோம். மைல்ட் அட்டாக் என்று சொல்லி இருக்காங்க,” எனவும்,
‘உண்மையா பொய்யா?’ என்ற சந்தேகம் இருந்தாலும், தன் சந்தேகத்தைப் புறந்தள்ளிவிட்டு, இந்துவை அழைத்துக் கொண்டு பெங்களூர் புறப்பட்டு விட்டாள் ஆதிரா.