அத்தியாயம் 13
தனக்காகக் காத்திருந்த ஆதிராவை, தன்னுடைய அறையில் இருந்த கண்காணிப்புக் கேமரா வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தான் அஜய்.
அவளிடம் முன்பு போல அலைபாயும் கண்கள் இல்லை, பார்வையில் தீர்க்கம் நிறைந்திருந்தது.
கெஸ்ட் ஹவுஸுக்கு அவளை வரவழைத்திருக்கிறோம் என்ற பயம் கொஞ்சம்கூட அவளது கண்களில் தெரியவில்லை.
அவளது காதலனைக் காணோம் என்ற பதட்டம் இல்லை.
தன்னைக் காதலிக்கிறேன் என்று நம்பிய ஜீவனை ஏமாற்றிவிட்டுச் சென்றதற்காக அவளிடம் குற்ற உணர்ச்சியும் காணவில்லை.
கல்லூரி சமயங்களில்கூட ஆதிராவின் அகத்தில் இருப்பதை முகத்தில் படிக்க முடியாததுதான்.
ஆனால், கண்களில் காதல் அப்பட்டமாகத் தெரியும்.
அவன் மேல் கொண்ட மயக்கத்தையும் சில நேரம் கட்டுப்படுத்திக் கொள்ளாமல் வெளிப்படுத்தி விடுவாள்.
இன்றோ எந்த உணர்வையும் காட்டாமல், சுவற்றில் என்னதான் தெரிகிறதோ, வெகு நேரமாக அதையே பார்த்துக் கொண்டிருக்க, அஜய்க்கே சந்தேகம் வந்துவிட்டது.
சுவற்றில் அப்படி என்னதான் இருக்கிறது? ஃப்ரேம் செய்த போட்டோ கூட அங்கு மாற்றப்படவில்லையே என்று அந்த அறையை ஜூம் செய்து பார்த்துவிட்டு, ‘ஒன்றும் இல்லை’ என்றவுடன் உதட்டைச் சுழித்துவிட்டு, அவளைப் பார்த்தபடி அமர்ந்து விட்டான்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாகக் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கிறாள்.
அவளை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் நிறைய இருக்கிறது.
‘தனக்காகவே தன்னை பார்க்க வந்திருந்தால், அவள் வந்த நொடியிலே ஓடிச் சென்று அணைத்திருப்போம்’ என்ற நினைவு வேறு அஜய்யைக் கோபப்படுத்தியது.
தன்னைத் தூர நிறுத்தி விட்டாளே, தன்னை ஏமாற்றி விட்டாளே என்று நினைக்க நினைக்க மனம் ஆறவே இல்லை.
இரண்டு மணி நேரங்கள் அவளைக் காக்க வைத்ததுகூட, தன்னை நிதானப்படுத்திக் கொள்ள அவனுக்கு நேரம் தேவைப்பட்டதால்தான்.
அவள் முன்பு கெஞ்சி விடுவோமோ என்ற பயம் அவனிடம் நிறையவே இருந்தது.
காதலியிடம் கெஞ்சலாம்; காதலுக்காகக் கெஞ்சக் கூடாது அல்லவா?
அவளைப் போலவே தானும் முகத்தில் எந்த உணர்வையும் காட்ட மாட்டோம் என்று நம்பிக்கை பிறந்த பின்னர்தான் அறையை விட்டு வெளியே வந்தான்.
ஹாலில் இருந்த அவளிடம், “சோ?” என்று கேட்டபடி அவள் முன்னே வந்து நிற்க, நிமிர்ந்து பார்த்த அவளின் பார்வையில் என்ன இருந்தது என்பதைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை அவனால்.
அவளின் தீர்க்கமான பார்வையில் அஜய்யின் மொத்தப் பொறுமையும் பறந்து போய்விட்டது.
“செய்வதெல்லாம் செய்துட்டு என்னடி திமிரா பார்க்கிற?” என்று தன்னுடைய கைகளில் இருந்த சட்டை மடிப்பை மடித்துக் கொண்டே கேட்டபடி அவளை மிகவும் நெருங்கி நிற்க,
“பொறுக்கித்தனமா நடந்துக்கத் தான் என்னை வர சொன்னேன்னு நினைச்சேன். என்னோட யூகம் சரியாகிடுச்சு,” எனவும், அவளது கைகளைப் பிடித்து முறுக்கினான்.
“விடுடா! விடுடா! என்னை விட்டுத் தொலை! சொல்றேன்ல, கை வலிக்குது!” என்று கோபமாகச் சொன்னவளின் குரல் அழுகைக்கு மாறவும் தான் அவளை விட்டான்.
வலித்த கைகளை பிடித்துக் கொண்டே, தன்னுடைய அழுகையை அடக்கிக் கொண்டு அவனைப் பார்க்க,
“யாருடி பொறுக்கி? தப்பெல்லாம் நீ செய்துட்டு, உன்னை நல்லவளா காட்டுவதற்காக என்னை பொறுக்கி ஆக்கிட்டியே! ஒரு பொறுக்கி என்ன பண்ணுவான் தெரியுமா? ச்சீ! உனக்காகக் கூட நான் என்னோட தரத்தைக் குறைத்துக் கொள்ளக் கூடாது என்று நினைக்கிறேன். வெளியே போடி!” என்று அவளைத் தள்ளிவிட, கீழே விழாமல் தன்னைச் சுதாரித்துக் கொண்டவள்,
“திலீபன்?” என்று கேள்வியோடு நிறுத்தினாள்.
“ஓ.. சாரி, மறந்துட்டேன். அவனுக்காகத்தான் நீ இங்கே வந்த, இல்லை? அதை மறந்துட்டு உன்னைப் போக சொல்றேன், பார்! என்னைக் காதலிச்சேன்னு நீ எப்படியும் அவன் கிட்ட சொல்லி இருப்ப. உண்மையை மறைத்துப் பழகும் பழக்கம் உனக்கு இல்லைன்னு எனக்கு நல்லாவே தெரியும்.
“அதனால, ஒரு பத்து நாள் நீ என்னோட இருந்துட்டுப் போ. அதுக்கு அப்புறமும் உன்னை அவன் ஏத்துக்கிறானா பார்ப்போம். உடனே என்னை பொறுக்கி மாதிரி நீ நினைச்சிடக் கூடாது. பத்து நாளும் இந்த வீட்ல சேஃப்-ஆ இருந்துக்கோ. உன்னைத் தொட்டு அந்தக் பாவத்தை எங்கேயும் போய் என்னால கழுவ முடியாது. வீணா கற்பனை பண்றதை விட்டுட்டு, பத்து நாள் இங்க என்ஜாய் பண்ணிட்டுப் போ,” எனவும்,
“முடியாதுன்னு சொன்னா?” என்று மீண்டும் கேள்வியாக நிறுத்த,
“உன்னையும் உன் காதலனையோ எதுவும் செய்ய மாட்டேன். என்னை நம்ப வைக்கிறதுக்காக நீ ஒருத்தரைத் தேர்ந்தெடுத்த பாத்தியா, அவர் நல்ல மனுஷன்தான். நீ சொல்றத தான் செய்தார். இருந்தாலும், அவரால்தான் நான் ஏமாந்து நிற்கிறேன் என்று மனசுக்குள்ள உறுத்திட்டே இருக்கு. அதனால, அவரோட வேலையை இல்லாமல் பண்ணிடுவேன். மீடியா முன்னாடி அசிங்கப்பட்டு முகத்தை வெளியில் கூடக் காட்ட முடியாமல், தர்ம சங்கடமான நிலைமைக்கு அவர் ஆளாகி, அப்புறம்தான் வேலையை விட்டுத் தூக்குவேன். ‘என்னால முடியாது’ன்னு நீ அலட்சியமா நினைச்சா, அன்புச்செல்வன் சாரோட அழிவை நீ பார்க்க வேண்டி வரும்,” என அவன் மிரட்ட, அலட்சியப்படுத்தத்தான் நினைத்தாள் ஆதிரா.
அவளது பார்வையிலேயே உணர்ந்தவன், “உன்னோட மாமா நியாயமானவர்தான், நேர்மையானவர் தான். யார்கிட்டயும் பணம் வாங்க மாட்டார் தான். சில நேரம் வேலைக்காகத் தப்பு பண்ணித்தான் ஆகணும். அந்த மாதிரி அவரும் சின்னச் சின்னத் தப்பு செய்திருக்கிறார். அதை மீடியாவுக்குக் கொடுத்தால் போதும். ‘செய்ய மாட்டேன்’னு நீ நினைச்சா நான் என்ன பண்ண முடியும்?” என்று நக்கலாகச் சொல்ல, அதற்குப் பின்புதான் ஆதிராவிற்கு அஜய் நினைத்து பயம் ஏற்பட்டது.
அதுவரை அவனை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.
“என்னால உன் கூட, அதாவது இந்த வீட்ல பத்து நாள் இருக்க முடியாது. நான் திலீபனை லவ் பண்றதுதானே உனக்குப் பிரச்சனை? அவனை பிரேக்கப் பண்ணிடறேன்,” எனவும், அவளை எவ்வளவு கீழ்த்தரமாகப் பார்க்க முடியுமோ அப்படிப் பார்த்தான்.
“காதலிக்கிறதும் கழட்டி விடுறதும் உனக்கு ரொம்ப ஈஸியா போச்சு இல்லை? அதுக்காகவே நான் உன்னை இந்த வீட்டை விட்டு அனுப்பப் போறதில்லை,” என்றவன் தன்னுடைய கார் சாவியை எடுத்துக்கொண்டு வாசலை நோக்கி நடக்க,
“நீ செய்யறது சரியில்லை அஜய். நான் உன்கிட்ட தெளிவாச் சொல்லித்தான் எனக்கான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக்கிட்டேன். உன்னைப் பார்க்காத நேரத்தில் எனக்கு வேற யாரயாவது பிடிச்சிருந்தால், அவனை என்னோட வாழ்க்கை துணையா ஏத்துக்குவேன்னு தெளிவாச் சொன்னதுல என்ன தப்பு இருக்கு? இந்த நாலு வருஷத்துல நீயும் உனக்கு ஏத்த பொண்ணைப் பார்த்து, பிடிச்சு, ‘அவள்தான் உன்னோட வாழ்க்கை துணை’ன்னு என்கிட்ட சொல்லி இருந்தா, நானும் நாகரீகமாத்தான் உன்னை விட்டு விலகி நின்னு இருப்பேன். உன்னைப் போல, ‘என் கூட பத்து நாள் இரு, உன்னோட லவ்வர் என்ன சொல்றான்னு பார்ப்போம்’னு சீப்பா நடந்துக்க மாட்டேன்,” என்று அவனுக்கு எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க நினைத்தாள்.
அவளைத் திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு, பதிலே சொல்லாமல் கிளம்பி விட்டான்.
“எங்கே போற? நான் சொல்றது உனக்குப் புரியலையா?” என்று அவன் பின்னேயே சென்று புரிய வைக்கப் போராட,
காருக்குள் ஏறியவன், “நீ இந்தக் கெஸ்ட் ஹவுஸை தாண்டி எங்கேயும் போக முடியாது. தாராளமா நீ உன்னோட போலீஸ் மாமனுக்கு ஃபோன் பண்ணி உன்னைக் காப்பாற்றச் சொல்லு. போலீஸ் போர்ஸ் வந்தாலும் உன்னை இங்கிருந்து கூட்டிட்டுப் போக முடியாது. அப்புறம் என்னோட வரணும்னு நினைச்சா, நீ தாராளமா இப்பவே வரலாம். என் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போவேன்,” என்றும் சொல்ல, அவள் காரை விட்டு விலகி நின்று கொள்ளவும், வேதனையும் வெறுப்பும் கோபமும் சேர்ந்து கொள்ள, காரை அதிவேகமாக ஓட்டிக்கொண்டு சென்று விட்டான்.
ஆதிராவிற்குத் தான் என்ன செய்வதென்று புரியவில்லை.
தன்னைத் தண்டிப்பதற்காக ஏதேனும் செய்வான் என்று தெரியும்.
அதற்காகப் பத்து நாள் காவலில் வைத்து விட்டுப் போவான் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
ஒரே ஒரு நல்ல விஷயமாய், அவனது தரத்தைக் குறைத்துக் கொள்ளும் விதமாய் தன்னோடு தங்குவதற்கோ, சல்லாபம் பண்ணுவதற்கோ கொஞ்சமும் அவன் நினைக்கவில்லை.
‘திலீபன் எப்படி இருக்கிறானோ?’ என்ற கவலை மட்டுமே மனதை ஆக்கிரமித்திருக்க, உடனடியாக அஜய்யின் போன் நம்பருக்கு அழைக்க,
“என்னோட வரேன்னு முடிவு பண்ணிட்டியா?” என்று அழைப்பை ஏற்றவுடன் கேட்டான்.
“அதான் பத்து நாள் நான் இந்த வீட்டிலேயே இருக்கப் போறேன்னு முடிவு ஆகிடுச்சுல்ல. திலீபனை ரிலீஸ் பண்ணு. அவனுக்கு நாளைக்கு முக்கியமான ப்ராஜெக்ட் ரிவ்யூ இருக்கு. அதைப் பண்ணலைனா, அவனை வேலையை விட்டுத் தூக்கிடுவாங்க. பல வருஷமா கஷ்டப்பட்டுப் படிச்சு வேலைக்குப் போனது வீணா போயிடும். ப்ளீஸ், எனக்காக இந்த உதவி மட்டும் பண்ணு,” என அவள் கெஞ்ச,
தாடையைத் தடவி யோசித்தவன், “சரி, அவனை விட்டுடுறேன்,” என்று உடனடியாகச் சம்மதம் சொல்லவும்,
அவள்
“தேங்க்ஸ்!” என்று சொல்ல,
“இன்னும் நீ எனக்கு நிறைய நன்றி சொல்ல வேண்டி இருக்கும். கொஞ்ச நேரத்துல உனக்குக் கம்பெனி கொடுக்க இன்னொருத்தர் வந்துட்டு இருக்காங்க. யாருன்னு யோசிச்சுக்கிட்டே இரு,” என்று விட்டுப் போனை அணைத்து விட்டான்.
அவள் திரும்ப அழைத்தபோதும் எடுக்கவில்லை.
சரியாக நான்கு மணி நேரம் கடந்த பின்பு காரில் இருந்து இந்து இறங்கினாள்.
“நீங்க… நீங்க இங்க எப்படி வந்தீங்க அக்கா?” என்று, கையில் இரண்டு வயது சிருஷ்டியோடு வந்தவளைப் பார்த்துக் கேட்க,
“நீ பத்து நாள் இங்கதான் இருக்கப் போறேன்னு உன்னோட மாமா சொன்னார். அவருக்கு நீ தனியா இருக்கறது பிடிக்கல. அதான் உன்னோட நானும் பத்து நாள் இங்கே இருந்து என்ஜாய் பண்ணிட்டுப் போலாம்னு வந்தேன். நிறைய இடத்தைச் சுத்தி பார்க்கலாம். பெங்களூர்ல இருந்தே போர் அடிச்சிருச்சு,” என்று சொல்ல, தன்னுடைய மாமாவும், இந்துவும் அஜய்யோடு சேர்ந்து கொண்டு தன்னிடம் விளையாடிப் பார்க்கிறார்களோ என்று சந்தேகமே வந்துவிட்டது ஆதிராவிற்கு.
அதைப் நேரடியாக இந்துவிடமும் கேட்டும் பிரயோஜனமில்லை.
“இது அஜய் உடைய வீடா?” என்று ஆச்சரியமாகக் கேட்டவள்,
“நீ எதுக்கு இங்க வந்து இருக்க?” என்று துருவித் துருவிக் கேட்டு, ‘ஏன் கேட்டோம்’ என்று நினைக்க வைத்துவிட்டாள் இந்து.