ஆதிரா எங்கே இருக்கிறாள் என்பதைத் தேட ஆரம்பித்து பதினைந்து நாட்கள் ஆகிவிட்டது.
அதுவே அஜய்யின் கோபத்தை நாளுக்கு நாள் தூண்டிக் கொண்டே இருந்தது.
நேருக்கு நேர் நின்று பிரச்சனையைப் பேசித் தீர்க்காமல், ஓடி ஒளிந்து கொண்டாளே என்ற எண்ணமே ஆதிராவின் மீது அவனுக்குக் எரிச்சலை உண்டாக்கியது.
அவளுக்கு விபரீதமாக ஏதாவது நடந்திருக்கக்கூடும் என்ற பதட்டம் உள்ளுக்குள் இருந்தாலு ம், அதை நெஞ்சுக்குள் பூட்டி அடக்கிக் கொண்டிருந்தான் அஜய்.
அநியாயத்திற்கு ஆதிராவை நம்பி விட்டோம் என்பதே அவனின் கோபத்திற்கான முக்கிய காரணமாக இருந்தது.
தன்னிடம் முறையாக விடைபெறாத ஆதிராவை ஏன் நம்பினோம்?
ஏன் அவளைத் தேடாமல் விட்டோம்?
ஏன் பேசாமல் விட்டோம்? என்று தினம் தினம் தன்னிடமே கேட்டுக் கொண்டிருந்தான்.
அன்புச்செல்வன் மீது வைத்திருந்த மதிப்பும, மரியாதையும், அவர் சொன்னதை தீர ஆராயாமல் நம்ப வைத்தது என்று அஜய்க்குத் தெரியும்.
ஆனாலும், ஒரு முறையாவது போன் செய்து ஆதிராவிடம் பேசியிருக்க வேண்டும்.
முட்டாள்தனமாக நான்கு வருடங்களை வீணடித்து விட்டேன்.
அவளும் ‘வேறு ஒருவனைப் பிடித்திருக்கிறது’ என்று தைரியமாகச் சொல்வதற்கு நானே ஒரு காரணமாகி விட்டேன் என்ற எண்ணம் அவனை நிம்மதியாய் இருக்க விடவில்லை.
மகனின் கோபத்தால் சுமதியே அவனிடம் பேச முடியாமல் திணறினார்.
வீரசிங்கமும், “அந்தப் பொண்ணுக்கு இன்னொரு பையன பிடிச்சிருக்குன்னு சொன்னா நீ ஏத்துக்க தான் வேணும். ஆரம்பத்திலேயே அந்தப் பொண்ணு உன்கிட்ட இதைச் சொல்லுச்சு தானே? அந்தப் பொண்ணோட உணர்வுக்கு மதிப்பு கொடு,” என்று பேரனிடம் சொல்லி ஆறுதல் அளிக்க முயன்றார்.
அதற்கு அஜய் கோபமாக,
“நீங்க… நீங்க தான்! அவள் என்னை விட்டுப் போறதுக்கு முக்கியக் காரணம் தாத்தா! நீங்க மட்டும் ‘நாங்க நாலு வருடம் பார்க்கக் கூடாது, பேசக் கூடாது’ன்னு கண்டிஷன் போடாமல் இருந்திருந்தால்… அவள் என்னோடவே இருந்திருப்பா!” என்று தன் மனதில் ஆதிரா கொடுத்த காயத்தை தாத்தாவிடம் வெளிப்படுத்தினான்.
வீரசிங்கம் மெதுவாக, “நீ நிதானமா இல்லை அஜய்… கொஞ்சம் பொறுமையா யோசிச்சுப் பார். அந்தப் பொண்ணுக்கு உன் மேல ஈர்ப்பு மட்டும் தான் இருந்திருக்கும். அதான் சுலபமா உன்னைக் கடந்து இன்னொரு பையனைப் பிடிச்சுட்டா. இதுக்காக நீ வருத்தப்பட வேண்டாம். ஆரம்பத்திலேயே அந்தப் பொண்ணோட குணம் தெரிஞ்சிடுச்சுன்னு நீ சந்தோஷம்தான் படணும்,” என்று பேரனை ஆறுதல் படுத்தினார்.
அஜய் எரிச்சலுடன், “எனக்கு உங்க மேலதான் சந்தேகமா இருக்கு தாத்தா! நீங்க எங்க விஷயத்துல மறுபடியும் தலையிட்டு பிரச்சனை செய்துடலான்னு தேவை இல்லாததை செய்து வச்சிடலையே…” என்று கேட்டே விட்டான்,
“உன்னோட தாத்தா எதையும் நேருக்கு நேர் தான் சந்திப்பான். குறுக்கு வழியில் காரியத்தை சாதிக்கத் தெரியாது,”
அவரைப் பற்றி நன்றாக தெரிந்திருந்தும் சந்தேகப்படாமல் அவனால் இருக்க முடியவில்லை..
திவ்யாவிற்காக, ஆதிராவையும் தன்னையும் நிரந்தரமாகப் பிரிக்க சதி செய்திருக்காரோ? என்று அஜயின் மனம் இன்னும் சந்தேகத்துடன் அவரைக் கண்காணித்துக் கொண்டே தான் இருந்தது.
பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சி மூலமாக ஆதிராவைத் தேடிக் கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தவன், அவளது குடும்பத்தில் உள்ள அத்தனை பேரின் மொபைல் அழைப்புகளையும் கண்காணிக்கச் சொல்லி உத்தரவும் பிறப்பித்துவிட்டான்.
காவல்துறையில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவரின் வீட்டில் உள்ளவர்களின் தொலைபேசி அழைப்புகளை கண்காணிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை.
அன்புச்செல்வனுக்குக் கொஞ்சமும் சந்தேகம் வராத அளவிற்கு கண்காணித்துக் கொண்டிருந்தனர் என்றால், எப்படிப்பட்ட பெரிய ஆட்களை இந்த விஷயத்தில் அஜய் உள் நுழைத்திருப்பான் என்று புரிந்து கொள்ளலாம்.
அலுவலகத்தில் கொஞ்சமும் வேலை செய்யப் பிடிக்காமல் அமர்ந்திருந்தவனுக்கு, பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சியில் வேலை பார்க்கும் கதிரிடமிருந்து போன் வந்தது.
அவசரமாக அவனது அழைப்பை ஏற்க,”சார், மேடமோட போட்டோவில் இருந்த ஆள், அவங்க வீட்ல வேலை செய்த புஷ்பவதியோட மகன் என்று தெரியவந்திருக்கு. சாரதா மேடமும் புஷ்பவதியோட பொண்ணு தீபாவுக்கு அடிக்கடி போன் செய்து பேசுறாங்க. ஆரம்பத்துல ஆதிரா மேம்,அவங்க வீட்ல வேலை செய்றவங்களோட பையனை விரும்புவதில், சாரதா மேடம்கு உடன்பாடு இல்லை என்றாலும் சமீபத்துல அவங்க காதலை ஏத்துக்கிட்டதாகவும், அந்தப் பையன் வீட்டு ஆளுங்க கிட்ட மறைமுகமா விசாரிச்ச போது தெரிந்தது. நீங்க மேடமை பார்க்க விருப்பப்பட்டால், எந்த இடம்னு சொல்றேன்,” என்றதும், கோபத்தில் பல்லைக் கடித்தான் அஜய்.
தன்னுடைய காதலி இன்னொருவனை விரும்புகிறாள் என்று கேட்கக் கேட்க, அவளைத் தன் கையாலேயே கொன்று விட்டால் என்ன என்ற கோபம் அவனுக்குள் அதிகமாகிக் கொண்டே சென்றது..
அவனுக்குள் இருந்த நல்லவன், “அவளுக்கு வேறு ஒருவனை பிடித்திருந்தால் விட்டுவிடு.. அவள் வாழ்க்கையை அவளுக்கு பிடித்தவனுடன் வாழ்ந்து விட்டு போகட்டும் ‘ என்று அறிவுரை கூற, ஆழ மூச்சு எடுத்துத் தன்னை நிதானப்படுத்திக் கொண்டவன், “நீங்க அட்ரஸ் சொல்லுங்க. நான் பார்த்துக்கிறேன்,” என்றதும் கதிரும் உடனடியாக ஆதிரா தங்கி இருக்கும் வீட்டின் முகவரியை அனுப்பி வைத்து விட்டான்.
சாரதாவின் வீட்டில் வேலை செய்பவரின் மகன் என்றவுடன், ஏதோ கிராமத்தில் இருக்கக்கூடும் என்று நினைக்க, அந்தத் திலீபன் கலிபோர்னியாவில் இருந்தான்.
சாரதாதான் அவனது முழுப் படிப்புச் செலவையும் ஏற்றுக்கொண்டு படிக்க வைத்திருந்தார் என்ற தகவலும் அஜய்க்குக் கிடைக்க, நேரடியாகத் தானே சென்று ஆதிராவைச் சந்திக்க வேண்டுமா, அதற்கு அவள் தகுதியானவளே இல்லை என்று முடிவெடுத்தவன், திலீபனைத் தூக்க சொல்லி ஆளை அனுப்பி வைத்துவிட்டான்.
பணம் பாதாளம் வரைக்கும் பாயும் என்பது இங்கு உண்மையானது.
திலீபனைக் காணவில்லை என்று தேடும் அளவிற்கு அஜய் வைத்துக் கொள்ளவில்லை.
அவனைத் ஆள் வைத்து தூக்கியவுடன் ஆதிராவின் எண்ணிற்கு அழைத்துவிட்டான்.
இந்தியாவில் இருந்து அழைப்பு என்றதும் அது அஜய் தான் என்று ஆதிராவிற்குப் புரிந்து விட்டது.
அழைப்பை ஏற்கப் பிடிக்காமல் இரண்டு முறை கட் செய்துவிட, மூன்றாவது முறை அவள் வேலை செய்து கொண்டிருந்த அலுவலகத்திலிருந்த லாரா, “அஜய்!” என்று பெயரை மட்டும் கூறியவள், தன்னுடைய போனை ஆதிராவிடம் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டாள்.
வீடியோ கால் அழைப்பில் இருந்தவனை சற்றும் எதிர்பார்க்காதவள், அவனது கண்கள் காட்டிய வெறுப்பில் உடனடியாகச் சுதாரித்துக் கொண்டாள்.
“பிடிக்கலைன்னு சொன்னா புரிஞ்சுக்கணும். அதை விட்டுட்டுத் தொந்தரவு பண்ணிட்டு இருக்கக் கூடாது,” என்று வெறுப்பாகச் சொல்ல,
“ஓ, உங்களை நான் எப்போ தொந்தரவு பண்ணேன் மேடம்? கொஞ்சம் விலாவாரியாகச் சொல்றீங்களா?” என்று நக்கல் குரலில் சொன்னவன்,
“உனக்கு இன்னும் நாலு நாள்தான் டைம். என்னைப் பார்க்க நீ வரலைன்னா, திலீபன் ,அதான் உன்னோட சோ கால்டு லவ்வர், அவனை என்ன பண்ணுவேன்னு தெரியாது,” என்றான்.
“திலீபனா? அவன என்ன பண்ண…?” என்று அதிர்ச்சியாகக் கேட்க,
“காதலனுக்காக ரொம்ப தான் துடிக்கிறீங்க. இன்னும் ஒண்ணும் பண்ண ஐடியா இல்லை. நீ வந்ததுக்கு அப்புறம் யோசிக்கிறேன். பாய்…” என்று ராகமாய் சொல்லிவிட்டு வைத்துவிட்டான்.
தன்னை நிம்மதியாக விட மாட்டான் என்று ஆதிராவிற்குப் புரிந்து விட்டது.
அதே நேரம், முறையாகப் பேசி விடைபெறாமல் தங்களது உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது என்ற உண்மையும் உரைத்தது.
அஜய்யைப் பார்க்க உடனடியாக இந்தியாவிற்குக் கிளம்பிவிட நினைத்தாலும், உடனடியாக டிக்கெட் கிடைக்க வேண்டுமே?
அவளின் கவலைக்கே அவசியமே இல்லாமல், லாராவே டிக்கெட் புக் செய்து கொடுத்து விட்டாள்.
“உனக்கு அஜயை எப்ப இருந்து தெரியும் லாரா ?” என்று ஆங்கிலத்தில் கேட்க,
“நேற்றிலிருந்து தான் தெரியும்,” என்று அவளும் ஆங்கிலத்தில் பதில் கொடுத்தாள்.
‘சரிதான்… பணம் கொடுத்தால் யார் என்ன வேலை வேண்டுமானாலும் செய்வார்கள்,’ என்று மனதிற்குள்ளேயே முணங்கிக் கொண்டவள், முதலில் தன் வீட்டிற்குச் சென்று விட்டு, அதற்குப் பின்பு அஜய்யைப் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்க,
அஜய், “நீ எங்கேயும் போகாமல், நேராக என்னைத்தான் பார்க்க வரணும். உன்னைப் பிக்கப் பண்ண என்னோட ஆள் வருவான்,” என்று, அவளை அழைத்துச் செல்ல வருபவனின் விபரங்களையும் அவளது மொபைலுக்குத் தகவலாக அனுப்பிவிட்டான்.
அவனிடம் எப்படிப் பேச வேண்டும் என்று மனதிற்குள் நிறைய ஒத்திகை பார்த்து அவனைப் பார்க்கச் செல்ல,அவளது ஒத்திகைக்கு எந்தவித அவசியமும் இல்லாத அளவிற்கு நடந்து கொண்டான் அவளின் முன்னாள் காதலன் அஜய்.