கடந்த நான்கு வருடங்களில்,அஜய்யின் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன.
அவனுடைய தொழிலில் மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுகொண்டிருக்கிறான் என்றே சொல்லலாம்.
கேமிங் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் அஜயிடம், விளையாட்டுத்தனங்கள் மறைந்து பொறுப்புகள் கூடியிருந்தன.
அவனைக் கேட்டுத்தான் குடும்பத்தில் கூட முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன.
வீரசிங்கமும், முன்பு போல பேரனைத் தன்னுடைய கட்டுக்குள் வைத்திருக்கப் போராடாமல், அவன் எண்ணங்களை மதிக்கக் கற்றுக் கொண்டு, “அவன் செய்வது சரியாகத்தான் இருக்கும்,” என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டார்.
வயோதிகமும் அதிகமாக, பேரனைத் தன்னோடு ஒரே வீட்டில் வைத்துக் கொள்ளும் எண்ணத்தோடு, “என்னுடனே இரு,” என்று சொல்ல, அவனும் மறுக்கவில்லை.
“என்னோட அம்மாவும், என் கூடத்தான் இருப்பாங்க. இந்த வீட்டு மருமகளாக, அவங்களுக்கான உரிமைகளை நீங்க கொடுத்தால் தாராளமா நான் இங்கே வரேன்,” என்று சொன்னதை வீரசிங்கம் மறுக்காமல் ஏற்றுக் கொண்டார்.
சுமதிக்கு இந்த வீட்டிற்கு வரவே பிடிக்கவில்லை.
“என் கணவர் உயிருடன் இருந்த பொழுதில் கிடைக்காத மரியாதை, இப்போது எதற்கு?” என்று விரக்தியுடன்,
“நான் அங்க வரலப்பா,” என்று மகனிடம் சொல்லிப் பார்த்தார்.
அஜய் பொறுமையுடன், “நமக்கான அங்கீகாரத்தையும், மதிப்பையும் யார்கிட்டயும் விட்டுக் கொடுக்கக் கூடாதுமா. நீங்களோ நானோ அந்த வீட்டில் இருக்க வேண்டும் என்று தாத்தா கிட்ட அனுமதி கேட்டு நிற்கல. அவர் தானே.. அவரோட தேவைக்காக நாம,அந்த வீட்டில் இருந்தா சரியா இருக்கும்னு கூப்பிடுறார்.
வயசானவருக்கு மரியாதை கொடுப்போம். அவரைப் போலவே நாமளும் ரொம்பப் பிடிவாதம் பிடிச்சுட்டு இருந்தா சரியா வராது,” என்று எடுத்துச் சொல்லி, அம்மாவுடன் தாத்தா வீட்டில் குடிபெயர்ந்து விட்டான்.
முன்பு அந்த வீட்டில் வீரசிங்கத்தோடு அவரது மகள் கோதை, கணவர் இளவரசன், மகள் திவ்யாவோடு இருந்தார்.
தன் மகளை மணக்க மாட்டேன் என்று அஜய் கூறிய பிறகு, அந்த வீட்டில் இருக்க கோதைக்குப் பிடிக்கவில்லை.
‘அஜய் இன்னொரு பெண்ணுடன் வாழ்வதைப் பார்த்துக் கொண்டு தன்னால் நிம்மதியாக இருக்க முடியாது.
தன் மகளும் இங்கேயே இருந்தால், அதே நினைவில் அவள் வாழ்க்கையைக் கெடுத்துக்கொள்வாள்,’ என்று நினைத்த கோதை, கணவரின் பிறந்த வீட்டிற்கு சென்று விட்டார்.
அவ்வப்பொழுது விருந்துக்கு மட்டும் கணவன் வீடு சென்று வந்த கோதை, நிரந்தரமாக மாமனாரின் வீட்டிலேயே தங்கிவிட, அதற்கு வேறு,இளவரசனின் தம்பி குடும்பம் திணறிக் கொண்டிருக்கிறது என்பது வேறு கதை.
உரிமையுள்ள வீடு என்றாலும், எதிர்பாராத சமயத்தில் மாமனாரின் வீட்டிற்கு குடி போகும் போது அங்கேயும் சில பிரச்சனைகள் ஏற்படும்.
சத்யவேந்தனின் மனைவி நளினி, கோதையோடு தினமும் பிரச்சனை செய்து கொண்டே இருக்கிறார்.
அதை வீரசிங்கத்திற்கு போன் செய்து கோதை தெரிவிக்க, வீரசிங்கம், “நீ எதுக்கு அங்க போன? உனக்கு வேற வீடே இல்லையா? உன் பேர்ல இருக்க வீட்டுல உரிமையோட போய் தங்குவதற்கு என்ன?” என்று கோபமாகக் கேட்டார்.
கோதை, “அந்த வீட்டுக்கு மூத்த பையன் உங்க மருமகன் தான்பா. அந்த எண்ணம் என் மாமனாருக்கும் இல்லை, அவரோட இரண்டாவது பையனுக்கும் இல்லை. மொத்த சொத்தையும் அவங்களே எடுத்துக்கணும்னு நினைக்கிறாங்க. சொத்து எங்களுக்கு ஒரு பிரச்சனை இல்லை. என்னோட புருஷனுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைத்தே ஆகணும். அதுக்காகத்தான் நளினியோட சண்டை போட்டுட்டு இருக்கேன்…” என்று தெளிவாக அப்பாவிடம் பேசிவிட்டார்.
மகளிடம் பேசிய பின்பு தான்,தன்னுடைய மருமகளுக்கும், தன் வீட்டில் அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று வீரசிங்கத்திற்கும் தோன்றியது.
முழு பொறுப்பையும் மருமகளிடமே கொடுத்து ஒதுங்கிக் கொண்டார்.
பேரனிடம் மட்டுமே நன்றாகப் பேசுவார்.
அவன் இருக்கும் பொழுது அவனோடுதான் இருப்பார்.
“ஆதிராவோடு பேரன் பேசிக்கொண்டுதான் இருக்கிறானா?” என்று அறிந்துகொள்வதற்காக அவனோடு எப்பொழுதும் இருக்கிறாரோ என்று சுமதிக்கு கூடச் சந்தேகம் ஏற்படும்.
அதை அவரிடம் யார் கேட்பது?
ஆனால் அவருக்கு அந்த எண்ணமெல்லாம் இல்லை.
வயோதிகத்தை தனிமையில் கழிக்க முடியாமல், தான் மனைவி,மகன், மகள் என்று குடும்பமாக வாழ்ந்த சமயத்தில் நடந்த சம்பவங்களைச் சுவாரசியமாகப் பேரனிடம் பகிர்ந்து கொள்வார்.
முன்பு திவ்யாவிடம் பகிர்ந்தார்.
அவள் இங்கே இல்லை எனும் பொழுது அஜய்யைப் பிடித்துக் கொண்டார், அவ்வளவுதான்.
இன்றும் அப்படித்தான்—அவரது மனைவியுடன் நடந்த முதல் சந்திப்பைப் பகிர்ந்து கொண்டிருந்திருக்க, அஜய்யின் எண்ணங்கள் தானாக ஆதிராவிடம் சென்று விட்டன.
“இன்னும் அவளைப் பார்ப்பதற்கு இருபத்தைந்து நாட்கள் தான் இருக்கிறது. சொன்ன சொல்லைக் காப்பாற்றுவாளா? இல்லை வேறு ஒருவனுடன் கைகோர்த்து ‘இவனை தான் பிடித்திருக்கிறது’ என்று தன் முன்னே வந்து நிற்பாளா?” என்று டென்ஷனோடு காத்திருக்கிறான்.
தன் பேச்சை பேரன் கவனிக்கவில்லை என்றதும், “ஆபீஸ்ல பிரச்சனையா பிரபா?” என்று வீரசிங்கம் கேட்டார்.
“இல்லை தாத்தா… உங்களோட கண்டிஷன் படி நானும் ஆதிராவும் பேசி நாலு வருஷம் ஆச்சு. இன்னும் இருபத்தாறு நாள்ல வந்துடுவா. அந்த நேரத்துல எந்தக் காரணமும் சொல்லி எங்களைப் பிரித்து வைக்க மாட்டீங்களே?” என்று மனதை மறைக்காமல் கேட்டான்.
நான்கு வருடங்களாக ஆதிராவைப் பற்றி ஒருமுறை கூடப் பேசாதவன், இப்போது பேசுவது வீரசிங்கத்திற்குப் பிடிக்கவில்லை என்றாலும்,
“உன்னோட உணர்வுக்கு மதிப்பு கொடுப்பேன் அஜய்…” என்று முடித்துக் கொண்டார்.
அதுதானே அவனுக்கும் வேண்டும்!
திவ்யாவிற்கு இன்னும் திருமணம் கைகூடவில்லை.
அஜய்யைவிட இரண்டு வருடங்கள் இளையவள் தான்.
அஜய், திவ்யாவைத் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்த நாளிலிருந்து மாப்பிள்ளை பார்க்கிறார்கள்.
ஏனோ எதுவும் சரி வரவில்லை.
திவ்யாவும்,
“அஜய்யை விட நல்ல மாப்பிள்ளை வேண்டும்,” என்று நினைப்பதால் பார்ப்பவர்களை எல்லாம் குறை சொல்லிக் கொண்டிருந்தாள்.
கோதையும் சொல்லிப் பார்த்துவிட்டார்.
“அவனைப் போல நீ பையன் தேடினால் சரியா வராது திவ்யா. நீ உனக்கு வரப்போறவனுக்கு உண்மையா இருக்கணும். அவன் கிட்டயும் நீ அஜய்யைத் தேடினால், அது அந்தப் பையனை அவமானப்படுத்துற மாதிரி ஆகிடும்,” என்று எடுத்துச் சொல்ல,
‘யாரைப் பார்க்கும் பொழுது, தன்னுடைய மாமா மகனின் நினைவு வராமல் இருக்கிறதோ, அப்படி ஒருவனைத் திருமணம் செய்து கொள்கிறேன்,’ என்று சொல்லிவிட்டாள்.
சிறுவயதில் இருந்து அவள் மனதில் ஆசைகளை வளர்த்தது தானும், தன்னுடைய அப்பாவும் தானே என்பதினால், அவளின் மனம் மாறுவதற்காகக் கோதையும் காத்திருந்தார்.
அதோடு அவரின் எதிர்பார்ப்பும் ஒன்றுதான்..அந்தப் பெண் ஆதிரா திரும்பி வராமலேயே போக வேண்டும். அப்படி வந்தாலும், “வேறு ஒருவனைப் பிடித்து இருக்கிறது” என்று சொல்லிவிட வேண்டும்.
அந்த சமயத்தில் தன்மகளை அஜய்க்குத் திருமணம் செய்துவிட வேண்டும் என்ற ஆசையும் ஒரு பக்கம் இருந்தது.
அவரது வேண்டுதலை இறைவன் கேட்டுவிட்டான் போல…!!
அஜயை பார்க்க வருகிறேன் என்று சொன்ன நாளில், அஜய்யைப் பார்க்க ஆதிரா வரவில்லை.
மாறாக, அவளோடு இன்னொருவன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தைத்தான் அனுப்பிவைத்தாள்.
அவளது கண்கள் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தன.
அந்த புகைப்படத்தைப் பார்த்த பின் அஜய்யின் நிலை என்னவென்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
“இது உண்மையாக இருக்காது. வேண்டுமென்று நடிக்கிறாள். என்னை வேதனைப்படுத்திப் பார்ப்பது அவளுக்குத்தான் பிடித்த விஷயம் ஆகிற்றே…” என்று நம்பவும் மறுத்தவன், அந்த நாள் முழுவதும்,
ஆதிரா சர்ப்ரைஸ் செய்து தன்னைப் பார்க்க வருவாள் என்று ஆவலோடு காத்திருந்தான்.
அவள் மீது அவனுக்கு இருந்த நம்பிக்கையின் அளவைப் பார்த்து திவ்யாவே வியந்துபோனாள்.
நான்கு வருடமாகக் பார்க்காமல், பேசாமல் இருந்தாலும் அவனது காதல் அப்படியே உயிர்ப்புடன் இருக்க,திவ்யாவே “மாமா.. நீங்க எதுக்கும் உங்க லவ்வரை நேரிலேயே போய்ப் பார்த்துடுங்க. அவங்க திடீர்னு அந்தப் பையனைக் காதலிச்சு இருக்க மாட்டாங்களே. காதலிக்க ஆரம்பித்து வருஷங்கள் கூட ஆகியிருக்கலாம். அப்பவே உங்களுக்கு விஷயத்தைத் தெரிவிக்காமல், அவங்க உங்களை பார்க்க வரேன்னு சொன்ன தேதியில், அவங்க லவ்வரோட எடுத்த போட்டோ அனுப்பி வைக்கிறாங்கன்னா அதுல ஏதோ விஷயம் இருக்கு.
“அவங்க முன்னாடியே உங்களைப் பழிவாங்க நெனச்சாங்களா? இல்ல அவங்க மனசுல வேற ஏதோ விஷயம் இருக்கா… தெரியாது. நீங்க உங்க காதலுக்காகச் சின்னதா ஒரு முயற்சி எடுத்து நேர்ல போய் பார்த்துடுங்க. அவ்வளவுதான் சொல்வேன்…” என்று திவ்யா சொல்ல, அஜயும் தாமதிக்கவில்லை.
அவளது வீட்டிற்கு நேரடியாகச் சென்று விட்டான்.
வழக்கம் போல அன்புச்செல்வன், “ஆதிரா இங்க இல்ல. அவளுக்கு பிடிச்ச வாழ்க்கையைப் பார்த்துட்டுப் போயிட்டா. இனி எங்களை பார்க்க வர மாட்டேன்னு சொல்லிட்டா,” என்று குரல் பதிவை எடுத்துக்காட்ட,
“உங்களுடைய டிராமாவை நம்புவதற்கு நான் தயாராக இல்லை சார். முன்னாடியே சொன்னதுதான்..உங்களால அவளுக்குப் பிரச்சனையா இருந்தா, இனி என்னாலையும் உங்களுக்குப் பிரச்சனை வரக்கூடும். தயாராக இருந்துக்கோங்க,” என்று போலீஸ்காரனையே மிரட்டிவிட்டுச் சென்று விட்டான்.
சாரதா பக்கம் திரும்பிப் பார்க்க கூட இல்லை.
இந்து, “நாம எதுவுமே பண்ணலையேங்க. ஆதிராதான் ‘அஜய பிடிக்கல… திலீபனை பிடிச்சிருக்குன்’னு சொன்னா, இவன் புரிஞ்சுக்காம உங்களை மறுபடியும் மிரட்டுறான்,” என்று தன் கணவனை ஒருவன் மிரட்டியதால் ஏற்பட்ட கோபத்தில் கேட்டாள்.
“காதல் தோல்வியில்,பேசிட்டுப் போறான், கண்டுக்காத.” இன்று அஜய்க்கு ஆதரவாக தான் பேசினான்.
ஆதிராவின் மாற்றத்தில் அன்புச்செல்வனுக்கும் உடன்பாடு இல்லை.
ஆனால் தன்னுடைய சகோதரி, ஆதிராவின் விஷயத்தில் அமைதியாகவே இருப்பதின் மர்மம் என்ன அவனுக்கு புரியவில்லை.
சொந்த வீட்டிலேயே, போலீஸ் புத்தியை உபயோகித்து, அவனால் ஒன்றும் கண்டறிய முடியவில்லை என்பதுதான் உண்மை…!!