தீராதோ உன் மயக்கம் – 10

தன்னுடைய அப்பா உருவாக்கிய மென்பொருள் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட அஜய்யின் முகத்தில் சிரிப்பு என்பது துளியும் இல்லை.

“இந்த கம்பெனில பொறுப்பெடுத்துகிட்டது, உனக்கு பிடிக்கலையா அஜய்?” என்று அவனது முகத்தில் இருந்த கவலையையே படித்துவிட்டுக் கேட்டார் இளவரசன்.

அவர் வீரசிங்கத்தின் மருமகன்; திவ்யாவின் அப்பா.

“அப்படி இல்லை மாமா, வேற ஏதோ குழப்பம்,” என்றவன், முயன்று தன்னுடைய மனதை ஒருநிலைப்படுத்தி வேலை செய்ய ஆரம்பித்தான்.

சிறுவயதிலிருந்து அலுவலகம் வந்து கொண்டிருப்பதினால், அங்கு நடக்கும் வேலைகள் அவனுக்கு அத்துப்படி.

யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் அவன் இல்லை. 

படித்துக் கொண்டிருக்கும் சமயங்களில்கூட அவனுடைய கம்பெனியில் சின்னச் சின்ன ப்ராஜெக்ட் எடுத்துச் செய்து, அதற்கான தொகையும் பெற்றுக் கொண்டிருந்தான்.

தன்னுடைய படிப்பு முடிந்த மறுநாளே அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டவன், தன்னுடைய திறமையை மற்றவர்களுக்கு நிரூபிக்கும் கட்டாயத்தில் வேறு இருந்தான்.

அவனுடைய மாமா இளவரசன், அவரது தம்பி சத்யவேந்த் இருவரும் இருக்கும் பொழுது, தனக்கு முக்கியப் பொறுப்பு கொடுக்கப்பட்டால் பிரச்சனை வரும் என்று அவனுக்குத் தெரியும். 

அவர்கள் இருவரையும் சமாளித்து, தன்னை உயரிய பதவியில் அமர வைத்த தாத்தாவின் மரியாதையை காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்புடன் மதியம் வரை தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு வேலை பார்த்தான். 

உணவு இடைவேளைக்குப் பிறகு வேலையைப் பார்த்துக் கொள்ளலாம் என்று இளவரசன் அழைக்க, அவருடன் சென்றவனுக்கு உணவைச் சாப்பிடவே முடியவில்லை.

அவன் மனம் எங்கும் ஆதிரா தான் நிறைந்து இருந்தாள்.

அவளுடன் கைபேசியில் பேசி பதினைந்து நாட்களுக்கு மேல் இருக்கும். 

இதற்கு முன்பும் அவனுடன் பேசாமல் இருந்திருக்கிறாள் தான். 

அப்போதெல்லாம் அவள் எங்கிருக்கிறாள் என்ற விபரம் அவனுக்குத் தெரிந்திருக்கும்.

இன்றைய நிலைமை அப்படி இல்லை.

அவள் எங்கு இருக்கிறாள் என்றே தெரியவில்லை. 

செமஸ்டர் தேர்வுகளை எழுதி முடித்த கையோடு அவளது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

தன்னுடைய போனை எடுக்காமல் இருக்கவும் மனம் கேட்காமல், தங்களுடைய கல்லூரிக்குச் சென்று அவளது தோழிகளிடம் விபரம் கேட்ட பொழுது, “எங்களுக்கும் நேத்துதான் விஷயம் தெரியும். இனி அவள் இங்கே படிக்கப் போவதில்லை என்று முடிவு பண்ணி டெல்லிக்குப் போயிட்டா. அங்கதான் ஃபைனல் இயர் பண்ணுவான்னு நினைக்கிறேன்,” என்று ஒரு யுனிவர்சிட்டியின் பெயரைச் சொல்ல,

 ‘தன்னிடம் சொல்லாமல் எப்படிச் சென்றாள்?’ என்ற கோபத்துடன் நேரடியாக அவளது வீட்டிற்குச் சென்று நின்றான்.

செக்யூரிட்டி அவனை உள்ளேயே நுழைய விடவில்லை. 

மிகுந்த அவமானமாகிவிட்டது அஜய்க்கு. 

அப்படியும் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு, நேரடியாக அன்புச்செல்வனை ஏ.சி.பி. அலுவலகத்திற்குச் சென்று பார்க்க, “வாங்க அஜய், உங்களை எதிர்பார்த்துத்தான் காத்திருந்தேன்,” என்று வரவேற்க, 

“ஆதிரா எங்க சார்?” என்று கோபமாகக் கேட்டான்.

“வீட்ல தான் இருந்தா,” எனவும், 

“பொய் சொல்றீங்க சார். அவள் வீட்ல இருந்தா செக்யூரிட்டி என்னை விரட்டி அடிச்சு இருக்க மாட்டான். என்னை யாரும் அவமானப்படுத்துவது பிடிக்கவே பிடிக்காது. அது ஆதிராவுக்கு நல்லாவே தெரியும்..நீங்க சொல்லுங்க, ஆதிரா எங்க இருக்கா? எங்களுடைய காதலுக்கு சம்மதிக்கிற மாதிரி நாடகம் செய்து, நான் எங்க கம்பெனி பொறுப்பேற்றுகிற நேரமா பார்த்து ஆதிராவை டெல்லிக்குப் படிக்க அனுப்பி இருக்கீங்க. ஆதிராவை நான் விரும்புறது உங்களுக்குப் பிடிக்கலைன்னா நேரடியாவே சொல்லி இருக்கலாமே சார்? எதுக்காக இந்த நாடகம்?” என்று கோபமாகவும் வேதனையாகவும் கேட்க,

“இதே கேள்வியை நான் உன்கிட்ட கேட்க வேண்டி இருந்துச்சு அஜய். உன்னோட தாத்தாவுக்கு நீ ஆதிராவை லவ் பண்றது பிடிக்கல. அதுக்காக நாலு வருஷம் உங்களைப் பார்க்கக் கூடாது, பேசக் கூடாதுன்னு கண்டிஷன் போட்டா என்ன அர்த்தம்? மொத்தமா உங்களைப் பிரிச்சு விடறதுக்கு முடிவு பண்ணிட்டதா தானே நினைக்க முடியும்? நீயும் உன்னோட தாத்தா முடிவுக்குச் சம்மதிச்சு, ஆதிரா கிட்டவும் ‘நாம நாலு வருஷம் பிரிந்து இருக்கலாமா?’ என்று கேட்டிருக்க. எல்லாத்தையும் நீ செய்துட்டு என்கிட்ட வந்து நியாயம் கேட்டா எப்படி?” என்று கேள்வியுடன் நிறுத்த, அதிர்ந்துதான் போனான் அஜய்.

“சார், நான் ஆதிரா கிட்ட எதையும் மறைக்கக் கூடாதுன்னு, தாத்தா என்கிட்ட சொன்ன விஷயங்களைப் பகிர்ந்துக்கிட்டேன். அவ்வளவுதான். மத்தபடி ஆதிராவைப் பார்க்காமல் பேசாமல் இருக்கணும்னு நான் நினைக்கவும் இல்லை. ஆதிரா கிட்ட அப்படி சொல்லவும் இல்லை.”என்றவன்,

“ஒரு நிமிஷம் இருங்க!” என்றுவிட்டு, உடனடியாகத் தன்னுடைய தாத்தாவிற்கு ஃபோன் செய்து, 

“நீங்க ஆதிராவுக்கு போன் செய்து பேசினீங்களா தாத்தா?” என்று கேட்கவும், 

“அந்தப் பொண்ணு கிட்ட பேசுறதுக்கு எனக்கு என்ன விஷயம் இருக்கு?” என்று அவரும் புரியாமல் தான் கேட்டார். 

“நடிக்காதீங்க தாத்தா!” எனவும், 

“எனக்கு எதையும் நேருக்கு நேர் டீல் பண்ணிதான் பழக்கம் அஜய். அது உனக்கும் தெரியும்,” என்று கடினத்துடன் சொல்லவும், போனை வைத்து விட்டவன்,

“உண்மையைச் சொல்லுங்க சார். நீங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் ஆதிரா வீட்ல இல்லையா?’ன்னு கேட்டீங்க. இப்போ ‘என்னோட கண்டிஷனுக்காக தான், அவ டெல்லிக்குப் போயிட்டா’ன்னு சொல்றீங்க. உங்களுடைய பேச்சு முரணாக இருக்கு. 

“எனக்கு உங்க அக்கா மேல தான் சந்தேகம். அவங்கதான் என்னை வெறுப்பாய்ப் பார்த்துட்டு இருந்தாங்க. தயவு செஞ்சு உண்மைய சொல்லுங்க சார்,” என்று யாரிடமும் கெஞ்சிப் பழக்கம் இல்லாத அஜய், அன்புச்செல்வனிடம் கெஞ்ச,

“எனக்கு பொய் சொல்லணும்னு எந்த அவசியமும் இல்லை அஜய். உன்னோட தாத்தா பேச்சுக்கு மரியாதை கொடுக்கணும்னு ஆதிரா எங்க கிட்ட சொல்லிட்டு இருந்தா. அப்புறம் அவ இன்னொரு விஷயமும் சொன்னா..இந்த நாலு வருஷத்துல உனக்கும் ஆதிராவுக்கும் வேற ஒரு ஆள் மேல விருப்பம் வந்துட்டா, பரஸ்பரம் சொல்லிக்காமலேயே அவங்கவங்க வாழ்க்கையைப் பார்த்துக்கலாம். நாலு வருஷம் கழிச்சு ஆதிரா வரலைன்னா, அவளுக்குப் பிடிச்ச துணையைத் தேர்ந்தெடுத்தான்னு அர்த்தம். 

“ஆதிரா, உன்னை ஏமாத்திட்டான்னு நீ அழுது புலம்பிட்டு இருக்கக் கூடாது. அவளை நேரில் பார்த்துச் சண்டை போடவும் கூடாது. இதோ, வாய்ஸில் கூட உனக்காக அனுப்பி இருக்கா’,” எனவும், 

“நீங்க சொல்றத என்னால நம்பவே முடியல சார். உங்களுக்கு அனுப்பற வாய்ஸ் நோட் எனக்கு அனுப்பி இருக்க வேண்டியதுதானே? உண்மைய சொல்லுங்க சார். ஆதிரா உயிரோட தான 

இருக்கா?” என்று கேட்கவும்,

“ஆதிரா லவ் பண்ற பையன் என்பதால் பொறுமையா பேசிட்டு இருக்கேன் அஜய். எங்க வீட்டுப் பொண்ணை கொலை பண்ற அளவுக்கு நாங்க மோசமான ஆள் கிடையாது. அவ சொன்னதை உன் கிட்ட சொல்லிட்டேன். இதுக்கு மேல உன் விருப்பம்,” என்றவன், ஆதிரா அனுப்பிய குரல் பதிவையும் அவனுக்கு அனுப்பி விட, அதைக் கேட்டவன் உடைந்து போய்விட்டான். 

அது அவளது குரல்தான்.

“நம்ம காதல் உறுதியானதா இல்லைன்னு நிறைய பேருக்குச் சந்தேகம் இருக்கு அஜய். அவங்க திரும்பத் திரும்ப இதே கேள்வியைக் கேட்கும் பொழுது எனக்கே சந்தேகம் வந்துடுச்சு. நாலு வருஷம் நான் எங்க இருக்கேன்னு உன்கிட்ட சொல்லப் போறதில்ல. நீ எங்க இருக்கன்னு எனக்குத் தெரியும் தானே? ஒருவேளை என் வாழ்க்கையில் வேற யாரும் வராத பட்சத்துல, நானே உன்னைத் தேடி வருவேன்,” என்றவள், நான்கு வருடம் கழித்து,அவனை நேரில் பார்க்க வரும் தேதியையும் சேர்த்துச் சொல்லி இருக்க, 

‘அந்த நாளுக்காகக் காத்திருப்பதா வேண்டாமா? உடனடியாக டெல்லி யுனிவர்சிட்டிக்குச் சென்று ஆதிராவைப் பார்த்து விடலாமா?’ என்று பலவிதமான கேள்விகளுடன், நிலையான ஒரு முடிவெடுக்க முடியாமல் அஜய் அமர்ந்திருக்க, 

அன்புச்செல்வன், “டெல்லி யுனிவர்சிட்டிக்குப் போற ஐடியா இருந்தா விட்டுடு. ஆதி எந்த காலேஜ்ல படிக்கிறான்னு எங்களுக்கு மட்டும் தான் தெரியும். நீ தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது,” என்று வேறு சொல்ல,

கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டவன், 

“நீங்க சொல்றதை நம்பிப் போறேன் சார். நாலு வருஷம் ஆதிராவைப் பார்க்காமல் இருக்கிறது கஷ்டம்தான். அதே நேரம், எங்க காதல் மாறாததுன்னு உங்களுக்கெல்லாம் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துல வேற இருக்கோம். அதுக்காக நான் அவளைத் தேட முயற்சி பண்ணப் போறதில்ல. 

“நாலு வருஷம் கழிச்சு ஆதிரா சொன்ன தேதியில என்னைப் பார்க்க வரணும். அவளுக்கு வேற ஒருத்தனைப் பிடிச்சிருந்தா கூட, அவள் அந்தத் தேதியில் எங்க இருக்கானு எனக்கு நீங்க போன் பண்ணிச் சொல்லணும்,” என்றவன் பெருமூச்சோடு, 

“சப்போஸ், அவளுக்கு உங்களால பாதிப்பு என்று எனக்குத் தெரிஞ்சா, நீங்க ரொம்ப மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும், மிஸ்டர் அன்புச்செல்வன்!” என்று அவனது கண்களை நேருக்கு 

நேர் பார்த்த மிரட்ட,

“ஆதிரா, நான் வளர்த்த குழந்தைடா. ரொம்ப யோசிக்காதே போ,” என்று சிரித்தபடி தான் அனுப்பி வைத்தான்.

அன்புச்செல்வன் மேல் இருந்த நம்பிக்கையில் தான் அஜய்யும் தன்னுடைய நாட்களை ஆதிரா இல்லாமல் நகர்த்திக் கொண்டிருந்தான்.

காலம் யாருக்கும் காத்திருக்காமல் நாட்கள்.. மாதங்களாகவும், வருடங்களாகவும் உருண்டோடி கொண்டிருந்தது.

error: Content is protected !!
Scroll to Top