தீராதோ உன் மயக்கம் – 1

அந்த ஆடம்பரமான பங்களாவில் வயதான ஒருவரின் குரல் மட்டும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.

“எனக்கு எதிரா செயல்படுவது மட்டும் தான் உன்னோட குறிக்கோளா வச்சிருக்கியா, பிரபா?” — என்று ஆத்திரத்துடன், தன் பேரனிடம் கத்திக் கொண்டிருந்தார் வீரசிங்கம்.

“என்னோட அப்பா தான் உங்க பேச்சை மீறக் கூடாதுன்னு, கடைசி வரைக்கும் உங்க காலடியிலேயே வாழ்ந்து செத்தும் போயிட்டார். நானும் அவரை மாதிரியே இருக்கணும்னு நீங்க எதிர்பார்த்தால், அது உங்களோட தப்பு தாத்தா!” — என்று இறுக்கமான குரலில் கூறினான் அஜய் பிரபாகரன்.

“உன்னோட அப்பன் என் பேச்சை கேட்டானா?”என்று கேலியாகக் கேட்டவர்,

“என் பேச்சை கேட்கிறவனா இருந்திருந்தால், நான் பார்த்து வச்ச பொண்ணைத் தான, அவன் கல்யாணம் பண்ணி இருந்திருக்கணும்! அவன் இஷ்டத்துக்குக் குப்பத்தில் இருக்கிற ஒரு பெண்ணைக் கட்டிட்டு வந்து, என் மானத்தை வாங்கினதை இன்னும் என்னால மறக்க முடியல!” — என்று, ஒரு ஓரத்தில் தலை குனிந்த படி அமர்ந்திருந்த மருமகளைப் பார்த்தபடியே வீரசிங்கம் பேச, அஜய் பிரபாகரனுக்கு ஆத்திரம் தான் மேலிட்டது.

“காதலிச்சுக் கல்யாணம் பண்றது ஒன்னும் பெரிய கொலை குற்றம் கிடையாது தாத்தா! நீங்க என்னோட அப்பாவையும், அம்மாவையும் ஒவ்வொரு முறையும் அவமானப்படுத்திப் பேசறதை என்னால ஏத்துக்க முடியல தாத்தா..இனி அப்படிப் பேசாதீங்க!”

“அப்படியா? தன்மானம் தலை தூக்கினால் தாராளமா வீட்டை விட்டுப் போப்பா! கஷ்டப்பட்டு உழைச்சு, சம்பாதிச்சு, உன் குடும்பத்தை நீ பார்த்துக்க! என் வீட்டுச் சொத்தில் இருந்து எதையும் எதிர்பார்க்காமல் வாழ்ந்து காட்டு!

“அதை விட்டுட்டு என் காசுல சாப்பிட்டுட்டு, படிக்கவும் செஞ்சுட்டு, எனக்கு எதிராக நீ நடந்துக்கவும் செய்தால்,அதை பார்த்துட்டு வாய மூடிட்டு போறதுக்கு நான் ஒன்னும் கையாலாகாதவன் கிடையாது!” — என்று ஆவேசமாகச் சொல்ல, பிரபாகரனுக்கு, அப்பொழுதே அந்த வீட்டை விட்டு சென்று விடும் வேகம் தான்.

“இதுக்கு மேலயும் நாம இங்க இருக்கனுமாம்மா. வாங்க, போகலாம்.” — என்று சுமதியை அழைக்க,

“அப்பா வாழ்ந்த வீடு பிரபா! அவரோட கடைசி ஆசை — நீ உன்னோட தாத்தா கூட இருக்கணும் என்பது தான். அவரோட ஆசைக்கு மதிப்பு கொடு.” — என்று கலங்கிய குரலில் சொல்ல, வீரசிங்கம் தன் பேரனை, நீ போய்த் தான் பாரேன் என்னும் விதமாக நக்கலாகப் பார்க்க,

ஒவ்வொரு முறையும் அவர் அவமானப்படுத்தும் போது எல்லாம் பொறுத்துப்போனவனால், இம்முறை பொருத்துப் போக முடியவில்லை.

அவனுடைய பொறுமைக்கு அவர் கேட்கும் விலை — அவனது காதல்!

யாருக்காகவும் தன்னுடைய காதலையும், காதலியையும் விட்டுக் கொடுக்கப் பிரபாகரன் தயாராகவே இல்லை.

“அப்பாவோட வார்த்தைக்குக் கட்டுப்பட்டுத் தான், இத்தனை வருஷமா இவர் பேசுவதைக் கேட்டுட்டு அடிமை மாதிரி இங்கேயே இருந்தேன்மா! இனிமேலும் என்னால இருக்க முடியாது. இறந்தவருக்குக் கொடுத்த சத்தியத்திற்காக, ஒவ்வொரு நாளும் நான் என்னோட தன்மானத்தை விட்டுட்டு இருக்க முடியாது. நான் கிளம்பறேன்மா!” — எனவும் சுமதி அதிர்ந்து போய்ப் பார்க்க, வீரசிங்கமே பேரனிடம் இதை எதிர்பார்க்கவில்லை.

அவர் என்ன பேசினாலும் அடங்கித்தான் போவான்.

திடீரென்று எங்கிருந்து பிறந்தது அவனுக்குத் தைரியம்?

“நீ தப்பான முடிவெடுக்கிற பிரபா! ஒரு முறை இந்த வீட்டை விட்டு போயிட்டா, திரும்ப நீ இங்க வரதுக்கு வாய்ப்பே கிடைக்காது! அப்புறம் இன்னொரு விஷயம் — உன்னோட அம்மாவ உன் கையோடவே கூட்டிட்டு போற எண்ணம் இருந்தால், அதை விட்டுடு!” — எனவும் அவன் அதிர்ந்து போய்ப் பார்க்க,

மருமகளிடம்,“நீ இந்த வீட்டை விட்டு போறதா இருந்தா, தாராளமா போகலாம்! ஆனா, என் மகனோட மனைவி என்ற அந்தஸ்தையும், இந்த வீட்டோட மருமகள் என்ற அந்தஸ்தையும் நீ இழந்துட்டு தான் போற மாதிரி இருக்கும்.நீ எங்கேயும் என் மகனோட பெயரை பயன்படுத்தவே கூடாது” என்று, அவரின் மகனின் உரிமையான மனைவிக்கு, பொருந்தாத கட்டளையை அவர் பிறப்பிக்க, சுமதி பயந்து தான் போனார்.

வீர சிங்கத்தின் சொத்துக்களுக்கு உரிமை கொண்டாட முடியாது என்றெல்லாம் சுமதி பயந்து போகவில்லை.

வீரசிங்கம்,கொஞ்சம் வில்லங்கம் பிடித்தவர்.

அவருக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் எந்த எல்லைக்கும் சென்று தண்டிக்கத் தயங்காதவர்.

வசதி குறைந்த தன்னைக் காதல் திருமணம் செய்த ஒரே காரணத்திற்காக, தன்னுடைய கணவரை இறுதிவரை வீட்டிற்குள் சேர்க்காது தவிக்க விட்டவர்..!

13 அறைகள் கொண்ட அந்தப் பெரிய வீட்டில்,ஒரு அறையைக் கூட மகன் மருமகள் தங்குவதற்குக் கொடுக்க விருப்பம் இல்லாது அவர்களை வீட்டிற்குள்ளே நுழைய விடாமல் வேலைக்காரர்கள் தங்கும் தோட்ட வீட்டில் தான் தங்க அனுமதித்தார்,

அதுவும் அவரது மனைவியின் கெஞ்சலின் பெயரில்தான் சம்மதித்தார்.

அதற்குப் பின்பு, அந்தத் தோட்ட வீட்டை நிறைய மாற்றம் செய்து, அவர் மகன் தங்கும் அளவிற்கு மாற்றிக் கொடுத்து விட்டார் தான்.

ஆனாலும் அவரது பிடிவாதம் கொஞ்சமும் தளர்ந்த பாடில்லை.

மகனுடன் அலுவலக விஷயம் பேச வேண்டும் என்பதற்காகவே, வீட்டிற்கு வெளியில் பெரிய அலுவலக அறையைக் கட்டி மகனை அழைத்துப் பேசுவார்.

மற்றபடி அவரும் மகனது வீட்டிற்குச் சென்றதில்லை.

மகன் இறக்கும் வரைக்கும் வீட்டிற்கு வர விடாமல் இருந்தவர்..மகன் இறந்த பின்பு தான், மகனின் உடலை, அவரது வீட்டிற்குள் நுழையவே அனுமதித்தார்.

அதற்குப் பின்பு தான் சுமதியும் அந்த வீட்டிற்குள் வந்து செல்கிறார்.

கணவரை இழந்த பின்பு,மாமனாரின் வீட்டுக்கு செல்ல சுமதிக்கும் விருப்பமில்லை தான்.

“என் புருஷனே உயிரோடு இல்லை.. இதுக்கப்புறம் புகுந்த வீட்டில் எனக்கு மரியாதை கிடைச்சா என்ன.. கிடைக்காட்டி என்ன” என்று மனதிற்குள் நினைத்தாலும் அதை வீரசிங்கத்திடம் சொல்லிவிட முடியவில்லை.

பதின்ம வயதில் மகன் இருக்கிறானே.. அந்த வீட்டின் ஒரே ஒரு ஆண் வாரிசு அவன்தான் எனும் பொழுது, எப்படி வீரசிங்கத்தைப் பகைத்துக் கொள்ள முடியும்?

அதுவும் அப்போதெல்லாம் பிரபாகரனுக்கும், வீரசிங்கம் என்றால் அத்தனை பிடித்தம்.

தாத்தா என்றால் உயிரையே விடுவான். அவனைப் பெற்றவர்களும், தாத்தாவை பற்றிய தவறான கருத்துக்களை அவனிடம் திணிக்கவில்லை.

மாமியார், மருமகள் பிரச்சனையால் தான் தனியாக இருக்கிறோம் என்று தான் சொல்லி வைத்திருந்தனர்.

வீரசிங்கத்திற்கும்,அவரது மகனுக்கும் காதல் திருமணத்தால் பிரச்சனை என்பது மிகவும் நெருங்கிய நட்பு வட்டாரத்திற்கு மட்டுமே தெரியும்.

மற்றவர்களிடம் “தனியா இருக்கிறது தான் சின்னஞ்சிறுசுங்களுக்கு நல்லது” என்று ஆரம்பத்தில் சொல்லி வைத்தவர்கள்…மாதங்கள் கடந்து விட்ட பொழுது மாமியாருக்கும், மருமகளுக்கும் ஆகவில்லை என்று சொல்லி அவரது கௌரவத்திற்குக் கொஞ்சமும் பாதிப்பு வராமல் பார்த்துக் கொண்டார்.

கௌரவம்… தன்னுடைய உயிர் என்று அடிக்கடி சொல்லிக் கொள்ளும் மாமனாரின் குணம், தன்னுடைய மகனுக்கும் இருக்க, சுமதி வருந்தாத நாளில்லை.

ஒருநாள், தான்..பிறந்த வீட்டில் பட்டகஷ்டத்தையும்,திருமணம் செய்து வந்த பின்பு பிறர் காட்டிய ஒதுக்கத்தையும் சொல்லி வேதனைப்பட்ட பின்பு, மகன் திருந்தி விட, மாமனாரை போல் மகன் இருக்க மாட்டான் என்று,அன்று அவர் அடைந்த நிம்மதியின் அளவை வார்த்தையால் சொல்லி விட முடியாது.

அன்றிலிருந்து பிறரையும் மதிக்கக் கற்றுக் கொண்டான்.

இப்போதும் தன்னைப் போல வசதியில்லாத ஒரு பெண்ணை அவன் காதலித்திருக்கிறான் என்று அவர் நினைக்க, உண்மை நிலை அவருக்குத் தெரியாது அல்லவா?

அவன் காதலித்த பெண் அவனை விடப் பல மடங்கு வசதியானவள்.

பிரபாகரனின் வீட்டில் எப்படிச் சொந்தத்தில் தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளதோ, அதேபோலத்தான் அவளது குடும்பத்திலும், தாய் மாமனை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அது பிரபாகரனுக்கும் தெரியும்.

தன் காதலியின் மனதில், தான் முழுமனதாக இன்னும் இடம் பெறவில்லை என்றும் அவனுக்குத் தெரியும்.

அவளின் மனதை கவர்ந்து,தன்னுடைய மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறான்.

அவனது தாத்தாவே அவனது காதலுக்கு எதிராக இருக்க, இன்னும் கல்லூரி படிப்பையே முழுதாக முடிக்காத தான்.. எப்படிக் காதலியின் கரம் பற்றி அவளை எந்தக் குறையும் இல்லாமல் சந்தோஷமாக வாழ வைக்கப் போகிறோம் என்று மிகுந்த கவலையாகி விட்டது.

“23 வயது ஒன்றும் பெரிய வயதில்லையே..!!”

இளமையின் வேகம் உடனடியாகக் காதலியை கைப்பிடிக்க அவசரப்படுத்தியது.

ஆனால் நிதர்சனம் என்பது வேறு அல்லவா?

இரு குடும்பத்தினரையும் எதிர்த்துத் திருமணம் செய்து கொள்வது மட்டும் பெரிதல்ல. நல்ல வேலை கிடைத்து, மனைவியாக வரப்போகிறவளை சந்தோஷமாகப் பார்த்துக் கொள்வது தான் ஆண் மகனுக்கு அழகு என்ற கொள்கை வைத்திருப்பவன் அவன்..!

தன்னுடைய படிப்பு முடியும் வரைக்கும், பல்லை கடித்துக் கொண்டு, தன்னுடைய தாத்தாவின் வீட்டிலேயே இருப்பதாக முடிவு செய்து கொண்டான்.

தன்மானம் பார்த்துக்கொண்டு சொந்த தாத்தாவை எதிர்த்து நிற்பதை விட, நிதர்சனம் புரிந்து சாணக்கியத்தனமாகச் செயல்படுவது தான் சரியாக இருக்கும் என்று புரிந்து அஜய் பிரபாகரன் பின்வாங்கினான்.

அதைவிட இதுபோல வாக்குவாதங்கள் நடப்பதும், வீரசிங்கமே பேரனை சமாதானம் செய்வதும், அடிக்கடி நடக்கும் ஒன்று தான்.

பேரனை, தான் பேச்சில் ஜெயித்து விட்டதாக நினைத்துக் கொண்ட வீரசிங்கம், தன் மீசையை முறுக்கிக் கொண்டார்.

தன்னுடைய தந்திர குணத்தில், பாதியாவது தன் பேரனுக்கும் இருக்கும் என்பதை அவர் மறந்துதான் போய்விட்டார்.

error: Content is protected !!
Scroll to Top