தம்பி உடையான் – 2 (2)

“மாமா..” என்று மீனாட்சி அவன் நெஞ்சில் கைப் போட, அவள் கையை அப்படியே அழுத்தி பிடித்து, “தூங்கு மீனு” என்று கண் மூடினான். ஆனால் அவனை உறக்கம் அண்டவில்லை. விடியலில்தான் உறங்கியிருந்தான்.

மறுநாள் காலையிலேயே அவன் வீடு பரபரத்துக் கிடந்தது.

“குணா காலையிலேயே வந்திருவியான்னு அவேன் மாமியா வீடு பேசிக்கிட்டாய்ங்களாம் தம்பி. அவிங்களும் அவெனப் பாக்கத்தேன் நம்ம ஊருக்கு வந்துருக்காய்ங்க போல.” என்று அம்மா சொல்ல, “ஆமாத்தே. நேத்து நாங்க ஊருக்கு வர்றேயில அவுங்கள பார்த்தோம். குடும்பம் மொத்த பேரும் ஒன்னா நடந்து வந்தாங்க” என்றாள் மீனாட்சி.

“சரித்தேன்” என்று அவர் சலிக்க, கணவனை ஒரு முறை திரும்பி பார்த்து விட்டு, குரலை தழைத்து, தமிழ் செல்வியின் தங்கையும் அவர்களோடு வந்திருப்பதை மாமியாரிடம் சொல்லி விட்டாள் அவள்.

“ஆத்தாடி, அந்தப் புள்ளையையும் கூடக் கூட்டிட்டு வந்திருக்காய்ங்களா” என்று அதிர்ச்சியுடன் கேட்டார் அவர்.

“ஆமாத்தே”

“செரித்தா. நாம ஆயிரம் கணக்குப் போட்டாலும் ஆண்டவன் போடுற கணக்குத்தானே நடக்கும். விட்டுத் தள்ளு, நாம வேலையைப் பார்ப்போம்” என்றார்.

மகனுக்காகக் கருப்பட்டி பணியாரம் எல்லாம் செய்து வைத்தார். ஆனால் காலையில் அவன் வரவில்லை. மதியம் அவனுக்குப் பிடிக்கும் என்று நாட்டுக் கோழி எல்லாம் சொல்லி வைத்திருந்தார். ஆனால் குணசேகரின் அலைபேசி எண்ணுக்கு அழைப்பு கூடச் செல்லவில்லை.

“எப்பே பேரன் வந்துட்டியானாப்பே?” என்று அப்பத்தா மாரியம்மாள் ஆசையும் ஏக்கமுமாகக் கண் மலர வாசலை பார்த்து கேட்க, “இப்போ வந்துருவாங்க அம்மாச்சி. மாமா மாட்டுத்தாவணிக்கு வந்துட்டாங்களாம். நம்ம ஊருக்கு வர பஸ்ஸுக்காண்டி நின்னுட்டு இருக்காங்களாம்” என்று அவருக்குக் கேட்க வேண்டும் என்று கத்திச் சொன்னாள் மீனாட்சி.

“பஸ்ஸா? ஏன் பஸ்க்கு காத்து கெடக்கணும்? ஏலேய் தனா, நீயி ஆட்டோ எடுத்திட்டு போய் உங்கண்ணனே கூட்டியாடா” என்று குரல் நடுங்க சொன்னார் அப்பத்தா.

“பேசாட்டு இரு அப்பத்தா. அண்ணே வரும்” என்று அவரை அதட்டினான் தனா. அண்ணன் எங்கிருக்கிறான் என்று தெரிந்திருந்தால் அவனது ஆட்டோ ஏன் வாசலில் நிற்க போகிறது? இந்நேரம் அவனுக்கு முன்னே சென்று அண்ணனுக்காகக் காத்து நின்றிருப்பானே!

“அண்ணே நம்பர் மாத்திருச்சாக்கா? உனக்கு எந்த நம்பர்ல இருந்து போன் போட்டுச்சு?” என்று அக்காவையும் அழைத்து விசாரித்து விட்டான். குணசேகர் அலைபேசி எண்ணை மாற்றியிருக்கவில்லை. பின்னர் ஏன் அந்த எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவனுக்கு அப்படியே தலையை எதிலாவது முட்டிக் கொள்ளலாம் போலிருந்தது.

மகளைத் தூக்கிக் கொண்டு அப்பாவுடன், வாழை தோப்புச் சென்றான். அப்படியே கத்திரி, வெண்டை பயிரிட்டு இருக்கும் தோட்டங்களுக்குச் சென்று அன்றைய நாளின் பெரும் பகுதி நேரத்தை போக்கினான்.

மாலை கவிழ்ந்த பின் எங்குச் செல்வது, என்ன செய்வது எனத் தெரியவில்லை.

“நா வேணா போய்த் தமிழ் செல்வி அக்காங்க வீட்ல, அவங்க அம்மாக்கிட்ட என்னா ஏதுன்னு பேச்சு குடுத்து அவங்களுக்கு எதுவும் தெரிஞ்சிருக்காண்டு பார்த்திட்டு வரவா மாமா?” அவனது தவிப்பை காண இயலாமல் மீனாட்சி கேட்க, “என்னாது அவிங்ககிட்ட போய்க் கேக்க போறியா? பல்லை ஒடைச்சுருவேன். பேசாம உக்காருறி” என்று மனைவியிடம் எகிறினான்.

இரவும் கவிழ, “அவென் வர மாட்டான் டா. நெஞ்சுல ஈரமத்த பய. பாசமத்து போச்சுடா அவெனுக்கு.” என்று அழுது புலம்பினார் கமலா.

“அவெனுக்கு நம்மளை எல்லாம் தேடாது. அப்படித் தேடியிருந்தா இம்புட்டு வருஷத்துல நம்மள ஒருக்கானாலும் பாக்க வந்துருப்பானா இல்லியா? இல்லியே, அவென்தேன் வல்லியே” என்று அழுது கொண்டே அவர் மூக்கை உறிய, அம்மாவின் மடியில் உறங்கிக் கொண்டிருந்த அழகி கண் விழித்துச் சிணுங்கத் தொடங்கினாள்.

“சும்மா அழாதம்மா. அண்ணே வரும். எனக்கு நம்பிக்கை இருக்கு” என்று குரலை உயர்த்தி அழுத்தமாகச் சொன்னான் தனசேகர். அப்போதே பத்து மணிக்கும் மேலாகி விட்டது.

“அவென் இனியா வர போறியான்?” அம்மா, அப்பாத்தா இருவரும் அழுது புலம்பி ஓய்ந்து அப்படியே கூடத்தில் உறங்கியிருந்தார்கள்.

அங்கே கூடத்துச் சுவரில் காய்ந்த பிளாஸ்டிக் பூமாலை போடப்பட்டிருந்த அண்ணியின் புகைப்படத்தை நிமிர்ந்து நோக்கினான் அவன்.

அந்தப் புகைப்படத்தில் தமிழ் செல்வி நிறை அலங்காரத்தில் இருந்தாள். அண்ணி உயிரோடு இருக்கும் போது பெரிதாக அவர்களுக்குள் பேச்சு வார்த்தை கிடையாது. இப்போது அவளது புகைப்படத்தை மலர்மாலை அலங்கரிக்கப் பார்க்கையில் அவன் நெஞ்சை துக்கம் அழுத்தியது.

கண்கள் கசிந்து விடாமல் இருக்கப் பெரும் பாடுபட்டான் அவன். தனக்கே இப்படியென்றால் அண்ணன் இந்தப் புகைப்படத்தைக் காண நேர்ந்தால் என்ற கேள்வி உதித்த கணமே நுனிக் காலில் எக்கி நின்று அதை அங்கிருந்து அகற்றி விட்டான்.

மனைவி இருந்த அறைக்குச் சென்று அங்கிருந்த அலமாரியின் கீழ் தட்டில் மறைவாகப் போட்டு வைத்தான்.

மகளோடு படுத்திருந்த மீனாட்சி, “மாமா” என்று அவனை அழைத்தாள்.

அவன் நெருங்கவும் அவனுக்காகக் கை நீட்டினாள். அவன் அசையாமல் அப்படியே நிற்க, அவளே எழுந்து வந்து அவனை நெருங்கினாள்.

“நீ நேத்தும் தூங்கல மாமா. குணா மாமா வருவாக. நீயி வந்து படு மாமா” என்று அவன் மேல் சாய்ந்தாள். சேலை நெகிழ அவனை அணைத்தாள்.

மனைவியை அணைக்கவில்லை அவன். விலக்கவும் இல்லை.

அவன் முகத்தை அழுந்த பற்றி, “மாமா” என்று முறைத்தாள்.

“நீ போய்ப் படு மீனு” மென்மையாக முத்தமிட்டு மனைவியைத் தன்னிடம் இருந்து பிரித்து வெளியேறினான். பாயில் படுத்தவள் போகும் அவனையே பார்த்துக் கொண்டு கண்ணை மூடினாள்.

தனா சத்தம் எழுப்பாமல் மொட்டை மாடிக்கு வந்து விட்டான்.

அங்கு அண்ணனுக்காக அவன் கட்டிய ஒற்றை அறை இருந்தது. செங்கல் சுவர்தான். ஆனால் மேற்கூரை அண்ணனுக்குப் பிடித்த கூரை வேய்ந்திருந்தான். மிகச் சிறிய அறைதான். அதைத் தவிர்த்து இருந்த மிச்ச மாடி பகுதியில் கால் ஓய நடந்தான் அவன்.

ஊரே இருளில் மூழ்கியிருந்தது. அப்படியொரு நிசப்தம். தெரு விளக்கு வெளிச்சம் மட்டுமே இருந்தது. அவனது அலைபேசி இரவு மணி பதினொன்று என்று சொல்ல, அவனையும் அறியாமல் பெருமூச்சொன்று வெளியேறியது.

பொத்தென்று தரையில் அமர்ந்து வானம் பார்த்து மல்லாந்து படுத்து விட்டான்.

இதே மொட்டை மாடியில் நிலவொளியில் அவனும் அண்ணனும் பேசிக் கொண்டே படுத்திருந்த நாள்கள் பசுமையாய் அவன் நினைவில் வந்து போனது.

இதே மொட்டை மாடியில் முழுக் குடி போதையில் நின்று அண்ணனை அடிக்கக் கை ஓங்கியதும், அவன் தடுக்காமல் நெஞ்சை நிமிர்த்தி, “எங்க அடிடா பார்ப்போம்” என்று பார்வையில் சவால் விட்டு நின்றதும் நினைவில் வர, அன்றைய நாளுக்காக இன்று அசிங்கமாக உணர்ந்தான் அவன்.

அவன் கண்கள் சோர்வில் தானாக மூடத் தொடங்கின.

அந்நேரம் திடீரென்று தெருவில் நாய் குலைக்கும் சத்தம் கேட்டது. முதலில் அசட்டையாக இருந்தவன் நாய்களின் சத்தம் அதிகரிக்கவும் சுதாரித்து எழுந்து அமர்ந்தான்.

இப்போது அவர்கள் தெருவில் சத்தம் கேட்டது. அவ்வளவுதான் படக்கென்று எழுந்து நின்றான்.

உயரமாக, ஒல்லியாகத் தோளில் பையுடன் அதோ இருளில் தூரத்தில் நடந்து வருவது யார்?

அண்ணனா? அடுத்த நிமிடம் வாசலில் இருந்தான் தனா.

அவன் வீட்டின் சிறிய இரும்பு கதவை திறக்க, வீட்டு வாசலில் நின்றிருந்தான் அவன்.

தனசேகர், “அண்ணே” என்றான் நா தழுதழுக்க. அண்ணனேதான், ஆனால் ஆளே மாறி போய் வந்திருந்தான் குணசேகர்.

error: Content is protected !!
Scroll to Top